Friday 29th of March 2024 02:39:56 AM GMT

LANGUAGE - TAMIL
பத்தாண்டின் நிறைவில் படுகொலைகளின் நினைவுகள்!

பத்தாண்டின் நிறைவில் படுகொலைகளின் நினைவுகள்!


அமெரிக்கா எவ்வளவு தான் ஜனநாயக சங்கீதம் பாடினாலும், என்னதான் மனிதாபிமானம் பற்றிக் குரலெழுப்பினாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொலை வெறியின் அசைக்கமுடியாத சாட்சியங்களாக ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகியப் படுகொலைகளின் நினைவுகள் மேலோங்கி நிற்கின்றன. இரு அணுகுண்டுகளால் இரு நகரங்களிலும் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட மிலேச்சத்தனத்தை எந்த ஜனநாயக வேடத்தாலும் அழித்துவிடமுடியாது! நினைவுகளிலிருந்து அகற்றிவிட முடியாது.

இலங்கையில் பேரினவாத ஆட்சியாளர்களாலும் எறிகணை வீச்சுக்களாலும், கொத்துக்குண்டுகளாலும், தொலைதூரத் துப்பாக்கி வேட்டுக்களாலும், விமானக் குண்டுகளாலும் ஒரு பெரும் மனித வேட்டையை நடத்தினர்.

அதற்கு அவர்கள் வைத்த பெயர் மனிதாபிமான நடவடிக்கை! ஒரு இன அழிப்புக்கு அவர்கள் வைத்த பெயர் தான் மனிதாபிமான நடவடிக்கை!

மாத்தளனிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையுள்ள 4 கிலோமீற்றர் நீளமும் ஒன்றரைக் கிலோமீற்றர் அகலமும் கொண்ட பகுதியைப் பாதுகாப்புப் பிரதேசமாகப் பிரகடனம் செய்தனர் இலங்கையின் ஆட்சியாளர்கள்; உயிர்காக்க வேறுவழியின்றி எமது மக்களும் அதற்குள் ஒதுங்கிக்கொண்டனர்.

ஒரு புறம் நந்திக்ககடல், மறுபுறம் வங்கக்கடல், இன்னொருபுறம் வட்டுவாகல்; மூச்சுத் திணறும் முற்றுகைக்குள் ஏறக்குறைய நான்கு இலட்சம் மக்கள்.

காணும் இடமெல்லாம் கூடாரங்கள்; கட்டிய சேலைகளால் ஆக்கப்பட்ட மண் மூடைகள்!

இந்த நிலையில் தான் எறிகணை வீச்சுக்கள்; எங்கு வந்து விழும் என எவரும் ஊகிக்க முடியாத; எறிகணை விழுந்து வெடிக்கும் இடங்களில் உடல் சிதைந்த சாவுகள்; பறிக்கப்படும் உடல் உறுப்புக்கள்;

மாத்தளன் பாடசாலை மருத்துவமனையாகிறது! இடப்பாற்றாக்குறை; மருந்துகள் பற்றாக்குறை! மருத்துவர்களும் தாதியர்களும் தொண்டர்களும் ஓய்வின்றிப் பணியாற்றுகின்றனர். பாடசாலை வகுப்பறைகளே சத்திரசிகிச்சை நிலையம், வகுப்புக்கள், விறாந்தைகள், நடைபாதைகள் எங்கும் காயமடைந்தோர் சீமெந்துத் தரைகளே கட்டிடங்களாகின.

எறிகணைகளும் சினைப்பர் ரவைகளும் குடித்த உயிர்கள் மரங்களின் கீழ் அடுக்கப்பட்டு கூடாரச் சேலைகளால் மூடப்படவேண்டிய அவலநிலை. காயமடைந்தோரை வைத்துப் பராமரிக்க முடியாத இடப்பற்றாக்குறை. உரிய சிகிச்சை வழங்க முடியாத மருந்துப் பற்றாக்குறை!

அந்தப் பற்றாக்குறைகளையெல்லாம் மனித உழைப்பால் ஈடு செய்ய மருத்துவர்களும், மருத்துவத் தாதியர்களும், பணியாளர்களும், தொண்டர்களும் உறக்கத்தையும், ஓய்வையும் விரட்டிவிட்டுப் பணியாற்றுகின்றனர்.

எங்கும் மரண ஓலமே மக்களின் மொழியாகிறது. எறிகணைகள் சிலரைக் குடும்பங்களாகவே கொன்றொழிக்கின்றன. சில சமயங்களில் சிலரைக் கொன்றுவிட்டும் சிலரைக் காயப்படுத்துகின்றன. சிலரின் உடல் உறுப்புக்களைப் பிடுங்கி எறிகின்றன. வீதியில் நடந்தோ சைக்கிள்களில் செல்பவர்கள் தாக்குதல்களில் சுருண்டுவிழுகின்றார்கள்.

இன்னொரு புறம் உணவுக்கு நிவாரணப் பொருட்களையே நம்பியிருக்கவேண்டிய அவல நிலை. 4 இலட்சம் பேர் உள்ள இடத்தில் சில ஆயிரம் பேரே இருப்பதாக அரசாங்கம் அறிக்கைவிடுகிறது. சில ஆயிரம் பேருக்கான உணவுகளே அந்தப் பகுதிக்கு அனுமதிக்கப்படுகின்றன.

அதைக்கூட வந்துசேரக் கடற்படையினர் விடுவதில்லை. கப்பல் வரும் நாட்களில் கடற்படையினர் கடலில் சண்டையிடத் தொடங்கிவிடுவர்; கப்பல் திரும்பிப் போய்விடும்.

பற்றாக்குறை அடிக்கடி இல்லாமை என்ற வடிவத்தை எடுக்கிறது. சாவும், படுகாயமடைதலும், பட்டினியுமே வாழ்க்கை என்றிருந்த அந்த நாட்களில் தான் புது மாத்தளனுக்குள் இராணுவம் நுழைகிறது.

மாத்தளன், அம்பலவன் பொற்கணை, வலைஞர்மடம் எனப் பல பகுதிகளிலும் தங்கியிருந்த மக்கள் அனைவரும் முள்ளிவாய்க்காலில் குவிகின்றனர்.

மூச்செடுக்க முடியாத நெரிசல்! ஆனாலும் மக்கள் மீதான வன்முறை தொடர்கிறது! அத்துடன் கப்பல் வருகையும் நின்றுவிட்டது.

எறிகணைகளாலும், விமானக் குண்டுத் தாக்கதல்களாலும் உயிரிழக்கும் மக்கள் பட்டினியாலும் சாகும் நிலைமை. போராளிகள் கஞ்சி நிலையங்களை அமைத்து மக்களுக்கு கஞ்சி வழங்குகின்றனர். அந்தக் கஞ்சியை வரிசையில் நின்று வாங்கிக்குடித்து உயிரைக்காக்கின்றனர்.

கஞ்சி வாங்க வரிசையில் நின்றோர் மீதும் எறிகணைகள் வீழ்கின்றன. பசித்த வயிற்றுடனேயே உயிரைவிடுகின்ற பரிதாபம்.

பால்மா வாங்குவதற்காக வரிசையில் நின்ற தாய்மார் மீதும் எறிகணைகள் விழுகின்றன. தாய் மார் மட்டுமன்றி கைக்குழந்தைகளும் உயிரற்று மண்ணில் விழுகின்றன. எங்கும் சாவுகள்; ஆங்காங்கே படிந்து கிடக்கும் குருதிவெள்ளம்; எங்கும் சிதறிக்கிடக்கும் மனித சதைத் துண்டங்கள்!

முள்ளிவாய்க்கால் மண் செங்குருதியால் சிவந்து போனது! அங்கு வீசிய காற்று மரண ஓலத்தில் கதறி அழுதது! வங்கக்கடல் மௌன விரதம் பூண்டு தன் சோகத்தில் சுருண்டது!

மனிதாபிமான நடவடிக்கை என்றால் இலங்கை ஆட்சியாளர்களால் மனித குல வேட்டை என அர்த்தப்படுத்தப்பட்டது.

எத்தனை ஆட்சிகள் மாறினாலும் எத்தனை ஜனாதிபதிகள், பிரதமர்கள் வந்தாலும் சிங்களப் பேரினவாதத்தின் மனிதகுல விரோத இன அழிப்பின் அழிக்கமுடியாத சாட்சிகளாக முள்ளிவாய்க்கால் நிலைத்து நிற்கும்.

அதேநேரம் எமது இனம் எமது மண்ணின் விடுதலைக்குக் கொடுத்த உயர்ந்தபட்ச விலையாக என்றும் சுடரும் எமது விடுதலை வேட்கைக்கு ஒளியூட்டிக்கொண்டிருக்கும். முள்ளிவாய்க்காலில் இழக்கப்பட்டவை; உயிர்களல்ல; விடுதலைக்கு அமைக்கப்பட்ட படிகள்!

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE