;

Tuesday 26th of May 2020 05:13:34 PM GMT

LANGUAGE - TAMIL
“ஞானசார தேரரும் தென்னிலங்கை அரசியலும்“

“ஞானசார தேரரும் தென்னிலங்கை அரசியலும்“


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கரகொட அத்தே ஞானசார தேரர் சர்ச்சைக்குரிய ஒரு பிரமுகர். சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அவருடைய விடுதலையும் சர்ச்சைக்குரியதாகி இருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்துள்ளார். நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைய தண்டனையை அனுபவித்து வந்த ஒரு சிறைக் கைதியை அரச தலைவராகிய ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் தண்டனை விலக்களித்து விடுதலை செய்யலாம். அதற்கு அவருடைய நிறைவேற்று அதிகாரம் என்ற அரசியல் அந்தஸ்துடனான அதிகார பலம் - உரிமை அவருக்கு இருக்கின்றது. அதனை கேள்விக்கு உட்படுத்த முடியாது.

ஆனால், பொதுபலசேனா என்ற சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்பானது, நாட்டில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்துவதில் பகிரங்கமாகவே செயற்பட்டு வந்துள்ளது. இந்த மத வெறுப்புணர்வின் அடிப்படையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அவர்களுடைய மத கலாசார நடவடிக்கைகளைக் கண்டித்தும், எதிர்த்தும் போர்க்;குரல் எழுப்பி ஒரு போராட்டத்தையே நடத்தி வந்துள்ளது,

ஜனநாயகத்தை உயிர் மூச்சாகக் கொண்டுள்ளதாகவே எமது நாடு கருதப்படுகின்றது. இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் குரோதத்தையும் பகைமை உணர்வையும் உருவாக்கி பொது அமைதிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படுத்துகின்ற ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பொதுபலசேனா அமைப்புக்கு இடமளிக்கப்பட்டிருக்கின்றது.

அரசியல் செல்வாக்கின் ஊடாக, இந்த ஜனநாயக விரோதப் போக்கைக் கொண்ட இந்த அமைப்பை பொதுச் செயலாளராகிய கலகொட அத்தே ஞானசார தேரரே வழிநடத்தி வந்துள்ளார். யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததையடுத்து, 2012 ஆம் ஆண்டு முதல் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான மத ரீதியான வன்முறைகள் அவருடைய தலைமையிலேயே இடம்பெற்று வந்துள்ளன. இதனை நாடே நன்கறியும். இந்த உண்மை சர்வதேச அளவிலும் வெளிப்பட்டிருந்தது.

அசின் விராத்தும் ஞானசார தேரரும்

இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை அரசியல்போக்கைக் கொண்ட மியன்மார் நாட்டின் 969 என்ற அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான விரோதப் போக்கைக் கொண்ட அசின் விராத்து என்ற பௌத்த பிக்குவின் வழிமுறையை ஞானசார தேரர் பின்பற்றுவதாகவும் ஒரு சந்தேக உணர்வு வெளிப்பட்டிருந்தது.

நியூயோர்க் நகரின் டைம் சஞ்சிகை பௌத்த பயங்கரவாத முதம் என்று மியன்மாரின் அசின் விராத்துவை தனது அட்டைப்பட செய்தியொன்றில் வர்ணித்திருந்தது. இதனை மறுத்துரைத்த அசின் விராத்து அந்த சஞ்சிகையின் தவறான பிரசாரத்தினால் தனது இஸ்லாமிய எதிரிகள் தன்னை பர்மாவின் பின்லாடன் என்று குறிப்பிடுவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

அதேவேளை, அசின் விராத்து பற்றிய செய்திக்கட்டுரையின் மூலம் டைம் சஞ்சிகை பௌத்த மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தி, நாட்டின் தேசிய நல்லிணக்க முயற்சிகளைப் பாதித்து, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிடுவதாக பர்மிய ஜனாதிபதி தெயின் செயின் குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன் அசின் விராத்து உன்னத புருஷர் என்றும் புத்தபெருமானின் புதல்வன் என்றும் அவர் புகழ்ந்திருந்தார்.

தனது 14 ஆவது வயதில் பாடசாலைக் கல்வியைக் கைவிட்டு பௌத்த பிக்குவாக மாறிய அசின் விராத்து, 33 ஆவது வயதில் பர்மாவின் 969 இயக்கத்தில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு, 35 ஆவது வயதில் நிதிமன்றம் ஒன்றினால் 2003 ஆம் ஆண்டு, 25 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் பர்மிய அரசியல் மறுசீரமைப்பைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு பர்மிய ஜனாதிபதி தெயின் செயின் சிறை வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்தபோது அசின் விராத்தும் விடுதலை பெற்று சிறையில் இருந்து வெளியேறி, ரொஹிங்கிய முஸ்லிம்களை மூன்றாவது நாடொன்றிற்கு வெளியேற்றுகின்ற ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஆதரவான பேரணியை நடத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மிகமோசமாக இடம்பெற்றிருந்தன.

இத்தகைய பின்னணியைக் கொண்ட அசின் விராத்து, 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் பொதுபலசேனா அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பௌத்த சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொண்டிருந்ததுடன், தமது 969 என்ற அமைப்பு பொதுபலசேனாவுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பேருவளை, தர்காநகர் ஆகிய இடங்களில் பொதுபல சேனா அமைப்பின் தூண்டுதலில் திட்டமிட்ட வகையில் அரங்கேற்றியதாகக் கூறப்படுகின்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அந்த வருடம் ஜுன் மாதம் இடம்பெற்றிருந்த ஒரு பின்னணியிலேயே இந்த பௌத்த மாநாடு கொழும்பில் நடைபெற்றது என்பது கவனத்திற்குரியது. இந்த மாநாட்டில் மியன்மாரைச் சேர்ந்த பௌத்த பிக்கு அசின் விராத்து, கலந்து கொண்டதும், பொதுபலசேனா அமைப்புடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவருடைய கருத்தும், இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ஏனைய மத சிறுபான்மை இன மக்களிடையேயும் தமது எதிர்காலம் குறித்த அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியிருந்தது.

அரசியல் செல்வாக்கும், அரச பாதுகாப்பும்

முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரான மத, இன ரீதியான வெறுப்புணர்வுடன் துணிகரமாகச் செயற்பட்;ட ஞானசார தேரருக்கு எதிராக நாட்டின் சட்டமும் ஒழுங்கும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. குறிப்பாக களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, தர்காநகர், பேருவளை போன்ற இடங்களில் இடம்பெற்ற சிங்கள பௌத்தர்களும், பௌத்த பிக்குகளும் இணைந்து ஞானசார தேரரின் தலைமையில் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், பொலிசாரோ அல்லது சட்டம் ஒழுங்கும் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேசிய பாதுகாப்பு என்பவற்றுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் மட்டத்திலும்கூட எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இங்கு இடம்பெற்ற வன்முறைகளில் மாத்திரம் 4 பேர் உயிரிழந்தனர். எண்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள், பள்ளிவாசல்கள், சிறுவர் பாடசாலைகள் என்பன அடித்து நொறுக்கப்பட்டன. தீயிட்டு நாசமாக்கப்பட்டன. பத்தாயிரம் பேர் வரையில் வீடுகளையும் வசிப்பிடங்களையும் இழந்து அகதிகளாகினர்.

இந்த பேரழிவுகள் பற்றிய காணொளிகள், கண்கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் என்பன ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தன. அந்த வன்முறைகளுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்புமிக்க தரப்பினருடைய கவனத்தையும் இந்த சம்பவங்கள் ஈர்த்திருக்க வேண்டும். ஆனாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் சம்பந்தப்பட்டவர்களினால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்த வன்முறைகளுக்கு ஞானசார தேரரின் தலைமையிலான பொதுபலசேனா அமைப்பும், அந்த அமைப்பைச் செர்ந்த சிங்கள பௌத்தர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுமே காரணம் என பரவலாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆயினும் அந்தக் குற்றச்சாட்டுக்களை ஞானசாரதேரர் மறுத்துரைத்திருந்தார். அவருக்கு எதிராக சட்டமும் பாயவில்லை. நீதியும் தனது அதிகாரத்தைப் பிரயோகிக்கவில்லை.

முஸ்லிம்களுக்கு எதிரான பகிரங்கமாக வன்முறைகளில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், அமைச்சர்களான ரிசாத் பதியுதீன் மற்றும் மனோ கணேசன் ஆகியோருடைய அமைச்சு அலுவலகங்களிலும் ஞானசார தேரர் தமது பிக்குகள் அணியுடன் புகுந்து அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து அத்துமீறிய வகையில் முரட்டுத் தனமாக நடந்து கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன. அது மட்டுமல்லாமல் அவருடைய உரைகளும், ஊடக சந்திப்புகளும்கூட மத வெறுப்புணர்வை ஊட்டுவதாகவும், குறிப்பாக முஸ்லிம்களையும் இஸ்லாம் மதத்தையும் நிந்திக்கின்ற வகையிலான கருத்துக்களை உள்ளடக்கியதாகவே அமைந்திருந்தன.

இந்த நடவடிக்கைகள் யாவும் யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், நல்லுறவையும், சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருந்த முயற்சிகளுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒரு சூழலிலேயே இடம்பெற்றிருந்தன.

யுத்தம் காரணமாக இனங்களுக்கிடையே ஏற்பட்டிருந்த சந்தேகம், அச்சம், பயம் மற்றும் அரசியல் பிரசாரம் காரணமாஎ ஏற்பட்டிருந்த வெறுப்வுணர்வு என்பவற்றைப் போக்கி நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்காகவும், இனங்களுக்கிடையில் நிரந்தரமான அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. ஆனால், அந்த முயற்சிகளுக்கு நேர் முரணான முறையிலேயே ஞானசார தேரரின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. ஆயினும் அவருக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக அவருக்கு அரச ரீதியிலான அரசியல் ஆதரவும் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்ததாகவே பலரும் உணர்ந்தார்கள்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அரசாங்கம் தொட்டிலை ஆட்ட, குழந்தையைக் கிள்ளவிடுவதுபோன்று ஞானசார தேரரின் தலைமையிலான பொதுபலசேனா அமைப்பினருடைய நடவடிக்கைகள் வன்முறை சார்ந்ததாகப் பல்வேறு தளங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஆறு வருட சிறைத் தண்டனை 9 மாங்களில் முடிந்தது

இந்த வகையிலேயே ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில், அவருடைய மனைவி சந்தியா என்னெலிகொடவை ஞானசார தேரர் அச்சுறுத்தியிருந்ததாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஞானசார தேரருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

பிரகித் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்பட்ட 11 இராணுவத்தினர் தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்ற ஒரு சூழலிலேயே ஞானசார தேரர் சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியிருந்தார். அது மட்டுமல்லாமல், ஹோமாகம நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்ற போது நீதிமன்றத்தினுள்ளே பிரவேசித்த ஞானசார தேரர் நீதிமன்ற நடைமுறைகளுக்கு முரணான வகையில் நடந்து கொண்டதன் காரணமாக அவர் மீது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

எக்னெலிகொட சம்பந்தமான வழக்கு விசாரணையில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிய ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த அரச சட்டத்தரணிகள், நீதிமன்ற அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் பொலிசாரை துரோகிகள் என சாடியிருந்தார். அத்துடன் அங்கு பிரசன்னமாகியிருந்த சந்தியா என்னெலிகொடவின் காதருகில் குனிந்து அவரை அச்சுறுத்தும் வகையிலான வார்த்தை பிரயோகம் செய்திருந்தார்.

இதனால் அவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவாகின. சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாக ஒரு வழக்கும், ஹோமாகம நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றபோது அத்துமீறி அங்கு புகுந்து நீதிமன்றத்தை அவமதித்ததாக மற்றுமொரு வழக்குமாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதனை 6 வருடங்களில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீட்டு வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்ததையடுத்து, ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சிறைத் தண்டனை அனுபவித்த 9 மாதங்களில் அவர் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறைத்தண்டனை அனுபவித்த அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்களும், சிவில் அமைப்புக்களும் பௌத்த சிங்கள தீவிரவாத ஆதரவாளர்களான அரசியல்வாதிகளும் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்து, அரசாங்கத்திற்கு அழுத்தத்தைப் பிரயோகித்தனர். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்த ஞானசார தேரரை ஜனாதிபதி நேரடியாகச் சந்தித்து உரையாடியதன் பின்னர் மே 23 ஆம் திகதி அவருக்குப் பொது மன்னிப்பளித்து ; விடுதலை செய்தார்.

இன நல்லுறவுக்கு முரணானது

பல இனங்களையும் பல மதங்களையும் சேர்ந்த மக்கள் வாழ்கின்ற நாட்டில், மத வன்முறையையும், இனவன்முறையையும் தூண்டிவிட்டு. பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து சிறுபான்மை இனத்தவராகிய முஸ்லிம்கள் மீதான வன்முறைகளுக்குத் தூபமிட்டிருந்த ஒருவருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருப்பது மிகவும் பாரதூரமான நடவடிக்கையாகும் என்று சட்டத்தரணிகள், நீதித்துறை சார்ந்தவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஜனநாயகவாதிகள், பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலதரப்பட்டவர்களும் கண்டனங்களை வெளியிட்டிருக்கின்றனர். கவலைகளையும் கரிசனையையும்கூட வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நாட்டில் நல்லிணக்கத்தையும் இனங்களுக்கிடையிலான நல்லுறவையும் ஏற்படுத்துவதற்காக சர்வதேச நாடுகள், பன்னாட்டு அமைப்புக்களின் உதவியுடன் நல்லிணக்க முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய ஓரு சூழலிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை ஊட்டுவதிலும், வன்முறைகளைத் தூண்டிவிடுவதிலும் ஞானசார தேரர் பகிரங்கமாகச் செயற்பட்டிருந்தார். இது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன.

அத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஒருவரே சண்டித்தனமாக அத்துமீறிப் பிரவேசித்து, நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக 19 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்;டு, அதனை 6 வருடங்களில் அனுபவிக்க வேண்டும் என்று சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தார். அத்தகைய ஒருவரை ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்திருப்பது, நாட்டின் இன நல்லிணக்கத்தின் மீது விழுந்த மோசமான அடியாகவே நோக்கப்படுகின்றது.

அதேநேரம் நீதிமன்றத்தை அவமதித்த ஒருவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பது என்பது, நாட்டின் நீதித்துறையை எள்ளி நகையாடி சிறுமைப்படுத்துவதாகவே அமைந்துள்ளது என்று நீதித்துறை சார்ந்தவர்களும் சட்டத்தரணிகளும் கருதுகின்றார்கள். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை சிறுபான்மை இன மக்கள் அரசாங்கத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்வதற்கே வழிவகுத்துள்ளது.

முன்னைய ஆட்சியாளர்கள் நீதித்துறையின் மீது அரசியல் ரீதியாக அழுத்தங்களைப் பிரயோகித்து, தலையீடு செய்திருந்தார்கள். அத்தகைய தலையீடுகளின்றி நீதித்துறை சுதந்திரமாக இயங்குவதற்கு நல்லாட்சியில் வழிவகுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் பிரசாரம் செய்திருந்தனர். நீதித்துறையில் அரசியல் தலையீடு இருக்கமாட்டாது என உறுதியளித்திருந்தனர். ஆனால், அவற்றுக்கு நேர் முரணான வகையில், குற்றவாளி என விசாரணைகளின் மூலம் உறுதி செய்யப்பட்ட ஒருவருக்கு நீதிமன்றம் வழங்கிய ஒரு தீரப்புக்கு விரோதமான முறையில் ஜனாதிபதியினாலேயே பொதுமன்னிப்பளிக்கப்பட்டுள்ள காரியம் நடந்தேறியிருக்கின்றது.

நாட்டை முன்னேற்றுவதற்கும், நாட்டு மக்களை வழிநடத்துவதற்கும், இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதற்கான தேசிய ரீதியிலான நல்ல நோக்கத்தைக் கொண்டதாக ஒரு பொது மன்னிப்பு வழிங்கப்பட்டிருந்தால், அதனை அனைவரும் வரவேற்றிருப்பார்கள். அதனை ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் கொண்டாடியிருப்பார்கள்.

ஆனால் ஞானசார தேருக்கு அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பானது, இன ஐக்கியத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் விடுக்கப்பட்ட பாரிய சவாலாகவே கருதப்படுகின்றது. அதுவும் சர்வதேச பயங்கரவாத பின்னணியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தி அப்பாவிகளான 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு பின்னணியில் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பது அரசாங்கத்தின் போக்கு குறித்து பல்வேறு தரப்பிலும் பலத்த சந்தேகங்களையும் அரசியல் ரீதியிலானதோர் அச்ச உணர்வையுமே எழுப்பியுள்ளது.

பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், பகுப்பு
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE