Tuesday 16th of April 2024 01:20:27 PM GMT

LANGUAGE - TAMIL
அசாத் சாலி வாக்குமூலம்
கிழக்கு மக்களை அச்சுறுத்திய சஹ்ரான் 2015 தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு!?

கிழக்கு மக்களை அச்சுறுத்திய சஹ்ரான் 2015 தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு!?


"தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள மக்களை அச்சுறுத்தி வந்தார். அதனால் சஹ்ரானின் பேச்சுக்களுக்கு அந்தப் பகுதி மக்கள் செவிமடுத்து வந்தனர்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு சஹ்ரான் நிபந்தனைகளுடனான உடன்படிக்கையின் பிரகாரம் உதவிகளை வழங்கினார்."

- இவ்வாறு மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி தெரிவித்தார்.

"ஹிஸ்புல்லா மாத்திரமன்றி, மேலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும் சஹ்ரானுடன் உடன்படிக்கைகளைச் கைச்சாத்திட்டிருந்தனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் காலப் பகுதிகளில் தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கே தாம் உதவிகளை வழங்குவதாக தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம் முன்னர் தெரிவித்திருந்தார். கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் சஹ்ரான், மக்களை அச்சுறுத்தி தனது ஆளுகைக்குள் அவர்களை வைத்திருந்தார்.

தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாத்திரமே, தேர்தல் காலப் பகுதியில் தான் உதவிகளை வழங்குவதாக அவர் கூறி வந்த பின்னணியிலேயே, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, சஹ்ரானுடன் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொண்டார் .

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மாத்திரமன்றி, மேலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும் சஹ்ரானுடன் உடன்படிக்கைகளைச் கைச்சாத்திட்டிருந்தனர். தமது தேர்தல் பிரசாரங்களின்போது, பட்டாசுகளைக் கொளுத்தக் கூடாது, பாடல்கள் ஒலிபரப்பப்படக் கூடாது உள்ளிட்ட சில விடயங்கள் அந்த உடன்படிக்கையில் காணப்பட்டன.

இதேவேளை, மட்டக்களப்பு பல்கலைக்கழகம் நிறுவனத்துக்கான நிதியுதவி சவூதி அரேபியாவின் ஊடாகக் கிடைத்தமையை நான் அறிவேன். இந்தப் பல்கலைக்கழகம் முழுமையான ஷரியா கற்கை நெறியை கற்பிக்கும் பல்கலைக்கழகம் கிடையாது. அந்தப் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடநெறி மாத்திரமே ஷரியா.

முஸ்லிம்களின் பாரம்பரிய சட்டமான ஷரியா சட்டம், முஸ்லிம்களுக்கு அத்தியாவசியமானது. பள்ளிவாசல்களை நிர்வகித்தல், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் உள்ளிட்டவையே ஷரியா சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில் எந்தவித பிழையான விடயங்களும் கிடையாது.

அப்துல் ராசிக் என்ற நபர் கைதுசெய்யப்படாது வெளியில் நடமாடுகின்றமையானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது.

அப்துல் ராசிக் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மூன்று தடவைகள் கூறினேன். ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினார்.

அப்துல் ராசிக், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறார். அதனூடாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

ஆடைகள் குறித்து அரசால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தின் ஊடாக முஸ்லிம்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி முஸ்லிம்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தர இந்தத் தெரிவுக்குழு முன்வரவேண்டும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE