Tuesday 23rd of April 2024 02:15:29 AM GMT

LANGUAGE - TAMIL
சி.வி.விக்னேஸ்வரனுக்கு நிபந்தனை விதிக்கும் த.தே.ம.முன்னணி (காணொளி)

சி.வி.விக்னேஸ்வரனுக்கு நிபந்தனை விதிக்கும் த.தே.ம.முன்னணி (காணொளி)


வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர்சி.வி.விக்கினேஸ்வரனுடனும் அவருடைய கட்சியுடனும் சேர்ந்து செயற்படுவதில் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் நலன்களை வேறு சக்திகளுக்கு பலியிட்ட தரப்புக்களுடன் இணைந்து செயற்படுவதிலோ அல்லது அவர்களையும் இணைத்துக் கொள்வதிலயோ எந்தவித பிரயோசனமும் இல்லை. ஆகையினால் அவ்வாறான தரப்புக்களுடன் நாங்கள் சேர்ந்து பயணிக்க முடியாது. இதனையே நாங்கள் தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். மேற்கண்டவாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.கொக்குவிலில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன்; விக்கினேஸ்வரன் இணைந்து செயற்படுவது தொடர்பில் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சில தினங்களிற்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனும் எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் உரையாற்றியிருந்தார்கள். அந்த இடத்தில் தானும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இணைந்தால் சாதிக்க முடியாததொன்றுமில்லை என்றும் அவருடைய முன்னேற்றத்தில் தனக்கு அக்கறை இருக்கிறது என்ற வகையில் தன்னுடைய கருத்துக்களை அவர் முன்வைத்திருந்தார்.

அதன் பின்னர் உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய உரையில் தனக்கொ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கோ விக்கினேஸ்வரன் ஐயாவுடன் சேர்ந்து செயற்படுவதில் மிகுந்த ஈடுபாடு இருக்கிறதென்றும் அதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை என்றும் நாங்கள் சேர்ந்து செயற்படத் தயாராக இருக்கிறோம் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றார்.

அதே நேரத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களுடைய நலன்களுக்காக பேரம் பேச வேண்டிய இடங்களில் பேரம் பேச வேண்டும். அவ்வாறு பேரம் பேசுவதற்கு ஒத்துழைக்கக் கூடியவர்களோடு தான் சேர்ந்து பயணிக்க வேண்டுமே தவிர அதைக் குழப்பக் கூடியவர்களோடு நாங்கள் சேர்ந்து பயணிக்க முடியாது என்பதையும் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

அதாவது அரசியல் கட்சி என்ற அடிப்படையில் விக்கினேஸ்வரனுடைய தமிழ் மக்கள் கூட்டணியுடன் சேர்ந்து சயற்பட முடியுமென்பதையும் அதே நேரத்தில் ஏற்கனவே இந்த தமிழ் அரசியலில் பிரதிநிதிகளாக இருந்து கொண்டு இந்தியா மேற்கு நாடுகளின் எடுபிடிகளாக இருந்து தமிழ் மக்களின் நலன்களைப் பலியிடுகின்ற தரப்புக்களை இதற்குள் சேர்த்து தோல்வியடைக் கூடாதென்பதையும் குறிப்பிட்டிருந்தார். ஆகவே அங்கே உரையாற்றியவர்கள் கூடகஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விக்கினேஸ்வரனும் இணைய வேண்டுமென்ற அடிப்படையில் தான் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. அதே நேரம் வேறு யாரும் இணைய வேண்டுமென்ற வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை. அந்த அடிப்படையில் தான் விக்கினேஸ்வரன் ஐயாவுடன் சேர்ந்து செயற்படுவதில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை என்றும் ஆனால் கடந்த காலத்தில் இந்த அரசியல் பரப்பில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் நலன்களை வேறு சக்திகளுக்காக பலியிட்டவர்களை சேர்த்துக் கொள்வதில் பயனில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது தான் கட்சியின் நிலைப்பாடு. அதில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை. இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் அங்கே சில ஊடகங்களின் முக்கியஸ்தர்கள் கூட அங்கு இருந்த போதிலும் விக்கினேஸ்வரன் ஐயாவுடைய கருத்துக்கள் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினுடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரிய விடயம்.

ஆக எங்கள் தரப்பு நியாயங்களை மறைத்து ஊடகங்கள் ஏன் செயற்படுகின்றதென்பது தெரியவில்லை. ஊடகங்களின் அத்தகைய செயற்பாடுகள் எங்களுக்கு மிகவும் ஏமாற்றமளிக்கின்றது. ஆகவே கட்சி அரசியலுக்கு அப்பால் எங்கள் இனத்தில் நலன்களுக்காக நாங்கள் எடுக்கின்ற முடிவுகளை உள்ளதை உள்ளவாறானதாக ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.


Category: உள்ளூர, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE