Thursday 28th of March 2024 04:33:42 PM GMT

LANGUAGE - TAMIL
வாடைக் காற்றில் நீந்தும் வண்ணப்பட்டங்கள் - நா.யோகேந்திரநாதன்

வாடைக் காற்றில் நீந்தும் வண்ணப்பட்டங்கள் - நா.யோகேந்திரநாதன்


கடலில் ஓங்கரித்து வீசும் காற்றைக் குத்துமரங்களில் கட்டிய பாய்களுக்குள் அடக்கிக் கப்பல் விட்டுத் திரைகடலோடித் திரவியம் தேடிய பெருமை தமிழர்களுக்கு உண்டு.

சோழர்கள், பாண்டியர்கள் காலத்தில் தமிழர்கள் கடல் வாணிபத்தில் மேலோங்கி நின்றமையையும், பூம்புகார் பெரும் வர்த்தக நகராக விளங்கியமையையும் நாமறிவோம்.

கடற்காற்றைக் கைக்குள் அடக்கி வர்த்தகத்தில் மேலோங்கி நிறைத்தது மட்டுமன்றி சோழர் சாம்ராஜ்யம் மேலோங்கியிருந்த காலத்தில் வர்த்தகத்தில் மட்டுமன்றி பெரும் கப்பற் படை கொண்டு கடல் கடந்து சென்று கங்கை முதல் கடாரம் வரைக்கும் கைப்பற்றி எங்கும் புலிக்கொடி ஏற்றிய தமிழர்களின் பெருமையையும் வரலாறு பரிந்து வைத்துள்ளது.

இவ்வாறு கடற்காற்றை வசப்படுத்தி வாணிபத்திலும், போர்களிலும் பெருமை மிக்க வரலாற்றை எழுதிவைத்த எமது இனம் விளையாட்டுக்களில் கூடக் காற்றைவிட்டு வைக்கவில்லை.

தமிழ் மக்களின் தனித்துவமான பண்டிகையான தைப்பொங்கலை ஒட்டி வருடாவருடம் அரங்குக்கு வரும் வண்டில் சவாரி, போர்த் தேங்காய் உடைத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் போலவே பட்டம் விடும் விளையாட்டு களிப்பூட்டும். அந்த நாட்களில் வடபகுதியின் கிராமப் புறங்கள் பட்டங்களால் வானை நிறைத்திருக்கும் “விண்” கூவலின் ஒலியும் காற்றில் மிதந்து காதுகளை நிறைப்பதுண்டு.

தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் வருடா வருடம் இடம்பெறும் பட்டப்போட்டி பிரபல்யமானது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் போட்டியாளர்கள் பங்குகொள்வதுடன் பார்வையாளர்களும் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் கலந்துகொள்வர். படலம், பிராந்து, கொக்கு என பதவிதமான பட்டங்கள் போட்டிகளில் பறக்கவிடப்படும். பௌத்த மக்களின் வெசாக் கூடு போன்ற அமைப்பில் “பெட்டிப்பட்டம்” என ஒரு வகைப் பட்டமும் அந் நாட்களில் ஏற்றப்படுவதுண்டு. தற்சமயம் அவை மேலும் மாற்றமடைந்து முப்பரிமாண வடிவமைப்புக்களுடன் கூடிய நுட்பமான வேலைப்பாடுகளுடன் விண்ஓடம், விமானம், வாகனங்கள் போன்ற பல்வேறு அமைப்புக்களுடன் பறக்கவிடப்படுகின்றன.

சில பட்டங்கள் ஒளிவீசும் வகையில் அமைக்கப்படுவதுண்டு. சில இனிமையான ஒலி எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். பட்டம் கட்டுவது எனக் கூறப்படும் பட்டத்தை உருவாக்குவது என்பது சித்திரக்கலை, சிற்பக்கலை போன்ற ஒரு அழகியல் கலையாக உள்ள அதேவேளையில் மிக நுணுக்கமான தொழில் நுட்பம் கொண்ட ஒரு கலையுமாகும். ஒரு பட்டம் அமைக்கப்படும் போது அழகு பேணப்படவேண்டும் அதேவேளையில் அது காற்றில் மிதக்கும் போது சமநிலை பாதுகாக்கப்படும் வகையில் அமைக்கப்படவேண்டும். அது மட்டுமன்றி அது மேலெழுந்து காற்றில் பறக்கும் விதத்தில் நிறை குறைவாகவும் காற்றில் உருக்குலைந்து விடாத வகையிலும் உறுதியாக இருக்கவேண்டும்.

பட்டம் கட்டுதல்

ஒரு பட்டத்தை உருவாக்குவதை பட்டம் கட்டுதல் என்று சொல்வார்கள். இவற்றில் “வௌவால்” பட்டத்தை விட ஏனைய வகைப் பட்டங்கள் அடிப்படை உரு வடிவம் (Frame) மூங்கில் தடிகளாலேயே அமைக்கப்படும்.

இளம் மூங்கிலை வெட்டி இரண்டாகப் பிளந்து உட்பகுதிகளையும் பக்குவமாக அகற்றிவிட்டு, தேவையான அளவில் வரிச்சுத் தடிகளாக வெட்டி எடுப்பார்கள். அவை வளைந்து கொடுக்கும் வகையில் மிகவும் கூரான “வில்லுக் கத்தியால்” சீவி எடுக்கப்படும். வில்லுக்கத்தி என்பது அலகும் பிடியும் பகுதிகளாகக் கொண்டதும், மடித்து பிடிக்குள் சொருகும் வகையிலும் தேவை வரும்போது அலகை விரித்து வெளியே எடுத்துப் பாவிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கும்.

படலைப்பட்டம் என்பது செவ்வக வடிவமானத, மூங்கில் வரிச்சுத் தடிகளால் அதன் கனமான பகுதிகள் அமைக்கப்படும். பின் நடுவில் பிடித்து தூக்கினால் இரு புறமும் சம நிலையில் இருக்கும் வகையில் வரிச்சுத்தடிகள் சீவி எடுக்கப்பட்டு சமநிலை உருவாக்கப்படும். பின்பு அந்த உரு பட்டத்தாள் என அழைக்கப்படும். “ரிஸ்யூ” தாளினால் ஒட்டி அந்த உரு நிரப்பப்படும். அதன் கீழ் பகுதியின் நடுவில் வால் கட்டப்படும். இது விருப்பத்திற்கேற்ற வகையில் பல வித அளவுகளில் உருவாக்கப்படும். ஐந்தடி நீளம் ஐந்தடி அகலத்தில் கூட இது செய்வதுண்டு.

பருந்துப் பட்டம் செய்வதற்குத் தனித் திறமையும் அனுபவமும் வேண்டும். ஒரு மேல் பக்கம் சிறிதாகவும், நடுவில் அகன்றும், கீழ் பக்கம் சற்று அகலம் குறைந்ததுமாக ஒரு பகுதி என பாகங்களைக் கொண்டிருக்கும். முதலில் நடுத்தண்டில் வரிச்சுத்தடிகளால் சிறகுகள் அமைக்கப்படும்.

சிறகுகள் கிட்டத்தட்ட வண்ணாத்திப்பூச்சியின் சிறகுகள் போல் மேலோட்டமான பார்வைக்கு அமைந்திருக்கும். ஆனால் சிறகுகளின் நடுப்பகுதி சற்று பின்பக்கமாகவும், நுனிப்பகுதி கூராகவும் அமைந்திருக்கும். இது பட்டத்தில் மோதும் காற்று அதை நிலையாக நிறுத்திவைத்து, மென்மையாக ஓரங்களால் வெளியேற்றும் வகையிலேயே அதன் அமைப்பு அமைந்திருக்கும். பட்டத்தின் கீழ் பகுதி இரு இறகுகளும் ஒன்றுடன் ஒன்று கீழ்ப்பகுதியில் இணையும் இடத்தில் நடுத்தண்டில் ஆரம்பமாகும்.

பின்பு இருபுறமும் சமனான அளவில் சிறிது சிறிதாக அகலிக்கப்பட்டு, வளைத்து கீழ்ப்பக்கம் ஒரு இடத்தின் வெட்டுமுகத் தோற்றத்தில் அமைந்திருக்கும். கீழ்ப்பகுதியில் இரு குஞ்சங்கள் கட்டித் தொங்கவிடப்படும். இறகுகளின் மேற்பகுதியில் ஒரு முக்கோண வடிவில் கழுத்து அமைந்திருக்கும். அதன் மேல் வளைக்கப்பட்ட ஒரு கம்பியில் பட்டத்தாளில் சிறு கீலங்கள் ஒட்டப்பட்டு சொண்டு உருவாக்கப்படும்.

இந்தப் பிராந்துப்பட்டத்தின் உடல் வண்ணத் தாள்களால் ஒட்டப்பட்டு நிரப்பப்படும். இறகுப் பகுதிகள் காற்றுக்குத் தாக்குப்பிடிக்கும் வகையிலும் அழுக்காகவும் கட்டத்தாள்களின் மேல் பளபளப்பான “வாணிஸ்” தாளில் ஒட்டப்படும். இவற்றில் முக்கியவிடயம் என்ன என்ன அலங்காரம் செய்து அழகுபடுத்தினால் நடுதண்டில் பிடித்துத் தூக்கும்போது சமநிலை ஒரு சிறு அளவில் கூடக்குலையக்கூடாது.

கொக்குப்பட்டம், பருந்துப்பட்டம் போன்ற அமைப்பக் கொண்டிருந்தபோது, இறகுகள் அமைப்பிலும், கீழ்ப்பகுதி அமைப்பிலும் சிறு வித்தியாசங்கள் உள்ளன. பருந்து பட்டத்தைவிட இதில் நுணுக்கம் அதிகம் என்பதால் இது உருவாக்குவது சற்றுக்கடினமானதாகும்.

ஐந்து மூலைப்பட்டம் என அழைக்கப்படும் நட்சத்திரப்பட்டம் ஏறக்குறைய படலைப்பட்டம் போன்று குறைந்த தொழில்நுட்ப ஆற்றலுடன் செய்யக்கூடியது. ஆனால் இதற்கு வால் கிடையாது. எனவே இது சுழன்றுவிடாமல் ஒரு அக்கம் கீழே நிற்கும் வகையில் இதன் சமநிலை சீரமைக்கப்படவேண்டும்.

பெட்டிப்படத்தின் அமைப்பு வெசாக்கூடு போன்று அமைந்திருக்கும். இதன் அடிப்பகுதியில் நீண்ட குஞ்சங்கள் போன்ற வடிவில் தொங்கவிடப்படுபவை. வால்கள் போன்று பட்டத்தின் சமநிலையைப் பாதுகாத்துக்கொள்ளும்.

வவ்வால் பட்டம் சிறுவர்கள் தாங்களே செய்து தாங்களே ஏற்றி விளையாடும் பட்டமாகும். இரு தென்னை ஈர்க்குகளின் அடிப்பாகங்களை எதிர் எதிர் திசைகளில் கிடைப்பக்கமாக கட்டிவிடடு இன்னுமொரு ஈர்க்கை குஞ்சப் பக்கமாக வைத்துக்கட்டுவார்கள். பின் அதைப் பட்டத்தாளில் இடப்பக்கமாக ஈர்க்குகளின் முனைப் பக்கங்கள் இரண்டையும் சிறகு போல வளைத்து தாளை மடித்து ஒட்டுவார்கள். சிறகிலிருந்து ஒடுங்கிவிடும் அடிப்பாகத்தில் வால் கட்டிவிட்டால் பட்டம் தயாராகிவிடும்.

முச்சை

ஒரு சக்கரம் சுழல்வதற்கு அச்சு எவ்வளவு முக்கியமோ அவ்வாறே பட்டம் தளம்பாமல் காற்றில் மிதப்பதற்கு இந்த முச்சை அவசியமாகிறது. ஒரு பருந்துப் பட்டமானால் இரு சிறகுகளிலும் நடுத்தண்டிலிருந்து சம அளவு தூரத்தில் இரு கயிறுகள் கட்டப்பட்டு, ஒரே அளவாக ஒன்றுடன் ஒன்று முடியப்படும். பின்பு ஒரு கயிறு பட்டத்தின் சிறகுகளின் கீழ் பகுதியில் நடுத்தண்டில் ஒரு கயிறு கட்டப்பட்டு முன்னைய கயிறுகளுடன் பிணைக்கப்படும். இந்தப் பிணைப்பு மிகவும் முக்கியமானதாகும். அதாவது பட்டம் பறக்கும்போது வீசும் காற்று பட்டத்தின் முழுப் பகுதியிலும் ஒரே சீராகப் படும் விதமாக இந்த மூன்று கயிறுகளும் பட்டத்தில் சமநிலையைப் பேணும் வகையில் முடியப்படவேண்டும். பின்பு இந்த முச்சை விடு கயிற்றுடன் பிணைக்கப்படும்.

விடு கயிறு

இந்த விடுகயிறே பட்டம் பறக்கும் உயரத்தைத் தீர்மானிக்கும். இதற்கு ஒரு பக்கம் முச்சையில் பிணைக்கப்படும். மறுபக்கம் பட்டம் விடுபவரின் கையில் இருக்கும். அநேகமாக பெரிய பட்டங்களுக்கு விடுகயிறு வலைப்பின்னப் பாவிக்கும் “குறுலோன்” கயிறே பயன்படுத்தப்படுவதுண்டு. ஏனெனில் சாதாரண நூல்கள் பட்டத்தை காற்று வேகமாக உதைக்கும்போது அறுந்துவிடக்கூடிய அபாயம் உள்ளது.

பட்டம் ஏற்றுதல்

பட்டத்தை ஒருவரோ அல்லது இருவரோ நிலைகுத்தாக நிறுத்திப் பிடிப்பார்கள். பட்டத்தில் பிணைக்கப்பட்ட விடுகயிற்றை ஒரு குறிப்பிட்ட நீளத்துக்கு இளக்கி மறுகரையில் கொடி பிடிப்பவர் பிடித்திருப்பார். காற்றும் வீசும் அளவு பொருத்தமாக அமையும்போது கொடி பிடிப்பவர் சமிக்கை கொடுக்கப் பட்டம் பிடிப்பவர்கள் கைகளை விடுவர். கொடி பிடிப்பவர் பட்டம் குறிப்பிட்ட உயரம் எழும்பும்வரை இழுத்துக்கொண்டு ஓடுவார்.

பட்டம் ஒரு குறிப்பிட்ட உயரம் சென்றவுடன் அதாவது மேல் காற்றை அடைந்தவுடன் கொடி ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்துப் பின் நிறுத்திவிடுவார். அதையடுத்து விடுகயிறு மெல்ல மெல்ல இளக்கி தேவையான உயரத்தில் பட்டத்தை நிலைப்படுத்துவர். பின்பு விடுகயிற்றை ஒரு மரத்தில் கட்டிவிட்டால் பட்டம் தானாகப் பறந்துகொண்டிருக்கும்.

வில்லுப் போடுதல்

ஒரு இளம் பனை மட்டையை எடுத்து கருக்குப் பக்கங்களை அகற்றிவிட்டு வில் போன்ற வடிவத்தில் ஒரு பனையின் அடிப்பாகத்தைச் சுற்றிவளைப்பார்கள். ஒரு பக்கத்தில் மட்டையின் இரு நுனிகளும் பனையின் அகலத்தக்கு ஏற்றவாறு ஒரு பலமான கயிற்றினால் தொடுக்கப்படும். விடுகயிற்றின் கீழ் முனையை அந்தக் கயிற்றில் பிணைத்துவிடுவார்கள். பட்டத்தில் காற்று மோத விடுகயிறு வில்லை மேற் பக்கமாக இழுக்கும். இப்படியே மெல்ல மெல்ல வில்லு இழுக்கப்பட்டு அடிப்பனையிலிருந்து வட்டுக்குள் போய்விடும். அதன் காரணமாகப் பட்டம் பறக்கும் உயரம் ஒரு பனையின் நீளத்தால் அதிகரித்துவிடும்.

விண்

விண் என்பது கூட அற்புதமான ஒரு கலைப்படைப்பு. ஒரு இளம் பனை மட்டையில் உட்பக்க நாரை உரித்தெடுத்து பக்குவமாக ஒரு கடதாசியின் தடிப்பு வரும் வரை கூரிய வில்லுக்கத்தியால் சீவுவார்கள். இதை “நார் வாட்டுதல்” என்று சொல்லுவதுண்டு. பின்பு அதை வில் வடிவில் வளைக்கப்பட்ட மெல்லிய மூங்கில் தடியில் நாண் போலக் கட்டிவிடுவார்கள். அது பட்டத்தின் கழுத்துக்குப் பின்புறத்தில் இறகுகளில் நாணில் காற்றுப்படும்படி கட்டப்படும். பட்டம் வானில் பறக்கும்போது இனிய ஓசைகளை எழுப்பிக்கொண்டிருக்கும்.

வேமாகிவரும் நகரமயமாக்கல் காரணமாக பல இடங்களில் இந்தப் பெருமை மிக்க பாரம்பரிய விளையாட்டு கைவிடப்பட்ட போதிலும் வல்லைவெளி, உப்புவெளி, வல்வெட்டித்துறை போன்ற சில இடங்களில் தைப்பொங்கல் நாட்களில் வானம் விதம்விதமான நவீன மயப்படுத்தப்பட்ட பட்டங்களால் நிறைந்திருக்கும் அழகினை தரிசிக்கலாம். காலத்திற்கேற்ப உலங்குவானூர்தி, விண் ஓடம், விமானங்கள், பருந்துகள் உட்பட்ட பல்வேறு சம்பவங்களின் காட்சிகளாக முப்பரிமாண வடிவங்களிலும் பட்டங்கள் ஏற்றப்படுகின்றமை சிறப்புத்தான்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE