Thursday 28th of March 2024 09:34:48 AM GMT

LANGUAGE - TAMIL
தொண்டமான் தலைமையில்  புதிய தேசிய கூட்டணி உதயம்

தொண்டமான் தலைமையில் புதிய தேசிய கூட்டணி உதயம்


மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்கலாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் இன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் புதிய தேசிய கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் அனுஷா சிவாராஜ், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர் மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நடேசன் நித்தியானந்தா ஆகியோர் கையொப்பமிட்டனர்.

பின்னர் இந்த ஒப்பந்தம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசனுக்கும் இடையில் பரிமாற்றிக் கொள்ளப்பட்டது.

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை, மத்தி மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான கணபதி கனகராஜ், சக்திவேல், எஸ்.பிலிப், மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோருடன், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஆறுமுகன் தொண்டமான்

இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான்,

"எம்மால் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் கூட்டணியானது ஏனைய கூட்டணிகளை விட முற்றிலும் மாறுபட்ட அமைப்பாகும்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதுதான் இதன் முதன்மை நோக்கமாகும்.

எடுத்த எடுப்பிலேயே தலைவர் யார், பொதுச்செயலாளர் யார் எனப் பதவி நிலையை முன்னிலைப்படுத்தி செயற்பட நாம் விரும்பவில்லை.

உரிய நேரத்தில் உரிய வகையில் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.

ஏன் தற்போது கூட்டணி உருவாக்கப்பட்டது எனச் சிலர் கேள்வி எழுப்பலாம். இவ்வளவு காலமும் கூட்டணி உருவாக்கினார்கள். நடந்தது என்ன? மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டனவா? எனவேதான், மக்களின் நலன்கருதி அவர்களுக்கான கூட்டணியை அமைத்துள்ளோம்.

தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும். எம்முடன் இணைந்து செயற்பட முன்வருபவர்கள் இருப்பின் அவர்களையும் சேர்த்துக்கொள்வோம். விரும்பினால் தமிழ் முற்போக்குக் கூட்டணிகூட இணையலாம்.

தமிழ் மக்களின் நலனைக் கருதிச் செயற்படும் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்" - என்றார்.

பிரபா கணேசன் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கருத்துத் தெரிவிக்கையில்,

"தமிழ் முற்போக்குக் கூட்டணிபோல் விளம்பர அரசியல் நடத்தமாட்டோம். மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்தியே செயற்படுவோம். தேர்தலை இலக்காகக் கொண்டு இந்தக் கூட்டணி அமைக்கவில்லை.

தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் திகாம்பரமும், கண்டி மாவட்ட எம்.பியொருவரும் வெளிப்படையாகவே மோதிக்கொள்கின்றனர்.

50 ரூபாவைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலையிலேயே அவர்கள் இருக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையுடன் 50 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவேண்டும்.

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இந்தக் கூட்டணியில் இணையவுள்ளார்" - என்றார்.

கதிர்

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் கருத்துத் தெரிவிக்கும்போது,

"நாடு பூராவும் உள்ள தமிழர்களின் அபிலாஷைகளை நிவர்த்திக்கவே இந்தப் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மலையகம் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது. அதை நாம் விரும்பவில்லை. மலையகத்தில் உள்ளவர்களும் எமது தாய், தந்தையர்கள்தான்.

வடக்கு, கிழக்கு மலையக உறவுகளைப் பிரித்து வேறுபாடாகப் பார்ப்பது முற்றிலும் தவறு என்பதை நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.

இந்தப் புதிய கூட்டணியானது திடீரென ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. நீண்ட காலமாக கலந்தாலோசித்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். தற்போது மூன்று கட்சிகள் இக்கூட்டணியில் இணைந்துள்ளன. எதிர்வரும் காலத்தில் இக்கூட்டணியோடு இணைவதற்காகக் கட்சிகள் பலவும் வருவார்கள் என்பது நம்பிக்கையைத் தருகின்றது.

தமிழ் மக்களுக்கு இந்தக் கூட்டணி ஊடாக நல்லதொரு செய்தியை வெளிப்படுத்துவோம். நமது சமூகத்துக்கு வித்தியாசமான கூட்டணியாக இந்தப் புதிய கூட்டணி அமையும் என்பதைத் தெளிவுடன் தெரிவிக்கின்றோம்.

அதேவேளையில், வடக்கு, கிழக்கில் இருக்கும் பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைவதற்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புகளை இதுவரை விடுக்கவில்லை. இருப்பினும் விரைவில் அவர்களும் எமது கூட்டணியோடு இணைவார்கள் என்ற உறுதியும் உள்ளது" - என்றார்.

விக்கியின் நிலைப்பாடு

இது தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை கொழும்பு ஊடகம் ஒன்று தொடர்புகொண்டு கேட்டபோது,

"இந்தப் புதிய கூட்டணியில் நான் பங்கேற்கவில்லை. இதில் அமைச்சர் மனோ கணேசனும் இருந்திருந்தால் நானும் இணைந்திருப்பேன். எனினும், மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான இந்தக் கூட்டணியில் இணையமாட்டேன்.

ஆறுமுகன் தொண்டமான என்னை யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தித்தது நட்பு ரீதியானது. அதன்போது அரசியல் விடயங்கள் எதுவும் கலந்துரையாடப்படவில்லை" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE