Friday 29th of March 2024 07:21:41 AM GMT

LANGUAGE - TAMIL
தப்பியது அரசு! கைகொடுத்தது கூட்டமைப்பு   (இணைப்பு)

தப்பியது அரசு! கைகொடுத்தது கூட்டமைப்பு (இணைப்பு)


தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 27 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியினரினால் அரசாங்கத்துக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்து நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.

இந்த பிரேரணை மீதான விவாதம் ​நேற்று ஆரம்பிக்கப்பட்டு இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் இதற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் கூட்டு எதிரணியினர் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(இணைப்பு)

அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று தோற்கடிக்கப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணையை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் குறித்த பிரேரணை 27 மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்தது.

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும் எனக் கோரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நேற்றும் இன்றும் விவாதங்கள் நடைபெற்றன.

விவாதங்களையடுத்து இன்று மாலை 6.30 மணியளவில் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர்.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் வாக்களிப்பின்போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

அதேவேளை, எதிர்க்கட்சி வரிசையிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் வாக்களிப்பின்போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனும் வாக்களிப்பின்போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

ஆனால், எதிர்க்கட்சி வரிசையிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசை எதிர்த்து பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் 26 அரசியல் சதிப் புரட்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மைத்திரி அணிப் பக்கம் தாவிய மட்டக்களப்பு மாவடட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அரசை எதிர்த்துப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.

இந்தநிலையில், பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிராத அரசு கவிழுமா அல்லது காப்பாற்றப்படுமா என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளிலே இருந்தது.

இன்று காலையும் மாலையும் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசு மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர்.

குறித்த பிரேரணைக்கு எதிராக அதிக வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரரணை தோல்வியடைந்துள்ளது எனச் சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் அறிவித்தார்.

இதையடுத்து நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE