Thursday 25th of April 2024 12:35:22 AM GMT

LANGUAGE - TAMIL
நல்லூரிலும் பௌத்த விகாரை நிறுவப்படலாம் - து.ரவிகரன் (காணொளி)

நல்லூரிலும் பௌத்த விகாரை நிறுவப்படலாம் - து.ரவிகரன் (காணொளி)


பெளத்தர்களே இல்லாத வடக்குப் பகுதி விகாரைகள் மயமாக்கப்படுவதாக வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இவ்வாறான விடயங்களைத்தடுத்து நிறுத்தாவிட்டால் நல்லூரில் விகாரை தோன்றுவது மிகவிரைவில் நடக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாவற்குழிப் பகுதியில் அமைக்கப்பட்ட விகாரை, இராணுவத்தின் பலத்த பாதுகாப்புடன் நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை மேற்கோள்காட்டி, நேற்று ரவிகரன் தனது அலுவலகத்தில் ஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

வடக்குப் பகுதி விகாரைகள் மயமாகின்றன. இந்த விடயம் தடுத்து நிறுத்தப்படாவிட்டால், நல்லூரில் விகாரை தோன்றுவது மிகவிரைவில் நடக்கலாம் என்ற கருத்தை நான் வடக்கு மாகாண சபையின் அமர்வில் தெரிவித்திருந்தேன்.

அதற்கேற்ற வகையிலேயே நாவற்குழியில் விகாரை அமைக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்குப் பகுதியிலும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

யாழ். மாவட்டத்தில் 6 விகாரைகள், கிளிநொச்சியில் 3 விகாரைகள், மன்னாரில் 20, வவுனியாவில் 35, முல்லைத்தீவில் 67 விகாரைகள் என்ற வகையில்131 விகாரைகள் வடக்கில் இருப்பதாக தொல்பொருள் திணைக்களத்தின் அறிக்கை கூறுகிறது.

இப்போது கொக்கிளாய், நாயாறு, வட்டுவாகல், கேப்பாப்புலவு, மாங்குளம் எனத் தொடர்ச்சியாக விகாரைகளை அமைத்துக்கொண்டு வருகின்றனர். எந்தவொரு பெளத்தக் குடும்பங்களும் இல்லாத இடத்திலேயே இந்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பெளத்தர்களே இல்லாத தமிழ்மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில், அரச காணிகளில் பெளத்த மதத் திணிப்பை செய்துகொண்டிருக்கின்றார்கள்.

நாவற்குழியில் விகாரை திறந்துவைத்துள்ளார்கள். இன்றுபோர் நடக்கவில்லை. அல்லது எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆயுதம் தாங்கிய ஒரு குழுக்கள் இல்லை.

இந்த நிலையில் இராணுவம் குவிக்கப்பட்டு விகாரை திறக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பூர்வீக இடங்களில் மேற்கொள்ளப்படும் இந்த திணிப்புக்களை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவற்றுக்கான பதிலை காலம் வழங்கும்-என்றார்.


Category: உள்ளூர, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE