Friday 29th of March 2024 07:25:04 AM GMT

LANGUAGE - TAMIL
நெஞ்சில் உறுத்திக் குத்தும் முள் - (சமகாலப் பார்வை)

நெஞ்சில் உறுத்திக் குத்தும் முள் - (சமகாலப் பார்வை)


இன ரீதியான அரசியல் போக்கு பெரும் சிக்கல்களை உருவாக்கி இருக்கின்றது. இந்த சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கு சிறுபான்மை இன மக்கள் வழியறியாமல் திகைப்படைய நேர்ந்துள்ளது.

ஓன்றிணைந்த தேசத்தையும், இன ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் உபதேசிக்கின்ற பேரின அரசியல்வாதிகள், உள்ளொன்று வைத்து வெளியில் ஒரு செயற்பாட்டை மேற்கொள்பவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

இது சிங்களவர்களின் நாடு. இங்கு ஓற்றையாட்சியே உகந்தது என்பது அவர்களுடைய நிலைப்பாடு. பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்களே அதுவும் சிங்கள பௌத்தர்களே அனைத்து விடயங்களிலும் முதன்மை பெற்றிருக்க வேண்டும் என்பது அவர்களுடைய வாதம்.

இங்கு சிறுபான்மை இன மக்களும் வாழ்கின்றார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். ஆனால், அவர்கள் ஜனநாயக ரீதியாக சிங்கள மக்களுக்கு நிகராக – அவர்களுக்கு சமமாக அனைத்து உரிமைகளையும் கொண்டிருக்க முடியாது என்ற அரசியல் ரீதியான முடிவைக் கொண்டிருக்கின்றார்கள்.

சிங்களவர்களின் நாடாகிய இங்கு ஏனைய இன மக்கள் நாளடைவில் சிங்களவர்களாக மாற வேண்டும். மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற மறைமுகமான அரசியல் நிகழ்ச்சி நிரலை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இரு பெரும் தேசிய அரசியல் கட்சிகளாகத் திகழ்கின்றன. அந்தக் கட்சிகளிடையே அதிகார அரசியல் போட்டி உண்டு. ஆனால் சிறுபான்மை இன மக்களைப் பொறுத்தமட்டில் அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் ஒரே கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றார்கள்.

அடக்கி ஒடுக்குவதே இரண்டு கட்சிகளினதும் நோக்கம்

சிறுபான்மை இன மக்களை யார் கூடுதலாக ஒடுக்குகின்றார்கள், அவர்களுடைய உரிமைகளைக் கூடுதலாக யார் இல்லாமல் செய்வது என்பதில் அவர்கள் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டு செயற்படுகின்ற ஒரு போக்கையே காண முடிகின்றது.

இந்த இரண்டு கட்சிகளுமே மாறி மாறி அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத்தி வருகின்றன. தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பதற்காக சிறுபான்மை இன மக்களின் வாக்கு வங்கியைப் பயன்படுத்திக் கொள்வதில் முன் நிற்கின்ற இந்தக் கட்சிகள் அந்த மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

மாறாக எதிர்க்கட்சியாக இருக்கின்ற கட்சி, அதிகாரத்தில் உள்ள கட்சி பெயருக்காகக் கொண்டு வருகின்ற அரசியல் தீர்வு மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வு முயற்சிகளுக்கு முழு அளவில் எதிர்ப்பு தெரிவித்து அவற்றை முறியடிப்பதில் வல்லமை உடையதாக நிரூபித்து வந்துள்ளது.

சிறுபான்மை இன மக்களுடைய அரசியல் உரிமை சார்ந்த விடயங்கள், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது சார்ந்த விடயங்களில் ஒரு தரப்பு சாதகமாகச் செயற்படும்போது மறு தரப்பு அதற்கு எதிராகச் செயற்பட வேண்டும் என்பதற்காகத் தங்களுக்குள் நிரந்தரமாகவே ஓர் அரசியல் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு அதன் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றார்களோ என்று ஐயுற வேண்டி இருக்கின்றது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தை ஓர் அரச வம்சத்தைப் போன்று அரசியல் உரிமைக்கான ஓர் இடத்தை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் எதேச்சதிகாரப் போக்கில் செயற்பட்டதனால், ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போவதாகக் கூறி இரண்டு கட்சிகளும் இணைந்து 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கின.

நல்லாட்சி அரசில் பிரச்சினைகள் தீரவில்லை

இரண்டு தேசிய கட்சிகளும் ஆட்சியில் ஒன்றிணைந்திருப்பது, அரசியல் தீர்வு காண்பதற்கும் ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் கிடைத்தற்கரிய ஓர் அரசியல் சந்தர்ப்பமாகவே கருதப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படு;த்தி புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எட்டிவிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தமிழ் மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவளித்திருந்தார்கள்.

முஸ்லிம் மக்களும்கூட தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்ற அரசியல் நோக்கத்தோடு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்காக வாக்களித்திருந்தார்கள்.

ஆனால் நிலைமைகள் சிறுபான்மை இன மக்கள் எதிர்பார்த்தவாறு அமையவில்லை. ஜனாதிபதி ஆட்சி முறைமைக்கு முற்றுப்புள்ளியிடவும் தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வரவும் வசதியாக புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று விரும்பியிருந்த இரண்டு கட்சிகளும் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பது என்ற விடயத்தையும் உள்ளடக்கிக் கொண்ட அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு இதய சுத்தியுடன் செயற்படவில்லை.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் காலத்தை இழுத்தடித்து, காரியங்களைத் தாமதப்படுத்துவதிலேயே நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டிருந்தார்கள். இதற்கிடையில் ஜனாதிபதியும் பிரதமரும் தங்களுக்குள் அதிகாரப் போட்டியில்; ஈடுபட்டு மோசமான அரசியல் நெருக்கடியை உருவாக்குவதற்கே வழி செய்திருந்தனர்.

இதனால் நல்லாட்சி அரசாங்கம் என்ற இருகட்சி அரசாங்கம் தேசிய ரீதியில் நாட்டு மக்களுக்குப் புதிதாக எந்த நன்மைகளையும் செய்யவில்லை. அதேபோன்று புதிய ஆட்சி உருவாக்கத்தில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து செயற்பட்டிருந்த தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவுமில்லை.

முஸ்லிம்கள் மீதான மோசமான வன்முறைகள்

மாறாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த வன்முறைகளிலும் பார்க்க அதிக வலுவுள்ளதாக நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் வன்முறைகளுக்கு இடமளிக்கப்பட்டிருந்தன.

உயிராபத்துக்களில் இருந்து தப்பி அகதிகளாக இங்கு தஞ்சமடைந்திருந்த ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பௌத்த தேசியவாதிகள், அணி திரண்டு சென்று அச்சுறுத்தி இருந்தார்கள். நிராயுதபாணிகளாக ஏதிலி நிலையில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையற்ற நிலையில் இருந்த அவர்கள் தமக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவர்கள் என குற்றம் சுமத்தி அவர்கள் மீது பாய்ந்திருந்தார்கள்.

அம்பாறையிலும் கண்டியில் கட்டுகஸ்தோட்டை, திகன உள்ளிட்ட பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை நடத்தி அவர்களுடைய வர்த்தக நிலையங்கள் வீடுகள் என்பவற்றை அழித்தொழித்த சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதிகள், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடந்து மூன்று வாரங்களின் பின்னர் சிலாபம் மினுவாங்கட போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கமளைத் தாக்கியிருந்தார்கள்.

அதுவும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வெளியில் நடமாடக் கூடாது என்ற இராணுவ உத்தரவு நடைமுறையில் இருந்த பகல் வேளையில் இந்தத் தாக்குதல்களை சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதிகள், சில பௌத்த பிக்குகளின் தலைமையில் நடத்தியிருந்தார்கள். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள், வீடுகள் என்பன கொள்ளையடிக்கப்பட்டு இந்தத் தாக்குதல்களின்போது எரியூட்டப்பட்டிருந்தன. முஸ்லிம்கள் தரப்பில் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டிருந்தன.

இந்த வன்முறைகளை ஊரடங்கு நேரத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரும் இராணுவத்தினரும் கட்டுப்படுத்த முற்படவே இல்லை. பாராமுகமாக நடந்து கொண்டார்கள். இந்த வன்முறைச் சம்பவங்களினால் முஸ்லிம் சமூகம் அச்சத்தில் உறைந்து அடுத்தடுத்து என்னென்ன நடக்குமோ என்று அஞ்சி ஒடுங்கியிருந்தார்கள்.

உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்பட்டது

இந்த வன்முறைகள் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் கொழும்பிலும் நாட்டின் ஏனைய மாகாண நகரங்களிலும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதிகளிலும் இடம்பெற்ற மோசமான தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு வன்முறைகளைப் போன்று விசுவரூபம் எடுத்துவிடுமோ என்று பலரும் அச்சம் கொண்டிருந்தார்கள். அந்த அளவுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

பெயருக்காக சிலரை பொலிசார் கைது செய்திருந்த போதிலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் சில தினங்களிலேயே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இந்த வன்முறைகள் இடம்பெற்று மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி தண்டிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொள்ளவில்லை.

எதேச்சதிகாரத்தையும் ஜனநாயக விரோதப் போக்கையும் இல்லாதொழித்து சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து நல்லாட்சி புரியப் போவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கம் இந்த வன்முறைகள் குறித்து பெரிய அளவில் பின்னர் கவனம் செலுத்தவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திலும் பார்க்க சிறுபான்மை இன மக்களின் மீதான அடக்குமுறைகளும் வன்முறைகளும் கூடுதலாகவும் தொடர்ச்சியாகவும் இடம்பெற்று வருகின்றன என்றே கூற வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகளே நடத்தினார்கள் என்ற பின்னணியில் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பௌத்த தேசியவாதிகளின் இனவாத வன்முறை சார்ந்த செயற்பாடுகளுடன் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் முடிந்துவிடவில்லை.

தமிழ் மக்களுக்கு எதிரான மென்வலு சார்ந்த அடக்குமுறையும் வன்முறைகளும் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. இந்த அடக்குமுறைகளும் வன்முறைகளும் மதம் சார்ந்த விடயங்களாக சிங்களவர்களே இல்லாத தமிழ்ப் பிரதேசங்களில் பௌத்த மதத்தை வலிந்து திணிக்கின்ற நடவடிக்கையாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்து ஆலய வளவுகளில் புத்தர் சிலைகளை நிறுவுவதும், பௌத்த விகாரைகளைக் கட்டுவதுமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தெரிந்தெடுக்கப்பட்ட பௌத்த பிக்குகளின் தலைமையில், இராணுவம் மற்றும் பொலிசாரின் அதிகார தோரணை மிக்க பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

நெஞ்சில் உறுத்திக் குத்தும் முள்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பௌத்தர்களின் மதச்சின்னங்களை நிறுவுகின்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நல்லாட்சி அரசாங்கத்தில் அதுவும் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களின் பின்னரான காலப்பகுதியில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக வடமாகாணம் விகாரை மயப்படுத்தப்பட்டிருப்பதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். அவருடைய தகவலின்படி, யாழ் மாவட்டத்தில் 06 விகாரைகள், கிளிநொச்சி மாவட்டத்தில் 03 விகாரைகள், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகள், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகள், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகள் என்ற வகையில் 131 விகாரைகள் வடபகுதியில் இருப்பதாக தொல் பொருள் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி அவர் விபரம் தெரிவித்துள்ளார்.

நாற்பத்தைந்து குடும்பங்களையே குடியேற்றப்பட்டுள்ள நாவற்குழியில் பாரிய பௌத்த தாதுகோபுரத்தை அரசாங்கம் அமைத்துள்ளது. இது அப்பட்டமான பௌத்த மதத் திணிப்பின் அடையாளமாகப் பதவாகியிருக்கின்றது.

பெரும் கோலாகலமாக நடந்தேறிய இந்தத் திறப்பு விழா நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான பௌத்த பிக்குகளும், பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினரும் கலந்து கொண்டிருந்தனர். தென்பகுதியில் இருந்து விசேடமாக அழைத்துவரப்பட்டிருந்த சிங்கள பௌத்தவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு மெருகூட்டியிருந்தார்கள்.

இந்த விழா அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் ஒரு விசேட நிகழ்வாக இருக்கலாம். ஆனால் சிங்கள பௌத்த தீவிரவாதிகளைப் பொறுத்தளவில் இது ஒரு சாதனை. வடக்கில் பௌத்தத்தை நிலைநாட்டியிருக்கின்றோம் என்ற வகையில் பெருமைக்குரிய ஒரு விடயம். அதேவேளை, தமிழ் மக்களின் கௌரவத்தைப் பாதிக்கின்ற நிரந்தரமானதோர் அடையாளம்.

தமிழ் மக்களின் கலாசாரத் தலைநகராகக் கருதப்படுகின்ற யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலிலாகிய நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை தமது தாயக மண்ணில் மேற்கொள்ளப்பட்டுள்ள பௌத்த மதத் திணிப்பின் சின்னமாகவே இது அமைந்துள்ளது. வரலாற்றில் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உறுத்திக் குத்தி நிலையாக வேதனை தருகின்ற ஒரு முள்ளாகவே இருக்கப் போகின்றது.

சிங்கள பௌத்த நாடாக்குவதற்கான நடவடிக்கை

பௌத்தர்களோ அல்லது சிங்களவர்களோ வசிக்காத சிறுபான்மையினராகிய தமிழ் மக்களுடைய வரலாற்றுத் தாயக மண்ணில் பௌத்தத்தைத் திணித்து, அதன் ஊடாக அதனை மேலோங்கச் செய்வதை ஓர் அரசியல் நடவடிக்கையாகவே ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள். தென்னிலங்கையில் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் நிரந்தரமான ஒரு வாக்கு வங்கியை உருவாக்குவதே இந்தச் செயற்பாட்டின் அடிப்படை நோக்கமாகத் தெரிகின்றது.

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக யுத்தத்தில் தோற்கடித்ததைத் தனது அரசியல் செல்வாக்குக்கான முதலீடாக மகிந்த ராஜபக்ச பயன்படுத்தியிருந்தார். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் தமிழர் தாயகப் பிரதேசத்தைப் பிளந்து கூறுகளாக்கி அங்கு பௌத்த மதத்தைத் திணிக்கின்ற செயலை ஒரு தீரச் செயலாக சிங்கள பௌத்த மக்களுக்குக் காட்ட முனைந்திருக்கின்றது.

பல்லின மக்களும் பல மதங்களைப் பின்பற்றுகின்ற மக்கள் குழுமங்களும் உள்ளிட்ட பல்லினத்தன்மை கொண்ட ஜனநாயக நாடாகிய இலங்கையில் இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்தி சமூகங்களைப் பிளவுபடுத்தி, அரசோச்சுவதற்கான நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.

அது மட்டுமல்ல. சிங்கள பௌத்த நாடாக இந்த நாட்டை மாற்றி அமைப்பதற்கான ஒரு முயற்சியாகவும் இதனைக் கருத முடியும். அந்த வகையில் காலக்கிரமத்தில் சிறுபான்மை இனங்களை படிப்படியாக இல்லாமல் செய்வதற்கானதோர் இன அழிப்பு நடவடிக்கையாகவும் இந்த இன ரீதியான மத ரீதியான அரசியல் நடவடிக்கை அமைந்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE