Friday 29th of March 2024 03:36:46 AM GMT

LANGUAGE - TAMIL
ஒன்றாகப் பிறந்து ஒன்றாகவே   இறந்த இரட்டைச் சகோதரிகள்!

ஒன்றாகப் பிறந்து ஒன்றாகவே இறந்த இரட்டைச் சகோதரிகள்!


அக்கரப்பத்தனை - டொரிங்டனில் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டாவது சிறுமியின் சடலமும் இன்று காலை மீட்கப்பட்டது. நேற்று மாலை ஒரு சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

டொரிங்டன் பாடசாலையில் தரம் 07இல் கல்வி கற்கும் டொரிங்டன் தோட்டத்தைச் சேர்ந்த 12 வயதுடைய இரட்டைச் சகோதரிகளான மதியழகன் லக்ஸ்மி, மதியழகன் சங்கீதா ஆகிய மாணவிகளே ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

நேற்றுப் பிற்பகல் பாடசாலை விட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் ஆற்று வெள்ளத்தில் இவர்கள் இருவரும் இழுத்துக் செல்லப்பட்டனர்.

இவர்களில் லக்ஸ்மியின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டு அக்கரப்பத்தனைப் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.

சங்கீதாவின் சடலத்தைத் தேடும் பணியில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், அவரின் சடலம் கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்தி செல்லும் டொரிங்டன் தோட்டக் கால்வாய் ஒன்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 300 அடி தூரத்திலேயே அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த சடலமும் அக்கரப்பத்தனைப் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர் இரட்டைச் சகோதரிகளான இரு மாணவிகளினதும் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் மாணவிகளின் சடலங்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்.

சம்பவம் தொடர்பில் அக்கரபத்தனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வழமையாக இந்த ஆற்றைக் கடந்தே டொரிங்டன் தோட்ட மாணவ, மாணவிகள் பாடசாலைக்குச் சென்று வருவது வழக்கம். எனினும், அக்கரப்பத்தனைப் பிரதேசத்தில் நேற்றுப் பெய்த கடும் மழை காரணமாக குறித்த ஆற்றில் வழமைக்கு மாறாக அதிக நீர் பெருக்கெடுத்தபோதே மாணவிகள் இருவரும் அதில் அகப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.


Category: உள்ளூர, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE