Friday 29th of March 2024 06:56:14 AM GMT

LANGUAGE - TAMIL
புஸ்வாணமான கூட்டமைப்பின் பிரேரணை - பி.மாணிக்கவாசகம்

புஸ்வாணமான கூட்டமைப்பின் பிரேரணை - பி.மாணிக்கவாசகம்


தமிழ் மக்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை என்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உச்ச அளவில் அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு வலுவான அரசியல் தீர்வு அவசியம். இந்த அரசியல் தீர்வு புதிய அரசியலமைப்பின் ஊடாகவே சாத்தியமாகும் என்ற நிலைப்பாடு சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தரப்புக்களினால் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதன் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக நாடாளுமன்றத்தை அதற்கான சட்ட நிர்ணய சபையாக அனைத்துக் கட்சிகளினதும் இணக்கப்பாட்டில் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

ஜனநாயக உரிமைகளைக் காலில் போட்டு நசித்த மகிந்த ராஜபக்ச, சர்வாதிகாரப் போக்கில் பயணிப்பதற்கு அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களே வழிவகுத்திருந்தன. அந்த சர்வாதிகாரப் போக்கை ஜனநாயக சக்திகள் எதிர்த்தன. மக்களும் அதனை விரும்பவில்லை. இதன் காரணமாகவே 2015 ஆம் ஆண்டு நாட்டில் ஆட்சி; மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

சர்வாதிகாரப் போக்கிற்குத் துணை புரிந்துள்ள ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை வெட்டிக் குறைத்து நாடாளுமன்றத்தின் கைகளைப் பலப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு அரசியல் கட்சிகளுக்கு இடையூறான விகிதாசார தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். அத்துடன் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே புதிய அரசாங்கமாகிய நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்த போதிலும், அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மந்த கதியிலேயே மேற்கொள்ளப்பட்டன. இதில் ஆர்வமற்ற அரசியல் போக்கும், இழுத்தடிப்புக்களும், ஏமாற்று நடவடிக்கைகளும் தாராளமாக இடம்பெற்றன.

முக்கால்வாசி ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது

ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எழுந்த அதிகாரப் போட்டியும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தனது பங்களிப்பாக முட்டுக்கட்டையைப் போட்டிருந்தது.

அதேவேளை, ஏனைய அரசியல் நிலமைகளிலும் ஆட்சி நடவடிக்கைகளிலும் ஏற்பட்டிருந்த பல்வேறு நிலைமைகளும், மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தி இருக்க வேண்டிய நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை திசை திருப்பி இருந்தன. இத்தகைய போக்கில் இந்த அரசாங்கத்தின் முக்கால்வாசி ஆட்சிக் காலம் கடந்தோடி விட்டது.

இந்த அரசின் ஆட்சி முடிவடைவதற்கு சில மாதங்களே எஞ்சியிருக்கின்ற நிலைமையில்தான் புதிய அரசியலமைப்பின் அவசரத் தேவையை வலியுறுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருந்தது. அப்போது நீண்ட உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம், அவசரம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தமிழ் மக்கள் அடைந்துள்ள ஏமாற்றம் பற்றியும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பிரேரணை இரண்டு தினங்கள் விவாதிக்கப்பட்டன. இரண்டு தினங்களிலும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் இந்த அரசாங்கத்தினதும், எதிர்க்கட்சித் தலைவராகிய முன்னாள் ஜனாதிபதி மகிந்;த ராஜபக்சவினதும் அரசியல் தீர்வு விடயத்தில் அடாவடித்தனமான அரசியல் போக்குகள், நிலைப்பாடுகள் குறித்த பல விடயங்களைப் போட்டு உடைத்தார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும், அரசுக்கு ஆரவளித்தபோதிலும், கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் அடிவருடிகளாகக் மாறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அரசியல் தீர்வுக்காகத் தாங்கள் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்குப் பேருதவி புரிந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அதிகாரத்தில் இருந்து தோற்கடிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து, அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கும், தமிழ்;த்தேசிய கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி இருந்தது. நெருக்கடியான நிலைமைகளில் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக இறுக்கமாக ஒத்துழைத்துச் செயற்பட்டிருந்தது.

உறுதி குலைந்த அரசியல் நிலைமை

ஆனால் அரசியல் தீர்வு காண்பதற்கும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் படிப்படியாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் கூட்டமைப்புக்குக் கிடைத்திருந்த பல சந்தர்ப்பங்களைத் தவறவிட்டுவிட்டு, ஆட்சிக்காலம் முடியப் போகின்ற தருணத்தில் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்ற வேடிக்கையான நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

அதிகாரப் போட்டி காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முகம் பார்த்துச் செயற்படாத ஒரு சூழலிலேயே ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த இரு கட்சி அரசாங்கத்தில் இரு தரப்பினருமே துருவமயப்பட்டிருக்கின்றார்கள். இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் காண முடியவில்லை. ஒருவரை ஒருவர் விழுங்கி ஏப்பம் விடுதவற்கான சந்தர்ப்பத்தைப் பார்த்திருக்கின்ற அரசியல் ரீதியான கடும்போக்கு நிலைமையே நிலவுகின்றது.

இவர்களுக்கிடையிலான இந்த அதிகாரப் போட்டிக்கு அப்பால், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராகக் கடும் போக்கையே கொண்டிருக்கின்றார். அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்கும், முடிந்தால் அதனைக் கவிழ்ப்பதற்கும் உரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதற்காக விழிப்போடு பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

அவருடைய தலைமையிலான பொது எதிரணியினரும் அரசாங்கத்திற்கு எதிரான போக்கையே கொண்டிருக்கின்றனர். அவர்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கும், அதன் ஊடாக அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிக்கும் ஒத்துழைப்பவர்களாகத் தெரியவில்லை.

இதனால், அரசாங்கம் உறுதியான பலமுடையதாகக் காணப்படவில்லை. பொதுவில் அரசியல் ஸ்திரமற்ற நிலையிலேயே நாடு தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதானாலும்சரி, அரசியல் தீர்வு காண்பதானாலும்சரி, ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் அவசியம். அனைவரும் இணைந்து செயற்படாவிட்டால் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வர முடியாது. எந்த ஒரு காரியமும் சாத்தியப்படாது.

இத்தகைய அரசியல் நிலைமையில் கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்புப் பிரேரணையின்போதே, இந்த அரசாங்கத்திற்கு மிஞ்சியுள்ள குறுகிய ஆயட்கால அவகாசத்தில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அதிஉச்ச அதிகாரப்பகிர்வு இடம்பெற வேண்டும் என்று இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கோரம் இல்லாத நிலையில் ஒத்திவைப்புப் பிரேரணை

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த ஒத்திவைப்புப் பிரேரணையின்போது நாடாளுமன்றத்தில் அரச தரப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சமூகமளித்திருக்கவில்லை. முக்கிய அமைச்சர்கள் இருக்கவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் காணவில்லை.

இதனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சமந்திரன் ஆகியோர் முன்வைத்த அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களைக் கேட்பதற்கும் அதற்கு தங்கள் பக்க நியாயங்களைத் தெரிவிக்கவோ அல்லது அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகக் குறிப்பிடுவதற்கோ அரச தரப்பினர் அங்கு இருக்கவில்லை.

இந்த ஒத்திவைப்புப் பிரேரணை கொண்டு வரப்படுவது குறித்த தகவல்கள், விபரங்கள் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அராசங்கத் தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது. அது குறித்து அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆயினும், பிரேரணை மீதான விவாதத்திற்கு அரச தரப்பினர் அங்கு இருக்கவில்லை.

வேடிக்கை என்னவென்றால், இந்த ஒத்திவைப்புப் பிரேரணையின்போது, சபையில் சமூகமளித்திருக்க வேண்டிய குறைந்த எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கவில்லை. இதனால், இரண்டு தடவைகள் சபையில் கோரம் இல்லை என்பதை அறிவிப்பதற்கான மணி ஒலிக்கச் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் சார்ந்த விடயங்களை நாடாளுமன்றத்தில் கேட்பதற்குக் கூட அரசாங்கத் தரப்பினருக்கு நேரம் இருக்கவில்லை. அல்லது விருப்பம் இருக்கவில்லை என்பதையே, நாடாளுமன்றத்தில் கோரம் இல்லாத நிலைமை ஏற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலுக்கான அரசியல் நாடகமோ....?

நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, வரவு செலவுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குரிய ஆதரவான நிலைப்பாட்டை, எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எடுத்திருந்த போதிலும், அதனை அங்கீகரிக்கின்ற வகையில் கூட அரசாங்கம் தயாராக இல்லை. இதைத்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த ஒத்திவைப்புப் பிரேரணையின்போது அரச தரப்பினர் உள்ளிட்ட பேரின மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் சமூகமளிக்காததால் சபையில் ஏற்பட்டிருந்த கோரம் இல்லாத நிலைமை எடுத்துக் காட்டியுள்ளது.

இதனை இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் உதாசீனம் செய்து அவர்களை கறிவேப்பிலையைப் போன்று தமது அரசியல் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்துகின்ற பேரின கட்சிகளினதும், பேரின அரசியல்வாதிகளினதும் போக்கிரித்தனமான அரசியல் போக்கை இந்தப் பிரேரணையின்போது அவர்கள் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.

இந்த நிலையில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் - இந்த அரசாங்தக்தின் ஆட்சிக்காலம் முடிவடைவதற்குள் அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறுவதற்கில்லை.

அத்துடன் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்க முடியாது.

இந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த ஒத்திவைப்புப் பிரேரணையானது, ஒரு புஸ்வாணமாகவே மாறியுள்ளது. எதிர்வருகின்ற தேர்தல்களையொட்டியதோர் அரசியல் நாடகமாகவே அது அரங்கேற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவதில் தவறிருக்க முடியாது.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE