Friday 19th of April 2024 09:22:03 PM GMT

LANGUAGE - TAMIL
“வாயிலேயே வடை சுட்ட கஸ்தூரி”  - சுரேஷ் கண்ணன்

“வாயிலேயே வடை சுட்ட கஸ்தூரி” - சுரேஷ் கண்ணன்


‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்’ என்கிற ரகளையான பாட்டோடு பொழுது விடிந்தது. இதற்கு நடனம் ஆடாமல் இருக்கவே முடியாது. ஆனால் சாண்டி மாஸ்டர் தூக்க கலக்கத்தில் காலை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தார். குடைக்கம்பி போல காலை வைத்துக் கொண்டு சாக்ஷி எதையோ செய்தார். படுக்கையில் அமர்ந்த படியே நடனமாடினார் லியா. வழக்கம் போல் அவரது கண்கள் ஜனகராஜ் பாணியில் மூடிக் கொண்டன.

‘பத்த வெச்சிட்டியே பரட்டை’ என்கிற தலைப்பில் ஒரு மார்னிங் டாஸ்க். புது வரவான கஸ்தூரி அனைவரைப் பற்றியும் வில்லுப்பாட்டு வடிவில் சொல்ல வேண்டும். அம்மணி ஒவ்வொருவரைப் பற்றியும் ரைமிங்காக முன்பே யோசித்து வந்திருப்பார் போல. ‘பெயர்ல ‘வின்’ இருந்தாலும் கவின் மனது முழுக்க ‘லாஸ்’தான்’ என்கிற pun நன்றாக இருந்தது. கவின் கடாயை எடுத்து தலையில் கவிழ்த்துக் கொண்டார். அப்போது காமிரா சாக்ஷியை க்ளோசப்பில் காட்டியது நல்ல குறும்பு. பின்னணயில் எரிமலை வெடிக்கும் சத்தத்தையும் இணைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அப்படியொரு சைலண்ட் டெரர் எபெஃக்ட் சாக்ஷியின் முகத்தில் தெரிந்தது.

IMAGE_ALT

கஸ்தூரிக்குள் இருக்கும் சமூகப் போராளி அவ்வப்போது விழித்துக் கொள்வார் என்பது முன்பே எதிர்பார்த்ததே. “ஏம்ப்பா கவினு.. நாலு பொண்ணை ரூட்டு விடறியே..இதெல்லாம் காமெடியா.. ஜேம்ஸ்பாண்ட் வேலைன்னு நெனச்சு வடிவேலு மாதிரி ஆகிட்டியே? ஒரு பொண்ணு நாலு ஆம்பளையை ரூட் விட்டா அதை மக்கள் ரசிப்பாங்களா?” என்றெல்லாம் கவினிடம் அள்ளி விட, “அது வந்துங்க ஆஃபிசர்…” என்று பம்மிக் கொண்டிருந்தார் கவின். “அதாவது .. அவன் பண்ணதுக்கு காரணம் என்னன்னா..” என்று விளக்கம் அளிக்கத் துவங்கிய சேரன், ‘டாக் ஷோவில்’ பேசும் ஆவேசத்தோடு இருந்த கஸ்தூரியைக் கண்டு கலவரமாகி பின்வாங்கினார்.

IMAGE_ALT

லக்ஸரி பட்ஜெட்டிற்கான பொருட்களை தேர்ந்தெடுக்கும் சமயம். ஆங்கிலத்தில் பேசியதற்காக 250 புள்ளிகளைப் பிடுங்கினார் பிக்பாஸ். அடுத்த கணமே நிகர புள்ளிகளை ஆங்கிலத்திலும் சொன்னார் புத்திசாலி லொஸ்லியா.

வழக்கம் போல.. “மாமா.. எனக்கு பிஸ்கோத்து வேணும்.. அங்கிள்.. எனக்கு சாக்லேட் வேணும்’ என்கிற குழப்பமான குரல்கள் இணைந்து கலந்து ஒலித்தன. கடந்த முறை மாதிரி மொத்தமாக கோவிந்தா ஆகி விடக்கூடாதே என்கிற பரபரப்பு அனைவரிடமும் தெரிந்தது. சற்று டென்ஷனுடன் எழுதி முடித்தார் கஸ்தூரி.

“நான் சொன்னதை எழுதலியே” என்பது மாதிரி தன் ‘கிச்சன் காபினெட்’ பவரை மதுமிதா காண்பிக்க முயல, “நீங்க எதைச் சொல்லி நான் எழுதலை. சொன்னதையெல்லாம் எழுதிட்டேன் இல்லையா.. நீங்க சொன்னா நான் எழுதுவேன்” என்று டெரராக பேசி மதுமிதாவை ஒரங்கட்ட வைத்தார் கஸ்தூரி. இருவருக்கும் இடையே ஒரு பயங்கரமான ஃபைட் பிற்பாடு நடக்கும் என்பது உத்தரவாதமாகத் தெரிகிறது.

இந்த வாரத் தலைவர் போட்டி நடந்தது. சாண்டி, சேரன், லியா ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஒரு பெரிய கேன்வாஸூம் ஆளுக்கு ஒரு வண்ணமும் தரப்பட்டிருந்தது. அவர்கள் பெயிண்ட் அடிக்க வேண்டும். எவருடைய வண்ணம் கேன்வாஸில் அதிகம் இருக்கிறதோ அவரே தலைவர். சுண்ணாம்பு அடிப்பதில் தங்க மெடல் வாங்கிய அனுபவஸ்தர் போல சாண்டி மளமளவென்று ப்ரெஷ்ஷை வைத்துக் கொண்டு புகுந்து விளையாடினார். சேரனும் சளைக்கவில்லை. லியா நண்டுபிடிப்பது போல் எதையோ செய்து கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் சாண்டி பெயிண்டை எடுத்து அப்படியே ஊற்றினார். இதை முதலிலேயே செய்திருக்கலாம். இதைப் பின்பற்றி மற்றவர்களும் அடுத்தவர்களின் நிறங்களின் மேல் ஊற்றி தங்களின் வண்ணத்தை பரவச் செய்தார்கள். சில பகுதிகளில் வண்ணம் ஒன்றாக கலந்து விசித்திரமாக தெரிந்தது. ‘பச்சைத் தமிழன் சாண்டி வெற்றி பெற்றார்’ என்று அறிவித்தார் கஸ்தூரி. சேரனின் முகம் சுருங்கிப் போயிற்று.

பிறகு சேரனிடம் பேசிக் கொண்டிருந்தார் கஸ்தூரி. ‘நான் முடிவை அறிவிச்சவுடனே உங்க மூஞ்சி மாறுச்சு. கவனிச்சேன். நீங்கதான் அதிக முறை நாமினேட் ஆகியிருக்கீங்கள்ல.. எனக்கு ஞாபகம் வரலை. யோசிச்சிருந்தா உங்க பேரைச் சொல்லியிருப்பேன். மன்னிச்சுடுங்க” என்றார் கஸ்தூரி. இது போங்காட்டம். உண்மையாக இருந்ததை மட்டும்தானே சொல்ல வேண்டும்? கஸ்தூரி வந்த எபெக்ட்டோ என்னமோ, சேரன் தலைமுடியையெல்லாம் பக்காவாக வாரி ஸ்மார்ட்டாக இருந்தார்.

‘அமரேந்திர பாகுபாலியான நான்’ என்கிற ரேஞ்சிற்கு பதவியேற்றுக் கொண்டார் புதிய தலைவரான சாண்டி. ஆனால் மக்கள் அவரை ‘இம்சை அரசனாக’வே டிரீட் செய்தார்கள். “என்னென்ன குறைகள் இருக்கின்றன?” என்று விசாரித்த மன்னருக்கு.. ‘நீதாண்டா பெரிய குறை” என்பது போல் அவரை நோக்கி வீசப்பட்ட தலையணைகள் வந்து குவிந்தன. “போர்.. ஆம்.. போர்’ என்று பதிலுக்கு கிளம்பிய சாண்டிக்கு ஜாலியான எதிர்ப்புகள் நிறைய வர, சமாதானக் கொடியை ஆட்டிய படி பின்னாலேயே வந்தார் மங்குனி அமைச்சர் கவின்.

‘தனது மகள் மருத்துவமனையில் இருந்த துயரமான காலக்கட்டத்தை நினைவுகூர்ந்தார் கஸ்தூரி. ‘மூன்றரை வருடங்கள் தொடர்ந்து தூங்கவில்லை, சாப்பிடவில்லை’ என்று அவர் சம்பிரதாயத்திற்கு சொன்னதை லிட்டலராக அப்படியே எடுத்துக் கொண்டு “எப்படி அப்படி இருக்க முடியும்?” என்று எதிர்க் கேள்வி எழுப்பி மாட்டிக் கொண்டார் மதுமிதா. கஸ்தூரியின் கதையைக் கேட்டு கண்கலங்கிய மதுமிதாவை ‘தண்ணீரை வீணாக்கக்கூடாது’ என்று அறிவுரை சொல்லி துடைத்து விட்டார் கஸ்தூரி.

**

நெய் பிராண்டின் சார்பில் சமையல் போட்டி நடைபெற்றது. சமைப்பதற்கான உணவுப் பொருட்களை முன்னமே தந்து விடுவார்கள். அதை வைத்து என்ன உணவு செய்யலாம் என்று யூகிக்க வேண்டும். ‘சர்க்கரைப் பொங்கல்’ என்று முடிவாயிற்று.

‘எனக்கு சைவம் சமைக்கத் தெரியும்” என்று முன்னர் சொன்ன கஸ்தூரி, வாயிலேயே வடை சுட்டிருக்கிறார் என்பது இப்போது நிரூபணம் ஆயிற்று. “அப்ரண்டிஸ்களா.. அந்த ஆணியைப் புடுங்குங்க.. மேலே துடைடா.. டேய் என் மேல இல்லடா..” என்று உதவியாளர்களிடம் கெத்தாக மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார். வெல்லத்தை கொண்டு போய் அபிராமி ஓவனில் வைக்க.. ‘ஹேய்.. அதைக் கரைக்கணும்’ என்றார் கஸ்தூரி. “ஓ.. கரைச்சுபைஃயிங்கா… அப்படி புரியற மாதிரி சொல்லுங்க” என்றார் அபிராமி. கடலைப் பருப்பு எல்லாம் போட்டு பொங்கிய அந்த வஸ்துவைப் பார்க்கும் போது நமக்குத்தான் வயிற்றில் புளி கரைத்தது.

பாத்திரத்தின் மேலே திடீரென ‘குப்பென’ தீ மேலே எழ... ‘என்னடா.. இது .. சைனிஸ் பாணி சர்க்கரைப் பொங்கல் செய்யறாங்களோ’ என்று கலவரமாக இருந்தது.

“அவங்க.. சர்க்கரைப் பொங்கல் செய்யச் சொன்னா.. பருப்புல்லாம் போட்டு பிஸி பேளா பாத்’ செய்யறாங்க’ என்று கிண்டலடித்த சாண்டி, அங்கிருந்த முந்திரி பருப்பு உள்ளிட்டவைகளை சின்னப் பையன் மாதிரி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மொக்கினார். ’பக்கோடா’ சிறுவன் மாதிரி அவரைப் பின்தொடர்ந்தார் கவின்.

“அவங்க பாத்திரத்துல உப்பு தடவி வெச்சிடலாமா?” என்று கிரிமினல்தனமாக ஐடியா கொடுத்தார் சாக்ஷி. (வெஷம்… வெஷம்..)

கஸ்தூரியின் மேல் ஏற்கெனவே காண்டில் இருக்கும் மதுமிதா, வெளியே வந்த எதிரணிக்கு நிறைய ஐடியாக்களை அள்ளி வீசினார். ‘மக்களே.. அவங்க சொதப்பி வெச்சிருக்காங்க.. நீங்க ஜெயிக்கத்தான் சான்ஸ் அதிகம்” என்று நிறைய டிப்ஸ்களை கொடுத்தார்.

பஸ்ஸர் ஒலித்து முடித்தும் கஸ்தூரி டீமின் ‘ஸோ கால்ட்’ சமையல் முடியவில்லை. பிறகு வலுக்கட்டாயமாக இறக்கி வைத்த அந்த வஸ்து.. பாதி வெந்த புளியோதரையைப் போலவே இருந்தது. அதை சாம்பிள் எடுத்துக் கொண்டு வெளியே வந்த கஸ்தூரி ‘நல்லாத்தான் இருக்கு.. ஆனா வேகலை” என்றார், அரைவேக்காட்டுத்தனமாக. “பிக்பாஸ்.. இதைச் சாப்பிட்டு நான் எப்படி தீர்ப்பு சொல்ல முடியும். என் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டா யார் பொறுப்பு?’ என்று அலறினார் மதுமிதா.

“பக்கிங்க.. செனப்பன்னிங்க.. முந்திரிப் பருப்பையெல்லாம் எடுத்து மொக்கிட்டாங்க” என்று எரிச்சலானார் வெளியே வந்த அபிராமி. பாவம், அவர் மொக்குவதற்காக ஆவலாக வந்திருந்தார் போல.

தர்ஷன் டீம் செய்திருந்த வஸ்துவை தூரத்திலிருந்து பார்க்க சர்க்கரைப் பொங்கலைப் போலவே இருந்தது. எக்ஸாம் பேப்பரை முன்பே மடித்து வைத்த முந்திரிக்கொட்டை மாணவன் மாதிரி ‘சீக்கிரம் பஸ்ஸரை அடிங்கப்பா.. எவ்ள நேரம் வெயிட் பண்றது?” என்று ஜாலியாக அலுத்துக் கொண்டார் சாண்டி.

“உங்க பொங்கலுக்கும்.. எங்க பொங்கலுக்கும் சோடி .. போடுவமா.. சோடி’ என்று முடிவை அறிவிப்பதற்கான நேரம் வந்தது. கஸ்தூரி செய்த பொங்கலை சாப்பிடும் போதே நடுவர் மதுமிதாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை. அவர்கள் தட்டில் செய்து வைத்த அலங்காரத்தை பாராட்டி ஆறுதல் அளித்தார். (ஆனால் தட்டையா சாப்பிட முடியும்?!). தர்ஷன் டீம் செய்த வஸ்து பொங்கல் மாதிரியே இருக்கிறது என்று மதுமிதா அறிவிக்க சாண்டியின் அலப்பறை ஓவரானது.

“நாய்க்கு சோறு வெச்சியே.. பேரு வெச்சியா” என்கிற ஜோக் போல “நீங்க செஞ்ச ஐட்டத்துக்கு நீங்களே ஒரு பேரு வெச்சு மண்ணுல அடக்கம் பண்ணிடுங்க” என்று சாண்டி கிண்டலடிக்க, அபிராமி ரொம்பவும் காண்டானார். பிறகு எதிரணியே தர்ஷனின் பொங்கல் சிறப்பாக இருப்பதாக ஒப்புக் கொண்டார்கள். வெற்றி பெற்ற அணிக்கு மைசூர் பாக்கு பரிசாக கிடைத்தது. ‘கடலைப் பருப்பு போடக்கூடாது -ன்னு எனக்கு தெரியாது என்றார் கஸ்தூரி.

“நீ எதிரணிக்கு சொல்லிக் கொடுத்துட்டே’ என்று பிறகு மதுமிதாவிடம் சீரியஸ் ஆனார் சேரன். அது உண்மைதான் என்றாலும் தன் அணி செய்த ஏடாகூடமான பிழைகளை ஏற்றுக் கொண்டு தோல்வியை ஒப்புக் கொள்வதே சிறந்தது. சேரனின் கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்லி சமாளித்தார் மதுமிதா. (“முந்திரிப்பருப்பை போடச் சொன்னா.. கடலைப் பருப்பை போட்டுட்டு பேச்சைப் பாரு” என்பது அவர் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கக்கூடும்).

“சர்க்கரைப் பொங்கலை விட அதை செஞ்ச உன் கைதாம்மா சூப்பர்” என்று ஷெரீனை ஓட்டிக் கொண்டிருந்தது சாண்டி டீம்.

**

அடுத்ததாக ‘உண்மையைச் சொல்லு.. அல்லது சொன்னதைச் செய்’ என்கிற விளையாட்டு நடந்தது. (Truth or dare). ஒரு மேடையின் மேல் உள்ள பாட்டிலைச் சுழற்றி விடுவார்கள். அதன் வாய்ப்பக்கம் யாரை நோக்கி இருக்கிறதோ, அவரை நோக்கி கேள்வி கேட்கப்படும். முதலில் சாண்டி சுழற்ற, சொந்த செலவில் சூனியமாக அது கவின் பக்கம் வந்து நின்றது.

கஸ்தூரி கேள்வியைக் கேட்டார். “பிக்பாஸ் வீட்டில் நீ செஞ்ச காரியங்களுக்கு மக்கள் கழுவி ஊற்றுவார்களா.. மாலை போடுவார்களா?’ என்பது மாதிரியான கேள்வி. ‘எது நடந்ததோ அது கேவலமாக இருந்தது. அது எனக்கே தெரியும். ஆனால் இனி நடக்கவிருப்பது ஜோராக இருக்கும். என் பெயர் காப்பாற்றப்படும்’ என்பது போல் பதில் சொல்லி எஸ்கேப் ஆனார் கவின்.

அடுத்ததாக முகின் பாட்டிலைச் சுழற்றினார். அவர் சுற்றிய வேகத்தைப் பார்த்தால் அடுத்த சீஸன் வரைக்கும் பாட்டில் சுழலும் போல இருந்தது. அபிராமியின் பக்கம் பாட்டில் நின்றதும் தர்ஷன் கேள்வியைக் கேட்டார். கவின் –அபிராமி காதல் தீயில் அப்படியே ஐஸ் தண்ணீரை ஊற்றும் வில்லங்கமாக அவர் கேள்வி அமைந்திருந்தது. “இன்னிக்கு நீ வீட்டை விட்டுப் போறே.. என்றால் முகினிடம் என்ன பேசுவாய்?”

IMAGE_ALT

‘காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?” என்று பாடாத குறையாக ரொமான்டிக்காக பேசுவதாக நினைத்து பேசினார் அபிராமி. ஆனால் அது லவ் டார்ச்சர் போலவே அமைந்தது. “ஏழு ஜென்மத்திற்கும் முகினை மறக்க மாட்டாராம்”. ‘என்னடா.. இது சனியன். நம்மை விடாது போலிருக்கே’ என்பது முகினின் மைண்ட் வாய்ஸாக இருக்க வேண்டும். ஆனால் ‘மூஞ்சை சிரிச்ச மாதிரியே’ சிரமப்பட்டு வைத்துக் கொண்டார்.

அடுத்த வில்லங்கம் மதுமிதாவிற்கு வாய்த்தது. அவர் பெண் போட்டியாளர்களை கட்டியணைத்து முத்தமிட்டு ‘ஐ லவ் யூ’ சொல்ல வேண்டுமாம். இதற்கே அநியாயத்திற்கு வெட்கப்பட்டார் மதுமிதா. அவருக்குள் இருந்த சரோஜாதேவி உக்கிரமாக வெளிப்பட்ட நேரம். பார்க்க கண்றாவியாக இருந்தாலும் அதைச் செய்தார். ‘அவ்ளதான் போய்த் தொலை’ என்று தள்ளி விட்டார் லியா. முத்தத்தை கேட்டு வாங்கிக் கொண்டார் அபிராமி.

மதுமிதா இதற்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டார் போல. கடந்த சீஸனில் ஐஸ்வர்யா, ஜனனியை இழுத்து நச்சென்று கொடுத்த முத்தத்தைப் பார்த்தாவது அவர் டியூஷன் கற்றுக் கொள்ள வேண்டும்.

அனைத்துப் போட்டியாளர்களையும் பற்றி சேரன் சில வரிகளில் கருத்து சொல்ல வேண்டும். தானொரு இயக்குநர் என்பதை சேரன் நிரூபித்த சமயம் அது. ஒவ்வொரு காரெக்ட்டரையும் சரியாக அலசி வைத்திருந்தார். அவர்களின் நிறை, குறைகளை ‘சுருக்’ வார்த்தைகளில் சரியாக முன்வைத்தார்.

“இந்த வீட்டில் நுழைவதற்கு முன்னால் அபிராமியை நினைத்துத்தான் பயந்தேன்” என்றார் கஸ்தூரி. அபிராமியின் க்ளோசப் பயங்கரங்கள் உலகப்புகழ் பெற்று விட்டது போல. அதைத்தான் கஸ்தூரி சர்காஸ்டிக்காக குறிப்பிட்டார் போலிருக்கிறது.

தர்ஷன் பிக்பாஸ் வந்த காரணத்தை விசாரித்துக் கொண்டிருந்தார் கஸ்தூரி. “கடன்லாம் கொஞ்சம் ஓய்ஞ்சது. இருந்தாலும் வின் பண்ணணும்ன்றதுதான் என் நோக்கம். அதனால்தான் டாஸ்க்லாம் அக்ரஸ்ஸிவ்வா செய்வேன்’ என்றார் தர்ஷன். ‘அவன்தான் டாப்பு… மீதியெல்லாம் டூப்பு” என்று தர்ஷனுக்கு சான்றிதழ் தந்தார் சாண்டி.

இப்போதைய சூழலில் சகிப்புத்தன்மையிலும் சரி, அனைவருடனும் இணக்கமாக பழகுவதிலும் சரி, விளையாட்டுப் போட்டிக்கான உடல் தகுதியிலும் சரி, தர்ஷன்தான் முன்னணியில் இருக்கிறார். எனவே பிக்பாஸ் டைட்டிலை வெல்லுவதற்கான சாத்தியக்கூறு அவரிடமே அதிகம் இருக்கிறது.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE