Thursday 28th of March 2024 12:58:36 PM GMT

LANGUAGE - TAMIL
“ஒரு பிக்பாஸிற்கு ஒரு கமல் போதுமே!” - சுரேஷ் கண்ணன்

“ஒரு பிக்பாஸிற்கு ஒரு கமல் போதுமே!” - சுரேஷ் கண்ணன்


பொதுவாக கமல் வீசும் ஒன்லைனர்கள், பொழிப்புரைகள், கமெண்ட்டுகள் போன்றவை சமயங்களில் மிக மிக சுவாரசியமாக இருக்கும். மறுப்பில்லை. ஆனால் வேறு பல சமயங்களில் மொக்கையானதாக, சலிப்பூட்டும் வகையில் சுயபுராண அறுவைகளாக அமைந்திருக்கும். என்றாலும் அது கமல் என்பதால் சகித்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் கமலுக்கே டஃப் ஃபைட் தரும் வகையில் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் உருவாகியிருக்கிறார். ஆம். நேற்று கஸ்தூரி அடித்த கமெண்ட்டுகள், (‘கேர்’ரன்) பொழிப்புரைகள், தலையை ‘கிர்’ராக்கும் விளக்கங்கள் போன்றவற்றைப் பார்த்த போது இதுதான் தோன்றியது.

‘ஒரு பிக்பாஸ் வீட்டிற்கு ஒரு கமல் போதுமே!’

சரவணன் வெளியேற்றம் பற்றிய பின்னணியை சனிக்கிழமையன்று கமல் சொல்லுவார் என்று முன்பு அறிவித்திருந்தார்கள். இன்று அது பற்றி ஒன்றும் காணோம். ஒருவேளை ஞாயிறு நிகழ்ச்சியில் வருமோ, என்னமோ.

அழுது புலம்பிய சாண்டி, கவின் உள்ளிட்ட இதர போட்டியாளர்களும் இது பற்றி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. (அல்லது எடிட் செய்யப்பட்டிருக்கலாம்).

இந்த வாரம் வெளியேறப் போகிறவர் யார் என்பதை கஸ்தூரி யூகித்து விட்டார். அதை சம்பந்தப்பட்டவரிடமே பூடகமாக அவர் சொன்னது சிறப்பு.

என்ன நடந்ததென்று பார்ப்போம்.

**

அட்டகாசமான உடையில் வந்தார் கமல். “ப்ரெண்ட்ஷிப்பில் மனசு உடையலாம். கட்டில், மேஜைல்லாம் உடையுமோ?” என்று ஆரம்பித்தார். (இந்த அசாரணமான ஜோக்கைக் கேட்டு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு ஆண்டவரே!). பிறகு பிக்பாஸ் வீட்டையும் அரசியல் பகடியையும் சுயபுராணத்தையும் கலந்தடித்து பேசினார். அவர் நிறுத்தும் இடங்களில் எல்லாம் பார்வையாளர்கள் புரிந்து கொண்டு கைத்தட்டினார்கள். (நல்ல டிரையினிங் போல) ‘புதிய வரவு மாற்றத்தை ஏற்படுத்தலாமாம். முயல் ஆமை கதை போல மாறி விடலாமாம்.’

புதிய வரவான கஸ்தூரிக்கு நிகழ்ச்சி பற்றியும் போட்டியாளர்களைப் பற்றியும் நன்கு தெரிந்திருப்பது ஒருவகையில் பலம், அதுவே பலவீனமாகக் கூட அமையலாம் என்கிற பொழிப்புரையுடன் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளுக்கு சென்றார் கமல்.

48-ம் நாள் காலை. ‘எங்க வீட்டு குத்துவிளக்கு’ என்கிற பாடலுடன் விடிந்தது. ‘குத்து விளக்கு’ பாடலுக்கு ஆடிய கஸ்தூரிக்கான வரவேற்பு போல.

பெட்டிக்கடையின் கடலை மிட்டாயைத் தாண்டி வராத நமக்கு, உயர்விலை சாக்லேட்டை பிராண்டைக் காட்டி வெறுப்பேற்றினார்கள். போட்டியாளர்கள் டாஸ்க்குகளை சிறப்பாக செய்தால் வழங்கப்படுமாம்.

மதுமிதா அசைவம் சமைத்திருந்தார். (வெள்ளிக்கிழமையாச்சே.. அபச்சாரம்.. அபச்சாரம்!) கம்பங்கொல்லைக்குள் புகுந்த கழுதைகள் மாதிரி மக்கள் அசைவ உணவை ஆவேசமாக வெட்டிக் கொண்டிருந்தார்கள். மதுமிதாவின் சமையலையும் புகழ்ந்தார்கள். ஆலையில்லா ஊருக்கு அவர்தான் இலுப்பைப்பூ. எனவே மதுமிதாவை புகழ்வதைத் தவிர வேறு வழியில்லை.

‘சமைக்கத் தெரியும்’ என்று கஸ்தூரி விட்ட பீலா, சர்க்கரைப் பொங்கல் என்கிற புளியோதரையின் வழியாக அம்பலமாகி விட்டதால் மதுமிதாதான் இப்போதைக்கு அசைக்க முடியாத கிச்சன் அமைச்சர். “அவங்க சமையல் செஞ்சிருந்தா செத்துப் போன சிக்கனை திருப்பியும் சாகடிச்சிருப்பாங்க” என்று கஸ்தூரியை கிண்டலடித்தார் சாண்டி.

அடுத்தது ஃபேஷன் ஷோ. இதற்கு நடுவர் கஸ்தூரி. “ஆள் பாதி. ஆடை பாதி’ என்பார்கள். தர்ஷன் அணிந்திருந்த உடை பாதிதான் இருந்தது. முகின் அபிராமியின் முதுகில் ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

ஷோ ஆரம்பித்தது. வேறு இசையைப் போட்டிருக்கலாம். ஓநாய் ஊளையிடுவதைப் போலவே ஆரம்பிக்கும் பிக்பாஸின் தீம் இசையைப் போட்டார்கள். பிரைட் ரைஸூம் கருவாட்டுக்குழம்பும் இணைந்து வந்ததைப் போன்று முதலில் சாக்ஷியும் சாண்டியும் வந்து போனார்கள்.

கவினும் லியாவும் இணைந்து வந்தது கண்கொள்ளாக்காட்சி. நல்லவேளையாக காமிரா அப்போது சாக்ஷியைக் காண்பிக்கவில்லை. அவரின் வயிற்றுப் பகுதியில் நிச்சயம் தீ பிடித்திருக்கும். முகினும் அபிராமியும் அடுத்து வந்தார்கள். ‘எங்காத்துக்காரரு’ என்கிற தோரணையில் வழக்கம் போல் அபிராமி ஈஷிக் கொண்டே வந்தார். ‘செக்ஸியான லுக்’ என்கிற பெயரில் வெற்றிலை பாக்கை மெல்லுவது போல எதையோ செய்தார் மதுமிதா. இவருடன் வந்த சேரன் ‘ரொமாண்டிக் பார்வையுடன்’ மதுமிதாவைப் பார்த்துக் கொண்டே பின் பக்கம் நடந்து சென்றதில் தடுக்கி விழுந்து வைப்பாரோ என்று தோன்றியது.

தர்ஷனும் ஷெரினும் வந்த போது விசில் பறந்தது. ‘அரை நிர்வாணமாக’ வந்த தர்ஷன் இதில் வெற்றி பெற்றார். (என்னய்யா போங்காட்டம்.. பாதி டிரஸ் போட்டவனுக்கு ஆடைப்போட்டியில் வெற்றி!). சிறந்த பெண் போட்டியாளர் சாக்ஷியாம். இது கஸ்தூரியின் தீர்ப்பு. எல்லோருக்கும் உடைகள் இலவசமாக வழங்கப்பட்டன. தீபாவளிக்கு வாங்கிக் கொடுத்த உடைகளை சிறுவர்கள் ஆவலோடு பார்த்து மகிழ்வது போல் போட்டியாளர்கள் மகிழ்ந்தனர்.

**

சாக்ஷிக்கும் ஷெரீனுக்குமான உறவில் விரிசல் விட ஆரம்பித்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. ‘தனக்கு உடல்நிலை சரியில்லையென்றாலும் அவளையே ஃபோகஸ் செய்வது போல நடந்து கொள்கிறார் சாக்ஷி. என்னைப் பற்றி விசாரிக்கக்கூட இல்லை. அவளைப் பற்றியேதான் அவளுக்கு எப்போதும் கவலை. நானும் எத்தனை நாளைக்குத்தான் ‘தோழி’ கேரக்கட்டரே பண்றது. எனக்கும் இப்போது ஹீரோ கிடைச்சுட்டான்’ என்றெல்லாம் ஷெரீன் அனத்திக் கொண்டிருந்தார். ‘அவ குழந்தை மாதிரி’ என்றார் சேரன். (சேஃப் கேம் விளையாடறதே இந்த மனுஷனுக்கு பொழப்பா போச்சு!).

‘இந்த வாரம் யார் வெளியே போவாங்க?’ என்கிற தூண்டிலை சாக்ஷியிடம் வீசிக் கொண்டிருந்தார் கஸ்தூரி. ‘இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்ட்ல லியா இருக்காங்க.. கவினும் அடுத்த வாரம் போயிட்டா எப்படியிருக்கும்?’ என்று கஸ்தூரி கேட்டதற்கு, ‘ரெண்டு பேரும் இருக்கணும். அப்பத்தான் மசாலா இருக்கும்’ என்றார் சாக்ஷி. ‘என் உள்ளுணர்வு என்ன சொல்லுதுன்னா.. இந்த வாரம் உங்களுக்கு உண்மையெல்லாம் தெரிய வரும்’ என்று சாக்ஷியிடம் பூடகமாகச் சொன்னார் கஸ்தூரி. (அவர் சொன்னதுதான் உண்மையாகப் போனதாமே?!)

சாண்டியை சீக்ரெட் ரூமிற்கு அழைத்த பிக்பாஸ், இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் இருக்கும் லியா, அபிராமி, சாக்ஷி ஆகியோரைப் பற்றிய பாடலை கவினுடன் இணைந்து தயாராக்கச் சொல்லி உத்தரவிட்டார். கமல் முன்பு பாட வேண்டுமாம். யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். ‘குருநாதா.. யாராவது ஒருத்தர் போயிடுவாங்கள்ல?” என்று முந்திரிக்கொட்டைத்தனமான ஆவலுடன் சாண்டி கேட்க, மெளனம் சாதித்தார் பிக்பாஸ். ஆனால் ‘நீங்க போகலாம் சிஷ்யா” என்று சொன்னது ஆச்சரியம். பிக்பாஸ் இப்படியெல்லாம் ஜாலியாக பேசுவது மிக அபூர்வம்.

**

அகம் டிவி வழியே உள்ளே வந்தார் கமல். கஸ்தூரியை வரவேற்றார். “வெளில இருந்து இந்த ப்ரோக்ராமை பார்த்துட்டு உள்ளே வந்தா எல்லாம் தலைகீழா இருக்கு. இங்க நிறைய லூஸூகளா இருக்குங்க” என்றார் கஸ்தூரி. மற்றவர்களுக்கு வைத்த செல்லப்பெயர்களையும் பற்றி சொன்னார்.

IMAGE_ALT

“யாரு தச்ச.. சட்டை.. தாத்தா தச்ச சட்டை’ மாதிரி தர்ஷனைப் பற்றி அவர் சொன்னது என்னவென்று விளங்கவில்லை. ஆனால் தர்ஷனின் பெயர் சொல்லப்பட்டதுமே பார்வையாளர்களின் கைத்தட்டல்கள் கிடைத்தன. ‘லியா, சிலை போலவே இருக்கிறார்’ என்று வஞ்சப்புகழ்ச்சியில் வாரியது ஓகே.

“கை எப்படி இருக்கு?” என்று கேட்டு முகினை ஜெர்க் ஆக்கிய கமல், சட்டென்று டாப்பிக் மாற்றி அடுத்த விஷயத்திற்கு வந்தார்.

கஸ்தூரியைப் பற்றி மற்றவர்கள் சொல்ல வேண்டும். ‘புயல் மையம் கொண்டிருக்கு. எப்போது கரையைக் கடக்கும் என்று தெரியவில்லை” என்றார் சேரன். ‘மய்யம்’ என்கிற வார்த்தையைக் கேட்டதும் சந்தோஷமானார் கமல். (நாம பெரிய கட்சிதான் போல!). “ரொம்ப போரடிச்சது சார்.. அவங்க வந்த பிறகுதான் கதைல ஒரு டிவிஸ்ட் வரும் போல இருக்கு” என்றார் சாக்ஷி. ‘உங்களுக்கே போரடிச்சுதா?” என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டார் கமல் (அடிச்ச கைப்பிள்ளைக்கே இவ்ள காயம்னா’ மோமெண்ட் அது). ‘எங்களுக்கு ஒரு மாமியார் கிடைச்சிருக்காங்க..’ என்று முதலில் வாயை விட்ட அபிராமி. பிறகு சுதாரித்துக் கொண்டு ‘நல்ல மாமியார்’ என்று பின்வாங்கினார்.

கஸ்தூரி நிறைய முன்திட்டங்களோடு வந்திருப்பதாக மற்ற போட்டியாளர்கள் நினைக்கிறார்கள். போலவே அவர் எப்போது வேண்டுமானால் கோபத்தில் வெடிக்கலாம் என்பதையும் பார்க்க காத்திருக்கிறார்கள்.

அந்த வீட்டின் ஹீரோ, ஜீரோ, வில்லன் யார் என்பதை கஸ்தூரி தேர்ந்தெடுக்க வேண்டும். ஹீரோ மற்றும் ஹீரொயினாக தர்ஷன் மற்றும் ஷெரீனை ஜோடியாகத் தேர்ந்தெடுத்தார் கஸ்தூரி. தர்மசங்கடமான சிரிப்புடன் எழுந்து வந்தார் ஷெரீன்.

IMAGE_ALT

கவுண்டமணியின் மேனரிசங்களுள் ஒன்று இது. சங்கடமான நேரங்களில் கழுத்தை இழுத்துக் கொண்டு வாயைக் கோணிக் கொண்டு .. ஈஈஈஈ’ என்பது மாதிரி செய்வார். இது தர்ஷனுக்குப் பிடித்த மேனரிஸம் போல. அடிக்கடி இது போல் செய்கிறார். இந்தத் தருணத்திலும் அதைச் செய்தார் தர்ஷன்.

“வீடு பெருக்கற ஆயா வந்தா கூட பின்னாடியே போய் மொபைல் நம்பர் கேட்கறான்” என்றபடி ஜீரோவாக கவினைத் தேர்ந்தெடுத்தார் கஸ்தூரி. வில்லன் சாண்டியாம்.

“முகின் … கை எப்படி இருக்கு?” என்று கேட்டு முகினின் கையை மறுபடி பிடித்து இழுத்தார் கமல். முகினுக்கும் அபிராமிக்குமான உறவு எது என்பதை அறிவதில் ஆர்வம் காட்டினார் கமல். இப்படி அந்தரங்கமான விஷயத்தில் மூக்கை நுழைப்பது முறையல்ல என்றாலும் இதை பொதுச்சபையில் தெளிவாக்கி விடுவது நல்லது. ஏனெனில் அவர்களின் உறவில் அப்படியொரு சிக்கல் இருக்கிறது.

‘ரஸ்க் பிஸ்கெட் டீயில் தோய்த்தவுடன் இறுக்கம் குறைந்து காணாமல் போய் விடுவது போல கண்ணீரில் நீங்கள் அடிக்கடி காணாமல் போய் விடுகிறீர்களே?” என்று முகினிடம் விசாரித்தார். ஆனால், ‘ரிஸ்க் எடுக்கறதுன்னா.. எனக்கு ரஸ்க் சாப்பிடறது மாதிரி’ மோடில் இருக்கும் அபிராமியின் பதில் தெள்ளத் தெளிவாக இருந்தது.

“யெஸ்.. ஐ லவ் திஸ்.. லவ்வபிள் இடியட்” என்று பாட்டாகவே பாடி விட்டார் அபிராமி. ஆனால் முகின் என்னை தோழியாகத்தான் நினைக்கிறார் என்பதையும் சொன்னார்.

அபிராமியின் விஷயம் இந்தத் தொடரில் ஏற்கெனவே அலசப்பட்டதுதான். முகினிடம் தன்னிச்சையாக ஈர்ப்பில் விழவும் அதை வெளிப்படுத்தவும் அபிராமிக்கு உரிமையுண்டு. அது இயல்பான விஷயம். ஆனால் தன் ஒருதலைக் காதலை கட்டுப்படுத்திக் கொள்ளும் நாகரிகம் அவருக்குத் தேவை. ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ மோடில் எப்போதும் அவர் உரிமை கொண்டாடிக் கொண்டிருப்பதுதான் எரிச்சலாக இருக்கிறது.

முகினிடம் பெண் போட்டியாளர்கள் பேசினால் பொசசிவ்னஸூம் கோபமும் அடைகிறார் அபிராமி. ஆனால் முகினுடன் முன்னமே ஒரு உறவில் இருக்கும் மலேசியா பெண் இதைப் பார்த்தால் என்ன உணர்வை அடைவார் என்பதையும் அபிராமி யோசித்துப் பார்க்க வேண்டும்.

“ஸ்விம்மிங் ஃபூல்ல. தண்ணி ஊத்தி வெக்கலை-ன்றதுக்காக கண்ணீரிலேயே அதை நிரப்பிடுவீங்க’ போலிருக்கே’ என்று அபிராமியை கிண்டலடித்த கமல், ‘உங்கள் அன்பு முகினின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது’ என்று எச்சரித்தார். போலவே முகினும் இந்த உறவிற்கு அதிக ஸ்பேஸ் தருகிற பிரச்சினையும் விவாதிக்கப்பட்டது.

இதைக் கேட்டு மறுபடியும் அழ ஆரம்பித்த அபிராமி, பிறகு தன்னைத் தேற்றிக் கொண்டு ‘இது போல் இனி நடக்காது’ என்கிற உத்தரவாதத்தைத் தந்திருக்கிறார்.

Unconditional love பற்றி பேசும் போது ரசிகர்களை அதில் இழுத்து தன் சுயபுராணத்தையும் கலந்தடித்தார் கமல். (எப்படி பால் போட்டாலும் அடிக்கறீங்க.. ஆண்டவரே!). கமல் விலகியதும் கழிவறைக்குள் சென்று அழுகையைத் தொடர்ந்த அபிராமிக்கு லியா ஆறுதல் சொன்னார். (லியாவும் இப்படி முன்பு அழுது அபிராமி ஆறுதல் சொன்னது நினைவிருக்கலாம். வாழ்க்கை ஒரு வட்டம்தான்).

**

Angel / devil என்கிற பட்டத்தை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க வேண்டும். தேவதை பட்டத்தை சாண்டிக்கு பாதுகாப்பாக கொடுத்த கவின், ‘டெவில்’ பட்டத்தை அபிராமிக்கு வழங்கினார்.

சாண்டி தேவதை பட்டத்தை ஷெரீனுக்கு தந்த போது கைத்தட்டல்கள் பறந்தன. பிக்பாஸ் வீட்டின் ‘நைட்டிங்கேர்ள்’ அவர்தானாம். (நொந்து போய் ரிசைன் செய்து விட்டுப் போயிருந்த ஷெரீன்ஆர்மிக்காரர்கள் மீண்டும் சுறுசுறுப்பாக வந்து பதவியேற்றுக் கொள்வார்கள் போல). அபிராமிக்கு மீண்டும் டெவில் பட்டம். பாவம்.

தர்ஷன் தேவதை பட்டத்தை யாருக்கு தருவார்? யெஸ். ஷெரீனேதான். ‘அவங்க ஷெரீனை உபயோகிச்சுக்கற மாதிரி தெரியுது’ என்கிற காரணத்தைச் சொல்லி சாக்ஷிக்கு ‘டெவில்’ பட்டத்தை தந்தது அல்ட்டிமேட் மோமெண்ட். சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொண்டாலும் சாக்ஷியின் மைண்ட் வாய்ஸில் தீ பற்றியிருக்கும்.

கடுமையான போட்டியாளர் என்பதாலேயே தேவதை பட்டத்தை தர்ஷனுக்கு வழங்கினார் முகின். அடுத்ததாக முகின் செய்த காரியம் அநியாயமானது. ஆம். டெவில் பட்டத்தை லியாவிற்கு தந்து அக்கிரமம் செய்தார் முகின். ஆனால் அதற்கு சொன்ன காரணம் பாதுகாப்பானது. ‘என் தங்கச்சியும் டெவில் மாதிரிதான். அதனால் தங்கச்சி லியாவிற்கு அளித்தேன்’ என்று சென்ட்டிமென்ட்டால் மெழுகி வைத்தார்.

IMAGE_ALT

சேரனுக்கு தொடர்ந்து ஐஸ் வைத்துக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி. ‘அவரால்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.’ என்று தேவதை பட்டத்தை சேரனுக்கு தந்தார். கவினுக்கு டெவில் பட்டத்தை அவர் தராமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

போலவே லியாவும் ‘தேவதை’ பட்டத்தை யாருக்கு தருவார்? யெஸ். சேரனுக்குத்தான். (பாசமழையைப் பொழியறாங்கப்பா!) கஸ்தூரிக்கு டெவில் பட்டத்தை தந்தது லியாவின் அபாரமான துணிச்சல்.

சாக்ஷி தனக்கு அளித்த ‘டெவில்’ பட்டத்தை கீரிடத்தின் பின்னே ஒளித்து வைத்து ‘ராஜதந்திரம்’ புரிந்தார் சாண்டி. ‘எனக்குள்ளயும் ஒரு டெவில் இருக்கு. அதை சாக்ஷிதான் வெளியே கொண்டு வர்றா’ என்கிற ராஜதந்திர காரணத்தைச் சொல்லி டெவில் பட்டத்தை சாக்ஷிக்கு தந்தார் ஷெரீன். தனக்குத்தான் ‘தேவதை’ பட்டம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த சாக்ஷி, இளிப்புடன் ஏமாற்றமடைந்தார்.

பலரால் வறுத்தெடுக்கப்பட்ட அபிராமிக்கு தேவதை பட்டத்தை சேரன் தந்தது சிறப்பு. (லியாவிற்கு தருவார் என்று எதிர்பார்த்தேன்!)

ஆக.. அதிக தேவதை பட்டங்களைப் பெற்று ஷெரீன் முன்னணியில் வந்தார். (முயல் – ஆமை கதைதான் நினைவிற்கு வருகிறது). பலர் இரட்டைக் கொம்புகளைப் பெற்றிருந்தார்கள். முகினுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. ‘அன்பு எப்போதுமே அநாதையாத்தான் நிக்கும்” என்று சொல்லி கண்ணில் ஜலம் வர வைத்தார்.

IMAGE_ALT

தலைவர் பதவிக்கான போட்டியில் தோற்றுப் போன வருத்தத்தை நேர்மையாக ஒப்புக் கொண்டார் சேரன். ஆனால் ஏற்கெனவே இரண்டு முறை விட்டுத்தந்த சாண்டியிடம் தோற்றதால் அத்தனை வருத்தமில்லை என்றது சிறப்பு.

Truth or dare டாஸ்க்கில் வீட்டின் போட்டியாளர்களைப் பற்றி சேரன் ஓரிரு வாக்கியங்களில் சொன்ன விமர்சனத்தில் எவருக்கேனும் மாற்றுக் கருத்து இருந்தால் இப்போது சொல்லலாம் என்றார் கமல். ‘முகின் தவறான வாக்குறுதிகளை சொல்கிறார்’ என்று சேரன் சொன்னதில் தனக்கு உடன்பாடில்லை என்றார் அபிராமி. ஆனால் ‘அவர் சொன்ன context எனக்குப் புரிந்தது” என்று அபிராமிக்கு பல்பு கொடுத்தார் முகின். இந்த விஷயத்தை தனியாகப் பேசிய எத்தனையோ சந்தர்ப்பங்களில் அபிராமி தெளிவாக்கிக் கொண்டிருக்கலாம். இப்படி முந்திரிக்கொட்டைத்தனமாக பேசி சபையில் சங்கடப்பட்டிருக்கத் தேவையில்லை.

சாண்டியின் ‘மன்னராட்சி’ குறும்புகள் தொடரட்டும் என்று கமல் சொன்னதற்கு ‘நன்றி ராஜகுரு’ என்று சமயோசித கமெண்ட்டால் கவர்ந்தார் சாண்டி.

‘சரி.. ஒருவரைக் காப்பாற்றலாமா?” என்று ஆரம்பித்து நாளை சந்திப்போம் என்று விடைபெற்றார் கமல்.

ஏற்கெனவே பலமுறை சொன்னதுதான். யார் வெளியேறுவார் என்கிற ரகசியம் ஒவ்வொரு வாரமும் வெளியாகி விடும் போது கமல் செய்யும் இது போன்ற கிம்மிக்ஸ்களில் சுவாரசியமில்லாமல் போகிறது. பிக்பாஸ் டீம் இதைக் கவனிக்க வேண்டும்.

சரவணன் விவகாரம் பற்றி இன்றாவது கமல் பேசுவார் என்று எதிர்பார்ப்போம்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE