Thursday 28th of March 2024 05:40:59 AM GMT

LANGUAGE - TAMIL
“கோத்தாவின் கோலாகல அறிவிப்பும் தமிழர் தலைமைகளும்”
“கோத்தாவின் கோலாகல அறிவிப்பும் தமிழர் தலைமைகளும்”

“கோத்தாவின் கோலாகல அறிவிப்பும் தமிழர் தலைமைகளும்”


இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக நல்;லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அந்த அணுகுமுறை பயனற்றது என தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த இருகட்சி அரசாங்கத்திற்கான ஆதரவாக இது இருந்த போதிலும், குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சிக்கே கூட்டமைப்பு தனது ஆதரவை நல்கியிருந்தது. நல்கியிருக்கின்றது.

எதிர்ப்பரசியல் என்ற அரசியல் உத்தி தமிழ் மக்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்கு சாதகமான விளைவுகளைத் தரத்தவறியதனால், அரசுக்கு ஆதரவு வழங்கி அனுசரணையாகச் செயற்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்ற நம்பிக்கையில் இந்த நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்பட்டிருந்தது.

நிபந்தனைகளை விதித்து, எழுத்து மூலமான ஒப்பந்தத்தின் கீழ் ஆதரவு வழங்கினால், அது 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எதேச்சதிகாரப் போக்கைக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மகி;ந்த தரப்பினர் மீண்டும் இனவாதப் பிரசாரத்தின் மூலம் அரசியல் செல்வாக்கைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என்ற காரணத்திற்காகவே நம்பிக்கையின் அடிப்படையில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்பட்டதாக கூட்டமைப்பின் தலைமையினால் காரணம் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அத்தகைய ஏற்பாடுகள் எதுவுமே இல்லாத நிலையிலும் மகிந்த தரப்பினர் அரசியலில் செல்வாக்கு பெற்றிருப்பதையே கள நிலைமைகள் கோடி காட்டி இருக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் கைவிட்டு, பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை அதிகார பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ள மகிந்த ராஜபக்ச, தனது சகோதரனாகிய கோத்தாபாய ராஜபக்சவையே அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தை பொத்திப் பொத்திப் பாதுகாத்து வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால், அதனைப் பாதுகாக்கவும் முடியவில்லை. தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் முடியவில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதன் ஊடாக அரசியல் தீர்வு காண்பதற்காக மேற்கொண்ட முயற்சியிலும் தோல்வியையே தழுவி இருக்கின்றது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய நிலை

கடந்த நான்கரை வருடங்களில் கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவு அரசியல் தந்திரோபாயச் செயற்பாடு திருப்தியளிக்கும் வகையில் நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காட்டவில்லை. பிரச்சினைகளைக் குறைப்பதற்குப் பதிலாக அவற்றை அதிகரிப்பதற்கே வழிவகுத்திருக்கின்றது.

ஒரு சில விடயங்களில் சிறிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக கூட்டமைப்பின் தலைமை கூறினாலும், பாதிக்கப்பட்ட மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்த நிலைமைக்கே ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிய நிலைமைக்கே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தேய்ந்திருக்கின்றன.

நான்கு வருடங்களுக்கு மேலாக நல்லாட்சி அரசாங்கத்திற்கான தமது ஆதரவை நியாயப்படுத்தி வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனும், அதன் பேச்சாளர் சுமந்திரனும் ஆட்சியாளர்களினால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தி உள்ளார்கள்.

இந்த ஏமாற்ற உணர்வை அவர்களுடைய அண்மைக்கால அரசியல் சார்ந்த உரைகளும் கருத்துக்களும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தரப்பில் விமர்சனம் செய்தால், அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தியைத் தெரிவித்தால், அது அரசாங்கத்தின் இருப்புக்கே ஆபத்தாகிவிடும் என்ற காரணத்தைக் காட்டி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் ஆகியோரை அடக்கி வாசிக்க கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிர்ப்பந்தித்திருந்தார்.

அரசியல் தீர்வு காண்பதற்கு அடிப்படையான புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் மக்களுடைய நலன்களுக்குப் பாதகமான அம்சங்கள் உள்ளடக்கப்படுகின்றன என சுட்டிக்காட்டியவர்களை கூட்டமைப்பின் தலைமை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கியிருந்தது.

சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வே வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ் மக்கள் கொண்டிருந்த போதிலும், புதிய அரசியலமைப்பில் பயன்படுத்தப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய என்ற சொற்பதம் ஒற்றையாட்சியைக் குறிக்கவில்லை. அது நாட்டின் ஒருமைப்பாட்டையே குறிக்கின்றது. ஆட்சி முறையைக் குறிக்கவில்லை என்று கடுமையான கருத்துக்களை முன்வைத்து, உத்தேச புதிய அரசியலமைப்பு வரைபில் சமஸ்டி மறைந்திருக்கின்றது. அதனைக் கூர்ந்து அவதானித்தால் தெரியும் என சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார். இதே கருத்தை சம்பந்தனும் கொண்டிருந்தார்.

'ஆயுதப் போராட்டம்தான் உங்களை வழிக்குக் கொண்டு வருமோ?'

உத்தேச புதிய அரசியலமைப்புக்கான வரைபு ஒற்றையாட்சியையே அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பேரின அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகக் கருத்துரைத்திருந்தனர். அதனை ஆதாரமாகக் கொண்டும், புதிய வரைபில் தெரிவிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையிலும் புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

அது தமிழ் மக்களின் விருப்பத்திற்கு நேர்மாறானது என்று கருத்துரைத்த ஊடகங்கள், ஊடகவியலாளர்களை அரசியலமைப்பு வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நன்கு வாசிக்கத் தவறிவிட்டார்கள். அவர்களுக்கு அதனை சரியாக வாசிக்கத் தெரியவில்லை என்றுகூட சுமந்திரன் கடும் சொற்களில் சாடியிருந்தார்.

இவ்வாறு பெரிய அளவில் நம்பிக்கை கொண்டிருந்த சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகிய இருவருமே அரசாங்கத்தின் போக்கில் அதிருப்தியடைந்து அரசுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய ஆர்.சம்பந்தன் ஆயுதப் போராட்டம் இருந்தால்தான் நீங்கள் அரசியல் தீர்வுக்காகச் செயற்படுவீர்களோ என வினா எழுப்பியிருந்தார். அத்துடன், அது பற்றியும் தாங்கள் சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என கசப்புணர்வு நிலையில் கருத்துரைத்திருந்தார். ('ஆயுதப் போராட்டம் இருந்தால்தான் நீங்கள் அரசியல் தீர்வுக்காகச் செயற்படுவீர்களோ என்பது பற்றியும் நாங்கள் சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது' என்பதே அவருடைய கூற்று)

இந்தக் கருத்தைத் தெரிவித்ததன் மூலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தமிழ் இளைஞர்களை மீண்டும் ஆயுதமேந்தச் செய்ய விழைந்;திருக்கின்றாரோ என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். சில ஊடகங்கள் ஆயுதப் போராட்டத்தைத் தூண்டும் வகையில் அவர் கருத்து வெளியிட்டிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தன. இதனை மறுத்துரைத்து, சம்பந்தனுடைய உரைக்கு சரியான வியாக்கியானம் அளித்த கருத்துக்களும் கூட்டமைப்பிடம் இருந்து வெளி வந்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் யாழ்ப்பாணத்தில் நிதியமைச்சர் மங்கள சமவீர கலந்து கொண்ட நிகழ்வில் பேசிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் கிட்டத்தட்ட இதையொட்டிய வகையில் கருத்தை வெளியிட்டுள்ளார்.

'எல்லாமே உங்கள் கைகளில்தான் உள்ளது'

நீச்சல் துறையில் சர்வதேச புகழை ஈட்டியிருந்த ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதில் முக்கிய விருந்தினராக நிதி அமைச்சர் மங்கள சமரவீர கலந்து கொண்டிருந்தார். அவருடன் அங்கு பிரசன்னமாகியிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், ஆழிக்குமரனைப் புகழ்ந்து பேசியதுடன், அந்த மண்ணின் மைந்தனாகிய விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் புகழத் தவறவில்லை.

சட்டத்தரணி என்ற வகையில் மிகவும் நாசுக்காக பிரபாகரனின் பெயரைக் குறிப்பிடாமலேயே அச்சொட்டாக அவரைப் புகழ்ந்திருந்தார். அத்துடன் அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் மிகவும் பொறுப்புடன் தென்னிலங்கையைச் சேர்ந்த பேரின அரசியல்வாதிகள் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அங்கு உரையாற்றிய அவர் பின்வருமாறு கூறியிருந்தார்:

'இந்த மண்ணில் இருந்து தோன்றிய இரண்டு சாதனையாளர்களில் ஒருவருக்காக நீச்சல் தடாகம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மற்றவரைப் போன்ற இன்னுமொருவர் எங்கள் மத்தியில் இருந்து எழுவாரா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது தெற்கில் இருக்கின்ற நீங்கள். உங்கள் அரசியலும், நீங்கள் உருவாக்குகின்ற அரசியல் தலைவர்களும்தான் அப்படியானதொன்று இனி நடக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கும். ஆகையினால் நிதானமாகச் செயற்பட்டு, நாங்கள் பழைய நினைவுகளோடு மட்டும் இந்தச்செயற்பாடுகளோடு தொடர்ந்து எதிர்காலத்தில் பயணிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என் கேட்டுக் கொள்கிறேன்' என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த கட்டம் என்ன?

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடியதனால் ஏற்பட்டிருந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும், கடந்த பத்து வருடங்களாக ஆட்சி நடத்திய இரண்டு அரசுகளும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணத் தவறிவிட்டன.

ஆயுதப் போராட்டத்தின் பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையிலான தமிழ் மக்கள், அரசியல் தீர்வு காண்பதற்கும், தாங்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கும் சாத்வீகப் போராட்டத்திலேயே ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் அந்தப் அஹிம்சை வழி போராட்டத்தை அரசுகள் கண்டு கொள்ளவில்லை. கவனத்தில் எடுத்து பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இதய சுத்தியுடன் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

ஆகவே, ஆயுதப் போராட்டத்தைப் போன்று கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தால்தான் நீங்கள் தமிழ் மக்கள் விடயத்தில் கவனம் செலுத்துவீர்களோ? அத்தகைய ஒரு நிலைமை குறித்து தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களோ? என்ற கேள்விகளையே சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் மாநாட்டு உரையின் மூலமாக எழுப்பியிருந்தார்.

இன்னும் ஒரு படி மேலே சென்றது போன்று, ஆயுதப் போராட்டத்தின் மூலம் சாதனை படைத்த விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களுக்காகப் போராட்டம் நடத்தியதைப் போன்று தீவிரமான அரசியல் செயற்பாட்டைக் கொண்டதோர் அரசியல் தலைவர் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து எழ வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா? அத்தகைய நிலைமை ஒன்று உருவாகுவதைத் தீர்மானிப்பது தென்னிலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களாகிய உங்களுடைய கைகளிலேயே இருக்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.

தென்னிலங்கையில் அரசியல்வாதிகளாகிய ஆட்சியாளர்கள் அடுத்த கட்டமாக உருவாக்கப் போகின்ற அரசியல் நிலைமையும், அதற்கான அரசியல் தலைவர்களுமே தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் போராட்டத்தைத் தீர்மானிக்கப் போகின்ற சக்திகளாக அமையும் என்பதை உணர்ந்து கௌ;ளுங்கள் என்பதை சுமந்திரன் தனது உரையின் மூலம் நிதி அமைச்சராகிய மங்கள சமரவீர ஊடாக தென்னிலங்கையின் பேரின அரசியல்வாதிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் எடுத்து உரைத்துள்ளார்.

கேள்விகளுக்குப் பதில் என்ன?

ஜனநாயகத்தை நிலைநிறுத்தி நாட்டில் நல்லாட்சியை நிறுவி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் அந்த நோக்கங்களை நிறைவேற்றாமலேயே தனது முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

இன்னும் சில மாதங்களில் அடுத்தடுத்து நடைபெறப் போகின்ற தேர்தல்கள், நாட்டின் அடுத்த கட்ட அரசியல் போக்கில் கணிசமான மாற்றங்களைக் கொண்டு வரப் போகின்றன என்பதற்கான சமிக்ஞைகள் தெளிவாகப் புலப்படத் தொடங்கியுள்ளன.

இனவாத மதவாத அரசியல் போக்கைக் கொண்ட பொதுஜன பெரமுனவின் தலைமையைப் பொறுப்பேற்றுள்ள மகிந்த கடும்போக்குடைய ராஜபக்ச கோத்தாபாய ராஜபக்சவை ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது வேட்பாளராக அறிவித்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளைக் கோலாகலமாக ஆரம்பித்துள்ளார்.

இதனால், எதேச்சதிகாரப் போக்கில் இராணுவ மயமான ஒரு சூழலில் நாட்டை ஆட்சி செய்த மகிந்த தரப்பினர் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடுவார்களோ என்ற அரசியல் ரீதியான அச்சத்தை உருவாக்கும் நிலைமையை நோக்கி நாடு நழுவிச் சென்று கொண்டிருக்கின்றது.

அதேவேளை, எதிர்த்தரப்பினராகிய சிறுபான்மை இன அரசியல்; கட்சிகளை உள்ளடக்கி. தேர்தல்களை எதிர்கொள்ளத் தயராக விரும்புகின்ற ஐக்கிய தேசியகட்சி. கூட்டணி அமைப்பதிலும் ஜனாதிபதிக்கான தனது வேட்பாளரைத் தெரிவு செய்வதிலும் இழுபறிபட்டு தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

மகிந்த தரப்பினருடைய எழுச்சியை மேவி வெற்றிகொள்ள வேண்டிய அரசியல் போட்டியில் ஐக்கிய தேசிய கட்சி மிகவும் பலவீனமான நிலைமையில் இருப்பதையே இது சுட்டிக்காட்டுகின்றது.

இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கக் காலம் தமிழ் மக்களுக்கு சாதகமான எதனையுமே தரவில்லை. சாதகமான எந்தவோர் அரசியல் நிலைமையையும் உருவாக்கமலேயே அது கருகப் போகின்றது என்பதும் தெளிவாகியுள்ளது.

இத்தகைய நிலையில் அடுத்த கட்டமாக தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகத் திகழ்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ன செய்யப் போகின்றது? சிறுபான்மை இன மக்களுக்கு பாதகமான நிலைமைகளே உருவாகலாம் என்ற அச்சம் நிறைந்த அரசியல் நிலைமைகளை எவ்வாறு அது கையாளப் போகி;ன்றது? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

மொத்தத்தில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த பத்து வருடங்களாக தமிழர் தரப்பில் செயல்வல்லமை கொண்ட ஆளுமை மிக்க அரசியல் தலைமைக்கு நிலவிய வெற்றிடம் தொடர்ந்து நிலவத்தான் போகின்றதா? அல்லது அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு வலிமையானதொரு தலைமை உருவாகப் போகி;ன்றதா? என்ற கேள்விகளும் தமிழ் அரசியல் வெளியில் பூதாகரமாக எழுந்திருக்கின்றன.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE