Saturday 20th of April 2024 04:21:24 AM GMT

LANGUAGE - TAMIL
“ஐம்பது நாட்களைக் கடந்திருக்கும் பிக்பாஸ்”  - சுரேஷ் கண்ணன்

“ஐம்பது நாட்களைக் கடந்திருக்கும் பிக்பாஸ்” - சுரேஷ் கண்ணன்


“இப்பத்தான் பொறந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சா?” என்று உறவினரின் குழந்தையை வியப்பது போல பிக்பாஸ் சீஸன் 3 துவங்கி ஐம்பது நாட்கள் கடந்து விட்டன என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ‘முந்தைய சீஸன்கள் போல இப்போது இல்லை’ என்கிற அனத்தல்கள் எல்லாம் மாயை. ஒவ்வொரு சீஸனுக்கென்று ஒரு தனித்தன்மையும் அப்படி வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்கள் ஒவ்வொரு சீஸனிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மனித வாழ்க்கை என்பது பெரும்பான்மையாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் விதம் விதமான கதைகள்தானே?

சரவணன் விவகாரம் பற்றி நேற்றும் பேசவில்லை. இன்று பேசப்படும் என்று பார்த்தால் அதுவுமில்லை. ‘சனிக்கிழமையன்று காரணம் சொல்லப்படும்’ என்று முன்பு அறிவித்திருந்தார்கள். போட்டியாளர்களுக்கு மட்டும் சொல்லி எடிட் செய்து விட்டார்கள் போல. இது பற்றி ‘மக்கள் பிரதிநிதியான’ கமல் விளக்கம் அளித்திருக்க வேண்டும். வாக்கு தவறிய பிக்பாஸிற்கு கண்டனங்கள். தங்கள் நிகழ்ச்சியை ஒழுக்கத்தின் பிம்பமாக காட்டிக் கொள்ள, அற்பக் காரணத்திற்காக சரவணனை பலியாடாக்கியது முறையல்ல.

ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து அப்படியே வந்த சர்ஜன் மாதிரியான உடையில் வந்தார் கமல். பிக்பாஸ் ஐம்பது நாட்களைக் கடந்து வெற்றியடைந்ததற்கு பார்வையாளர்களின் ஆதரவே காரணம் என்று ஐஸ் வைத்தார். போட்டியாளர்களும் காரணமாம். மாரத்தான் ரேஸின் இடையில் refreshments கிடைப்பது போல கஸ்தூரி கிடைத்திருக்கிறாராம். (அப்படியா?!)

இதர போட்டியாளர்களை விடவும் கஸ்தூரிக்கு கமல் அதிக முக்கியத்துவம் தருவது போல் தெரிகிறது. கஸ்தூரியின் முன்னால் சற்று பம்முவது போலவும் ஒரு தோற்றம் தெரிகிறது.

ப்ரூட்டி காலர் அழைப்பு வந்தது மதுமிதாவை நோக்கி. “ஆரம்பக் காலத்தில் துணிச்சலாக செயல்பட்டீர்கள். இப்போது காமிராவிற்காக நடிப்பது போல் தெரிகிறதே?” என்று ஒரு பெண் கேட்டார். “ஆக்சுவலி.. நான் பிறந்ததில் இருந்தே போராளிதான். அநீதியைக் கண்டு பொங்கி எழுவதை ஃபுல் டைம் ஜாப்பா பண்றேன். வனிதா போனவுடன் அநீதியின் சதவீதம் இங்கு குறைந்து விட்டதால் கொஞ்சம் அமைதியாகியிருக்கேன். ஆனா நான் எப்ப வேணா உக்கிரமா மாறிடுவேன். சேரன் கூட எனக்கு சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காரு. அநீதிக்கு எதிராக வாந்தியெடுப்பவள்’ என்று” – என்பதாக மதுமிதாவின் விளக்கம் அமைந்திருந்தது.

இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களில் யார் வருவார்கள்? என்று போட்டியாளர்களை யூகிக்கச் சொன்னார் கமல். பெரும்பான்மையானவர் முதல் பெயராகச் சொன்னது தர்ஷனைத்தான். ‘நெறய கஷ்டங்களைப் பார்த்துட்டு வந்திருக்கான்” என்று சென்ட்டிமென்ட்டான காரணத்தைச் சொன்னார் அபிராமி.

சாண்டி, மதுமிதாவின், முகினின் பெயரும் அடிபட்டது. லியாவின் பெயரை மறக்காமல் சொன்னார் கவின். இப்படி அவர் லியாவைப் பாராட்டும் போதேல்லாம் சாக்ஷியின் முகபாவம் எப்படியிருக்கும் என்று பார்க்கத் தோன்றுகிறது. லியாவின் முறை வரும் போது மறக்காமல் கவினுக்கு பதில் மொய் வைத்தார். ‘அதிர்ஷ்டக்காரப் பயடா நீ’ என்பது போல் கவினின் கொமட்டில் செல்லமாக குத்தினார் சாண்டி.

இதில் சேரன் சொன்ன பாயிண்ட் மிக மிக முக்கியமானது. ‘கடந்த சீஸன்களை கவனித்தால் இறுதிப் போட்டியில் வெல்பவர்கள் இளைஞர்களாக இருக்கிறார்கள். இது பலசாலிகளுக்கான போட்டியல்ல” என்று அவர் சொன்னதும் ‘பார்த்தீங்களா.. டைரக்டர் என்ன போடு போடறாரு!” என்பது மாதிரி கமெண்ட் அடித்தார் கமல். சேரன் குறிப்பிட்டது போல இறுதிக் கட்டங்களில் உடல் தகுதியை மட்டும் பிரதானமாக வைக்காமல் புத்திக்கூர்மை, திறமை, அதிர்ஷ்டம் ஆகியவற்றையும் இணைத்து போட்டிகளை வைத்து அதன் மூலம் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது பிக்பாஸ் டீமிற்கான பரிந்துரை.

“இவங்க இங்க சீன் போடறதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். கன்பெஷன் ரூம்ல இவங்க செஞ்ச சேஷ்டைகளையெல்லாம் பார்த்திட்டுதான் நான் வந்திருக்கேன்” என்றார் கஸ்தூரி. (நீங்களும் அப்படித்தான் செய்யப் போறீங்க!).

அனைவரும் சொன்ன யூகங்களைத் தொகுத்ததில், தர்ஷன் முதலாமிடம், சாண்டி இரண்டாமிடம், மதுமிதா மூன்றாமிடம் ஆகிய நிலைகளுக்கு வரக்கூடும் என்று தெரிந்தது. அவர்களுக்கான மெடல்கள் அளிக்கப்பட்டன. “அப்புறம் எப்படி நிலைமை மாறுமோ தெரியாது. இருக்கற வரைக்கும் எஞ்சாய் பண்ணுங்க” என்ற கமல், “சரி..அடுத்தது எவிக்ஷன் பிராசஸஸிற்கு போகலாமா?” என்றதும், வடிவேலும் சிவகார்த்திகேயனும் கலந்த மாதிரி ஒரு நகைச்சுவையான எக்ஸ்பிரஷனைத் தந்தார் மதுமிதா.

IMAGE_ALT

ஓர் இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் வந்த கமல், “பிக்பாஸ் வீட்டில் காதலைத் தாண்டி நட்பு என்கிற அழகான உணர்வும் மலர்ந்திருக்கிறது” என்று குறிப்பிட்டு அதற்கு உதாரணமாக கவினையும் சாண்டியையும் சுட்டிக் காட்டினார். பிறகு முகினையும் தர்ஷனையும். (பெண் போட்டியாளர்களை இப்படி உறுதியாக சுட்ட முடியவில்லை என்பதைக் கவனிக்கலாம்).

‘இது உலகத் தமிழர்கள் பங்குபெறும் நிகழ்ச்சியாக மாறிக் கொண்டு வருகிறது. இது உங்களுக்கு எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். ‘தனிநபராக இருந்தால் பரவாயில்லை. ஓர் ஊரே சேர்ந்து எங்களை அனுப்பி வைத்திருக்கிறது. எனவே அது சார்ந்த பொறுப்பும் கடமையும் இருக்கிறது” என்கிற சரியான பதிலைச் சொன்னார் முகின். “தர்ஷன் ஜெயிச்சா அது நான் ஜெயிச்ச மாதிரி” என்று லியா பின்னுக்கு நகர “தியாகத்தை விடவும் போட்டி அதிகமா இருந்தாத்தான் நல்லாயிருக்கும்” என்றார் கமல்.

அடுத்ததாக பெண்களின் நட்பு பற்றி வந்தார். “எனக்கும் சாக்ஷிக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கிறது. ஆங்காங்கே சில பிளவுகள் உருவாகினாலும் பேசி தீர்த்துக் கொள்வோம்” என்றார் ஷெரீன். எவிக்ஷன் பற்றிய பேச்சு ஆரம்பித்ததுமே சாக்ஷியின் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டேயிருந்தார் ஷெரீன்.

இடையே சிறிய பிரிவுகள் வந்தாலும் டாஸ்க்கின் போது சாக்ஷியும் அபிராமியும் சட்டென்று கூட்டுக்களவாணிகளாக மாறி விடுவதையும் “யாரைக் கவுக்கணுமோ. அவங்களைத் திட்டம் போட்டு கவுத்தடறீங்க. கவலைப்படாதீங்க. போட்டுத் தர மாட்டேன்” என்று கமல் கிண்டலடித்தார். முகினும் தர்ஷனும் இப்போது ஒருவரையொருவர் மெலிதான கலவரத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.

“பெண்களின் இந்த நட்பில் ஒரு பிரிவு ஏற்படப்போகிறது” என்று முடிவை சூசகமாகச் சொன்ன கமல், லியா காப்பாற்றப்படும் செய்தியையும் பின்குறிப்பாக தெரிவித்தார். “நண்பர்களே.. பாட்டு ரெடி பண்ணிட்டீங்களா?” என்று சாண்டி டீமை கேட்க, “மூணு பேருக்கும் ரெடியா இருக்கு குருநாதா” என்று சொன்னவர்கள் “என்னைப் பத்தி முதல்ல பாடுங்கோ” என்று லியா கேட்டாலும் தாங்கள் முன்பே தீர்மானித்த வரிசையில் பாடத் துவங்கினார்கள்.

“யார் மனதையும் காயப்படுத்த அல்ல. வெறும் நகைச்சுவைக்கே’ என்று அவர்கள் disclaimer போட்டாலும் அதனால் ஒருவர் மனம் புண்பட்டார் என்பது பிறகுதான் தெரிந்தது. இது ரகசிய டாஸ்க் என்பதால் எப்படித்தான் மற்றவர்கள் கவனிக்காமல் பாடல்களை உருவாக்கினார்களோ என்று தெரியவில்லை. (ஆனால் முகினும் தர்ஷனும் இதை அறிந்திருந்தார்கள் போல. அவர்களும் பின்பாட்டு பாடினார்கள்.)

முதலில் சாக்ஷி, பிறகு அபிராமி, அதன் பிறகு லியா என்ற வரிசையில் அந்த பிரிவுபசாரப் பாடல்கள் அமைந்தன. “எப்படி அந்த ஆர்டரை முடிவு பண்ணீங்க.. நம்ப முடியல்லையே?” என்று சூசகத்தை மேலும் கூட்டினார் கமல். அப்போதே சாக்ஷிக்குப் புரிந்து போயிற்று. முடிவை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்து விட்டார். “எல்லாம் தாங்கள் தந்த ஞானப்பால்தான் குருநாதா” என்றனர் சாண்டியும் கவினும்.

**

ஓர் இடைவெளிக்குப் பின்பு திரும்பிய கமல், “எவிக்ஷன் பத்தி சொல்லிட்டனே.. உங்களுக்கு கேக்கலையா?” என்று போட்டியாளர்களை சற்று நேரம் சத்தாய்த்தார். பிறகு சாக்ஷியின் வெளியேற்றம் பற்றி சட்டென்று அறிவித்தார். ஏற்கெனவே தயாரான மனநிலையில் இருந்த சாக்ஷி நாடகப் பாணியில் எழுந்து ‘ஓகே மக்களே கிளம்புகிறேன்” என்றார். உள்ளுக்குள் ‘நான் போறேனே…சனியன்களே அழுது தொலைங்களேன்’ என்பது அவர் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கக்கூடும்.

எதிர்பார்த்தபடி ஷெரீன்தான் பயங்கரமாக அழுது தீர்த்தார். ஆனால் கடைசிக்காட்சியில் ஓவர் அழுகை போட்டபடி வந்தார் அபிராமி. (‘நாயகன்’ திரைப்படத்தில் கமலும் சரண்யாவும் திருமணம் செய்து கொண்டு பரஸ்பரம் புன்னகை செய்து கொள்ளும் போது ஜனகராஜூம் வெட்கத்துடன் வந்து அவர்களுடன் ஈஷிக் கொள்வார். கமல் விநோதமாக பார்ப்பார். அதுதான் நினைவிற்கு வந்தது).

கவினிடம் சாக்ஷி விடைபெறுவாரா, இல்லையா.. என்கிற சஸ்பென்ஸ் இருந்தது. ஆனால் மெல்ல அனைவரிடமும் விடைபெற்றார் சாக்ஷி. அவர் அழாமல் இருந்ததை இதர போட்டியாளர்கள் வியந்தார்கள். “தர்ஷன்.. நான் ஷெரீனை பயன்படுத்திக்கலை. நீ சொன்னது என்னைக் காயப்படுத்திடுச்சு. வார்த்தைகளை கவனமா பயன்படுத்து” என்று விடைபெறுவதற்கு முன்னால் சொன்னார் சாக்ஷி. (வீட்டிற்குப் போய் வீடியோக்களைப் பார்த்த பிறகுதான் ஷெரீன் இவரைப் பற்றி புலம்பிய காட்சியை அறிய வருவார்).

வெளியே வந்த சாக்ஷி தன் தந்தையைப் பார்த்ததும் அகம் மகிழ்ந்தார். “அவளை நினைத்து நான் எப்போதும் பெருமைப்படுவேன். தமிழ் கலாசாரம் பற்றி அவள் அறிந்திருப்பாள் என்று நம்புகிறேன். ஆதரித்த பார்வையாளர்களுக்கும் நன்றி” என்றார் சாக்ஷியின் தந்தை.

“நீங்க எப்போதும் இப்படித்தான் எமோஷனலா இருப்பீங்களா?” என்று சாக்ஷியை விசாரித்த கமல், அவருக்கான பிரிவுபசார வீடியோவை ஒளிபரப்பினார். புகழ்பெற்ற சாக்லேட் சர்ச்சையும் அதில் வந்தது. (ஹவ்வா.. ஹவ்வா.. மனது வலிக்குது’ காட்சியை நான் மிகவும் எதிர்பார்த்தேன். அதை வைத்து நிறைய பேர் கலாய்ப்பு வீடியோ செய்து டிரெண்ட் ஆகியிருக்கிறது).

“இந்த வீடியோவைப் பார்க்கும் போது வேறு மாதிரி இருந்திருக்கலாமோ?” என்று உங்களுக்குத் தோன்றுகிறதா என்று சாக்ஷியை லீட் செய்தார் கமல். ஆனால் அது சாக்ஷிக்குப் புரியவில்லை. “இல்லை.. சார்.. இங்க இருந்தது நல்ல அனுபவமாக இருந்தது” என்று முடித்துக் கொண்டார் சாக்ஷி.

தன்னுடைய ஒரு சிறிய காலக்கட்டத்து வாழ்க்கையை வீடியோவின் வழியாக தானே பார்ப்பது அனைவருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு. அதிலிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும். தன்னுடைய பலம், பலவீனம் போன்றவைகளை சுயபரிசீலனையுடன் அணுக முடியும்.

சாக்ஷியின் பலவீனம் எளிதில் உணர்வுவயப்பட்டு விடும் தன்மைதான். கவினுடன் காதலில் விழுந்து பொசசிவ்னஸினால் அவரை டார்ச்சர் செய்தார் என்கிற பிம்பம் மட்டுமே சாக்ஷியைப் பற்றி பெரிதும் மிஞ்சியிருக்கிறது. தன்னுடைய சொந்த வாழ்க்கையில் இவ்வாறு அவர் பல பிம்பங்களை பதிவு செய்திருக்கலாம். அவற்றையெல்லாம் சரி செய்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக பிக்பாஸ் அனுபவத்தை அவர் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

IMAGE_ALT

“ஒவ்வொரு வாரமும் நீங்க எப்படியோ மயிரிழையில் தப்பிச்சிக்கிட்டு வந்தீங்க.” என்றார் கமல். ‘ஆமாம்.. சார். சாக்ஷி ரொம்ப கஷ்டப்படறான்னு நெனச்சு இந்த வாரம் அனுப்பி வெச்சிருப்பாங்க. அவங்க அன்பிற்கு நன்றி” என்றார் சாக்ஷி. ‘விமர்சனமில்லாமல் அன்பு மட்டும் மக்களிடமிருந்து கிடைக்காது” என்று கமல் சொன்னது வெறும் வாசகம் அல்ல, திருவாசகம்.

பிறகு போட்டியாளர்களை வீடியோவின் வழியாக சந்தித்தார் சாக்ஷி. ஷெரீன் மூக்கு சிந்திய கைக்குட்டையை இன்னமும் அப்படியே வைத்துக் கொண்டு இன்னமும் கலங்கிக் கொண்டிருந்தார். “அபிராமி.. உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. சரியாப் பயன்படுத்திக்கோங்க” என்றார் சாக்ஷி.

கவினின் முறை வந்தது. பார்வையாளர்கள் கைத்தட்டினார்கள். “ஸாரி.. மச்சா.. உங்கப்பா கிட்டயும் ஸாரி சொல்லிடு” என்றார் கவின். ‘எனக்கு எதுக்கு அவர் ஸாரி சொல்லணும். அதை விளையாட்டாத்தானே பண்ணாரு” என்றார் சாக்ஷியின் தந்தை. அவர் சொன்ன பதிலை சர்காஸ்டிக்காகவும் எடுத்துக் கொள்ளலாம். காதல் என்பதை விளையாட்டாகச் செய்த கவினை குத்திக் காட்டியதாகவும் சொல்லலாம். அல்லது அவர் வெள்ளந்தியாகவும் சொல்லியிருக்கலாம். தந்தையின் பதிலில் அகம் மகிழ்ந்தார் சாக்ஷி.

IMAGE_ALT

“இந்த விளையாட்டில் என்ன கற்றுக் கொண்டீர்கள்?” என்று இறுதிக் கேள்வியை முன்வைத்தார் கமல். ‘சரியான உணர்வுகளை சரியான சமயத்தில் வெளிப்படுத்த வேண்டும். எப்போதும் அதன் உச்சத்தில் இருக்கக்கூடாது” என்று சரியான பதிலைச் சொன்னார் சாக்ஷி. (அப்பாடி.. டிரையின் இப்பத்தான் டிராக்ல இறங்கியிருக்கு!).

அதென்னமோ தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டிற்குள் ஏறத்தாழ முட்டாள்களைப் போல் தோன்றுபவர்கள், வெளியே வந்த அடுத்த கணமே புதிய மனிதர்களாக மாறி சக போட்டியாளர்களுக்கு அறிவுரை சொல்லத் துவங்கி விடுகிறார்கள். (வீட்டோட ராசி அப்படி போல!).

“நியூட்ரலா இருக்கணும்” என்று சாக்ஷி சொன்னதை ‘தமிழ்ல அதுக்கு ‘மய்யம்’ன்னு சொல்லுவாங்க” என்று சமயோசிதமாக விளம்பரம் தேடிக் கொண்டார் கமல். (க்யூட் ஆண்டவரே!).

“ஐம்பதாவது நாள் வாழ்த்துகள். நீரின்றி (நீங்கள் இன்றி) அமையாது பிக்பாஸ்வுலகு” என்று பார்வையாளர்களுக்கு மறுபடியும் ஐஸ்வைத்து விடை பெற்றார் கமல்.

**

வீட்டின் உள்ளே போட்டியாளர்கள் புறம் பேசிக் கொள்ளும் காட்சிகள் காட்டப்பட்டன. (நேரத்தை இழுக்கணுமே!). “ஷெரீன் அழுதா ஒகே.. இந்த அபிராமி ஏன் இத்தனை சீன் போட்டுது?” என்றார் கவின். “நடிப்புடா” என்றார் சாண்டி.

“நான் இன்னமும் ஒரு வாரம்தான் இருப்பேன்” என்கிற மோடிற்கு வந்துவிட்டார் ஷெரீன். “நான் போயிருந்தா வருத்தப்பட்டிருக்க மாட்டேன். சாக்ஷி போனது வருத்தமாயிருக்கு” என்று சொன்ன அபிராமி, ஒருவேளை அவர் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தால் எப்படியெல்லாம் ஒப்பாரி வைத்திருப்பார் என்பதை கற்பனை செய்து பார்க்கவே கலவரமாக இருக்கிறது.

“இந்த சீஸன்ல நீங்க கலந்துக்கணும் மேடம்”-னு டெய்லி ஆயிரம் லெட்டர் வந்தது” என்று அளந்து விட்டுக் கொண்டிருந்தார் கஸ்தூரி. (ஏம்ப்பே.. நீ பார்த்தே?!)

“உன் முன்னேற்றத்திற்கு தடையா இருக்கணும்னு நான் கனவுலயும் நினைக்கலை. ஸாரி” என்றார் அபிராமி. “இதுக்கு ஸாரி சொல்றதை விடவும் ரெண்டு பேருமே புரிஞ்சு நடந்துப்போம்” என்றார் முகின் முதிர்ச்சியாக.

சாண்டி-கவின் இயற்றிய பாடலில் .. “சேரப்பா.. நீ கொஞ்சம் போருப்பா” என்ற வரி வந்ததில் சேரன் மனம் புண்பட்டிருக்கிறார் போலிருக்கிறது. எனவே சாண்டியை அழைத்து தனியாகப் பேசினார் சேரன். சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக பேசி விடுவது நல்ல விஷயம்தான். சேரனுக்கு தன் பிம்பம் குறித்த கவலை இருக்கிறது. அது பாழாகி விடுமோ என்று கவலைப்படுகிறார்

“நான் யாரையாவது வம்பா கூப்பிட்டு ஆலோசனை சொல்லியிருக்கேனா.. அப்படிப் பார்த்திருக்கீங்களா?.. யாராவது வந்து அவங்க பிரச்சினைகளைச் சொன்னாத்தான் நான் தலையிடுவேன். மத்தபடி நான் எதுலயும் மூக்கை நுழைக்க மாட்டேன். உலகம் பூராவும் இதைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. இனிமே இப்படிச் செய்யாதீங்க” என்று சாண்டியிடம் கோரினார் சேரன்.

IMAGE_ALT

சேரனின் விளக்கம் சரிதான். ஆனால் ஜாலியாக செய்த ஒரு விஷயத்தை இத்தனை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று தோன்றியது. அல்லது சாண்டி இதர சமயங்களில் செய்த கேலிகள் தந்த அழுத்தத்தில் சேரனின் ஆதங்கம் வெளிப்பட்டதா என்று தெரியவில்லை. “ஸாரிங்க” என்று சொன்ன சாண்டி, பிறகு கவினிடமும் இதைப் பற்றிப் பேசி சேரனிடம் மன்னிப்பு கேட்க வைத்தார்.

அபிராமி முகினை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முயல்வதைப் பற்றி கவின், லியா உள்ளிட்டவர்கள் ஈ ஓட்டிக் கொண்டே புறம் பேசினார்கள். “அதைப் பத்தி அவங்க கிட்டயே பேசிடலாமே” என்று சரியான விஷயத்தைச் சொன்னார் லியா. “கவினை எனக்குப் பிடிக்கும். அவன் கிட்ட பேசலாம். அபிராமி ஏற்கெனவே என் மேல காண்ட்ல இருக்கா” என்று கவின் சொன்னதும் சரியாகத்தான் தெரிந்தது.

“சாக்ஷி என்னைப் பயன்படுத்திக்கறான்னு ஏன் சொன்னே” என்று தர்ஷனிடம் கேட்பதின் மூலம் தன் தோழியை விட்டுக் கொடுக்காமல் பேசினார் ஷெரீன். நட்பிற்குள் விரிசல் தோன்றுவதும் பிறகு அது ஒட்டிக் கொள்வதும் இயல்பான விஷயம்தான் என்று அவர் நினைப்பது சரி. தர்ஷன் அதற்கான விளக்கத்தைச் சொன்னதும் “ஆமாம். சாக்ஷி இந்த வீட்டில் இருந்திருந்தா எனக்கும் அவளுக்கும் சண்டை வந்திருக்கும்” என்பதையும் நேர்மையாக ஒப்புக் கொண்டார் ஷெரீன்.

IMAGE_ALT

போட்டியாளர்களின் எண்ணிக்கை குறையக் குறைய அவர்களுக்கிடையே விரோதங்களும் போலிப்புன்னகைகளும் பதட்டமும் அதிகமாகலாம். சுவாரசியமான ஆளுமையுடன் நுழையும் புதிய நபர்கள் இந்த விளையாட்டை இன்னமும் சுவாரசியமாக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE