Tuesday 23rd of April 2024 10:12:23 AM GMT

LANGUAGE - TAMIL
“இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலை நாராயணா”  - சுரேஷ் கண்ணன்

“இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலை நாராயணா” - சுரேஷ் கண்ணன்


ஒருதலைக் காதல் முதல் முக்கோணக் காதல் வரை பிக்பாஸ் வீட்டில் பல வாரங்களாக ரொமாண்டிக் எபிஸோடுகள் ஓடுகின்றன. அதைத் தொடர்ந்து பொசசிவ்னஸ், பொறாமை, அழுகை, ஒப்பாரி என்ற காட்சிகளும் ஓயாமல் தொடர்கின்றன. கமல் எச்சரித்தும், வழிநடத்தியும் இழை பெரிதாக மாறவில்லை. அழுகையின் நாயகி சாக்ஷி வெளியேறி விட்டாலும் ஒப்பாரி வைப்பதில் மகாராணியாக இருக்கிற அபிராமியின் அலப்பறைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

சாண்டி மற்றும் கவினின் நகைச்சுவைக் கூட்டணி, வார இறுதியில் கமலின் விசாரணைக் குறும்புகள் போன்றவை மட்டும் இல்லாவிட்டால் இந்த நிகழ்ச்சி எப்பவோ சலித்துப் போயிருக்கும்.

இந்த நிலையில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தவும் உத்வேகப்படுத்தவும் ஒரு புதிய நபர் உள்ளே வருவது அவசியம்தான். புதிய வரவான கஸ்தூரி, வெளியில் இருந்து அனைத்தையும் பார்த்து வந்திருக்கும் மிதப்பில் ஆலோசனைகளும் அலட்டல்களும் செய்கிறாரே ஒழிய, கணிசமான மாற்றத்தை அவரால் உருவாக்க முடியவில்லை. மேலும் அவருக்கு இன்னமும் அவகாசம் தரப்பட வேண்டியிருக்கிறது.

போட்டியாளர்களுக்கு ஆர்வமூட்டவும் ‘அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள்?’ என்று நினைவுப்படுத்தவும் ஒருவர் உள்ளே வரவேண்டியது அவசியம். அவர் பிக்பாஸ் போட்டியாளர்களையும் நிகழ்ச்சியையும் பற்றி நெருக்கமாக கவனிக்கிறவராக இருக்க வேண்டும். ஆனால் இதற்காக வனிதாவைத் தேர்ந்தெடுத்திருப்பது நாராசமானதொன்று. ஒரு புதிய பிரபலத்தை அனுப்பியிருக்கலாம்.

மக்களால் நிராகரிக்கப்பட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர், மீண்டும் நிகழ்ச்சிக்குள் அனுமதிக்கப்பட்டதே அடிப்படையில் தவறு. சரி, அப்படியே ஒரு புத்துணர்ச்சிக்காக வரவழைக்கப்பட்டார் என்றே வைத்துக் கொள்வோம். ஏதோ அந்தக் கல்லூரியில் படித்து தங்கமெடல் வாங்கி இப்போது அயல்நாட்டில் பணிபுரிகிற பேராசிரியர் போல அலப்பறை செய்யும் வனிதாவின் நடவடிக்கைகள் ஆசுவாசத்திற்குப் பதிலாக எரிச்சலூட்டவே செய்கின்றன.

போட்டியாளர்களுக்கு தரும் உற்சாகமும் ஆர்வமூட்டலும் நேர்மறையாகவும் சுவாரசியமாகவும் அமைய வேண்டும். மாறாக தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ‘தர்ஷன்… பிச்சை போட்டா நீ ஏத்துக்குவியா?” என்றெல்லாம் அபஸ்வரமாக அவர் கேட்கும் போது, தர்ஷன் தன்னை எதிர்த்துப் பேசிய முன்கதைக்காக இப்போது பழிவாங்கும் சந்தர்ப்பமாக உபயோகப்படுத்திக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. போலவே ‘நீ ஒர்த்தெ இல்ல’ என்றெல்லாம் கவினைப் பற்றி கூறுவதற்கு வெளியேற்றப்பட்ட ஒரு முன்னாள் போட்டியாளருக்கு தகுதி இருக்கிறதா?

IMAGE_ALT

S

பிக்பாஸிற்கு இது போன்றவை பற்றியெல்லாம் கவலையில்லை. பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்படுவதுதான் அவர்களின் முதலீடு. அதற்காக பார்வையாளர்களையும் போட்டியாளர்களையும் அவமானப்படுத்துவது முதல் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இன்னொரு பக்கம், ‘தாங்கள்தான் அரசியல்சரித்தன்மையை கச்சிதமாகப் பேணுகிறவர்கள்’ என்கிற போர்வையில் அற்பக்காரணத்தைச் சுட்டி ஒரு போட்டியாளரை திடீரென்று அவமானப்படுத்தி அனுப்புவார்கள்.

வனிதாவின் அறிவுரைகளும் கறார் விமர்சனங்களும் தேவைதான். அவர் சொன்னதில் பெரும்பாலும் சரியே. ஆனால் அவற்றை அவர் முன்வைத்த விதம்தான் எரிச்சலூட்டியது. ‘இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல நாராயணா” என்று புலம்ப வைத்தது. இதே விஷயத்தைத்தான் கமலும் ஒவ்வொரு வாரமும் செய்கிறார். ஆனால் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம்.

**

50-வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

‘யாரடி நீ மோகினி’ என்கிற அட்டகாசமான பழைய திரைப்படப்பாட்டைப் போட்டார்கள். வழக்கமான உற்சாகம் வீட்டில் இல்லை.

மார்னிங் டாஸ்க்கில் ‘இம்சை அரசரான’ சாண்டியும், அவருடைய மங்குனி அமைச்சர் கவினும் குடிமக்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். புதிய மன்னர் வந்த பிறகுதான் பல நல்ல விஷயங்கள் நடந்ததாம். மைசூர்பாக்கு, பிரியாணி உள்ளிட்டவைகள் கிடைத்ததாம். ‘தீனிப்பண்டார தேசமாக’ இருக்கும் போலிருக்கிறது. ‘மன்னரும் அமைச்சரும் சோம்பேறிகளாக இருக்கிறார்கள்’ என்ற ஆட்சேபத்தை எழுப்பினார் மதுமிதா. (இது ராஜதுரோகம் அல்லவா?). இது பற்றி ‘ஆசோலிக்கப்படும்’ என்று டங்க் ஸ்லிப் ஆகி உளறினார் மன்னர்.

முகின் தனிமையில் அமர்ந்து ‘காதல்’ பட பரத் மாதிரி தலையை குத்திக் கொண்டிருந்தார். ‘அபிராமி கிட்ட பேசினியா?” என்று அவரிடம் பிறகு விசாரித்தார் ஷெரீன். இன்னொரு பக்கம் ஏறத்தாழ தான் முழு நேரப் பணியாக செய்து கொண்டிருக்கும் அழுகையைத் தொடர்ந்து கொண்டிருந்தார் அழுமூஞ்சி அபிராமி. வழக்கம் போல் அவரின் க்ளோசப் ஷாட்களை வைத்து நம்மை கலவரப்படுத்தினார்கள்.

நாமினேஷன் படலம் ஆரம்பித்தது. புதிய வரவான கஸ்தூரியை நாமினேட் செய்ய முடியாது. போலவே தலைவரான சாண்டியையும்.

அபிராமி உணர்ச்சிகளின் தத்தளிப்பில் இருக்கிறார் என்கிற காரணத்தைச் சொல்லி அவரது பெயர் அதிகம் அடிபட்டது. போலவே முகின் பெயரும். ‘சாக்ஷியை ரொம்பவும் மிஸ் பண்றேன். ஆனா கவினையும் ரொம்ப பிடிக்கும்’ என்று கதறிய ஷெரீன், பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டே கவினின் மீது முத்திரை குத்தினார்.

“நான் வீட்டுக்குப் போகணும் பிக்பாஸ். என்னை யாருக்கும் இங்க பிடிக்கலை. தொடர்ந்து நாமினேட் பண்றாங்க’ என்று அழுத அபிராமி, யாரையும் நாமினேட் செய்ய மறுத்து விட்டார். (இப்படி தொடர்ந்து அழுகாச்சியாக இருந்தால் யாருக்குத்தான் பிடிக்கும்?!) ஆனால் கல்லுளி மங்கரான பிக்பாஸ் இதற்கெல்லாம் அசருவாரா என்ன? ‘மக்கள் விருப்பப்பட்டால்தான் நீங்கள் வெளியே போக முடியும்” என்றார். (எனில் சரவணனை எப்படி அனுப்பினீர்கள்?!).

ஆக. எவிக்ஷன் லிஸ்ட்டில் நாமினேட் ஆகியிருப்பவர்கள் அபிராமி, கவின், மதுமிதா, லொஸ்லியா மற்றும் முகின். (ஆர்மிக்காரர்களுக்கு மறுபடியும் வேலை வந்து விட்டது! படை எழுக!)

போட்டியாளர்களை தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கும் வழக்கமுள்ள பிக்பாஸ், பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை அவர்களுக்கு பரிசளித்தார். “அய்.. சோறு.. சோறு…” என்று ஆவேசமாக மக்கள் ஓடினார்கள். ‘அய். சிக்கனு.. அய்.. மீனு’ என்று ஒவ்வொன்றையும் ஆவலாக பார்த்ததைக் காண ஒரு பக்கம் பரிதாபமாகவே இருந்தது. சேரன் ஏதோவொரு பாத்திரத்தை தூக்கி நடனமாடிக் கொண்டே வந்தார். அவர் ஒருவேளை கீழே போட்டிருந்தால் ‘டைரக்டராவது. மண்ணாங்கட்டியாவது’ என்று திட்டித் தீர்த்திருப்பார்கள் போல. மக்கள் அத்தனை கொலைவெறியில் இருந்தார்கள்.

குலோப்ஜானை நைசாக லவட்டிக் கொண்டு சென்ற மன்னர், மங்குனி அமைச்சருடன் இணைந்து காதலர்களின் பாணியில் துண்டைப் போட்டு மூடிக் கொண்டு சாப்பிட்டார். (ரொம்பவும் கேவலமாக இருக்கிறது மன்னா!). பிரியாணி உண்ட களைப்பில் இருந்த சாண்டி ‘நாட்டு நலன்களைப் பற்றி சிந்திக்கப் போகிறேன்’ என்கிற பாவனையில் உறக்கத்தில் ஆழ்ந்தார். புலவர் சேரனோ தூங்கியே விட்டார். தன்னையும் அறியாமல் முரசுக்கட்டிலில் உறங்கிய புலவருக்கு, மன்னர் கவரி வீசியது தமிழ் மரபு. ஆனால் மதிப்பெண் போய் விடும் என்பதால் சேரனை எழுப்பி விட்டார் சாண்டி.

“உன் கண்ணெதிரே யாராவது செத்துப் பார்த்திருக்கியா அபி?” என்று ஆரம்பித்தார் கஸ்தூரி. அபிராமிக்கு ஆறுதல் சொல்லவும் சிரிக்க வைக்கவும் முயல்கிறாராம். (ரணக்கொடூரம்!). முகினின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறாய் என்கிற புகார் அபிராமியை மிகவும் படுத்தியெடுக்கிறது போல. ‘வீட்டுக்குப் போகணும்’ என்கிற புலம்பலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

கமல்ஹாசன் திரைத்துறைக்குள் நுழைந்து 60 ஆண்டுகள் ஆகியிருக்கும் செய்தியை போட்டியாளர்களுக்கு தெரிவித்தார் பிக்பாஸ். இந்தியன் 2 திரைப்படப் போஸ்டர்கள் காட்டப்பட்டன. மகத்தான கலைஞனுக்கு அனைவரும் மரியாதை செலுத்தினார்கள். ‘வாழ்த்த வயதில்லை. எழுந்து நின்று வணங்குகிறோம்’ என்று அனைவரையும் வம்படியாக எழ வைத்தார் மதுமிதா. கஸ்தூரி எழவில்லை. மதுமிதா வலியுறுத்தியதால் வேறு வழியில்லாமல் எழுந்து நின்றார்.

**

அடுத்து ஆரம்பித்தது ஒரு கலாட்டா. லக்ஸரி பட்ஜெட் டாஸ்க். பிக்பாஸ் வீடு ஹோட்டலாக மாற்றப்படுமாம். ஒரு முக்கியமான விருந்தினர் வரவிருக்கிறாராம். அவர் துளி கூட அதிருப்தி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். ஏற்பாடுகள் கன ஜோராக இருக்க வேண்டுமாம். இதை வைத்துத்தான் மதிப்பெண்கள் தரப்படுமாம்.

ஹோட்டல் மேனேஜர் சேரன் என்பது முதற்கொண்டு ரூம் சர்வீஸ் பாய்களாக கவின், சாண்டி வரை பலருக்கும் பணிகள் தரப்பட்டன.

ஹோட்டல் மேனேஜர் காரெக்ட்டராகவே மாறிய சேரன், காண்டிராக்டர் நேசமணி போல.. ‘டேய் அப்ரண்டிஸ்களா..இத எடுத்து அங்க வைங்க.. அத எடுத்து இங்க வைங்க’ என்று உத்தரவிட்டதோடு தானும் கண்ணாடியைத் துடைத்து முன்னுதாரணமாக இருந்தார். விருந்தினருக்கான டவல்களை நெடுக்கும் குறுக்குமாக ஷெரீன் அடுக்கி வைக்க, ‘ஏன் இப்படி சரிஞ்சு கிடக்குது?” என்று சேரன் திருத்த வர, ‘அய்யோ.. சார்… ஸ்டைலுக்காக அப்படி வெச்சிருக்கேன்” என்று பதறி வந்தார் ஷெரீன்.

இப்படி பம்பரமாகச் சுழன்று ஏற்பாடுகளைக் கவனித்த போட்டியாளர்கள், வருவது யார் என்பதை முன்பே அறிந்திருந்தால் நொந்து போயிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ‘இந்தக் கருமத்துக்கா.. இத்தனை பாடுபட்டோம்” என்று கூட அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம்.

IMAGE_ALT

ஆட்டக்காரர்கள் புடைசூழ நடனமாடிக் கொண்டே வந்தார் வனிதாக்கா. ஆம்.. போன மச்சான் திரும்பி வந்தான்’ கதையாக, விருந்தினராக மறுபடியும் உள்ளே நுழைந்திருக்கிறார் வனிதா. அவரின் நடனத்தைப் பார்த்து சாண்டியின் முகத்தில் நமட்டுச் சிரிப்பு வந்தது. சேரன் சமநிலை தவறாமல் ஹோட்டல் மேனேஜரின் தோரணையைக் கைவிடவே இல்லை. வனிதாவிற்கு மாலை அணிவித்து வரவேற்றார் சேரன். அதைக் கழற்றி அவரிடமே கொடுத்தார் வனிதா. ‘அப்ரண்டிஸ்களா.. இதை வாங்குங்க. மரியாதை போகுது’ என்று சைலண்ட்டாக பதறினார் சேரன்.

கைகளால் விசிறிக் கொண்டே பந்தாவாக உள்ளே வந்த வனிதாவை ‘லக்கேஜ் இருக்கா மேடம்” என்று விசாரித்தார் மேனேஜர். ‘மேடமே பெரிய லக்கேஜ் மாதிரிதான் இருக்காங்க” என்பது கவினின் மைண்ட் வாய்ஸாக இருக்கக்கூடும். “சாப்பிட என்ன இருக்கு?” என்று ஷெஃப்பிடம் அலட்டலாக விசாரித்தார் வனிதா. “சிக்கன் பச்சாசோ.. மொச்சாசோ..” என்று நீளமான மெனுவை ஒப்பித்தார் மதுமிதா. உண்மையில் அத்தனை ஐட்டங்கள் உள்ளே இருக்கிறதா என்பதே சந்தேகம்தான். அவர்கள் மதியம் சாப்பிட்டு மீதம் வைத்த பிரியாணிதான் கொஞ்சம் இருக்கக்கூடும். ‘சுடுதண்ணி மட்டும் கொடுங்க’ என்றார் விருந்தினர். (அட! அல்பமே..இதுக்கா விசாரிச்சீங்க?!).

ஸ்பா ஷெரீனை மசாஜ் செய்ய வைக்கும் பாவனையில் ஓரங்கட்டி அழைத்துச் சென்ற வனிதா, “இந்த ஹோட்டலைப் பற்றி நிறைய புகார்கள் வெளியே இருக்கு” என்று ஆரம்பித்தவர், தன்னிச்சையாக மாறி பிக்பாஸிற்குள் வந்தார். ‘உன்னை ஒருத்தர் புகழறாங்கன்னா. ஜாக்கிரதையா இருக்கணும். உன்னை வெளியே தள்ளப் போறாங்கன்னு அர்த்தம்’ என்ற வனிதா, இதற்காக செக் மேட், ஹவுஸ்மேட்ஸ் என்றெல்லாம் ரைமிங்கில் பின்னியது அபாரம்.

பின்பு அனைவரையும் ஒன்றாக அழைத்த வனிதா.. ‘வாங்க பக்கத்துல உக்காருங்க. அக்கா அடிக்கல்லாம் மாட்டேன்.. பயப்படாதீங்க’ என்று ஆறுதல்படுத்தினார். பின்பு . “ஏ.. நீ இங்க வா.. நீ இங்க வந்து நில்லு… நல்லா இடுப்பை வளைச்சு நெளிச்சு ஆடணும்.. தெரியுதா?’ என்று பருத்தி வீரன் ‘கார்த்தி’ பாணியில் ஒவ்வொருவரிடமும் ஏழரையைக் கூட்டினார்.

IMAGE_ALT

முதலில் அகப்பட்டு வறுக்கப்பட்டவர் கஸ்தூரி. “நெறய இங்லீஷ் பேசறீங்க.. இதனால மார்க்கும் போச்சு. மாடலிங் டாஸ்க்ல நல்லா பண்ணவ மதுமிதாதான். அபிராமியும் சாக்ஷியும் ஏற்கெனவே மாடலிங் பண்ணவங்க.. அவங்களுக்கு அனுபவம் இருக்கு. ஆனா மதுமிதாவிற்கு இதெல்லாம் புதுசு.. இங்க வந்துதான் அவ கத்துக்கிட்டா.. மது.. நீதான் இங்க பெஸ்ட் பர்பார்மர்’ என்று மதுமிதாவை அதிகமாகப் பாராட்ட.. ‘கடவுளே.. இதையெல்லாம் அனுபவிக்கறதா.. வேண்டாமா..’ என்கிற மோடிற்கு மதுமிதா சென்றிருக்கக்கூடும். ‘ஒருவர் உங்களைப் புகழ்ந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்று இதே வனிதாக்காதான் சற்று நேரத்திற்கு முன் அருளுரை வழங்கியிருந்தார்.

அடுத்ததாக இந்த வார தலைவர் போட்டியில் கஸ்தூரி எடுத்த முடிவையும் விமர்சித்தார் வனிதா. ‘அந்த பெயிண்ட்டிங் போட்டியில் லியாவோட நீலம்தான் அதிகம் இருந்தது” என்றவர் லியாவை அழைத்து பக்கத்தில் அமர வைத்து ‘ஆப்ரேஷன் லொஸ்லியா.. ன்னு ஒண்ணு ஆரம்பிக்கணும். இவ முன்னாடி மும்பைல என்ன பண்ணிட்டு இருந்தான்னு நாம கண்டுபிடிக்கணும். அந்தப் பொறுப்பை உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்” என்று மேஜர் சுந்தர்ராஜன் போல் பொறுப்பை கஸ்தூரியிடம் வழங்கினார் வனிதா.

IMAGE_ALT

கஸ்தூரி சில முன்தீர்மானங்களுடன் இருப்பதையும் கண்டித்தார். “ஏண்ணே.. தங்கச்சி வீட்ல இல்லாத போது நீங்கதாண்ணே இதையெல்லாம் தட்டிக் கேட்டிருக்கணும்” என்று சேரனையும் இழுத்தார். “உங்களுக்கு கிடைச்ச வாய்ப்பை அப்படியே தட்டுல வெச்சு தர்ஷன் கிட்ட போய் ஏன் தர்றீங்க?” என்றவர், ‘பிச்சை போட்டா உனக்கு ஓகேவா?” என்றெல்லாம் தர்ஷனை அதிரடியாக கேட்டது ஓவர். (லக்ஸரி பாயிண்ட்டுக்காக என்ன கருமத்தையெல்லாம் சகிச்சுக்க வேண்டியிருக்கு?!’ என்பது பலரின் மைண்ட் வாய்ஸாக இருக்கும்!).

‘நட்பு வேறு, போட்டி வேறு’ என்கிற அணுகுமுறை மிகக்சரி. முதலிலேயே தர்ஷனிடம் அனைவரும் சரணடைந்து விடுவது போல் பேசிக் கொண்டிருப்பது ஆட்டத்தின் சுவாரசியத்தைக் கெடுத்து விடும். ஆனால் அதே சமயத்தில் ‘இதுதான் நிதர்சனம்’ என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய கடுமையான போட்டியாளராக தர்ஷனை முகின் தொடர்ந்து சொல்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். அதே சமயத்தில் இருவரின் நட்பும் கெடவில்லை.

‘இதுவொரு விளையாட்டு’ என்பதை மறுபடி மறுபடி வலியுறுத்துகிறார் வனிதா. உண்மைதான். மறுப்பேயில்லை. ஆனால் இது மனித உணர்வுகளும் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே அவை சார்ந்த நெகிழ்வுத்தன்மையோடுதான் இந்த விளையாட்டு தன்னிச்சையாக இயங்கும். மிகக் கறாராக அணுக இரும்பு மனம் வேண்டும்.

ஏதாவது ஒரு டாஸ்க்கில் ஓர் ஆண் போட்டியாளர், பெண் போட்டியாளரிடம் முரட்டுத்தனமாக தள்ளி ஜெயித்தால் என்னவாகும்? இது சமமான தகுதி கொண்டவர்களின் இடையே நடக்கும் போட்டி கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும்.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை வனிதா பார்த்து விட்டார் போலிருக்கிறது. அதை வைத்து அபிராமியை வாங்கு வாங்கென்று வாங்கினார். NO Means No என்பது அந்தப் படத்தில் நடித்த உனக்குத் தெரியாதா?” என்றெல்லாம் விளாசி விட்டு ‘வாழ்த்துகள்’ என்று கைகொடுத்தார். பிறகு அபிராமியை அருகில் அழைத்து கட்டியணைத்த வனிதா.. ‘ஆனா.. மகளே ..அழுதே.. தொலைச்சுப்பூடுவேன்’ என்று சொன்னதுதான் மிக மிக நல்ல அறிவுரை.

முகினின் வளர்ச்சிக்கு அபிராமியின் வலுக்கட்டாய காதல் தடையாக இருக்கிறது என்பதைப் போலவே அபிராமியின் வளர்ச்சிக்கும் முகினின் அரவணைப்பு அதை விடவும் அதிக தடையாக இருக்கிறது என்பது வனிதாவின் கண்டுபிடிப்பு. இதில் ஒருபகுதி உண்மைதான் இருக்கிறது.

IMAGE_ALT

முகினின் பக்கமும் தவறு இருக்கிறது என்பது சரியே. ஆனால் தன்னுடைய நிலையை சொல்லி புரிய வைத்து விட்டு ‘நட்பாகப் பழகுவோம்’ என்று சொன்ன பிறகும் துரத்திக் கொண்டே இருக்கிற அபிராமியை விடவும் முகினின் மீது அதிக தவறு என்கிற வனிதாவின் கருத்து ஏற்படையதாக இல்லை. ‘நான் ஏமாற்ற முயலவில்லை’ என்று விளக்கம் தர முன்வந்தார் முகின். ஆனால் வனிதாக்கா பேசும் போது யாரும் அவரை எதிர்த்துப் பேசக்கூடாது என்பது அவரின் கறாரான பாலிஸி.

‘வனிதா பின்னாடி பேசிட்டான்னு ஒரு பழிவரக்கூடாது. அதனாலதான் இதையெல்லாம் பொதுவுல சொல்றேன். ஆனா அப்புறம் தனித்தனியாவும் பேசுவேன். நிறையப் பேசுவேன்’ என்று இடி மழை தொடரவிருப்பதற்கான வானிலை எச்சரிக்கையையும் சொல்லி அலற வைத்தார் வனிதா. ‘என் தம்பிய நான் அடிப்பேன் யாரும் கேட்கக்கூடாது. என் தம்பிய இந்த ஊர் அடிக்கக்கூடாது. நான் கேட்பேன்’ என்கிற வசனம் மாதிரி வனிதா தன் குடும்பத்தை மேற்கோள் சொல்லியதெல்லாம் வேற வெலல்.

‘ஒரு பெண்ணோட கண்ணீருக்கு மதிப்பு இருக்கு” என்ற கஸ்தூரியின் உபதேசத்தை வனிதாவும் வழிமொழிந்தது உருப்படியான விஷயம். அபிராமிக்கு இது நன்கு புரிய வேண்டும்.

‘பிக்பாஸ் என்பது வெறும் கேம் ஷோ இல்லை. அது வாழ்க்கையின் பிரதிபலிப்பு. நாம் இங்கு செய்யும் விஷயங்கள் பார்வையாளர்களையும் பாதிக்கும்’ என்று திடீரென்று கமல் குரலில் பேசிய வனிதா, தர்ஷன் விவகாரத்திற்கு மறுபடியும் வந்து வம்பிழுத்தார். ‘அவங்க போடற பிச்சைதான் உனக்கு வேண்டுமா” என்றதும் சூழல் காரணமாக தர்ஷனால் எதுவும் பேச முடியவில்லை. ‘இங்க இருக்கிற ஒவ்வொரு போட்டியாளருக்கும் வெல்லக்கூடிய தகுதி இருக்கு. தனிப்பட்ட பாசத்தைக் காட்டினா வேலைக்கு ஆக மாட்டீங்க.. அதுக்குப் பதிலாக வெளில போயிடுங்க. கதவு திறந்து வைக்கச் சொல்லி ரெக்கமண்ட் பண்றேன். சேரன், மதுமிதாவிற்கு நூறு சதவீத வாய்ப்பு இருக்கு” என்று சொல்லி சம்பந்தப்பட்டவர்களின் வயிற்றில் பாலை வார்த்தார்.

“கவின்.. நான் உங் கிட்ட பேச மாட்டேன். அதுக்கு நீ வொர்த்தே இல்ல. ஆனா நான் சொல்ற அட்வைஸ் வொர்த்’ என்றதும் கவினின் முகம் சுருங்கிப் போயிற்று. “ஆண்கள் இங்கே பெண்களை பகடைக்காய்களாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்று பெண் குலத்தின் பிரதிநிதியாகப் பொங்கினார் வனிதா. இந்தப் பொங்கல் இன்னமும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதுதான் பீதியைக் கிளப்புகிறது. ‘நான் சரவணன் சாரைப் பற்றிக் கேட்டது வந்துச்சா மேடம்?” என்ற மதுமிதா இடையில் கேட்டதற்கு பதில் வரவில்லை. அல்லது காட்சி துண்டிக்கப்பட்டிருக்கலாம்.

மீண்டும் அதேதான். போட்டியாளர்களை உற்சாகப்படுத்தவும் உத்வேகம் தருவதற்கும் ஒருவரை உள்ளே அனுப்பும் திட்டம் சிறந்ததுதான். ஆனால் அது கலகலப்பாகவும் சுவாரசியமாகவும் உண்மைகளை புண்படாத வகையில் அழுத்தமாக உணர வைப்பதாகவும் இருக்க வேண்டும். ‘நான் எட்டாங் கிளாஸ் பாஸூ. நீ பத்தாங் கிளாஸ் பெயிலு..’ என்கிற மாதிரியே அலட்டல்தன்மையோடு இருக்கக்கூடாது.

“நீ நல்லாப் படிக்கணும் தம்பி. படிச்சா.. உனக்கும் இந்தச் சமூத்திற்கும் அது முன்னேற்றமா இருக்கும்’ என்று உபதேசிப்பது ஒருமுறை. “டேய்.. சாவுகிராக்கி… படிக்கலைன்னா.. நாசமாப்பூடுவே’ என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சொல்ல வந்தது ஒரே விஷயம்தான்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE