Friday 19th of April 2024 03:40:04 AM GMT

LANGUAGE - TAMIL
“மினி வனிதாவாக மாற முயன்று தோற்றுப் போன மதுமிதா” - சுரேஷ் கண்ணன்

“மினி வனிதாவாக மாற முயன்று தோற்றுப் போன மதுமிதா” - சுரேஷ் கண்ணன்


இந்திரா திரைப்படத்தில் எனக்குப் பிடித்தமான காட்சியொன்று உண்டு. ராதா ரவி ஊர் பெரிய மனிதராக இருப்பார். அவரின் உதவியாளராக இருக்கும் ஒரு பெரியவரின் மகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு விலகி விடுவார்.

ராதாரவி, தன் உதவியாளரை அழைப்பார். ‘சாப்பிடுய்யா’ என்று சொல்லி அவருக்கு சாப்பாடு போடச் சொல்வார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மெல்ல பேச்சை ஆரம்பிப்பார். “என்னய்யா… உன் பொண்ணு இப்படியொரு காரியத்தை செஞ்சிருக்கா.. நானா இருந்தா அவனை வெட்டிப் போட்டுட்டு என் பொண்ணை தூக்கியாந்திருப்பேன். இல்லைன்னா தூக்குப் போட்டு செத்திருப்பேன். நல்லா உக்காந்து வக்கணையாக தின்னுட்டு இருக்கே” என்பது மாதிரி பல குண்டூசிகளை அவரின் மண்டையில் செருகுவார்.

அந்தப் பெரியவர் முதலில் கலங்கி பிறகு ஆவேசமாக கிளம்பிச் செல்வதோடு அந்தக் காட்சி முடியும்.

பிக்பாஸ் வீட்டில் வனிதா செய்து கொண்டிருப்பதும் இதைத்தான். தெளிவான முன்திட்டங்களோடு வந்திருக்கிறார். இப்படி ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகச் சென்று ஒருவரைப் பற்றி மாற்றிப் மாற்றி பேசி தூண்டி விடுகிறார். தன் பிம்பம் பற்றி அவர் கவலைப்படவேயில்லை.

‘வனிதா பின்னாடி பேசிட்டா –ன்னு என் மேல ஒரு பழி நாளைக்கு வந்துடக்கூடாது” என்று முன்ஜாமீன் எல்லாம் ஏன் வாங்கினார் என்று இப்போது தெளிவாகத் தெரிகிறது.

டிராகுலாவால் கடிக்கப்பட்டவர் தானும் டிராகுலாவாக மாறுவதைப் போல வனிதாவின் துர்உபதேசத்தால் ஆழமாக பாதிக்கப்பட்ட மதுமிதா, தானும் ஒரு மினி வனிதாவாக மாறி விட வேண்டும் என்கிற ஆவேசத்தோடு களத்தில் இறங்க அது ஓவர் பர்பாமன்ஸ் ஆகி தீய்ந்து போனது. அரைகுறை ஷெஃப்பின் சமையல் போலவே ஆனது.

ஒரு பெண், அரைவேக்காடாக கூட அல்ல, வேகவே ஆரம்பிக்காத பெண்ணியவாதியாக இருந்தால் எப்படியிருக்கும் என்பதற்கான சரியான உதாரணம், நேற்றைய மதுமிதா. ‘ 52-ம் நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

‘எதிர் நீச்சலடி’ என்கிற அட்டகாசமான பாட்டு ஒலித்தது. இதற்கு நடனம் ஆடாமல் இருந்தால்தான் ஆச்சரியம். வனிதா கூட மெலிதாக அசைந்து கொண்டிருந்தார். புன்னகை மன்னன் திரைப்படத்தில் கமல் சொல்வார். “காக்கா வலிப்பு வந்த மாதிரி கை, காலை உதர்றது டான்ஸ் இல்ல. அதுல ஒரு க்ரேஸ் இருக்கணும்”. சாண்டி நடனமாடும் போது இதை உணரலாம். ஆனால் அதற்காக அவர் புல்தரையில் படுத்து நீச்சலடித்ததெல்லாம் ஓவர்.

தர்ஷனின் மூலமாக ஒரு தகவல் கிடைத்தது. ‘பிக்பாஸில் தான் நடந்து கொள்ளும் முறை காரணமாக வெளியே பட வாய்ப்புகள் பாதிக்கப்படுமா” என்று சாண்டியிடம் அபிராமி விசாரித்திருக்கிறார். ஒரு பக்கம் ஒப்பாரி வைத்தாலும் அம்மணி காரியத்தில் கண்ணாகத்தான் இருக்கிறார் போல. மகிழ்ச்சி. இப்படி கேப்பே விடாமல் அழும் காரணத்திற்காக சீரியல்களில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். லட்டு மாதிரி எடுத்துக் கொள்வார்கள். கிளிசரின் செலவும் மிச்சம்.

“பிக்பாஸ் வீட்ல உயிரோட எஞ்சி இருக்கிறதே பெரிய வாய்ப்பு. அப்படியொரு ரத்த பூமி இது. அதுக்கு சந்தோஷப்படாம வெளில போறதைப் பத்தியெல்லாம் இப்பயே கவலைப்பட்டா எப்படி?” என்று நிதர்சனத்தை முன்வைத்துக் கொண்டிருந்தார் கவின்.

கிச்சன் அருகே மதுமிதாவிடம் ஆழமான பெண்ணிய சிந்தனைகளை விதைத்துக் கொண்டிருந்தார் வனிதா. நேற்று இரவு ஷெரீனிடம் ‘லியா’வை போட்டுக் கொடுத்தவர், இன்று மதுமிதாவிடம் ஷெரீனைப் பற்றி பற்ற வைத்துக் கொண்டிருந்தார். ஷெரீன், தர்ஷனின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டாராம். “ஏன் இந்தப் பெண்கள் இத்தனை அப்பாவிகளாக இருக்கிறார்கள்.. கோப்பால்?” என்று வியந்து கொண்டிருந்தார் மதுமிதா.

“அண்ணே.. அண்ணே.. சிப்பாயண்ணே.. நம்ம ஊரு.. நல்ல ஊரு.. இப்ப ரொம்ப கெட்டுப் போச்சண்ணே..” என்று ஜாடையாக பாடிக் கொண்டு உலவினார் கஸ்தூரி. ஒரு சமூகப் போராளி ‘காக்கா’வாக மாறி சீரழியும் மாயத்தையெல்லாம் பிக்பாஸ் வீடு நிகழ்த்துகிறது. “டேய் அந்த அரைக்கல்லை எடுடா” என்றார் சாண்டி. ‘இதுக்கு ஒரு பாயாசத்தை போட்டுட வேண்டியதுதான்” என்று பேசிக் கொண்டார்கள். சேரனும் இந்தக் கூட்டணியில் இருந்தார். “இந்தப் பொண்ணு டாஸ்க்லாம் சரியா செய்யலை” என்றார் அவர்.

“சமையலைப் பத்தி ஒரு பாட்டு எடுத்து விடுங்க” என்றார் சீப்பாக நடந்து கொள்ளும் கெஸ்ட். மன்னிக்கவும் சீஃப் கெஸ்ட். ‘கல்யாண சமையல் சாதம். காய்கறிகளும் பிரமாதம்’ என்று பாட ஆரம்பித்தார் முகின். சாண்டி குழு அதற்கு .. ஹஹ்ஹஹா..’ என்று பின்பாட்டு பாட “பசங்களா.. பார்த்து எச்சி சமையல்ல தெறிச்சிடப் போகுது” என்று ஜோக் அடித்தார் சேரன். இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து அவர் அடித்த முதல் ஜோக் இதுவே என்பது கவனிக்கத்தக்கது.

“நீங்க பத்தாங்கிளாஸ் பெயில்ணே... நான் எட்டாவது பாஸூண்ணே…” என்பது போல் மதுமிதாவின் சமையலைப் பற்றி கஸ்தூரி விமர்சனம் செய்ய ‘நீ பொங்கல் செஞ்ச லட்சணத்துக்கு சமையல்-ன்ற வார்த்தையே உன் வாயில இருந்து வர்றக்கூடாது. ஏதாவது பேசினே.. கரண்டியை எடுத்து வாயில உட்டுறுவேன்” என்பது போல் சொல்லி கஸ்தூரியின் மிதப்பை கீழே இறக்கினார் ஷெரீன். சபாஷ் அம்மணி!

“கஸ்தூரி வாயைத் திறந்தாலே எனக்கு காண்டாவுது. காதுல ரத்தம் வருது. நீங்க எப்படித்தான் பொறுத்துக்கறீங்களோ” என்று காமிரா முன்னால் வந்து எரிச்சலைக் கொட்டினார் கவின். அவர் இப்படி இன்னொரு போட்டியாளரைப் பற்றி காமிரா முன்னால் வந்து குறை சொல்வது இதுதான் முதன்முறை என்று தோன்றுகிறது. மீரா இருக்கும் போது கூட சொன்னதாக தெரியவில்லை. எனில் கஸ்தூரியின் இம்சைகள் அப்படியாக இருக்கிறது போல.

லக்ஸரி டாஸ்க் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. “யாருலே அது சீஃப் கெஸ்ட்டு. வரச் சொல்லுலே.. இங்கே” என்று லியா ஜாலியாக கமெண்ட் அடித்தது சுவாரசியம். ஆனால் இதை வனியாக்காவின் காதில் விழாமல் சொன்னதுதான் ராஜதந்திரம்.

**

லக்ஸரி பட்ஜெட்டில் சிறப்பாக பங்கெடுத்தவர்களை தேர்ந்தெடுக்கும் சமயம் வந்தது. மனதிற்குள் சேரன் ‘ஓ’வென்று அழுதாலும் இந்தச் சமயத்தில் அவரை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பது பிக்பாஸ் வீட்டின் பொதுவான விதி. சேரனின் தலைவிதியும் கூட. இதை சாண்டி டீம் சிறப்பாக ஒருங்கிணைப்பார்கள். எனவே இம்முறையும் அப்படியே ஆனது. ஷெரீன் மற்றும் மதுமிதாவை இதற்காகத் தேர்ந்தெடுத்தார்கள்.

ஹோட்டல் மேனேஜராகவே மாறி ‘வாங்க மேடம்.. போங்க மேடம்’ என்றெல்லாம் வனிதாவை அழைத்தற்காகவே சேரனை இந்தக் கேட்டகிரிக்கு நிச்சயம் பரிசீலித்திருக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் சிறப்பாக பங்கேற்றவர்கள் என்கிற தேர்விலும் சேரனை ஒதுக்கி தர்ஷனை தேர்ந்தெடுத்தார்கள்.

‘சரிடாப்பா.. குறைந்தபட்சம் என்னை ஜெயிலுக்கு அனுப்பாமயாவது காப்பாத்துங்க. அதையாவது செய்யுங்க’ என்கிற மோடிற்கு போய் சமாதானம் ஆனார் சேரன்.

அடுத்ததுதான் ஏழரையைக் கூட்டும் தேர்வு. டாஸ்க்கில் சுவாரசியம் குறைவாக பங்கேற்றவர்கள் என்று இருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காதல் எபிஸோடில் ஓயாமல் அழுது சோர்வாகியிருக்கும் அபிராமி ‘என் பேரை எவனாவது சொன்னீங்கன்னா.. அரைமணி நேரத்திற்கு தொடர்ந்து ஒப்பாரி வைப்பேன். அதை க்ளோசப்பில் காட்டச் சொல்வேன். தைரியம் இருக்கறவன் முன்னாடி வாங்க” என்று எச்சரித்தார்.

சேரன் கஸ்தூரியின் பெயரை முன்மொழிந்தார். அதை வலுவே இல்லாமல் எதிர்த்து பின்பு அமைதியானார் கஸ்தூரி. “ஆமா.. கெஸ்ட்டு முன்னாடி கால் மேல் போட்டாங்க’ என்றார் மதுமிதா. “அப்படியில்ல. கெஸ்ட்டு மேலயே கால் போட்டாங்க. அது பெரிய தப்பு’ என்றார் சாண்டி.

டாஸ்க்கிற்கு லேட் ஆக வந்ததால் லியாவின் பெயரை எடுத்து வைத்தார் சேரன். (பெஸ்ட் பர்ஃ.பாமர் தேர்வில் தன் பெயரைச் சொல்லாமல் தர்ஷனின் பெயரை லியா சொன்னதால் பாசமலர் என்றும் பார்க்காமல் சேரன் காண்டாகி விட்டார் போல). “இந்தப் பக்கமும் போகணும்.. அந்தப் பக்கமும் போகணும்.. நடுவுலயும் ஓடணும்’னா.. எப்படி?” என்று பதிலளித்தார் லியா. அம்மணியின் குரல் இன்றைக்குத்தான் பிக்பாஸ் வீட்டில் பலமாக ஒலித்தது. (அப்படி வாடி தங்கம்… அப்படியே மெயிண்ட்டெயின் பண்ணு” என்று சந்தோஷமாகியிருப்பார் பிக்பாஸ்). அபியின் பெயர் வந்த போதும் அவருக்கு சப்போர்ட் செய்தார் லியா.

ஆக.. கஸ்தூரி முதல் பலியாடாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது சாண்டி குழுவால் முன்பே தீர்மானிக்கப்பட்டது. இதுவரைக்கும் கூட பரவாயில்லை என்பதாக விவாதம் சுமூகமாக சென்றது.

IMAGE_ALT

அடுத்த பலியாடு யார் என்கிற தேர்வில்தான் சூழல் ரணகளமானது. அபிராமியின் பெயரை இன்னொரு முறை மெல்ல எடுத்து விட்டார் கவின். ‘பல முறை எச்சரிக்கப்பட்டும் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசுகிறாராம். இதனால் சிக்கனில் லெக்பீஸ் மட்டுமே வருகிறதாம். மீதப் புள்ளிகளை பிக்பாஸ் பறித்துக் கொள்கிறாராம்”.

“நான் எங்க ஆங்கிலத்தில் பேசினேன்? I don’t know what he has against me?” என்று பீட்டரிலேயே பேசி சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டார் அபிராமி. (‘தட்ஸ் ஆல் யுவர் ஆனர்”). “இல்ல மச்சா.. நான் கத்தியால குத்தணும்னு நெனக்கல மச்சா. தெரியாம பட்டுடுச்சு” என்றார் கவின். ‘இட்ஸ் ஓகே மச்சா..” என்றார் அபிராமி. (உலக நடிப்புடா சாமி!).

அபிராமியின் சார்பில் சுப்ரீம் கோர்ட் வக்கீல் போன்ற கெத்துடன் எழுந்தார் மதுமிதா. “இது டாஸ்க் பற்றிய கேள்விதான். ஆங்கிலத்தில் பேசுவது பற்றியல்ல. இது அபிராமிக்கு இழைக்கப்படும் அநீதி. எனது கட்சிக்காரர் கடந்த ஒரு நூற்றாண்டாக ஒப்பாரி வைத்து ஏற்கெனவே பயங்கர சோர்வாகியிருக்கிறார். அவரை சிறையில் அடைத்து மீண்டும் அழ வைக்க முயற்சிப்பது எனது கட்சிக்காரருக்கு மட்டுமல்ல, இந்தச் சமூகத்திற்கே ஆபத்து” என்பது போல் தனது வாதங்களை வலுவாக எடுத்து வைத்தார்.

மதுமிதா அளவிற்கு இல்லையென்றாலும் வாய்தா வக்கீல் போல அபிராமிக்கு ஆதரவு தந்தார் லியா.

என்றாலும் ‘இது முன்பே தீர்மானிக்கப்பட்டது’ என்பதால் பாவனைக்கு விசாரித்து கஸ்தூரி மற்றும் அபிராமியின் பெயரை முன்மொழிந்தார்கள். இதற்குள் சிறைக்குச் செல்லும் மூடிற்கு தானாக அபிராமி வந்து விட்டார். (நானும் எத்தனையோ ஜெயிலைப் பார்த்திருக்கேன். இங்க மட்டும்தான் கொசுத் தொல்லையே இல்ல).

தனது வாதங்களை வலுவாக வைத்தும் நிரபராதிக்கு தண்டனை வழங்கப்பட்டதால் கோபமடைந்தார் மதுமிதா. “நானும் தமிழிற்கு ஆதரவானவள். தமிழ்தான் எனக்கும் மூச்சு. ஆங்கிலத்தில் பேசுவது தவறுதான். ஆனால் அடுத்த வழக்கில் பார்த்துக் கொள்ளலாம் என்று நான் சொன்னதை யாரும் கேட்கவில்லை’ என்பது அவரது ஆட்சேபம்.

“ஹலோ.. வென்று. இதைப் பத்தி முன்னாடியே மீட்டிங் போட்டுத்தானே பேசினோம். அங்க மண்டையை மண்டையை ஆட்டிட்டு இங்க வந்து வேற மாதிரி பேசறே” என்று எரிச்சலானார் கவின். ‘அந்த மேரி.. இந்த மேரி..” என்று சாண்டியும் பின்பாட்டு பாடினார். “அது போன வாரம்.. நான் சொல்றது இந்த வாரம்” என்று கைப்புள்ள மாதிரி குழப்பினார் மதுமிதா.

IMAGE_ALT

இந்தக் களேபரத்தில் கலந்து கொள்ளாமல் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் சேரன். பின்பு ஒரு மூட்டை வெங்காயத்தை வலிக்காமல் வெட்டிக் கொண்டிருந்தார். அவர் ஒரு மூட்டையை வெட்டி முடித்தும் சண்டை ஓயாமல் இருக்கவே.. “ஏம்ப்பா.. அடுத்த மூட்டையை எடு.. அதையும் வெட்டி வெச்சுடறேன். அடுத்த வாரத்திற்கு உதவும்”

முடிந்த போன விஷயத்தை எரிச்சலூட்டும் விதமாக மதுமிதா தொடர்ந்து கவினுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததால் ‘நீ வாடா.. இது கிடக்குது” என்ற மாதிரி கவினை, தர்ஷன் தள்ளிக் கொண்டு செல்ல, “அடப்பாவி.. உனக்கு எத்தனை முறை ஆம்லேட் போட்டுக் கொடுத்திருப்பேன்” என்று தர்ஷனின் மீது பயங்கர காண்டானார் மதுமிதா.

தன்னுடைய ஆதங்கத்தை பிறகு சேரனிடம் புலம்பினார் மதுமிதா. “சிறப்பாக பங்கேற்றவர்கள்’ டாஸ்க்கில் தனக்கு தொடர்ந்து இழைக்கப்படும் வரலாற்று அநீதியைப் பொறுக்க முடியாமல் ஏற்கெனவே நொந்து போய் உட்கார்ந்திருந்த சேரனுக்கு இது மேலும் எரிச்சலைத் தர ‘இது ரத்தபூமி. முடிஞ்சா இரு.. இல்லாட்டா போ. கண்ணாடியைத் துடைக்கறதுல இருந்து வெங்காயம் வெட்டறது வரை.. நானும் எத்தனையோ வேலை செய்யறேன். ஒருபய என் பேரைச் சொல்ல மாட்றான்” என்று தன் வயிற்றெரிச்சலைக் கொட்டினார்.

கொடுமை.. கொடுமை –ன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை இருக்கே’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட மதுமிதா.. ‘சரி. கடவுள் பார்த்துப்பான்” என்று அமைதியானார். சேரன் அவரை அமைதிப்படுத்தினாலும் தர்ஷன் செய்த காரியம் அவருடைய மண்டையைப் பிராண்டியது போல.

“அதெப்படி தர்ஷன் என்னை அப்படிச் சொல்லாம். ஆண்கள் எல்லாம் கூட்டணி போடறீங்களா.. உங்க கிட்ட நியாயம் கிடைக்காது. எங்களை நீங்க அடிமைப்படுத்தி வெச்சிருக்கீங்க.. எங்களைப் பயன்படுத்தறீங்க?” என்றலெ்லாம் பட்டிமன்ற பேச்சாளர் போல பாயிண்டுகளை ஆவேசமாக அடுக்கிக் கொண்டே சென்றார்.

டிரைவிங் தெரியாத ஒருவர் வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டு எங்கே நிறுத்துவது என்று தெரியாமல் பதட்டப்படுவதைப் போல தன்னுடைய உரையாடலை எப்படி வழிநடத்துவது என்பது புரியாமல் எங்கெங்கோ முட்டிக் கொண்டு சென்றார் மதுமிதா. ஏனெனில் அவர் சுயபுத்தியில் பேசவில்லை. வனிதா போட்ட தூபத்தில் செயல்படுவதால் தன் வாதத்தை தெளிவாக அவரால் முன்வைக்க முடியவில்லை.

எனவே எப்படியாவது கவினை அவதூறு செய்ய வேண்டும் என்கிற வேகத்தில் ‘நீ நாலு பொண்ணை யூஸ் பண்ணி இந்த வீட்ல சேவ் ஆகணும்னு நெனக்கறே’ என்றெல்லாம் அதிரடியாகப் பேசினார். ஆனால் கவின் இந்த நிலைமையை கட்டுப்பாட்டுடன் கையாண்டார். “தொடர்ந்து வார்த்தைகளை இறைக்கறீங்க மது. அடிமைப்படுத்தறது.. யூஸ் பண்றது.. இதெல்லாம் சரியில்ல. அதுக்கு நான் மன்னிப்புல்லாம் கேட்டுட்டேன். அதைத்தான் நீங்க ஆயுதமா பயன்படுத்துவீங்கன்னா செய்யுங்க” என்று விரக்தியுடன் பேசினார்.

லியாவும் மதுமிதாவிற்கு எதிராக கத்தியது மிக மிக அபூர்வமான நிகழ்ச்சி. ‘ஓ.. ஒரு தென்றல் புயலாகி வருதே’ என்ற பாடலைப் பின்னணியில் போட்டிருக்கலாம். ஆனால் மதுமிதா அவரைச் சட்டை செய்யவேயில்லை. தர்ஷனும் கவினும்தான் அவருடைய மெயின் டார்க்கெட்.

IMAGE_ALT

S

“எப்பயோ முடிஞ்சு போன விஷயத்தை நீ ஏன் மறுபடி கிளறி டார்ச்சர் பண்றே?” என்று ஷெரீன் அதட்டியதும்தான் ‘தான் ஏதோ தப்பு செய்து கொண்டிருக்கிறோம்’ என்று மதுமிதாவிற்கு உறைத்திருக்க வேண்டும். சற்று அடங்கினார். அது மட்டுமல்ல, பெண்ணியச் சிந்தனையை விதைத்த குருவான வனிதாவே.. “நான் சொல்லிக் கொடுத்தது.. என்ன.. நீ செஞ்சிட்டு இருக்கறது என்ன?’ என்பது போல் சத்தம் போட, தாயால் குறை சொல்லப்பட்ட அபூர்வ சகோதரர்கள் ‘அப்பு’ ரேஞ்சிற்கு பரிதாபமாக பார்த்தார் மதுமிதா.

மதுமிதா ஒரு நல்ல ஷெஃப்பாக வரக்கூடிய அத்தனை சாத்தியங்களும் இருக்கின்றன. அவர் ஆவேசமாக உரையாடும் போது கவனித்துப் பாருங்கள். கத்தியால் எதையோ வெட்டுவதைப் போலவே கைகளை உபயோகப்படுத்துவார். தான் இன்னொரு வனிதாவாக மாறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு காமெடியாக தோற்றுப் போன விபத்துதான் மதுமிதாவிற்கு நிகழ்ந்தது.

**

மதுமிதாவின் அவதூறுகளால் மனம் உடைந்த கவின், ஓரமாகச் சென்று கண்கலங்க.. “நீ ஏன் மச்சான் அழற.. தலைவர் போட்டியின் போது அவங்களுக்கு அடிபடக்கூடாது –ன்னு விட்டுக் கொடுத்தேன். இது போல நிறைய நடந்திருக்கு. நாம அவங்களை அப்படி பார்க்கவேயில்லை. அடிமைத்தனம் அது இது ன்னு ஓவர் பேச்சு பேசறாங்க” என்று நடந்து கொண்டே பொங்கினார் சாண்டி.

IMAGE_ALT

“அது இன உணர்வு’ என்று சித்தப்பூ சரவணன் சொன்னாரே.. அப்ப பேச வேண்டியதுதானே” என்று சாண்டி கேட்டது நெத்தியடி கேள்வி.

“ஆண்கள் அடிமைப்படுத்துகிறார்கள் –னு பொதுமைப்படுத்தி பேசறது தவறு மது” என்று சேரனும் எடுத்துரைத்தார். ஏனெனில் இது அவரையும் இணைத்து பாதிக்கும் விஷயம்.

வனிதாவும் மதுமிதாவும் சேரனும் பேசிக் கொண்டிருக்கும் காட்சியை கண்ணாடி வழியாக வெளியில் இருந்து பார்த்த சாண்டி டீம், அவர்கள் பேசுவதை கற்பனையாக ‘டப்பிங்’ பேசி காமெடி செய்ய “சேரப்பாவை இழுக்காதீங்க” என்ற லியா.. பிறகு விழுந்து புரண்டு சிரித்தார்.

ஒரு தீவிரமான சூழலில் இருந்து வெளியே வந்து அதை உடனடியாக காமெடியாக மாற்றக்கூடிய தன்மை ஆண்களுக்கு உண்டு என்பதை இந்தக் காட்சி நிரூபித்தது.

“உனக்காக அங்க நான் ரத்தம் சிந்த போராடிட்டு இருக்கேன். நீ என்னடான்னா அவங்க கூட சேர்ந்து ‘கெக்கே பிக்கே’ன்னு சிரிச்சிட்டு இருக்கே?’ இந்த வாரம் ஃபுல்லா நீ சிரிக்கக்கூடாது பார்த்துக்க’ என்று சிறையில் இருக்கும் அபிராமியை எச்சரித்தார் மதுமிதா. (அபிராமி சிரிப்பது என்பது வரலாற்றில் பதிவாககக்கூடிய வரலாற்று நிகழ்வு. அதைப் போய் தடுப்பது சரியா?!).

“இந்த தர்ஷன் பய இருக்கானே.. ஷெரீனை பாக்கெட்ல போட்டு வெச்சிருக்கான். எல்லோரும் வேற அவனை ‘சிறந்த போட்டியாளர்’ன்னு ஏத்தி விட்டதால ஓவர் கான்பிடென்ஸ்ல சுத்திட்டு இருக்கான்” என்று சேரனிடம் தூபம் போட்டுக் கொண்டிருந்தார் வனிதா. ஒருவர் ஒருவராக இரவில் மூட்டி விட்டு விட்டு பகலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வனிதாவின் பொழுதுபோக்காகவும் ஃபுல் டைம் டாஸ்க்காகவும் இருக்கிறது.

முன்பு தர்ஷன் தன்னை எதிர்த்துப் பேசினதை வனிதா இன்னமும் மறக்கவேயில்லை போலிருக்கிறது. ‘பிச்சை போட்டா ஓகேவா?,” என்பது முதல் தர்ஷனை தொடர்ந்து டார்க்கெட் செய்து கொண்டேயிருக்கிறார்.

சகுனியின் சாம்ராஜ்யம் தொடரும்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE