Thursday 28th of March 2024 01:55:11 PM GMT

LANGUAGE - TAMIL
“வத்திக்குச்சி வனிதா, பற்ற வைக்கும் எரிமலைகள்”  - சுரேஷ் கண்ணன்

“வத்திக்குச்சி வனிதா, பற்ற வைக்கும் எரிமலைகள்” - சுரேஷ் கண்ணன்


நிகழ்ச்சியில் தானாக உருவாகும் மாற்றங்களையும் போக்குகளையும் அப்படியே ‘டாஸ்க்காக’ மாற்றி விடுவது பிக்பாஸின் ஸ்டைல். முதல் சீஸனில் இருந்தே இதை பார்க்க முடியும்.

‘தமிழ்ப் பெண், கலாசாரம்’ என்று இனம் சார்ந்த உரையாடலை முதலில் ஆரம்பித்தவர் மதுமிதா. பிறகு “ஆண்கள் எல்லாம் ஒண்ணு கூடிக்கறாங்க” என்றொரு பிரச்சினையை துவக்கினார். ‘அது இன உணர்வு’ என்று ஆணியில் அடித்தாற் போல் சித்தப்பூ பதில் சொன்ன போது அப்போது அடங்கி விட்டார். ஏனெனில் சித்தப்பூ டிசைன் டிசைனாக கண்ணை உருட்டிப் பார்ப்பதை தாங்கும் சக்தி மதுமிதாவிற்கு இல்லை.

இப்போது வனிதாவின் தூபம் காரணமாக மீண்டும் பெண்ணியக் குரலில் ‘உரத்து’ சிந்திக்க ஆரம்பித்து விட்டார் மதுமிதா. “கோதாவரி.. வீட்டுக்கு நடுவுல கோடு ஒண்ணு கிழிடி’ என்கிற கதையாக ஆண் x பெண் என்று வீடு இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. சேரன் மட்டும் இரண்டு எல்லைகளிலும் உலவுகிறார். பாவம், அவர் நிலைமை அப்படி.

எனவே இதையே ஒரு டாஸ்காக பிக்பாஸ் வைத்து விட்டார். எனில் அவர்களுக்கு இடையில் உக்கிரம் இன்னமும் அதிகமாகும். ரகளையான ஃபுட்டேஜ்கள் கிடைக்கும் என்கிற அவர் கணக்கு தப்பவில்லை.

“உன் இதயத்தை யாராவது கத்தில குத்தினாத்தான் அந்த வலி தெரியும்” என்கிற போது வனிதாவின் சொற்பிரயோகத்திலும் உடல்மொழியிலும் தெரியும் வன்மம் அச்சுறுத்துவதாக இருக்கிறது. என்ன மாதிரியான காரெக்ட்டர் இவர்? ‘அவரது இரண்டு பிள்ளைகள் இதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார்களோ.. அவர்கள் என்ன நினைப்பார்கள்?” என்பது துவங்கி பல சங்கடமான கேள்விகள் எழுகின்றன. ஆனால் வனிதா இதைப் பற்றியெல்லாம் துளி கூட கவலைப்படாத காரெக்ட்டராக இருக்கிறது.

IMAGE_ALT

53-வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

சுதந்திர தினத்திற்கென்றே ஒலிபரப்ப சில ரெடிமேட் பாடல்களை தூர்தர்ஷனில் எடுத்து வைத்திருப்பார்கள். பிக்பாஸ் சற்று நவீனத்திற்கு வந்து ‘ஜனகனமண ..’ என்று ரஹ்மானின் இசையில் அலற விட்டார்.

பல் விளக்குவதற்கு முன்பே, பாத்திரம் விளக்குவதற்கு முன்பே பற்ற வைக்கும் பணியைச் சிறப்பாக ஆரம்பித்து விட்டார் வனிதா. “இந்த வாரம் முகின் போவதுதான் சிறப்பு. அப்பாவி அபிராமிக்கு ஒண்ணும் தெரியல” என்று மதுமிதாவிடம் கருத்து கூற ஆரம்பித்து விட்டார். கவின் ஜகஜ்ஜால கில்லாடியாம். சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டி தப்பித்து விடுவானாம்.

‘உள்ளே கொளுத்திஃபையிங் நடக்குது” என்று பாய்ஸ்களிடம் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார் லியா. வம்பு பேசுவதில் விருப்பமில்லாத லியாவையே புறம் பேச வைத்து விட்டார் வனிதா. ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸில் ‘நல்லவங்களா இருந்த உங்களை கெட்டவங்களா மாத்திட்டேன்’ என்று ஊர் மக்களிடம் சுந்தரலிங்கம் சொல்வது போல இருக்கிறது வனிதாவின் காரெக்ட்டர். ‘அது வந்த மிஷன்னே அதுதானே?” எனறார் தர்ஷன்.

“இனிமே தர்ஷனை தூரமா தள்ளி வெச்சு ‘தூர தர்ஷன்’ –ன்னுதான் கூப்பிடப் போறேன்” (நன்றி: கமல்) என்று ஆகாத்தியம் செய்து கொண்டிருந்தார் மதுமிதா. ஆனால் இது போன்ற அற்ப பஞ்சாயத்துக்களில் சேரனும் இணைந்து கொள்வதுதான் சங்கடமாக இருக்கிறது. ஓர் இயக்குநர் என்கிற முறையில் இந்த விளையாட்டின் அடிப்படையை அவரால் உணர முடியும். இது இந்த திசையில்தான் நகரும் என்பதையும் அறிய முடியும். மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியும்.

தன்னைப் பற்றி வெளியில் இருக்கும் மீம்ஸ் வீடியோக்களையும் விமர்சனங்களையும் வனிதா பார்க்கவில்லையா அல்லது ‘போங்கடா.. பொழப்பத்தவன்களா’ என்று நினைத்து விட்டாரா என்று தெரியவில்லை. பிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளர்களைப் பற்றி யாரோ கிரிக்கெட் விளையாட்டு போன்ற வீடியோவை ‘மிகத்தரமாக’ தயாரித்திருக்கிறார்களாம். “நீயும் போய்.. பாரு.. நல்லாயிருக்கு” என்று மிதப்புடன் லியாவிடம் சொல்ல, ‘எல்லாம் பார்ப்பாங்க.. நீ பே…” என்று இடதுகையால் லியா ஒதுக்கியதை வனிதாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

‘இதுக்கு இன்னொரு டம்ளர் பாயாசத்த போட்டுற வேண்டியதுதான்’ என்கிற நினைப்போடு ஷெரீனிடம் லியாவைப் பற்றி புறம் பேசினார். “எது சொன்னாலும் சட்டுன்னு எதிர்த்து பேசிடறாளாம்”. ‘எதிர்த்து பேசுவது எனது பிறப்புரிமை மட்டுமே’ என்று வனிதாக்கா நினைத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. ‘இப்ப நீ முடியை தூக்கி இப்படி போடறேன் –ன்னு நான் சொல்றேன். அதுக்கு நீ என்ன சொல்வே?” என்று ஷெரீனிடம் உதாரணம் காட்டிய போது ‘அட லூஸே.. இதுக்கெல்லாம் என்ன சொல்வாங்க?” என்கிற முகபாவத்தை ஷெரீன் தந்தது சிறப்பு.

பாசமலரிடமிருந்து சேரனும் விலகியிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. பிக்பாஸ் வீடுகளில் உருவாகும் உறவுகள் போலித்தனமானவை என்ற விமர்சனங்கள் நெடுங்காலமாக இருக்கின்றன. மீராவும் கூட தன்னுடைய பாணியில் இதைக் கிண்டலடித்திருக்கிறார்.

சேரனின் வழியாக இது மெய்யாகியிருப்பது துரதிர்ஷ்டமானது. ஆனால் இந்த உறவுகளில் தான் கூடுமானவரை உண்மையாக இருந்தும் எதிர் தரப்பிடமிருந்து பெரிதாக எவ்வித ரியாக்ஷனும் இல்லாததால் சேரன் மனம் உடைந்து போயிருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. பாய்ஸ் டீமில் சங்கமம் ஆகியிருக்கும் லியா இவரைக் கண்டு கொள்வதேயில்லையாம்.

“என்னை ‘அவர்ர்ரு.. இவர்ர்ரு..’தான் சேரன் அண்ணா கூப்பிடறாரு” என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் தர்ஷன்.

‘நாங்க ஜெயிலுக்குப் போறோம்.. ஜாலி.. ஜாலி..’ என்று முன்பு மிதப்பில் திரிந்து கொண்டிருந்த அபிராமிக்கும் லியாவிற்கும் அங்கு சென்று வந்த பிறகுதான் அங்குள்ள அசெளகரியங்களைப் பற்றி தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக அந்தக் கஞ்சி இவர்களின் கொழுப்பை அடக்கியிருக்கிறது.

சிறையில் இருந்த அபிராமி ‘உடம்பு சரியில்லை. என்னை விட்டுடுங்க.. ப்ளீஸ்’ என்று பிக்பாஸிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். ஒரு ஆக்ஷன் ஹீரோ பாணியில் சாண்டி கதவைத் திறந்த போது ‘வேணாம் பிரச்சினை.. பிக்பாஸே சொல்லட்டும்’ என்று மறுத்தார் அபிராமி.

‘இப்பத்திக்கு விட்டுடுங்களேன்.. அவளா நினைக்கும் போது வெளியே வரட்டும்’ என்று கஸ்தூரி சொன்னது சரியான யோசனை. ஏனெனில் பிக்பாஸின் தண்டனையை மீறினால் பாதிப்பு அனைவருக்கும் ஏற்படும். ஆனால் ‘தனக்கு பிடிக்காதவர் ஒரு விஷயத்தை சரியாகச் சொன்னாலும் அது தப்புதான் ’ என்கிற மனோபாவம் நமக்குள் உருவாகி விடுகிறது. சாண்டியும் இதற்கு விதிவிலக்கில்லை. “நீங்க சும்மா இருங்க. நாங்க பார்த்துக்கறோம்” என்பது போல் இடது கையால் அந்த யோசனையை விலக்கி விட்டார். “ஐ.பி.சி செக்ஷன் பிக்பாஸ் சீஸன் 161(12)-ன் விதியின் படி இது அத்துமீறல் சாண்டி” என்று எச்சரித்தார் சேரன்.

இந்த விஷயம் மெகா ஆக்ஷன் ஹீரோவான வனிதாவின் காதுகளுக்குச் சென்றது. “யார்ரா.. அவன் பிக்பாஸூ. நான் பார்த்து வளர்ந்த பய.. நீ நவுரு.. சொல்றேன்” என்று அபிராமியை மீட்க ஆவேசமாக அவர் கிளம்பி வர, ‘இதுக்கு மேலும் சும்மா இருந்தால் நமக்கு மரியாதையில்லை’ என்கிற நிதர்சனத்தை உணர்ந்த பிக்பாஸ் அபிராமியை (மட்டும்) விடுதலை செய்தார்.

‘கருத்த மச்சான்’ பாடலின் வரிகளை மிக அழகாக மாற்றிப் பாடி வசீகரித்தார் கஸ்தூரி. அவர் வெளியே செல்லும் போது சந்தோஷ குறும்படத்தில் நிச்சயம் இடம் பெற வேண்டிய காட்சி இது. ஆனால் இந்தப் பாட்டினாலேயே கூட அபிராமியின் உடல்நிலையில் சீர்கேடு அதிகமாகியிருக்கலாம்.

சேரனின் ஆட்சேபத்தினால் காண்டாகிய சாண்டி டீம் அதைப் பற்றி கழிவறையின் அருகில் புறம் பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்த சேரன்.. ‘தர்ஷன் சார்.. உங்களைக் கூப்பிடறாங்க” என்றது சங்கடமான காட்சி. சேரன் தன்னுடைய பெருந்தன்மைக்கு இன்னமும் கொஞ்சம் எக்ஸ்டன்ஷன் கொடுக்கலாம். சின்னப்பசங்களுக்கு சமமாக நடந்து கொள்ளக்கூடாது என்று தோன்றியது.

“அவங்களாலதான் அபிராமிக்கு விடுதலை கிடைச்சதுதாம். இந்தக் கொசுக்களையெல்லாம் நசுக்கணும்”ன்னு பேசிட்டு இருக்காங்க” என்று சாண்டி குழுவைப் பற்றி பிறகு வருத்தப்பட்டார் சேரன்..

லக்ஸரி பட்ஜெட்டின் முழுப்புள்ளிகளையும் வழங்கினார் சீஃப் கெஸ்ட். கஸ்தூரிக்கு விடுதலை கிடைத்தது. (பெரிய மச்சான் பாடலில் பிக்பாஸ் மகிழ்ந்திருப்பார் போல).

கக்கூஸ் அருகில் ஓர் அமர்க்களமான கச்சேரி நடந்து கொண்டிருந்தது. நான்கு குறும்புத்தனமான இளைஞர்கள் இணைந்தால் ஒரு சிக்கலான சூழலையும் இலகுவாக மாற்றி விடுவார்கள் என்பதற்கான உதாரணம் இந்தக் காட்சி. முகின் இசையமைத்ததோ.. என்னமோ.. கச்சேரி நன்றாகவே இருந்தது.

IMAGE_ALT

**

அடுத்ததாக, ‘சபாஷ் சரியான போட்டி’ என்கிற தலைப்பில் ஒரு டாஸ்க். ஆண் – பெண் அடிப்படையில் பிக்பாஸ் வீடு இரு அணிகளாக பிரிய வேண்டும். (எரியற நெருப்புல பெட்ரோல் ஊத்தறது-ன்றது இதுதான். ஏற்கெனவே அது அப்படித்தான் இருக்கிறது). கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புகளில் இரு அணியும் விவாதிக்க வேண்டும்.

‘பிக்பாஸ் வீட்டில் சரியான முடிவுகளை எடுப்பவர்கள் ஆண்களா, பெண்களா’ என்பது தலைப்பு. (பொதுவாக பெண்கள்தான் சரியான முடிவுகளை எடுப்பவர்கள் என்பதே என் தனிப்பட்ட கருத்து. ஆனால் பிக்பாஸ் வீட்டில் பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு தவறான முடிவுகளை எடுக்கிறார்கள் என்று தோன்றுகிறது.)

பெண்களின் தரப்பில் கைகளை வெட்டி வெட்டி ஆவேசமாகப் பேசினார் மதுமிதா. “நீ பேசுடி தங்கம்” என்கிற முகபாவத்தை வழங்கினார் வனிதா.

‘தண்டனைகளுக்கான பலியாடுகளைத் தேர்ந்தெடுக்கும் போது ஆண்கள் கூட்டணி வைத்து பெண்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்” என்றார் மதுமிதா. “அப்படியெல்லாம் பாலின அடிப்படையில் பிரித்துப் பார்க்க முடியாது” என்றார் கவின்.

“மீரா விவகாரத்தில் ரேஷ்மா தவறான முடிவு எடுத்து விட்டார். அந்த விஷயத்தை தனியாக அமர வைத்து பேசியிருக்கலாம். பொதுச்சபையிலேயே பஞ்சாயத்தை கூட்டி விட்டார். ஆனால் இதை முதலில் சுட்டிக் காட்டியது சரவணன்தான்.” என்று தன்னுடைய பிரச்சினையையொட்டி ஆண்களின் தரப்பில் பாயிண்ட்டுகளை வைத்தார் சேரன். இந்த உரையாடல் இழுத்துக் கொண்டு போகவே பஸ்ஸர் அடித்து முடித்து வைத்தார் புண்ணியவான் பிக்பாஸ்.

அடுத்து ‘தலைவர் பொறுப்பை சிறப்பாகச் செய்தவர் ஆண்களா, பெண்களா’ என்பது. ‘பல நல்ல விஷயங்களை செய்த தர்ஷனை சுட்டிக் காட்டினார் முகின். “இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடிகளைப் போல இந்த வீட்டின் தலைவருக்கான முன்னோடி என்பது வனிதாதான்” என்று மதுமிதா சொன்ன போது புல்லரித்தது. “சாண்டில்லாம் ஒரு தலைவரா? பாத்திரம் கழுவாமல் தன் பாத்திரத்தை சரியாக செய்யாதவர்’ என்றார் மதுமிதா.

“நீ தலைவரா இருந்த போதுதான் பிக்பாஸ் பிராப்பர்டியை சேதப்படுத்தியிருக்கே. தேவையில்லாம பர்னிச்சரை உடைச்சிருக்க” என்று முகினை குற்றம் சாட்டினார் வனிதா. ‘Emotional stability’ இல்லாதவன்லாம் என்னத்த தலைவரு?” என்றார் அபிராமி. “சேரைத் தூக்கி அடிக்கப் போனே நீ” என்று கூடுதல் பாயிண்டை எடுத்துக் கொடுத்தார் மதுமிதா. ‘நான் அடிக்கப் போகலை. யாராவது தடுக்கி விழுந்திடப் போறாங்கன்னு ஓரமாத்தான் எடுத்து வெச்சேன்” என்று சமாளித்தார் முகின்.

இடையிடையே தர்ஷனை டார்க்கெட் செய்து ஒரண்டை இழுத்துக் கொண்டேயிருந்தார் வனிதா.

IMAGE_ALT

‘ஒரு தலைவராக வீட்டில் உள்ளவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை சரி செய்தவர் வனிதா அக்காதான்’ என்று சேம் சைட் கோல் போட்டார் சேரன். எனவே இந்த தலைப்பில் வெற்றி பெற்றவர்கள் பெண்கள் என்று ஆயிற்று. ‘வெச்சுக்கங்க போங்க” என்று வெறுப்பில் அதை உதறினார்கள் ஆண்கள்.

சமையல் செய்வதில் சிறந்தவர்கள் ஆண்களா பெண்களா என்பது தலைப்பு. இப்போது அனைவருக்குமே கஸ்தூரியின் பொங்கல் நினைவிற்கு வந்திருக்கும் போல. எல்லோருமே சிரித்துத் தீர்த்தார்கள். ‘இந்த வீட்டின் தாமுவாக இருந்த சித்தப்பூவை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் சாண்டி.

‘பைவ்ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்ல மதுமிதாவைத்தான் ஷெஃப்பா போட்டிருந்தாங்க” என்றார் கஸ்தூரி. “அதனாலதான் உங்களைப் போடலை. நான் இடிச்சு கொடுத்த புதினாதான், சமையல் சிறப்பா வர்ற காரணம்” என்று மொக்கை போட்டார் கவின்.

உரையாடல் ஆண்களின் பக்கம் நகர்ந்ததால் ‘சரி. நீங்களே ஜெயிச்சீங்க –ன்னு வெச்சுப்போம். ஆனா இனிமே கஸ்தூரிதான் சமைப்பாங்க’ என்று மதுமிதா ஒரே போடாகப் போட ‘அய்யோ.. பெண்கள்தான்.. பெண்கள்தான்…” என்று அலறினார்கள் ஆண்கள் டீம். சோறு முக்கியமா.. சங்கம் முக்கியமா.. சோறுதான் முக்கியம். ‘கஸ்தூரி கிச்சன் பக்கமே வர வேண்டாம்’ என்று கவுண்டமணி பாணியில் சாண்டி கெஞ்சியதற்கு கஸ்தூரி உள்ளிட்டு பலரும் சிரித்தனர்.

‘தைரியமாக கருத்துக்களை எடுத்து வைப்பவர்கள் யார்?” என்பது அடுத்த தலைப்பு. ‘தங்களின் அந்தரங்கமான பிரச்சினைகள் என்றால் கூட பொதுவில் விவாதிக்கத் துணிந்தவர்கள் பெண்கள்தான்’ என்று ஆரம்பித்தார் வனிதா. “இந்த ஏரியாவுல கிங்கு எங்க கவின் அண்ணன்தான். நாலு பொண்ணுங்களை ரூட் விடப் போறேன் –னு கெத்தா சொல்லித்தான் கேமை ஆரம்பிச்சாரு” என்று பாராட்டு என்கிற பெயரில் கவினின் இமேஜை டாமெஜ் ஆக்கினார் தர்ஷன்.

“சேரன் வர வர மிக்சர் நிறைய சாப்பிடறாரு’ என்றார் கஸ்தூரி. “வனிதாவிடம் நெருங்கவே அனைவரும் பயந்த போது தர்ஷன்தான் ஹீரோ மாதிரி வந்தான். கவின் பண்ணது தப்புன்னாலும் துணிச்சலா செஞ்சான். சாண்டி ஜெயில்ல உடைச்சதும் துணிவுதான்’ என்று பதிலடி தந்தார் சேரன்.

“வெளியில் சில உறவுகள் இருக்கு’ன்னு தைரியமா சொன்னது பாய்ஸ்தான். இந்த விஷயத்துல பொண்ணுங்க பலவீனமா இருக்காங்க” என்று வனிதா சேம் சைட் கோல் போட்டு ஆட்டத்தை முடித்தார். இந்தச் சமயத்தில் வனிதாவிற்கும் கஸ்தூரிக்கும் உரசல் ஏற்பட்டது.

‘நட்பு பாராட்டுவதில் சிறந்தவர்கள் ஆண்களா. பெண்களா’ என்பது அடுத்த தலைப்பு.

பிக்பாஸ் வீட்டை விட்டு விடுவோம். இதில் ஆண்கள்தான் சிறந்தவர்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. பெரிய மோதல் ஏற்பட்டால் கூட ‘சரி மச்சான்.. விடு.. வா சரக்கடிப்போம்’ என்று ஒரே கணத்தில் அத்தனையையும் மறந்து விட்டு ஒன்றாகி விடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படியே இழைந்து இழைந்து பழகுவது போலத்தான் வெளியில் தெரியும். ஆனால் அவர்களுக்கு இடையில் ஒரு மெல்லிய இடைவெளியும் விரோதமும் புகைந்து கொண்டேதான் இருக்கும்.

பிக்பாஸ் வீட்டிலும் இதைப் பார்க்கலாம். சாக்ஷி, ஷெரீன், அபிராமி என்கிற மூவர் இணைபிரியாத தோழிகளாக அறியப்பட்டாலும் அவர்களுக்கு இடையில் உரசலும் புகைச்சலும் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டேயிருந்தது. ஆனால் கவின்-சாண்டி-தர்ஷன்-முகின் –ஆகியோர்களுக்கு இடையில் ஒருமுறை கூட முணுமுணுப்பு வந்ததில்லை.

இதே பாணியில் சேரன் பேச.. “ஆமாம். செய்யற கேடித்தனத்தையெல்லாம் கூடி கூடி ‘நட்பா’ செய்வாங்க’ என்று சர்காஸ்டிக்காக குத்தினார் மதுமிதா.

‘முகினின் முன்னேற்றத்திற்கு இனிமே நான் தடையாக இருக்க மாட்டேன்’ ன்னு கமல் சார் முன்னாடி நான் சொல்லும் போது முகினும் ஒரு பாயிண்ட் அங்கு பேசியிருக்கலாம்’ என்பது அபிராமியின் ஆதங்கம். இந்த விஷயம் அவரை நிறைய பாதித்திருக்கிறது. தானாகப் போய் முகினின் மீது விழுந்தோம் என்கிற மாதிரி தன் இமேஜ் வெளியில் பரவியிருக்குமோ என்று அஞ்சுகிறார். வனிதாவின் தூபங்களும் இதில் இணைந்திருக்கின்றன.

“அந்தச் சமயத்தில் எனக்குத் தோணலை’ என்று முகின் சொன்னதை அபிராமி ஏற்றுக்கொள்ளவில்லை.

“இனிமே நடந்துப்பேன் –ன்னு சொன்னே. அப்ப இதுவரை நடந்திருக்கேன்-னு நீயா ஒப்புத்துக்கிட்ட மாதிரிதானே ஆச்சு. நீ ஏன் அதை மறுக்கலே,?” என்று மதுமிதா முன்னர் கேட்ட போது “எனக்கு அப்ப தோணலை” என்றார் அபிராமி. அதே சந்தேகத்தின் பலனை இப்போது முகினுக்குத் தர அவர் தயாராக இல்லை.

முகினுக்குச் சார்பாக தர்ஷன் ஆவேசமாக பேச இது வனிதாவை எரிச்சலூட்டியது. ஏற்கெனவே தர்ஷனை டார்க்கெட் லிஸ்டில் முதலாவதாக வைத்திருக்கும் அவர் இநதச் சந்தர்ப்பத்தை வீணாக்க தயாராக இல்லை. ‘உனக்கு ஏன் கோபம் வருது.. இல்லைன்னு மட்டும் சொல்லாத. குறும்படம் போடுவேன்’ என்று மிரட்டினார்.

IMAGE_ALT

ஜெயிலைத் திறப்பதாகட்டும், குறும்படம் போடுவதாக சொல்வதாகட்டும்.. வனிதா கெத்தாக அனைத்தையும் தானே சொல்லும் போது உள்ளே பிக்பாஸிற்கே ஒரு சந்தேகம் வந்திருக்கும். தான்தான் பிக்பாஸா.. அல்லது வனிதாவா என்று. அந்த அளவிற்கு வனிதாவின் ராவடிகள் இருக்கின்றன.

பிறகு அபிராமியை தனியாகச் சந்தித்து ‘உன்னை பிரெண்டாத்தான் நெனச்சேன்” என்று வானத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தார் முகின். அபிராமி அழாமல் இன்னொருவர் அழும் காட்சி என்பது மிக அபூர்வமானது. “உனக்கு நல்லதுதான் நெனப்பேன் முகின்” என்று தனிமையில் முகினுக்கு ஆதரவாகப் பேசும் அபிராமி, பொதுச்சபைகளில் அவரைச் சரியாக மாட்டி விட்டு விடுகிறார்.

“ஏன் பிக்பாஸூக்கு வந்தே?”-ன்னு ஏன் என்னைப் பார்த்து அடிக்கடி கேட்கறீங்க?” என்று வனிதாவிடம் விசாரித்தார் கஸ்தூரி. ‘அது ஏண்டா.. என்னைப் பார்த்து அவன் அப்படியொரு கேள்வியைக் கேட்டான்” என்கிற கவுண்டமணியின் காமெடி மாதிரியே இருந்தது. “ஆமாம்.. நீயேதான் சொல்லேன். வந்து என்னதான் பண்ணே.. முகினையும் அபிராமியையும் வெச்சு ரெண்டு மூணு லவ் டயலாக் பேசினே.. அப்புறம்?” என்றார் வனிதா.

இதை அப்படியே போய் பாய்ஸ் டீமிடம் சொல்லி கஸ்தூரியை கிண்டலடித்துக் கொண்டிருந்தார் வனிதா. அவர்களும் வெட்கமே இல்லாமல் வனிதாவுடன் இணைந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். கஸ்தூரியின் மீது இருக்கும் காண்டை தீர்த்துக் கொண்டார்கள்.

நன்றாக பற்ற வைப்பதால் ‘வத்திக்குச்சி வனிதா’ என்று பட்டப் பெயர் வைத்திருக்கிறோம் என்று முகின் சொன்ன தரமான தகவலோடு இன்றைய நாள் நிறைவுற்றது.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE