Friday 19th of April 2024 06:06:06 PM GMT

LANGUAGE - TAMIL
“மது – நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தரும்”  - சுரேஷ் கண்ணன்

“மது – நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தரும்” - சுரேஷ் கண்ணன்


சமூகத்தில் வம்பு பேசுபவர்களைப் பற்றி ‘நாலு பேரு நாலு விதமாத்தான் பேசுவாங்க’ என்று சொல்வது வழக்கம். இந்த நான்கு என்கிற எண் கவினின் வாழ்க்கையில் நிறைய விளையாடிக் கொண்டிருக்கிறது. ‘நான்கு பெண்களுடன் அவர் பழகியதைப் பற்றி நான்கு பேருக்கும் மேல் நானூறு முறைக்கும் மேலாக குத்திக் காட்டி விட்டார்கள். அவர் பற்ற வைத்த வினையை இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த விஷயத்திற்காக அவர் பல முறை எச்சரிக்கப்பட்டு, சர்ச்சைகள், ஒப்பாரிகளைத் தாண்டி வந்து இப்போது மனம் திருந்தி அல்லது அவ்வாறான பாவனையுடன் அடங்கியிருக்கிறார். இதற்காக பலமுறை மன்னிப்பும் கேட்டு விட்டார். இதை அவர் மறைத்தும் செய்யவில்லை. ‘இதுதான் தனது உத்தி’ என்பதையும் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டார். என்றாலும் இந்தப் பெண்கள் அவரை பின்தொடர்ந்து கொண்டேயிருந்தார்கள்.

எல்லாம் சற்று அடங்கியிருக்கும் போது கவினுக்கு எதிராக இந்த ஆயுதத்தை எடுப்பது கவின் மீது அனுதாபத்தை உருவாக்கி விடும் ஆபத்து இருக்கிறது. மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட பெண்களே இதை பிரச்சினையாக்காமல் சுமூகமாக ஏற்று ஒதுங்கி விட்ட போது அவர்களுக்காக குரல் தரும் பாவனையில் ‘பெண்ணியப் பேராளியான’ மதுமிதா ஆவேசமாக இறங்கியிருப்பது அவருக்கு பின்னடைவையே ஏற்படுத்தும். வனிதாவின் மீள்வருகைக்குப் பின்பே இந்தப் போராட்டத்தை அவர் கையில் எடுத்திருப்பதை உணர முடிகிறது. சுயபுத்தி இல்லாமல் வனிதாவின் துர்ஆலோசனைகளை பின்பற்றி பின்பு வனிதாவினாலேயே கைவிடப்பட்டு பரிதாபமாக மாட்டிக் கொள்கிறார் மது.

IMAGE_ALT

ஓர் அரைமணி நேரத்திற்கு விடாமல் கத்தி விட்டு, பிறகு அதைப் பற்றி ஒரு மணி நேரத்திற்கு மேலாக புலம்பி விட்டு ‘எல்லாம் கடவுள் பார்த்திட்டு இருப்பான் இல்ல சார்” என்று சேரனிடம் ஆதங்கப்படுகிறார். பிக்பாஸை நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை என்னும் போது கடவுளுக்கு என்ன வேறு வேலையா இல்லை?

54-ம் நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

நாலைந்து நாட்களாக சந்தைக்கடை போன்ற சத்தம் ஓவராகி விட்டதால் அதைக் குத்திக் காண்பிக்கவோ, என்னவோ ‘பூ பூக்கும் ஓசை’ பாடலைப் போட்டு விட்டார் பிக்பாஸ். கலந்து குழப்பி ஒலிக்கும் சந்தைக்கடை உரையாடலை தனித்தனி லேயராக பிரித்து புரிந்து கொள்ள முயற்சிப்பதற்குள் மண்டை காய்ந்து விடுகிறது.

தன்னிடம் பேசாமலிருக்கும் சேரப்பாவிடம் ‘நைட்டு என் கிட்ட சொல்லாம போய்ப் படுத்திட்டீங்களா?” என்று சமாதானப் புறாவை பறக்க விட்டார் லியா. சேரனுக்கும் இது புரிந்திருக்க வேண்டும். எனவே மற்றவர்களுடன் இணக்கமான அணுகுமுறையைப் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கினார். “பேசுவோம்.. நிதானமா பேசுவோம்” என்றார்.

பிக்பாஸ் வீட்டின் தேசிய கீதத்தை உருவாக்குவதில் ஆண்கள் டீம் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. ‘நாங்க நாலு பேர்.. எங்களுக்கு பயம்-னா என்னன்னு தெரியாது” என்கிற ‘காக்க காக்க’ வசனம் மாதிரி சாண்டி டீம் சுற்றிக் கொண்டிருக்கிறது. (கூடவே ஒப்புக்குச் சப்பாணியா.. லியா).

“ஆண்.. என்னங்க.. பெண் என்னங்க.. எல்லோரும் ஓர் இனங்க’ என்கிற பாடலைக் கேட்ட அபிராமி ‘பழைய குப்பைங்களை கிளறாதீங்க’ –ன்னு பாடறாங்க’ என்று வனிதாவிடம் சொன்னார். ‘லேடன்.. தெரியுமா.. பின்லேடன்.. என்னா லுக்கு?... ஹெ…’ என்கிற வடிவேலுவின் மாடுலேஷனில் அவ்வப்போது பேசும் வனிதா ‘பழசுன்னா இந்த சீஸனை தூக்கிப் போட்டுட்டு சீஸன் 4-தான் ஆரம்பிக்கணும்” என்று சொல்லி விட்டு தானே சிரித்துக் கொண்டார். (அடிப்பாதகத்தி.. இதுக்கா உன்னை உள்ளே அனுப்பிச்சோம்?! என்று பிக்பாஸ் காண்டாகியிருப்பார்).

காஃபி கொண்டு வந்த தர்ஷனிடம் ‘உன் கிட்ட அப்புறம் பேசுணும்” என்று ஆரம்பித்தார் சேரன். அந்த உரையாடல் பிறகு பெரும் பூகம்பத்தில் கொண்டு செல்லும் என்பதை அவர் அப்போது அறிந்திருக்க மாட்டார்.

தர்ஷனுடன் இவர் பேசிக் கொண்டிருக்கும் போது மதுமிதா அந்தப் பக்கம் வர, ‘நீயும் வா.. உக்காரு.. பஞ்சாயத்தைப் பேசி முடிப்போம்’ என்று சேரன் ஆரம்பிக்க அந்த விவாதம் நெருப்பு போல பற்றி சந்தைக்கடையாக மாறியது. ‘நான் பாட்டுக்கு செவனேன்னுதானே இருந்தேன்? கெளரவம்.. கெளரவம்..’ன்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்திட்டீங்களே?’ என்பது மதுமிதாவின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கக்கூடும்.

சிறைக்குப் போக வேண்டிய நபர்களைத் தேர்ந்தெடுத்தது தொடர்பாக தர்ஷனும் சேரனும் பேசிக் கொண்டிருக்கும் போது மதுமிதா வந்தார். ஏழரை அவருக்கு அப்போது உச்சத்தில் இருந்திருக்க வேண்டும். “இத்தனை நாளா அபிராமியை பல விஷயங்களில் டார்க்கெட் செய்த மதுமிதாவிற்கு, திடீரென அபிராமி மீது இப்போது மட்டும் என்ன அக்கறை? மட்டுமல்லாமல் எல்லா ஆண்களையும் ஏன் பொதுமைப்படுத்தி குற்றம் சாட்ட வேண்டும்?” என்பது தர்ஷனின் கேள்வி.

“அப்ப கவின் நாலு பொண்ணுங்களை யூஸ் பண்ணதுக்கு என்னதான் அர்த்தம்?” என்று அதே பல்லவியை எடுத்தார் மதுமிதா. இதை தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த லியா, தன் பெயர் அடிபட்டதால் ‘யாரு பாதிக்கப்பட்டது?’ என்று மதுமிதாவிடம் கேட்க ‘மூணு பொண்ணுங்க பாதிக்கப்பட்டதை நாங்க பார்த்துட்டுதான் இருந்தோம்’ என்று சட்டென்று எண்ணிக்கையை குறைத்துக் கொண்டார் மதுமிதா. இப்படியே ஒவ்வொருவராக வந்து கேட்டால் ஜீரோவில் வந்து நிற்பார் போலிருக்கிறது. எனில் அவர் வைக்கும் இந்தச் குற்றச்சாட்டு வீண் வம்பு என்பது அவருக்கே புரிந்து விடும்.

லியா உள்ளே வந்ததும் சண்டையின் சூடு அதிகரிக்கத் துவங்கியது. “சம்பந்தப்பட்டவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. நீயேன் சும்மா குதிக்கற” என்றபடி ஷெரீனும் வந்து சேர்ந்தார். பிறகு கவினும் வந்து சேர்ந்தார். “இங்க பாருங்க.. மது. யாரும் என்னை கண்டுபிடிச்சு அரஸ்ட் பண்ணலை. நானே ஒத்துக்கிட்டேன். மன்னிப்பும் கேட்டுட்டேன். நீங்க மறுபடி மறுபடி இதைக் கிளர்றது நல்லாயில்லை’ என்றார் சமாதானக் குரலில்.

‘ஒரே சைட்ல நின்னு பேசாதே மது.” என்று சாண்டியும் வந்து இணைந்தார். ‘அபி மேலயும் நிறைய தப்பு இருக்கு. இல்லைன்னு சொல்லல’ என்ற மதுமிதா “ஊசி இடம் கொடுத்தாதான் நூல் நுழையும்’ என்கிற ஆதிகாலத்து பழமொழியைச் சொன்னார். இதிலிருந்தே மதுமிதாவின் பழமைவாதத்தை அறிந்து கொள்ள முடியும்.

“வனிதாக்கா வர்ற வரைக்கும் எல்லாம் கம்முனுதான் இருந்தீங்க.. இப்ப திடீர்னு குதிக்கறீங்க?” என்று கவின் சுட்டிக் காட்டியது சரி. மதுமிதாவிற்கும் லியாவிற்கும் நடந்த உரசலில் “மூடிட்டு பே’ என்கிற மாதிரியான சைகையைக் காட்டினார் லியா. (இந்தப் பொண்ணுக்குள்ளயும் ஒரு வனிதா இருந்திருக்கு பாரேன்!).

IMAGE_ALT

“அதான் காலர் ஒருத்தர் போன் பண்ணி கேட்டாங்களே.. காமிரா முன்னாடி நடிக்கறீங்கன்னு.. அதுலயே உங்க லட்சணம் தெரியுது” என்பது போல் கவின் ஒரு புதிய ஆயுதத்தை எடுக்க இன்னமும் உக்கிரமானார் மதுமிதா. சந்தைக்கடை மாதிரியான சத்தம். “முதல்ல இந்தப் பிரச்சினையை யாரும் பேசலை. திடீர்னு என்ன அக்கறை?” என்று லியா, மதுமிதாவை வம்படியாக இழுத்து கேட்க.. ‘நாம இதை பேசலையா.. நாம பேசலையா..’ என்று அபிராமியைப் போல் லியாவிடம் ஹைபர் ஆனார் சேரன்.

‘நீங்க தொட்டா நான் அவுட்டு” என்கிற விளையாட்டு போல ‘பேசலை.. பேசலை..’ என்று சொல்லி விட்டு ஆண்களின் பின்னால் மறைந்து சென்றார் லியா. பாசமலர்களில் ஓரிரு இழைகள் உதிர்ந்த தருணம்.

“நீங்க உங்க மைலேஜூக்காகத்தான் திடீர்னு இந்தப் பிரச்சினையை தொடர்ந்து சொல்றீங்க” என்று மதுமிதாவிடம், கவின் சொன்னது உண்மையாக இருக்கலாம். ‘நான் இல்லாம பஞ்சாயத்தா’ என்று அங்கு வந்த வனிதா, ‘என்னாச்சு?” மதுமிதாவிடம் இதைப் பற்றிக் கேட்க அப்போது மதுமிதா சொன்ன தகவல் தூக்கி வாரிப் போட வைத்தது. அவர் மெளன விரதத்தில் இருந்து கொண்டிருந்தாராம். சேரன்தான் வம்படியாகப் பேச வைத்தாராம். மெளன விரதத்தில் இருக்கும் போதே மதுமிதா இவ்வளவு பேசுவார் என்றால் அவர் தொடர்ந்து மெளன விரதத்தில் இருப்பதே நல்லது.

இந்தச் சண்டையை நெடுநேரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கஸ்தூரி.. ‘என்ன எழவுடா.. இது. இப்படியொரு உக்கிரமான சமூகப் பிரச்சினையை தன்னைப் போன்றதொரு போராளி வேடிக்கை மட்டும் பார்ப்பதா.. ஆனா எங்க நுழையறதுன்னே தெரியல்லையே.. கேப்பே குடுக்காம அடிச்சுக்கறாங்களே’ என்று நொந்து போய் ஒரு கணத்தில் துணிச்சலாக நுழைந்தார்.

‘என்ன இங்க சண்டை’ என்ன இங்க சண்டை’ என்று கோவை சரளா மாடுலேஷனில் அவர் நுழைந்தது கவினை நிச்சயம் காண்டாகியிருக்க வேண்டும். ‘மைக்கை அவர் கிட்ட கொடுங்க.. என்ன பிரச்சினை இங்க?” என்று நாட்டாமை போல் நுழைந்த கஸ்தூரி, கவினை மட்டும் தனியாக குற்றஞ்சாட்ட முயல, “அட லூஷே.. ‘பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்’ –ன்னு எல்லா ஆம்பளைகளையும் சேர்த்து பொத்தாம் பொதுவா குற்றம்சாட்றாங்க. உனக்குப் புரியதா.. இல்லையா?’ என்று கஸ்தூரிக்கு விளக்கம் தந்தார் ஷெரீன்.

“இந்த ரத்தபூமில ஐம்பது நாளைக்கு மேல நாங்க போராடிட்டு இருக்கோம். புதுசா வந்துட்டு என்ன பேச்சு?” என்று தர்ஷன் சொன்னது கஸ்தூரியை நேரடியாகத் தாக்கியது. ‘நான் இங்க நியூ அட்மிஷனா இருக்கலாம். ஆனால் சமூகத்தில் இது போல் எத்தனை பிரச்சினைகளைப் பேசி தீர்த்திருக்கேன் தெரியுமா? டிவிட்டர்ல வந்து பாரு.. இதை விடவும் பெரிய ரத்த பூமி அது” என்று ஆவேசமானார் கஸ்தூரி.

IMAGE_ALT

S

“டேய்.. அது பைத்தியம். எது வேணா பேசும். வாங்கடா நாம போகலாம்’ என்று ஆண்கள் குழு கிளம்பியது. தன் டிவிட்டை தானே ரீடிவிட் செய்வது போல அவர்கள் பின்னாடியே சென்ற கஸ்தூரி வம்பைத் தொடர விரும்புவதாக தெரிவிக்க “சில்லறை இல்ல.. போப்பா” என்பது மாதிரி “உங்க கூட பேச எங்களுக்கு விருப்பமில்லை. போங்க” என்று கவின் கதவைத் சாத்தினார். இதனால் அவமானமடைந்த கஸ்தூரி… ‘அப்ப நீங்க நாலு பொண்ணுங்க கூட பேசியிருக்கக்கூடாது” என்றார். டயர்ட் ஆகி மதுமிதா கீழே வைத்திருந்த ஆயுதத்தை கஸ்தூரி எடுத்த தருணம் அது. .. ‘ஹேய்.. ‘என்று டென்ஷனுடன் காண்டானார் கவின்.

“நான் உன் கிட்ட என்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்..”வாழைப்பழம் வாங்கிட்டு வரச்சொன்னீங்க’ காமெடியின் இறுதியில் ‘அடேய்’.. என்று கவுண்டமணி பொங்குவதைப் போலவே கவினின் ஆவேசம் இருந்தது.

IMAGE_ALT

“உன் கிட்ட ஸ்டார்ட்டிங்லாம் நல்லாயிருக்கு. ஆனா ஃபினிஷிங் சரியில்லம்மா” என்று மதுமிதாவிடம் தன் அதிருப்தியைத் தெரிவித்தார் சேரன். மதுமிதாவின் பிரச்சினையே அதுதான். வண்டியை ஆவேசமாக ஸ்டார்ட் செய்து விட்டு திசை தெரியாமல் குட்டிச் சுவரின் மீது இடித்து குப்புற விழுவார்.

“எத்தனை தடவடா.. இதே பிரச்சினையைப் பேசுவீங்க?” என்று சாண்டி குழு ஆட்சேபித்ததை நாமும் ஆமோதிக்க வேண்டியிருக்கிறது. ஆம். புதிய பிரச்சினைகளை ஆரம்பிக்கலாம். இத்து.. செத்துப் போன இந்தப் பிரச்சினை போரடிக்கிறது. முடியல. “கவின் வெளியே போயிட்டா இந்தப் பிரச்சினை முடிஞ்சுடும்’ என்று புதிய விதையைத் தூவினார் கஸ்தூரி.

“நீ யாருக்காக போராடிக் கொண்டிருக்கிறாயோ. இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் பார்த்தாயா?. அவர்களே ஆண்களின் தரப்பில்தான் நின்று கொண்டிருக்கிறார்கள். எனவே உன் திருவாயை மூடு” என்பது போல் மதுமிதாவிற்கு உபதேசம் செய்தார் கஸ்தூரி. ‘யாருக்காகப் போராடுகிறோமோ.. அவர்களாலேயே வீழ்த்தப்படுவதுதான் தலைவர்களின் வரலாறு” என்கிற மாதிரி விரக்தியான முகபாவத்தைத் தந்தார் மதுமிதா.

‘எந்தே மேரி.. அந்தே மேரி’ என்பதை மாறிப் மாறிப் பாடி தங்களின் காண்டை தீர்த்துக் கொண்டது சாண்டி டீம். ஜாலியான காட்சியது. வனிதா உள்ளிட்டவர்களும் அதை ஜாலியாக வேடிக்கைப் பார்த்தனர். “ஊ.. ஊ..” என்று சாண்டி குழு பாடிக் கொண்டிருந்ததை அடிபட்ட முகபாவத்துடன் தொலைவில் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார் மதுமிதா. (தேவையா இது?!) கஸ்தூரி சொன்னதையே சேரனும் வழிமொழிந்தார். ‘ஒரு போராளியை இப்படி காமெடி பண்றாங்களே’ என்று வேதனைப்பட்டார் மதுமிதா.

“ரொம்ப கருத்துள்ள பாடல் அது. ஆழமான பொருள் கொண்ட வரிகள்” என்று சர்காஸ்டிக்காக கிண்டல் அடித்த கஸ்தூரி அங்கு அமர்ந்திருந்த வனிதா மற்றும் ஷெரீனிடம் இதைப் பற்றி விசாரிக்க “பாட்டு நல்லாயிருந்தது. கேட்டோம். என்ன இப்ப?” என்கிற முகபாவத்தைத் தந்தார் ஷெரீன்.

கஸ்தூரியிடம் தனக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த வனிதா “நீ கூடத்தான் என்னை ராஜமாதா.. சிவகாமி.. சாசனம்.. நாசனும்’ன்னு வில்லுப்பாட்டு பாடினே.. நான் உங்களை இங்க அடிமைப்படுத்தி வெச்சிருக்கேனாம். இந்த அக்காவிற்கு அடிக்கவும் தெரியும் அரவணைக்கவும் தெரியும்” என்று ‘பஞ்ச்’ வசனம் பேச ‘ஆமாம். அக்காவிற்கு பத்த வெக்கவும் தெரியும்” என்று தூரத்தில் கமெண்ட் அடித்தார் தர்ஷன். சாண்டி டீம் குலுங்கிச் சிரித்து வரவேற்றது. பிரச்சினை தங்களிடமிருந்து வேறு திசைக்கு நகர்ந்ததால் அவர்களுக்கு ஒரே குஷி.

“நீ.. மறுபடி மறுபடி எழுப்பும் இந்தப் பிரச்சினை ஒருவகையில் பெண்களையும் பாதிக்கிறது. அதனால்தான் அவர்கள் உன் கூட நிற்கவில்லை. புரியதா.. உனக்கு மரமண்டை” என்று மதுமிதாவிற்கு உபதேசம் செய்தார் சேரன். ‘போராளிங்க வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்’ என்கிற முகபாவத்தை கெத்தாக தந்த மதுமிதா, “ஏரியா பிரிக்க வந்த ரவுடி’ விவேக் போல.. பின்பு தனியாக காமிரா முன்பு சென்று ‘கடவுளே.. உன்னைத்தான் நம்புறேன். என்னை மட்டும் காப்பாத்திடு” என்று கண்கலங்கினார். அந்த நேரம் நல்ல நேரமாக இருக்க வேண்டும். கடவுளின் காதுகளில் அந்தக் குரல் கேட்டது.

பிறகு நடந்த தலைவர் பதவிக்கான போட்டியில் ஷெரீன், தர்ஷன், மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டார்கள். CAPTAIN என்கிற ஆங்கில வார்த்தை மூன்று வண்ணங்களில் இருக்கும். அதைப் பொருத்துவதற்கான போர்டுகளும் இருக்கும். கண்கள் கட்டப்பட்ட நிலையில் மூவரும் தங்களுக்குத் தரப்பட்ட வண்ணங்களை சரியாக தேர்ந்தெடுத்து போர்டில் பொருத்த வேண்டும். யார் முதலில் பொருத்துகிறாரோ.. அவரே தலைவர். தன்னம்பிக்கையான முகபாவத்துடன் இருந்தார் தர்ஷன்.

IMAGE_ALT

ஷெரீன் ஆதரவாளர்களும் தர்ஷன் ஆதரவாளர்களும் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். என்றாலும் மதுமிதாவிற்கு ஆதரவாக குரல் தந்தவர் சேரன். ‘தத்தக்கா.. பித்தக்கா’ என்று ஓடினாலும் எப்படியாவது தலைவராகி சாண்டி டீமின் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்கிற ஆவேசம் மதுமிதாவிடம் இருந்தது. சேரனின் வழிகாட்டுதலின் படி அதைச் செய்து முடித்து வீட்டின் தலைவர் ஆனார். அர்ஜூனன் வைத்த குறி மாதிரி ‘சேரனின் குரல் மட்டுமே காதில் விழுந்தது’ என்றார் மதுமிதா.

IMAGE_ALT

“நீ ஜெயிச்சது நானே ஜெயிச்ச மாதிரி” என்று புளகாங்கிதமடைந்தார் சேரன். லியாவின் இடத்தில் மதுமிதா வந்து அமர்ந்து விடுவார் போல. ‘இந்தப் புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்குமுன்னு யாருக்குத் தெரியும்” என்று அழுது கொண்டே பொறுப்புக்களை மாற்றிக் கொடுத்தார் சாண்டி.

லியாவின் மீது கடுப்பு இருந்தாலும் அவர் விலகியிருப்பது மனவலியை ஏற்படுத்துகிறது என்று பிறகு ஷெரீனிடம் புலம்பிக் கொண்டிருந்தார் சேரன். (ஒரு தகப்பனின் மனசு..).

ஒரு நண்பரைப் பரிந்துரைத்து அவர் ஏதாவதொரு செய்தியைப் பதிவு செய்யலாம் என்கிற விளையாட்டு. ஒரு மென்பொருளுக்கான விளம்பரம்.

“மேயற மாட்டை நக்குற மாடு கெடுத்த கதையா.. குருநாதா” என்றார் சாண்டி. ‘ஒருத்தர் கிட்ட விஸ்வாசத்தை காட்டறதுக்காக.. எதுக்காக இன்னொருத்தரை அசிங்கப்படுத்தறீங்க?” என்று டைமிங்காக சொன்னார் கவின். இது மதுமிதாவிற்கு என்பது வெளிப்படை. ‘இது சும்மா டிரைய்லர்தாம்மா.. மெயின் பிக்சர் இனிமேத்தான் இருக்கு” என்பது கஸ்தூரிக்கு போல.

‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..” என்று வனிதா பஞ்ச் டயலாக் பேசிய போது ‘கபாலி’ திரைப்படத்தின் மீது முதன்முறையாக வெறுப்பு வந்தது. முகினுடன் அதிகம் பழகியதாலோ என்னமோ.. ‘தமிழச்சி.. தூம்.. தூம்..’ போன்ற வார்த்தைகளைத் தூவி ராப் பாடல் மாதிரி ஒன்றை கர்நாடக இசையுடன் கலந்தடித்து பாடினார் அபிராமி. இதை சிறந்த பாடலாக தேர்ந்தெடுத்தார் சேரன். (இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!).

ரேடியோ விளம்பரம் போல் ஏதோவொன்றை சொல்லி விட்டுச் சென்றார் ஷெரீன். ‘கடுப்பேத்தறவன் கிட்ட கம்முன்னு..’ என்கிற விஜய் டயலாக்கைச் சொன்ன லியா, பின்குறிப்பாக ‘இந்த வீட்ல அப்படி இருக்க விடமாட்டாங்க’ என்று சொன்னது சிறப்பு. “கருத்துக்கு கஸ்தூரி..’என்று ஆரம்பித்து கமல் மாதிரியே சுயபுராண வசனக்கவிதையை பாடினார் கஸ்தூரி. “மூத்திரச்சந்தில் இருக்கும் கோடிக்கணக்கான ஆர்மி நண்பர்களே” என்று அவர் சொன்னது நல்ல காமெடி.

“ஆண் என்னங்க. பெண் என்னங்க..’ என்கிற பிக்பாஸ் வீட்டின் தேசிய கீதத்தை சாண்டி டீம் பாடியதோடு இன்றைய நாள் முடிவுக்கு வந்தது.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE