நியூசிலாந்து அணியை 6 விக்கெட்களால் வெற்றி கொண்டுள்ளது இலங்கை அணி.
இலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணி ஐ.சி.சி. உலக சம்பியன்ஷிப் டெஸ்ட் 2 போட்டிகள், 3 ருவென்ரி- 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14 ஆம் திகதி காலியில் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி நியூசிலாந்து அணி முதல் இனிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றது. இதில், ரெய்லர் 86 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பதிலுக்கு முதல் இனிங்ஸில் ஆடிய இலங்கை மெண்டிஸ், மத்தியூஸ், டிக்வெல்ல ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 267ஓட்டங்களைப் பெற்றது.
தனது இரண்டவாது இனிங்ஸில் வட்லிங் 77 ஓட்டங்களையும் மற்ற வீரர்கள் ஓரளவு ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, 285 ஓட்டங்களைப் பெற்றது நியூசிலாந்து.
இரண்டாவது இனிங்ஸை தொடங்கிய இலங்கைக்கு பலமான ஆரம்பத்தை அணித்தலைவர் கருணாரட்ண, திரிமன்னே வழங்கினர். திரிமன்னே 64 ஓட்டங்களையும், கருணாரட்ண 122 ஓட்டங்களையும் பெற்றனர். 4 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 268 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது இலங்கை அணி.
இலங்கையின் பந்துவீச்சில் லக்மால் 4, தனஞ்செய 6, எம்புல்தெனிய 4 விக்கெட்களையும் இரு இனிங்ஸ்களிலுமாகக் கைப்பற்றினர்.
நியூசிலாந்தின் பந்துவீச்சில் பட்டேல் 6 விக்கெட்களை இரு இனிங்ஸ்களிலும் கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக திமுத் கருணாரட்ண தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி.யின் புள்ளிப் பட்டியலில் இலங்கைக்கு 60 புள்ளிகள் கிடைத்துள்ளது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: