Thursday 28th of March 2024 08:08:17 PM GMT

LANGUAGE - TAMIL
“பிறப்பிலிருந்து இறப்புவரை இழையோடும் தமிழர்களின் பாரம்பரிய இசை”
“பிறப்பிலிருந்து இறப்புவரை இழையோடும் தமிழர்களின் பாரம்பரிய இசை” - நா.யோகேந்திரநாதன்

“பிறப்பிலிருந்து இறப்புவரை இழையோடும் தமிழர்களின் பாரம்பரிய இசை” - நா.யோகேந்திரநாதன்


தமிழிசையென்றால் அது கர்நாடக இசையென்றே பல தரப்பினராலும் கருதப்பட்டு வருகின்றது. இன்று இசை நிகழ்ச்சிகளிலும் மெல்லிசைப் பாடல்களிலும் சினிமா பாடல்களிலும் கர்நாடக இசை ஏதோ ஒரு ராகமாகவோ, ராகமாலிகையாகவோ ராசப் பிறழ்ச்சியாகவோ ஊடுருவி இருக்குமளவுக்கு அது தமிழிசையில் மேலாதிக்கம் வகித்து வருகிறது.

தமிழ் மக்களுக்கென ஒரு பாரம்பரிய இசை உண்டு. இவை நாட்டார் பாடல்கள் எனவும் கிராமியப் பாடல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை பிறப்பிலிருந்து இறப்பு வரை தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தன. பிறந்த குழந்தையைத் தூங்க வைக்கத் தாலாட்டு. விவசாயப் பிரதேசங்களில் தெம்மாங்கு, சிந்து என்பன, கடற்றொழிலில் அம்பா, கடற்பாட்டு போன்றவை, பக்தியை வெளிப்படுத்தும் பண்ணிசை, காவடிச் சிந்து என்பன இறப்புச் சடங்குகளின்போது ஒப்பாரி என்பன உட்பட பாரம்பரிய தமிழிசை அணி செய்யப்பட்டுள்ளது.

தாலாட்டு

குழந்தைகளை தூங்க வைப்பதற்கு “ஏணையில்” போட்டு ஆட்டும்போது பெரும்பாலும் தாலாட்டு தாயாரால் இசைக்கப்படும். இந்த இசையிலேயே குழந்தைகள் தூங்கி விடுமளவுக்கு பாடப்படும். வார்த்தைகள் மென்மையானவையாகவும் இசை இனிமையானதாகவும் அமைந்திருக்கும்.

“ஆராரோ! நீயாரோ? ஆரடிச்சு அழுதாரோ? மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூ சென்டாலே! மாமி அடிச்சாளோ மையெழுதும் கையாலே!”

இப்படியான தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் நீலாம்பரி ராகத்திலேயே அமைந்திருக்கும் என்பார்கள். ஆனால் இவற்றை உருவாக்கியவர்களுக்கோ, பாடுபவர்களுக்கோ நீலாம்பரியை கற்றறிந்திருக்கவோ, தெரிந்திருக்கவோ நியாயமில்லை. அவர்களின் உணர்வுகளும் அனுபவங்களுமே தாலாட்டுப் பாடல்களில் ராகத்துக்கு அடிப்படையாக அமைந்திருக்கும். அதைப் பாடுபவர்களுமம் தங்கள் பாணியில் பாடுவார்கள். இந்த அன்னையர் இசை வல்லுநர்களாக இல்லாதபோதும் அவர்கள் பாடும்போது இதயத்தை ஊடுருவி கேட்பவர்களை மயக்கிவிடும்.

தொழிற் பாடல்கள்

தமிழர்களின் பாரம்பரிய இசையில் தொழிற்பாடல்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. களைப்பைப் போக்கவும் தொழிலை மகிழ்வாகச் செய்யவும் இப்பாடல்கள் பாடப்பட்டன. ஒவ்வொரு பாட்டுக்குமான இசைகள் அத்தொழிலுக்கு அமைவாக இருப்பது சிறப்பம்சமாகும்.

வயல் உழும்போது,

“பாரக்கலப்பையடா செல்லனுக்குப் பாரம் சுமத்தத் தோணுதடா மூலை வரம்போரம் செல்லா நீ முடுகி நட நல்ல கண்டே” எனப் பாடப்படும் பாடல் மாட்டை உற்சாகமாக வேலை செய்ய வைக்கக்கூடிய தெம்மாங்கு மெட்டுப் பாடலாகும். இவ்வாறே அரிவு வெட்டும்போது,

“ஆத்திலை தண்ணி அசைஞ்சு விழுமாப்போல் காட்டினிலே யானை மதந்து வருமாப் போல் சேத்திலை புள்ளு துரத்த வருமாப் போல் வன்னவரி வேங்கை சினந்து வருமாப் போல் நாட்டிலுள்ள நல்லிளந்தாரிமார் நனுகாமல் நிலையருவி விளையாடினரே”

எனப் பெண்களைப் பாடி இளைஞர்களை உற்சாப்படுத்துவார்கள். அதேபோன்று “புதிர்” எடுத்து முதற் பொங்கல் பொங்கும்போது

“பட்டி பெருக வேணும் தம்பிரானே பால் பொங்கல் பொங்க வேணும் ” என உடுக்கடித்துப் பாடுவார்கள்.

அதேபோன்று வேலைத் தளங்களில் ஒருவரை ஒருவர் கேலி செய்து பாடும் பாடல்களும் உண்டு. வழுக்கைத் தலையர்களைக் கேலி செய்யும் முகமாக “வெட்ட வெளிப் பாலையிலே நட்ட மரம் நாலுபத்தாம் எட்டு நான் போக பட்ட மரமும் பறக்குமாம்” எனப் பாடுவார்கள்.

அதேவேளையில், இளம் ஆண்களும் பெண்களும் வேலைத்தளங்களில் தங்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில் பாடல்களை இசைப்பதுண்டு.

“மஞ்சள் முகத்தழகி, மல்லிகைப் பூப் பல்லழகி, கொஞ்சும் சிரிப்பழகி குளக்கரைக்கு வாராயோ...?” என ஆண் பாட, பெண் “குளக்கரைக்கு வருவதெண்டால் கொடி, கம்பு, தூண்டில் கொண்டு குஞ்சு மீன் பிடிச்சிடலாம்” எனப் பெண் பாடுவாள்.

பின்பு ஆண் அதற்குப் பதிலாக, “குஞ்சுமீன் கூழ்காய்ச்சிக் குந்திக் குடிச்சிடுவோம் அஞ்சுகமே உன் அருகே ஆலோலம் பாடிடுவோமே”, என ஆண் பாடுவான்.

பாடுவதும் அதற்கு எதிர்ப்பாட்டுப் பாடுவதும் விவசாய நிலங்களில் இயல்பான விடயமாகும். ஆனால் இவர்கள் கவிஞர்களோ இசை ஞானம் உள்ளவர்களோ அல்ல. சாதாரண மக்கள்தான்.

விவசாயப் பாடல்கள் போன்றே கடற் பாடல்களும் மிகவும் பிரசித்தமானவை அம்பாப் பாடல்கள் உற்சாகம் தருபவையாகவும் இனிமையானவையாகவும் இருப்பதைக் காணலாம்.

“மின்னி மின்னி ரோஜா! தூண்டிலடி ரோஜா! மீன் முழுங்க ரோஜா! மனம் நிறையும் ரோஜா! ராஜாவே ரோஜா! ராசியுள்ள ரோஜா! கரையோரம் ரோஜா! கண்ணிறைஞ்ச ரோஜா! காத்திருக்கும் ரோஜா! கலியாணம் ரோஜா! இது கடலில் மீன் பிடிக்கப் போகும்போது பாடும் பாடலாகும். “தூரக் கடல் தேடிப் போவோமே வலை விரிப்போமே! ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா”

போன்றவை கடற்பாட்டு வகையைச் சார்ந்தவையாகும். இது ஆழ்கடல் மீன்பிடியுடன் சம்பந்தப்பட்ட பாடலாகும். கரைவலைப் பாடல்கள் இவற்றை விட சற்று வித்தியாசமானவை. இவற்றின் வரிகளும், மெட்டும் முழுப்பலத்தையும் பிரயோகித்து கரைவலையிழுக்கும் வகையிலேயே அமைந்திருக்கும்.

“முடிச்சைப் பிடி யோசேப்பு, முக்கியிழு அந்தோனி, சுண்டியிழு சோசப்பு சுறுக்கியிழு முத்தையா! மடி திரளுது சீமாரே! மடக்கியிழு மரியானே!” இவ்வரிகளின் நடுவே கூட்டாக எல்லோரும் “ஏலேலோ” என்று பாடலில் பாவிக்கப்பட்டதை அவதானிக்க முடியும்.

பக்திப் பாடல்கள்

வாழ்வியல், தொழில்கள் என்பவற்றில் ஆதிக்கம் வகிக்கும் தமிழிசை பக்தி, வழிபாடு என்பனவற்றிலும்கூட தனித்துவமான இடத்தை வகிக்கிறது. காவடிகள் தூக்குக் காவடி, துலாக்காவடி, செடில் காவடி, ஆட்டக்காவடி எனப் பல வகைப்பட்ட போதிலும் அவற்றுக்கென்று தனித்துவமான பாடல்கள் உண்டு. ஆட்டக் காவடி, செடில் காவடி என்பவற்றுக்கு காவடிச் சிந்து மெட்டிலான பாடல்கள் இசைக்கப்படும். இதன் பாடல்கள் முருக வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டவையாகவும் சுழன்றாடும் வகையில் வேகமான மெட்டு நடையைக் கொண்டவையாகவும் அமைந்திருக்கும். கரகாட்டப் பாடல்களும் இதே வகையில் அமைந்திருப்பதைக் காணலாம்.

தமிழர்களின் பாரம்பரிய இசையில் கும்மிப் பாடல்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஆனந்தக் கும்மி என்ற மெட்டு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

கோலாட்ட மெட்டும் கும்மிப் பாடல் மெட்டுக்களுடன் நெருக்கமானவையாகவே தென்படுகின்றன. வசந்தன் கூத்து என்ற கூத்து வடிவம் இந்தக் கோலாட்ட மெட்டுக்களை அடிப்படையாகக் கொண்ட பாடல் மெட்டுக்களைக் கொண்டது எனக் கூறப்படுகின்றது. நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் “ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே” என்ற சிறுவர் பாடல் கும்மிப் பாடலின் சிறப்புக்கு ஒரு நல்ல உதாரணம்.

தேவாரப் பாடல்கள், திருவாசகம் போன்றவை கர்நாடக இசைப் பாடல்களை ஒத்தவகையில் அமைந்திருந்த போதிலும் அவை பண்ணிசை என்ற இசை வடிவத்தை அடிப்படையாகக் கொண்டவை.

சங்ககாலத்தில் இவற்றை இசைப்பதற்கென்று பாணர்கள் என்ற ஒரு சமூகத்தினர் இருந்தனர் என வரலாற்று ஆதாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. மாணிக்கவாசகரால் ஆக்கப்பட்ட திருவாசகம் இப்போது மோகனராகத்தில் இசைக்கப்பட்டாலும் இது பண்ணிசையை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாகவே தேவாரங்கள் மனதை உருகவைக்கும் தன்மை கொண்ட இசை வடிவத்தில் அமைக்கப்பட்டவையாகும். இப்போதும் கிராமப்புற கோயில்களில் புராணம் படிப்பது இப்பண்ணிசையிலாகும்.

எமது கூத்து வடிவங்கள் முழுக்க முழுக்க தமிழ் இசை வடிவத்தைக் கொண்டே அமைக்கப்பட்டவையாகும். காத்தவராயன் கூத்தில் வரும் பாடல்கள் சிந்து, தெம்மாங்கு, தாலாட்டு, கும்மி, ஒப்பாரி, அம்பா, கடற்பாட்டு ஆகிய மெட்டுக்களிலேயே அமைந்தவை என்பன குறிப்பிடத்தக்கது.

வடமோடி, தென்மோடி, வடபாங்கு, தென்பாங்கு, கோவலன் கூத்து, முல்லைமோடி, வட்டுக்கோட்டை மோடி போன்ற ஆட்டக் கூத்து வகைகளும் நாட்டார் பாடல் மெட்டுக்களிலேயே அமைந்துள்ளன.

ஒப்பாரிப் பாடல்கள்

மரண வீடுகளில் இசைக்கப்படும் ஒப்பாரி மிக முக்கியமானதாகும். நான்கைந்து பெண்கள் குந்தியிருந்து கட்டிப்பிடித்து அழுது இசைப்பதையே ஒப்பாரி என்பார்கள். அங்கு சோகத்திலும் ஒரு அழகியல் இருப்பதை உணர முடியும். ஒருவரின் இழப்புப் பற்றி ஒப்பாரி வைக்கும்போது,

“முத்தான முத்திழந்தோம் மிகுவைரத் தோளிழந்தோம் சொத்தான சொத்திழந்தோம் சுந்தரப் பொன் முகமிழந்தோம். பத்துப்பனைத் தோப்பிழந்தோம் பட்டி மாடு கண்டிழந்தோம்” எனப் பாடுவார்கள்.

அதேவேளையில் பெண்கள் தங்கள் சொந்தக் கவலையையும் கோபத்தையும் சொல்லி அழுவதுண்டு. இதில் உள்ள சிறப்பம்சம் ஒப்பாரி வைக்கும் அனைத்துப் பெண்களுமே கவிஞர்களாகி விடுவர்.

இன்று கர்நாடக இசை சினிமா மூலம் மென்மைப்படுத்தப்பட்டு மக்கள் மயப்பட்டுள்ளது என்பது உண்மைதான். எனினும் அந்த அலையின் மத்தியில் தமிழிசை நாட்டார் இசை என்ற பெயரில் தனது தனித்துவத்தை இழந்து விடாமல் நிலைத்து நிற்கிறது. எனினும் மக்கள் மத்தியில் எமது பாரம்பரிய இசை பாவனையிழந்து மங்கிப் போய்க் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE