Tuesday 16th of April 2024 05:47:04 PM GMT

LANGUAGE - TAMIL
‘கலாசார ஐ.ஜி. வனிதாவின் அலப்பறைகள்’ - சுரேஷ் கண்ணன்

‘கலாசார ஐ.ஜி. வனிதாவின் அலப்பறைகள்’ - சுரேஷ் கண்ணன்


நடைப்பயிற்சி முடித்து விட்டு அப்படியே வந்து விட்ட பணக்காரர் மாதிரி பளபளப்பான ஸ்போர்ட்ஸ் உடையில் அட்டகாசமாக வந்தார் கமல்.

சந்திராயன் -2 சந்திரனில் தடம் பதிக்க சென்றதில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட பின்னடைவு பற்றி நேர்மறையாகப் பேசினார் கமல். “ஆய்வுகளில் இப்படிப்பட்ட விஷயங்கள் நிகழ்வது இயல்பு. இது வெற்றிப் பாதையின் ஒரு மைல்கல். அதன் விதை’ என்பது போல் அவர் பேசியது சிறப்பு.

IMAGE_ALT

இது போன்ற சமயங்களில்தான் சிலருக்கு அறிவும் சமூக உணர்வும் அபாரமாக விழித்துக் கொள்ளும். ‘இத்தனை கோடி செலவு செய்து இது போன்ற திட்டங்களை செய்யத்தான் வேண்டுமா..நாட்டில் இத்தனை கோடி ஏழைகள் இருக்கிறார்கள்.. ஏன்.. மலக்குழிகளில் இன்னமும் மனிதன்தான் இறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்றெல்லாம் அநாவசியமாக உணர்ச்சிவசப்படத் துவங்கி விடுவார்கள்.

இது போன்ற சமயங்களில்தான் மலத்தைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களைப் பற்றிய கருணையும் அவர்களின் மீது கவலையும் வந்து அவர்களுக்கு ஆவேசமாக வந்து விடும். இதர சமயங்களில் மூக்கைப் பொத்திக் கொண்டு, முகத்தைச் சுருக்கிக் கொண்டு செல்பவர்கள்தான் அதிகம்.

வறுமையையும் சமூக அவலங்களையும் ஒழிப்பது மிக அவசியமானது. மறுப்பேயில்லை. அதே சமயத்தில் விஞ்ஞானம் சார்ந்த வளர்ச்சிகளும் முக்கியம். விஞ்ஞானத்தின் மூலம் சமூகத்திற்கு கிடைத்த பல வசதிகளை அனுபவித்துக் கொண்டே அதை மலினப்படுத்துவதும் நிராகரிப்பதும் முறையானதல்ல. இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்.

**

“சரி. பூமிக்கு வருவோம். “விளையாடப் பிடிக்கலை. சலிப்பா இருக்கு –ன்னு சொல்லிட்டு இருந்தவங்கள்லாம் இப்போ சிறப்பா விளையாட ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா அதுக்காக என்ன வேணா செய்யலாம் –னு அர்த்தமில்ல. அது ஆரோக்கியமான வழியில் கிடைத்த வெற்றியாக இருக்கணும்” என்ற கமல், தலைவி என்கிற அதிகாரத் திமிரில் அட்டகாசம் செய்யும் வனிதாவையும் பயங்கரமாக கிண்டலடித்தார். (இதை அவங்களுக்கு முன்னாடி செஞ்சிருந்தா சிறப்பாக இருந்திருக்கும்!)

கமலின் நகைச்சுவைக்கு இன்று வனிதா நல்ல ஊறுகாயாக இருந்தார். கிடைக்கும் இடங்களில் எல்லாம் வனிதாவை நுட்பமாக போட்டு சாத்திக் கொண்டேயிருந்தார் கமல். பல அட்டகாச தருணங்கள். ஆனால் வனிதாவால் இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாதது, எதிர்பார்த்ததே. முந்திரிக்கொட்டைத்தனமும் முட்டாள்தனமும் இணைந்த ஒரு மாணவன் மாதிரி கேள்விகளாக தொடர்ந்து கேட்டு தன் அறியாமையை தானே அம்பலப்படுத்திக் கொண்டார் வனிதா. தனிநபர் சுதந்திரம் பற்றி கமலின் விளக்கங்கள் அவரின் மண்டையில் துளி கூட ஏறியது போல் தெரியவில்லை.

குறிப்பாக ‘ஒருத்தர் ரூமுக்குள்ள மூக்கை நுழைச்சு எட்டிப் பார்க்காதீங்க. அவங்க கதவை டமார்னு சாத்தினாங்கன்னா.. உங்க மூக்கு டாமேஜ் ஆயிடும்’ என்று கமல் சொன்னதிற்குப் பின்னரும் வனிதாவிற்கு அது புரியவில்லை. இதுக்கு மேலும் வனிதாவிற்குப் புரிவது போல் சொல்ல வேண்டுமென்றால் வனிதாவின் அளவிற்கு கமல் இறங்கினால்தான் அது சாத்தியம். கமல் அப்படிச் செய்ய மாட்டார். மேலும் புரியாத மாதிரியே நடிப்பவர்களுடன் விவாதிப்பது நேர விரயம்.

IMAGE_ALT

வனிதாவின் பழமைவாத மனோபாவமும் கலாசாரக் காவல் அராஜகமும்தான் இதில் வெளிப்படுகிறது. ஆனால் கலி முத்திடுச்சு’ என்று அனத்த, வனிதா ஒன்றும் கிராமத்துக் கிழவி அல்ல. நகரத்தின் உயர்வர்க்கப் பின்னணியில் ‘பார்ட்டி’ கல்ச்சரில் வளர்ந்தவர். அவருமே தன் வாழ்க்கையில் பல துணைகளைத் தாண்டி வந்தவர். எனில் இங்கு ‘பத்தாம்பசலித்தனமான’ வேடத்தை அணிவது.. தன் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக மட்டுமே. தன் நட்புகள் இதனால் காயப்படுமே என்று கூட அவர் யோசிப்பதில்லை.

ஒரு நண்பர் நெகிழ்வான உணர்ச்சியில் அந்தரங்கமாக பகிர்ந்து கொண்ட விவரங்களையெல்லாம் பகைமையின் சூட்டில் பொதுவில் போட்டு உடைப்பதைப் போன்ற துரோகம் இருக்கவே முடியாது. ஷெரீன் அப்படி கதறியும் திரும்பத் திரும்ப வனிதா அதை பேசிக் கொண்டேயிருப்பது முறையானதல்ல. ‘சம்பந்தப்பட்ட இருவருக்குமே’ அதில் பிரச்சினையில்லை என்னும் போது “நீங்கள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்?” என்று கேட்கப்படுவதின் அடிப்படை நியாயம் கூட வனிதாவிற்குப் புரியவில்லை. அல்லது புரியாதது போல் நடிக்கிறார்.

“என்னால் இதையெல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது’ என்பது பொதுவாக கலாசாரக் காவலர்களின் அராஜகமான குரலின் பிரதிபலிப்பாக இருக்கும். இப்படி கலாசாரத்தைப் பற்றி கவலைப்படுபவர்களின் சுயவிவரங்களை சற்று நோண்டிப் பார்த்தாலே அது பல மனவிகாரங்களைக் கொண்டதாக இருக்கும்.

**

வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் காட்டப்பட்டன. ‘ப்ரூட்டி கார்னரில் மீதி திரவத்துடன் ஒரு பாட்டில் கிடந்தது. (“அது ஷெரீன் வெச்சதாதான் இருக்கும்” – வனிதா)

தன் உறவுகளுக்கு செய்தி சொல்லும் வீடியோவை போட்டியாளர்கள் உருவாக்க வேண்டுமாம். “give up பண்ணாதீங்க” என்றார் முகின் “இந்த வீட்டுக்கு உயிர் இருக்கு” என்றார் ஷெரீன்.

முகினைப் போலவே சோபாவைத் தாண்டி கமலின் தானும் பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்தாரோ. என்னமோ, அது போலவே தாண்டி அறிமுகமாகி உரையாடலின் இறுதியில் தாண்டி மறைந்தார் சாண்டி.

ஒரு திரைப்படத்தின் துவக்க காட்சியின் ‘வாய்ஸ் ஓவர்’ போலவே நிதானமான குரலில் எதையோ பேசி கவர முயன்றார் சேரன். ஒன்றும் புரியவில்லை.

‘நிழல் வேறு நிஜம் வேறு’ என்று கண்ணாடியின் முன்பு நின்று பிரிந்திருக்கும் உறவுகளைப் பற்றி நெகிழ்வுடன் பேசினார் வனிதா. அவர் உண்மையாக புன்னகைத்து இப்போதுதான் பார்க்க முடிகிறது. கவின் வழக்கம் போல் ‘நட்பு’ புராணம் பாடினார்.

“மக்களின் ஆதரவுதான் எனக்கு பெரும் ஊக்கமாக இருக்கிறது’ என்று நேர்மையாகப் பேசினார் தர்ஷன். பிக்பாஸ் வீட்டில் தான் செய்து கொண்டிருக்கும் காரியங்கள் பற்றி தன் வீட்டார் என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணம் லியாவிடம் ஓடிக் கொண்டேயிருக்கிறது போல. எனவே அது தொடர்பான சில தகவல்களை சூசகமாக சொன்னார்.

இது முடிந்து அகம் டிவி வழியே உள்ளே வந்த கமல், சிறப்பு விருந்தினர்களை வெளியே வரச் சொன்னார். (‘நீங்க வந்த வேலை முடிஞ்சது. கிளம்புங்க. அப்படியே வனிதாவையும் அழைச்சுட்டுப் போனா புண்ணியமா போகும்). ஒவ்வொருவரையாக கட்டி அணைத்து விட்டு – அதிலும் பெண் போட்டியாளர் என்றால் எக்ஸ்ட்ரா நொடிகள் – மோகன் வைத்யா வெளியே வருவதற்கே அரைமணி நேரம் ஆகும் போலிருந்தது.

IMAGE_ALT

“அவங்க வரட்டும். நாம பேசுவோம்” என்று பஞ்சாயத்தை துவக்கிய கமல் “ஓப்பன் நாமினேஷன்-னு வந்தாலே.. போர்வையை எடுத்து போர்த்திக்கறீங்களே” என்று எகனை மொகனையாக ஆரம்பித்தார். சாண்டி அழுத போது அராஜகமாக ஆட்சேபம் தெரிவித்த வனிதாவின் வழக்கு முதலில் வந்தது. இதற்காக சாண்டியை பாவனையாக விசாரித்த கமல், அதில் வனிதாவைப் பற்றிய வம்புகளை நைசாக செருகிக் கொண்டேயிருந்தார். இந்தத் தூண்டில் சாண்டிக்கு முதலில் புரியாததாலோ என்னமோ சீரியஸாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

IMAGE_ALT

“ஷெரீன் அழும் போது.. யாரும் சமாதானம் பண்ண வேண்டாம்’ன்னு சொல்றீங்க. இதுல மட்டும் உடனே தடை சொல்றீங்க. இது என்ன வாழைப்பழ அழுகலா? மனித உணர்ச்சி. இதைக் கண்ட்ரோல் பண்றது சரியா?” என்று வனிதாவிடம் வந்தார் கமல். பழைய புராணத்தின் படியே வனிதா விளக்கம் அளித்தார்.

“நீங்க சொல்றது சரி.. நான் உடனே போட்டு உடைச்சுடறீங்க. அதுதான் உங்க பிரச்சினை” என்றார் கமல்.

இந்தத் தொடரிலும் இது பற்றி நிறைய முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது. வனிதா முன்வைக்கும் விஷயங்கள் பலமுறை சரியானதாக இருக்கிறது. ஆனால் அவர் அதைச் சொல்லும் முறைதான் அராஜகமாக இருந்து மற்றவர்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது.

“ஒருவேளை அவங்க அழுவறது அதிக நேரம் காட்டப்பட்டா அவங்களுக்கு அதிக மைலேஜ் கிடைக்கும்-னு ஒரு டெக்னிசியனா.. நெனக்கிறீங்களா?” என்று கமல் வசமாக மடக்கியவுடன்தான் சாண்டிக்கு கமலின் கிண்டல் புரியத் துவங்கியது. ‘தரமான சம்பவம் தலைவா’ என்பது மாதிரி கைகளைக் காட்டினார்.

“என்ன தர்ஷன்.. கிரிக்கெட்டா.. நானா?” என்று கேட்டவுடன் ‘நீங்கதான் சார்” என்று தர்ஷன் துள்ளிக்குதித்து சொன்னதை அரங்கமே உற்சாகத்துடன் எதிரொலித்தது. வனிதாவின் ‘ஹிட்லிஸ்ட்டில்’ முதல் இடத்தில் தர்ஷன் இருப்பதால் அவரை ஜாலியாக கமல் வம்பிழுத்திருக்கலாம்.

“நான் சொல்றத கட் பண்ணி கட் பண்ணி காட்டறாங்க சார். எளவெடுத்த உங்க எடிட்டிங் டீம்தான் பிரச்சினை” என்பது போல் வனிதா குற்றம்சாட்டி எஸ்கேப் ஆக முயல.. ‘கிரிக்கெட் விளையாட்டை துண்டு பண்ணி ஹைலைட்ஸ்-ஆ காட்டினாலும் ரிசல்ட்டும் முடிவும் ஒண்ணுதான். அது மாறாது” என்று சமயோசிதமாக கமல் மடக்கியது இன்றைய நாளின் ஹைலைட் கமெண்ட். அபாரமான டைமிங்.

“இந்த விளையாட்டின் முக்கியமான அம்சம், சச்சரவுதான்னு நெனச்சிட்டீங்களோ?” என்று வனிதாவை கமல் கேட்டது முக்கியமானதொன்று. ஆனால் இது மிகத் தெளிவாக வனிதாவிற்குப் புரியவில்லை. ‘வெளியே இருந்து பார்க்கும் போது அப்படித் தெரியுது. நான் உலக அமைதிக்காகத்தான் பாடுபடறேன்” என்பது போல் பாசாங்காக சொதப்பிக் கொண்டிருந்தார் வனிதா.

“கவின் நாமினேஷன் விஷயத்தில் உங்கள் ஆட்சேபம் என்ன?” என்று வனிதாவைக் கேட்டு அடுத்த விஷயத்திற்கு வந்தார் கமல்.

‘வெளியே வெற்றி பெற்றவர்களை தவிர்த்து விட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு தரலாம் என்று கவின் தருவது அபத்தம்’ என்பதாக வனிதா சொன்னது ஏற்புடையது. “அப்படியொன்னும் சட்டம் இல்லையே?” என்று விதாண்டாவாதமாக கமல் மடக்கினாலும் அடிப்படையில் அதில் தர்க்கமில்லை.

ஒருவர் டென்னிஸ் சாம்பியனாக பல வருடங்கள் இருந்து விட்ட காரணத்தினால் அடுத்து வரும் இளம் போட்டியாளரிடம் வேண்டுமென்றே தோற்பாரா என்ன?

IMAGE_ALT

“இப்படி விட்டுக் கொடுத்து பெறும் வெற்றியை தர்ஷன் உள்ளிட்டவர்களே விரும்ப மாட்டார்கள்” என்று கமல் சொன்னதை தர்ஷன் உள்ளிட்டு இதர நண்பர்களும் ஏற்றுக் கொண்டார்கள். நட்பு காரணமாக இவர்களால் இதை வெளியில் சொல்ல முடியாமல் இருந்திருக்குமே ஒழிய, ‘தங்களின் வெற்றி தனது பங்கின் மூலம் கிடைக்க வேண்டும்’ என்பதுதான் ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்கும். அதுதான் நியாயமும் கூட.

“நட்பிற்காக விட்டுத்தருவேன்-னு நீங்க ஒரு முறை சொன்னா பரவாயில்லை. அதையே மறுபடி மறுபடி சொல்லும் போது அதுவொரு உத்தியோ –ன்னு தோணுது” என்று கமல் கவினிடம் சுட்டிக் காட்டுவதும் மிகச் சரியானது. இந்த விஷயத்தில் ‘நட்பு புராணத்தை’ கவின் தொடர்ந்து பாடுவது அபத்தமானது மட்டுமல்ல ‘உள்நோக்கம் கொண்டதோ’ என்கிற சந்தேகத்தையும் விதைக்கிறது.

“ஒரு இடைவேளைக்குப் பின்பு வருகிறேன்” என்று சொல்லி விட்டு கமல் சென்றார். இந்த இடைப்பட்ட நேரத்தில் கமல் சொன்ன விஷயங்கள் வனிதாவின் மண்டையை நிச்சயம் பிறாண்டியிருக்க வேண்டும். எனவே கமல் வந்தவுடன் ‘சார்.. மூன்று கேள்விகள்’ கேட்க வேண்டும் என்று முன்பெஞ்சு மாணவன் மாதிரி ஆரம்பித்தார்.

“கவின் சொன்ன காரணம் சரியா சார்” என்பது அவரின் முதல் கேள்வி. நிச்சயம் சரியில்லைதான். ஆனால் அதை அவர் சொல்வதற்கான உரிமை இருக்கிறது என்பது கமலின் பதில்வாதம் சரி. கவின் சொல்வது அபத்தமாக இருந்தாலும் அதைச் சொல்வதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது என்று கமல் சொன்ன பதில் கருத்து சுதந்திரத்தை வலியுறுத்துவதாக இருந்தது.

வனிதா அடிக்கடி மைக்கை கழற்றி வைப்பதையும் இதற்கிடையில் நுட்பமாக கிண்டலடித்தார் கமல்.

“சார்.. இந்த ப்ரேம்-னு சொன்னீங்களே. அது புரியலை சார்’ என்று அடுத்த கேள்வியை இழுத்தார் வனிதா. (நடிகர் பிரேம் –ன்னு ஒருத்தர் இருந்தார். அவரைச் சொன்னேன் என்று கமல் கிண்டலடித்திருக்கலாம்).

“முழு நாளையும் மக்களுக்கு காட்ட முடியாது. அவங்களுக்கும் நேரமில்ல. எடிட் பண்ணித்தான் காட்ட முடியும். சரியா.. உங்க விளையாட்டை நீங்க விளையாடுங்க” என்று கமல் சொன்ன விளக்கத்தை ஏற்காமல் ‘என் கேம் என்ன சார்… புரியவில்லை என்றார் வனிதா. ‘அப்ப வெளியே வாங்க. புரிஞ்சுடும்’ என்று எரிச்சலும் சர்காஸமும் கலந்து கமல் பதில் சொன்னது அருமை.

‘பிக்பாஸ் டீம் நிர்ணயிக்கும் கோணத்தில் காண்பித்தால் பார்வையாளர்களுக்கும் அப்படித்தானே புரியும் என்பது வனிதா கேட்க நினைக்கும் கேள்வியாக இருக்கலாம். இது சரியானதுதான்.

ஆனால் மக்களை அப்படித் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்ப்பவர்கள் ஒவ்வொரு போட்டியாளரையும் பற்றி தன்னிச்சையாக ஒரு சரியான சித்திரத்தை தங்களின் மனதில் வரைந்து கொள்வார்கள். எனவே என்னதான் பிக்பாஸ் டீம் எடிட்டிங் சாமர்த்தியங்களைக் காட்டினாலும் பார்வையாளர்கள் அந்த இடைவெளிகளை நிரப்பிக் கொள்வார்கள்.

“அவங்க அழுவறத தொடர்ந்து காட்டினா அவங்களுக்கு மைலேஜ் போயிடும்-னு நெனச்சுதான் ஆட்சேபம் தெரிவிச்சிங்களா?” என்று பளிச்சென்று போட்டு உடைத்தார் கமல். “இல்லை” என்று பாவனையாக மறுத்தார் வனிதா. (அப்படியா?!)

“சரி மூன்றாவது கேள்வியைக் கேளும், கேட்டுப் பாரும்” என்று தானே வனிதாவிற்கு ஞாபகப்படுத்தினார் கமல். (யாரு கிட்ட கேக்கறே.. அண்ணன் கிட்டதானே.. கேளு கேளு)

‘விட்டுக்கொடுப்பததால் வரும் வெற்றி சரியானது அல்ல’ என்பது என் உபதேசத்திற்குப் பின்புதான் தர்ஷனுக்கு புரிந்தது என்கிற மாதிரி வனிதா கிளைம் செய்ய, “யாரு சொன்னா. என்ன. உபதேசம் நல்லதுதானே.. இதுக்கு எதுக்கு காப்பிரைட் சண்டை?” என்று சொன்ன கமலிடம் “சார்.. மத்தவங்களலாம் நீங்க சொன்னா கேட்டுக்கறாங்க.. மக்கள் கைத்தட்டலுக்கு ஏற்ப நடிக்கறாங்க. நான் அப்படி இல்லை. யோசிச்சுல்லாம் பேசறது இல்லை” என்று வனிதா சுயவாக்குமூலம் தர

‘ஒரு ஒப்பினியன் சொல்றேன்.. யோசிச்சு பேசுங்க” என்றார் கமல்.

“சரி சொல்லுங்க” என்று வனிதா கேட்க.. அவ்ளதான் ஒப்பினியன்’ என்று கமல் நிறுத்தியது. அருமையான காட்சி. ‘அடிச்சுக்கூட கேட்பாங்க.. சொல்லாதீங்க’ காமெடிக்கு நிகரான காட்சி. “நீங்க இந்த மாதிரில்லாம் பேசினா எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது” என்று சிணுங்கினார் வனிதா. (இதுவே சக போட்டியாளராக இருந்தால் போட்டு வெளுத்திருப்பார்).

**

அடுத்ததாக ஷெரீன் உணர்ச்சிவசப்பட்டு அழுத விவகாரத்திற்கு வந்தார் கமல். “வனிதா என் பிரெண்டு. அவங்க திரும்பி வந்ததற்கு சந்தோஷப்பட்டேன். ஆனா தர்ஷனோட என் பிரெண்ட்ஷிப் பத்தி சொல்லிட்டே இருந்தாங்க. வேலை செய்யலைன்னு குத்திக் காட்டிட்டே இருந்தாங்க. இப்ப தகாத வார்த்தையும் சொன்னாங்க” என்று ஷெரின் சொல்ல.. ‘நீங்க தர்ஷன் கிட்ட பேசினீங்க இல்லையா.. அவர் என்ன சொன்னார், உங்க ரெண்டு பேருக்கும் இருக்கற தெளிவு.. பார்வையாளர்களுக்கும் இருக்கு. அது போதும்” என்று கமல் சொன்ன போதே வனிதாவிற்கு இந்தச் செய்தி சரியாகப் புரிந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அப்போதும் புரியவில்லை.

பார்வையாளர்களின் இடையில் அமர்ந்திருந்த ஷெரீனின் அம்மாவும் உரையாடலின் இந்த போக்கைக் கண்டு மகிழ்ந்தார். ஷெரீனைப் போலவே அவருக்கும் வனிதாவின் ‘மூக்கு நுழைத்தலும் தவறான போர்ட்ரேயலும்’ ஆட்சேபத்தைத் தந்திருக்கலாம்.

சாட்சிக்காக ‘சாக்ஷியை’ அழைத்த கமல் “ஒருபக்கம் ஷெரீன் –தர்ஷன் ஜோடி ‘க்யூட்டாக இருக்குதுன்னு சொல்றீங்க.. இன்னொருபக்கம் இதெல்லாம் நல்லாயில்லைன்னும் சொல்றீங்க. இதுல எது உண்மை” என்பது போல் கேட்க.. சாக்ஷி என்கிற ஆடு கேள்வி புரியாமல் விழித்தது.

“அவங்க ரெண்டு லவ் பண்ற மாதிரி இருக்காங்க இல்லையா.. அதைக் கேக்கறாங்க” என்று ‘விளக்கம் அளிக்கிறேன் பேர்வழியாக’ சூழலை ஆபாசமாக்கினார் வனிதா. இதற்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார் ஷெரீன். ‘அதைத்தான் ரெண்டு பேரையும் வெச்சு தெளிவு பண்ணியாச்சே. அப்புறம் என்ன?,” என்று கமல் கேட்டதற்கு “அவங்களுக்குள்ள இன்னமும் ஏதோ நடந்தாதான் ஒத்துப்பீங்களா?” என்று ஆபாசத்தின் அடுத்த எல்லைக்குள் நகர்ந்தார் வனிதா. இதெல்லாம் நட்பிற்கு செய்கிற மிகப்பெரிய துரோகம்.

அடிப்படை நாகரிகமும் நுண்ணுணர்வும் இருப்பவர்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள். வனிதாவிடம் இவை துளிகூட இருப்பது போல் தெரியவில்லை. ‘முயலுக்கு மூணு கால்’ என்பதை நிரூபிக்க எவ்வித எல்லைக்கும் செல்வார் போலிருக்கிறது. “என்னதான் எதிர்பார்க்கறீங்க?” என்று பார்வையாளர்களிடம் கோபமாக கேட்பது போல் வனிதாவை கலாய்த்தார் கமல்.

“ஒருத்தர் கதவை மூடும் போது எட்டிப் பார்க்காதீங்க. மூக்குதான் டேமேஜ் ஆகும் என்று பிறகு சீரியஸாக விளக்கம் அளித்தார் கமல். இதற்கு மேலும் புரிய வைக்க முடியாது. “அவங்க என் கிட்ட நிறைய விஷயம் சொல்லி அழுதிருக்காங்க. ‘ஏன் மேலே அவன் மேல போய் விழறேன்’னு நானும் கேட்டிருக்கேன்’ என்று அநாகரிகத்தின் அடுத்த எல்லைக்கு நகர்ந்தார் வனிதா. திருத்தவே முடியாத கேஸ்.

“இவங்க கிட்ட சொல்லி அழுததுதான் என் தப்பு” என்று ஷெரீன் ஆட்சேபிக்க… “பார்த்தீங்களா.. தப்பு பண்ணிட்டாங்களாம்” என்று வார்த்தை திரித்தலை அபத்தமாக முன்வைத்தார் வனிதா.

“மக்களை குரைக்கும் நாய்கள்’ –ன்ற மாதிரி சொல்லிட்டீங்களாமே” என்று சாக்ஷியை விசாரித்தார் கமல். இதற்கு அவரசமாக விளக்கம் சொல்லி எஸ்கேப் ஆனார் சாக்ஷி.

கமல் இடைவெளி விட்டுச் சென்றதும் இந்த விஷயம் வனிதாவின் மண்டையைப் பிறாண்டியது போல. “ஷெரீன் தர்ஷன். நான் ஒண்ணு கேட்கட்டுமா..” என்று வழக்கம் போல் ஆரம்பித்த போது ‘லீவ் மீ அலோன்’ என்று விலகிச் சென்றார் ஷெரீன். இதையேதான் மற்றவர்களும் செய்திருக்க வேண்டும். மாறாக எரிச்சலூட்டும் வனிதாவின் முட்டாள்தனமான வாக்குவாதங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கவே தேவையில்லை.

“கமல் சார் சொல்லிட்ட பிறகும்… ஏங்க்கா” என்று கவின் தலையிட்டதையும் வனிதா ஒப்புக் கொள்ளவில்லை. ‘கமல் சார்.. என்ன பெரிய கொம்பா?” என்பது போல் சொல்லி விட்டுச் சென்றார்.

வனிதாவின் தலையில் விலக்கவே முடியாத அகங்கார பூதம் ஒன்று அமர்ந்திருக்கிறது. அது இறங்காத வரை அவருக்கு மற்றவர்களின் உபதேசமோ நியாயமான தரப்புகளோ காதில் விழாது போலிருக்கிறது. தர்ஷனின் தோழியின் மீது பரிதாபப்படுகிறேன் என்கிற பாவனையில் ஷெரீனின் மீது அவதூறுகளைப் பொழிகிறார். ‘ஒரு பெண்ணாக இருந்து கொண்டு’ அவர் செய்யும் அபத்தம் இது.

இந்த சர்ச்சைக்கு இடையில் ‘கவினுக்கும் லியாவிற்கும்’ வனிதாவின் கையால் நற்சான்றிதழ் கிடைத்தது முரண்நகை. (அய்யோ.. அய்யோ!)

இடைவெளிக்குப் பின் வந்த கமல், நாமினேஷன் செய்த காரணங்களைப் பற்றி விசாரித்தார். “நெருக்கமான நண்பர்கள் ஜெயிக்க வேண்டும்” என்பதால் முகின் மற்றும் ஷெரீனை நாமினேட் செய்ததாக காரணம் சொன்னார் லியா.

“கவின் மற்றும் லியா ஆகிய இருவரில் வெளியேறினால் அவங்க பிரச்சனை சரியாகும்-னு நாமினேட் பண்ணேன்’ என்றார் தர்ஷன்.

“கேம் புரியலைன்னு சொல்லிட்டே..நல்லா விளையாட ஆரம்பிச்சுட்டீங்க.. இதுக்கு கண்ணதாசனை துணைக்கு கூப்பிடுவோம். வந்தவர்கள் எல்லாம் தங்கிவிட்டால் இந்த வீட்டில் இடமேது” என்றார் கமல். எவிக்ஷனில் மாட்டிக் கொள்ளாமல் விளையாடுவதுதான் இதிலுள்ள சவால்.

மேடையேறிய அபிராமியும் மோகனும் போட்டியாளர்கள் பற்றிய தங்களின் அபிப்ராயங்களைச் சொன்னார்கள். ஹைபர் ஆனது போல பேசிய அபிராமியைப் பார்க்க விநோதமாக இருந்தது. பிக்பாஸ் சூழல் மட்டும் அவருக்கு பிரச்சினையில்லை போல. சாண்டியும் நைனாவும் நுட்பமாக மோதிக் கொண்டார்கள்.

‘சாக்ஷி பற்றிய விஷயங்கள். விருது விழா பற்றிய விஷயங்கள்’ ஆகியவற்றை ‘சண்டே’ வெச்சுக்கலாம்’ என்று விடைபெற்றார் கமல். சண்டே ‘சண்டை’நாள் போலிருக்கிறது. காத்திருப்போம்.

இதற்கிடையில் சேரன்தான் வெளியேற்றப்பட்டார் என்றும் சீக்ரெட் ரூம் ஆப்ஷன் அவருக்குத் தரப்பட்டதாகவும் ஒரு வதந்தி உலவுகிறது. அதையும் பார்ப்போம்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE