Thursday 28th of March 2024 04:53:30 PM GMT

LANGUAGE - TAMIL
“சேரன் என்கிற பெருந்தன்மையாளர்” - சுரேஷ் கண்ணன்

“சேரன் என்கிற பெருந்தன்மையாளர்” - சுரேஷ் கண்ணன்


இந்தக் கட்டுரைத் தொடரில் நான் மனச்சாய்வுடன் வனிதாவை தொடர்ந்து திட்டித் தீர்ப்பதாக சில நண்பர்கள் பின்னூட்டங்களில் சொல்லி வருகிறார்கள். எனவே அது பற்றி தெளிவு படுத்தி விட்டு இன்றைய நாளுக்குள் நுழையலாம் என்றொரு உத்தேசம்.

வனிதா சுட்டும் விஷயங்களில் ஏறத்தாழ எழுபத்தைந்து சதவீதம் சரியாகவே இருக்கிறது என்பதை மறுபடி மறுபடி சொல்லி வருகிறேன். ‘நட்பு கருதி விட்டுத்தருவதை விடவும் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்போடு இந்த விளையாட்டை அணுகுவதுதான் சரியானது’ ‘சரியாக பணி செய்யாதவர்களிடம் அவர்களின் மெத்தனத்தைச் சுட்டிக் காட்டுவது’ ‘தலைமைத்துவம்’ போன்று பல விஷயங்களில் வனிதாவின் தரப்பு சரியாகத்தான் இருக்கிறது.

கமலிடம் தன் தரப்பை துணிச்சலாக முன்வைக்க இதர போட்டியாளர்கள் தயங்கும் போது இந்த சீஸனில் அந்த விஷயத்தைச் சரியாக செய்பவர் வனிதா மட்டும்தான். (அவர் கேட்கும் கேள்விகள் பெரிதும் மொக்கையாகவும் பாசாங்குடனும் இருக்கின்றன என்பது வேறு விஷயம்).

ஆனால் பிரச்சினை என்னவெனில் அகங்காரம் பெருகி வழியும் அவரது உடல்மொழி, ‘தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்று மூன்று மணி நேரத்திற்கு டயர்ட் ஆகாமல் கத்தி வாதாடுவது’, ‘எதிர்தரப்பின் நியாயங்களை அந்தக் கோணத்தில் துளி கூட யோசிக்காதது’, ‘கோள் மூட்டுதல்’ ‘கலாசாரக் கண்காணிப்பின் மூர்க்கம்’ போன்றவை அவரது தரப்பை மதிப்பிழக்கச் செய்து விடுகின்றன.

உதாரணத்திற்கு ஒன்று பார்ப்போம். “இந்த வார டாஸ்க்கில் சிறந்த பங்கேற்பாளராக உங்களை நீங்களே முன்மொழிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார் கமல். வனிதாவும் சேரனும் இதை மறுத்தார்கள். ஆனால் தர்ஷனும் ஷெரீனும் ஆமோதித்தார்கள். ‘மேலும் சண்டை வேண்டாம்’ என்கிற காரணத்திற்காக வாதாடவில்லை என்றார் ஷெரீன்.

இந்தச் சமயத்தில் வனிதாவின் தரப்பு கேட்கப்பட்ட போது “இந்த டாஸ்க்கின் போது எனக்கும் கையில் அடிபட்டது. மூன்று பிள்ளைகளைப் பெற்ற தாயாக என் உடலில் இருந்த பிரச்சினைகளையும் தாண்டி நெடுநேரம் அமர்ந்து தையல்வேலையைக் கவனித்தேன். மட்டுமல்லாது, ‘வாரம் முழுவதும் சிறப்பாக இயங்கியவர்’ என்கிற தேர்வில் சேரனை முன்மொழியலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவரே ‘லியா’ பெயரைச் சொன்னார்” என்று மிக நிதானமாக அவரது விளக்கத்தைச் சொன்னார்.

அது ஏற்றுக் கொள்ளும்படியாகவே இருந்தது. “பார்த்தீங்களா.. இதுல எவ்வளவு நியாயம் இருக்குது?” என்று கமலே சுட்டிக் காட்டினார். இந்த நிதானமான அணுகுமுறை அவரது இதர விஷயங்களிலும் இருந்தால் அவர் இத்தனை வெறுக்கப்படுவதற்கு நியாயமே இல்லை. அவர் வெளியேறியிருக்கவும் வாய்ப்பில்லை. இறுதி நிலையை எட்டக்கூடிய வலுவான போட்டியாளராகவும் அவர் இருந்திருப்பார்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா.

**

கமலின் வரவிற்காக போட்டியாளர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். “எல்லாப் பிரச்சினையும் லவ்வுல போய் கவ்வுதே” என்று சேரன் அனத்தத் துவங்கினார். அவ்வளவுதான். இரண்டு மணி நேர பட்டிமன்ற ஸ்பீக்கரை ஆன் செய்தது போல ஆரம்பித்து விட்டார் வனிதா. இதற்காக ஷெரீனைப் போல நடனமெல்லாம் ஆடிக் காண்பித்தது காமெடி. சேரன் நிதானமாக சொன்ன எந்தவொரு விளக்கத்தையும் அவர் காதில் வாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை.

“என்னண்ணே காதுல ரத்தம் வருது?” என்று வனிதாவிடம் பேசி விட்டு நொந்து போய் திரும்பி சேரனைப் பார்த்து சாண்டி கிண்டலாக கேட்க “ஏண்டாப்பா.. கழுத்துல இவ்ளோ பெரிய வெட்டு இருக்குது. அது உன் கண்ணுக்குத் தெரியலையா?” என்றார் சேரன். இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து அவர் அடிக்க முயன்ற மூன்றாவது ஜோக் இது.

வழக்கம் போல் அட்டகாசமான உடையுடன் அமர்க்களமாக உள்ளே வந்தார் கமல். என்னவொன்று அவர் அணியும் உடைகளை நாம் அணிந்து பொதுவில் நடமாட முடியாது. ஒன்று கோமாளியாகத் தெரிவோம் அல்லது தெருமுனையில் நாய் துரத்தும்.

IMAGE_ALT

ஏதாவதொரு சமூகச் செய்தியை சொல்லி விட்ட திருப்தியுடன் நிகழ்ச்சிக்குள் செல்ல வேண்டும் என்கிற சம்பிரதாயத்தை நிறைவேற்றினார் கமல். ஆசிரியர் தினம் தொடர்பாக கல்வித்துறையில் ஏற்பட வேண்டிய மாற்றங்களைக் குறிப்பிட்டு நைசாக அதில் பிக்பாஸையும் செருகி விட்டார்.

பிக்பாஸை சுயபரிசீலனைப் பாடமாக எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் உற்சாகமாக வம்பு பேசுவதற்கான கருவியாக எடுத்துக் கொள்பவர்களே அதிகம். ‘கல்வி என்பது தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும்’ என்று கமல் சொன்னது திருவாசகம். லாட்டரல் திங்க்கிங் என்னும் சிந்தனை முறையை தோற்றுவித்த Edward de Bono பற்றியும் குறிப்பிட்டார் கமல்.

**

அகம் டிவியின் உள்ளே நைசாக வந்த கமலின் கண்ணில் சிக்கிக் கொண்டவர் ‘ரங்கநாத சாண்டி’. திடீரென்று கமல் உள்ளே வந்ததால் போட்டியாளர்கள் திகைப்புடன் சிரித்துக் கொண்டார்கள்.

IMAGE_ALT

தொலைபேசியில் ஒரு பார்வையாளர் வந்து கவினிடம் கேள்வி கேட்டார். “அண்ணா.. நீங்க இதுவரை ஒரு முறை கூட தலைவர் போட்டில வரல.. சிறந்த பங்கேற்பாளராகவும் வரலை..” என்று கேட்டதற்கு “இதுவரைக்கும் இதைப் பற்றி யோசித்ததேயில்லை நண்பா” என்று பின்பெஞ்ச் மாணவன் போல் பதிலளித்தார் கவின்.

கவினிடம் உள்ள நல்ல பழக்கங்களில் ஒன்று வெள்ளந்தித்தனமாக, நேர்மையாக தன் கருத்துக்களை தெரிவித்து விடுவது. அது இங்கும் வெளிப்பட்டது. ஆனால் இந்தப் போட்டியை அவர் மெத்தனமாக கையாளும் அலட்சியமும் இதில் வெளிப்பட்டது. (கேள்வி கேட்கப்படுவது ‘லைவ் அல்ல.. ரிகார்டட் கால்’ என்று நினைக்கிறேன். பேசியவரிடமும் கடலை போட கவின் முற்பட்ட போது கமல் ஜாலியாக கிண்டலடித்தார்.)

“உங்க கிட்ட மக்கள் எதிர்பார்க்கறாங்க. புரியுதா?” என்று கமல் கேட்டதற்கு சீரியஸாக ஆமோதித்தார் கவின். இன்னமும் இருக்கிற சொச்ச நாட்களில் என்ன செய்யப் போகிறாரோ?

சாக்ஷியை மேடைக்கு அழைத்தார் கமல். “நான் இதை கேம்ஷோவா பார்க்காம ரியல் லைஃப்பா பார்த்தேன். அதுதான் என் தப்பு. சில உறவுகளும் துரோகங்களும் கிடைச்சது. திரும்பி இங்க விருந்தினரா வந்த போது யாரையும் பழிவாங்கும் எண்ணத்தோட வரலை” என்ற சாக்ஷி கவினுக்கு பிரத்யேகமாக ஒரு செய்தி சொன்னார்.

“உங்க கூட இருந்தது ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த உறவு. அதிலிருந்து சரியான சமயத்தில் வெளியேறி விட்டேன். கடவுளுக்கு நன்றி” என்று மேடையில் சொன்னது அதிகப் பிரசங்கித்தனம். பழிவாங்கவரவில்லை என்று சொன்ன கருத்திலிருந்து அவரே முரண்படுகிறார். அந்தச் சமயத்தில் கவினால் அதை விவாதமாக மாற்ற முடியாது. தன் தரப்பையும் சொல்ல முடியாது என்பது சாக்ஷிக்கு செளகரியமான விஷயம்.

“‘Worst performer’ தேர்வில் ஏன் உங்களை நீங்களே முன்மொழிந்து கொண்டீர்கள். தியாகமா?” என்று கவினை கமல் கேட்ட போது ‘மைக்ரைன் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தலையணைகளை சரியாக தைத்து தனது அணிக்கு உதவ முடியவில்லை” என்னும் காரணத்தினால் தன்னைத் தானே முன்மொழிந்து கொண்டதாக சொன்னார்.

முகினும் தர்ஷனும் எதிரெதிர் அணியில் இருந்தாலும் வன்முறை இல்லாமல் ஸ்போர்ட்மேன்ஷிப்போடு தலையணை டாஸ்க்கை செய்தது குறித்து கமல் பாராட்டினார். (இந்த விஷயம் சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது). இதில் வனிதாவிற்கு ஒரு செய்தியும் இருக்கிறது.

‘எத்தனை இணக்கமாக இருந்தாலும் சாண்டி டீமில் தன்னை சேர்த்துக் கொள்ள மாட்டேன்கிறார்களே’ என்கிற ஆதங்கம் ஷெரீனுக்கு இருக்கிறது. (வனிதாவின் கோபத்திற்கு இதுவும் ஒரு காரணம்.) டீஷர்ட் விவகாரத்தில் இது வெளியே வர, சாண்டி அதை மழுப்ப, பிக்பாஸே தனது லோகோ போட்ட டீஷர்ட்டை அனைவருக்கும் தரும் என்றார் கமல். (நைசா சொருவினீங்கய்யா.... கமர்சியல் பிரேக்கை).

அடுத்ததாக ‘மிருகங்களை வைத்து பட்டப் பெயர்கள் அமைத்து தரப்பட்ட விருது விழா’ சர்ச்சைக்குள் வந்தார் கமல். “பச்சோந்தி விருதை தூக்கிப் போட்டீங்கள்ல. வெளில வந்து பாருங்க.. இந்த விருதே பெட்டர் –னு நீங்க நினைக்கற மாதிரி இருக்கலாம்” என்று லியாவிடம் சூசகமாக சொல்ல லியாவின் முகம் சுருங்கியது. இதற்கு மிகையாக கைத்தட்டி சந்தோஷப்பட்டார், பார்வையாளர்களின் இருக்கையில் இருந்த மோகன்.

(சேரனுடன் உள்ள தன் உறவு போலித்தனமானது என்று சொல்லப்படுகிற விமர்சனத்தினால் ஏற்கெனவே குற்றவுணர்வு அடைந்திருக்கும் லியா, அதன் காரணமாகவே இந்த விருதைப் புறக்கணித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் தூக்கிப் போட்டது நிச்சயம் முறையானதல்ல.)

:”காரணம் சொல்லாம குடுத்துட்டாங்க சார்” என்று லியா அடிபட்ட முகபாவத்துடன் சொல்ல, தான் வடஇந்தியாவில் அறிமுகமான போது தனது நடிப்பை பச்சோந்தியுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டதை முதலில் தவறாகப் புரிந்து கொண்டு வருந்தியதாக கமல் சொன்னார்.

“பெரியவங்க தன்னோட மரியாதையை தானே கெடுத்துக்கக்கூடாது. அவங்களா தானா மரியாதை தர்ற மாதிரி நடந்துக்கணும்” என்று மோகனைக் குறித்து கமல் சொன்ன போது அதுவரை கைத்தட்டி ரசித்த மோகனின் முகம் டொங்கலானது.

இதைப் போலவே ‘கழுதைப்புலி’ விருதை தான் மறுத்த காரணத்தை வனிதா சொன்ன போது ‘அது ஒவ்வொரு மிருகத்தின் வாழ்க்கை முறை. அவற்றைக் கொச்சைப்படுத்த நமக்கு உரிமையில்லை” என்ற கமல் தான் ஒழுங்காக வரி கட்டுவதை ஆயிரத்து இருநூறு மூன்றாவது முறையாக பொதுவில் தெரிவித்தார். (நல்ல விஷயம் ஆண்டவரே. இப்படி பொதுவில் துணிச்சலாக சொல்ல முடிகிறது என்றால் நீங்கள் இந்த விஷயத்தில் நேர்மையைாக இருக்கிறீர்கள் என்று பொருள்!).

சாக்ஷியின் மண்டைக்குள் லியாவின் அவமதிப்பு குறித்து பிறாண்டிக் கொண்டேயிருந்திருக்கும் போல. எழுந்து இது தொடர்பாக கேள்வி கேட்டார்.

“சில பேர் மேடையைத் தொட்டுக் கும்பிட்டு ஏறுவாங்க. ஆனா மேடைல நிறைய தப்பு பண்ணுவாங்க. நான் மேடையிலிருந்து பார்வையாளர்களை கும்பிடுகிறவன்” என்று கமல் விளக்கம் அளித்த போது “ப்பா. சாமி...” என்று கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.

மறுபடியும் மோகனிடம் வந்த கமல், ‘மரியாதையை நாமா வலுக்கட்டாயமாக வாங்கக்கூடாது” என்று மரத்தில் மாங்காய் தேடி நடித்துக் காட்டிய போது சங்கடப்பட்டு சிரித்தார் மோகன். இப்போதுதான் லியாவின் முகத்தில் புன்னகை அரும்பிக் கொண்டு வந்தது.

பிறகு இந்தப் பக்கமும் வந்தார் கமல். ‘பெரியவர்களை மதிப்பது ஒரு பண்பு. அதுல ஒரு சந்தோஷமே இருக்கு” என்றவர் ‘நாமாக அவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களாக நாமும் இருந்தே இறப்போம்” என்று டிவிட்டர் மொழியில் கமல் சொன்னது திருவாசகம். (எப்படி.. இப்படில்லாம்.? இதெல்லாம் தானா அப்படியே வர்றதுதான் இல்ல..).

“பெரியவர்களின் தரப்பிற்கு மாறாக இளைஞர்கள் துணிச்சலுடன் தன் தரப்பைச் சொல்லலாம். தவறில்லை. அதை கைகளைக் கும்பிட்டபடியே மரியாதையுடன் சொல்வது சரியாக இருக்கும்” என்பது போல் ‘நக்கீரர்’ உதாரணத்துடன் கமல் அளித்த விளக்கமெல்லாம் அருமை. (இந்த நிகழ்ச்சியை கமலைத் தவிர வேறு எவராலும் சரியாக கையாள முடியுமா என்று மறுபடியும் தோன்றிய தருணம்).

**

அடுத்ததாக வில்லங்கமான விஷயம். எவிக்ஷன் என்கிற சங்கடத்திற்குள் வந்தார் கமல். வழக்கமான நாடகங்களுக்குப் பிறகு முகின், ஷெரீன், கவின் ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக சொன்னார். கவினின் முகத்தில் சுரத்தேயில்லை. லியா போய்விடுவார் என்று அப்போதே துயர மோடிற்கு வந்தாரோ என்னமோ.

எனவே பாக்கியிருந்தவர்கள் சேரன் மற்றும் லியா. ‘இதுல யார் இருக்கணும்.. போகணும்” என்று கேட்கப்பட்டதற்கு கவின், ‘லியா’ என்றார் தெளிவாக. ஆனால் மற்றவர்களால் தெளிவாக சொல்ல முடியவில்லை. இரண்டு பேருமே வேண்டும் என்பது போல் சொன்னார்கள். “சேரன்” என்றார் ஷெரீன்.

எனவே தானே தன்னை முன்மொழிய முன்வந்தார் சேரன். “புதிய அனுபவம் கிடைக்கணும்னுதான் இங்கே வந்தேன். போதுமான அனுபவம் கிடைச்சது. எனவே வெளியே வர்றதுக்கு தயாராக இருக்கேன்” என்றார் சேரன்.

IMAGE_ALT

பிறகு சேரனின் பெயர் காட்டப்பட்டது. அனைவரும் அதிர்ச்சியானார்கள். ‘ஷாக்கைக் குறை.. ஷாக்கை குறை” என்று சொல்லுமளவிற்கு மிகையாக அதிர்ச்சியைக் கொட்டினார் வனிதா. மிகச் சிறந்த போட்டியாளராக சேரன் வெளியேற்றப்படுவதில் நியாயமேயில்லை என்று வனிதா கருதுவது மிகச்சரியானதே. ஆனால் இதற்காக ‘மக்கள் முடிவு சரியில்லை. கமல் சார் சரியில்லை. பிக்பாஸ் சரியில்லை. மற்றவர்கள் சரியில்லை. காமிரா சரியில்லை. ஒண்ணும் சரியில்லை’ என்றெல்லாம் அவர் ஒட்டு மொத்தமாக ஆத்திரப்படுவது முறையற்றது.

‘சீக்ரெட் ரூம்’ என்கிற ஆப்ஷன் இந்தச் சமயத்தில் எவருடைய நினைவிற்கும் வராதது ஓர் ஆச்சரியம்.

பொதுவாக மற்ற போட்டியாளர்கள் வெளியேறும் போது உணர்ச்சிகளை அதிகம் வெளியில் காட்டாத லியா, சேரனின் வெளியேற்றத்திற்கு நிச்சயம் கலங்குவார் என்பது எதிர்பார்த்ததே. எனவே குமுறி குமுறி அழுதார். இதையும் நாடகம் என்று சொல்லி கொச்சைப்படுத்துபவர்களும் இருக்கக்கூடும். எல்லாமே நாடகம் என்றும் அதிரடியாக சொல்லி விட முடியாது. மனித உறவுகளின் தன்னிச்சையான அன்பும் பாசமும் சற்று உருவாகத்தான் செய்யும். எனவே இந்தச் சந்தேகத்தின் பலனை அளிப்பதே நன்று.

IMAGE_ALT

கவின், லியா, சேரன் ஆகியோர் ஒரே பிரேமில் நின்றது ‘முள்ளும் மலரும்’ திரைப்படக்காட்சியைப் பார்ப்பது போல் தோன்றியது. சேரனின் வெளியேற்றத்தால் கவின் குற்றவுணர்வுடன் காணப்பட்டார். போலவே சாண்டியும். இருவரும் சேரனை சங்கடத்துடன் கட்டியணைத்துக் கொண்டார்கள்.

சாண்டி டீமிற்கும் சேரனிற்கும் இடையில் பெரிதும் இருந்தது தலைமுறை இடைவெளி பிரச்சினைதான். இடையில் லியாவின் பிரச்சினையும் சேர்ந்து கொண்டது. ஆனால் அவர்களுக்கு சேரனின் மீது அடிப்படையான மரியாதையும் அன்பும் இருந்தது. இது இந்தத் தருணத்தில் வெளிப்பட்டது. சேரனும் இந்தச் சூழலை மிகப் பெருந்தன்மையாகவும் நாகரிகத்துடன் கையாண்டார். வேறு ஒருவராக இருந்தால் தங்களின் கோப தாபங்களைக் காட்டியிருக்கக்கூடும்.

ஷெரீனையும் வனிதாவையும் இணைத்து வைத்த சேரன், அழுகையை அடக்க முடியாமல் இருந்த லியாவை சமாதானப்படுத்தி விட்ட பிறகு வெளியில் சென்றார்.

**

வெளியில் சென்ற சேரன் கமலின் காலில் விழுந்தது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கமலுக்கே அது பிடிக்காது என்பது ஒருபுறமிருக்க, இந்தக் காலில் விழும் கலாசாரம் தமிழ் சமூகத்தின் ஆபாசங்களுள் ஒன்றாகியிருக்கிறது. அப்படி மாற்றி விட்டார்கள்.

“பழக்கமான சூழலில் தொடர்ந்து இருந்தால் நாம் தேங்கி விடுவோம் எனவே அதிலிருந்து விலகி ஒரு புதிய அனுபவத்திற்காகத்தான் இங்கு வந்தேன். டைரக்டர் என்பதையெல்லாம் மறந்து விட்டேன. முதல் நான்கு வாரங்கள் சிரமமாக இருந்தது. பிறகு பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். குறிப்பாக எனது கோப குணம் பெரிதும் குறைந்து விட்டது” என்று சேரன் சொன்னது அருமை.

இறுதிப் போட்டிக்கு மட்டுமல்ல டைட்டில் ஜெயிப்பதற்கும் சேரன் தகுதியானவர். அகம் டிவி வழியாக மீண்டும் போட்டியாளர்களைச் சந்தித்த சேரன், அழுது கொண்டிருந்த லியாவை சமாதானப்படுத்த கலங்கிய முகத்துடன் சேரன் பேசியது நம்மையும் கலங்க வைத்தது.

“எதுக்கு மக்கள் கைத்தட்டறாங்கன்னு வனிதாவிற்கு ஒரே குழப்பம் சார். அதை கிளியர் பண்ணிடுங்க..” என்ற சேரன் “படையப்பா படத்துல நீலாம்பரிக்கு எப்படி கைத்தட்டினாங்களோ.. அப்படித்தான் இங்கயும் கைத்தட்டறாங்க.. சந்தோஷமா விளையாடுங்க” என்று வனிதாவிடம் சொன்ன போது எவ்வித ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தார் வனிதா. (எதுக்கு கைத்தட்டறாங்கன்னு வெளியில் சென்று வந்த வனிதாவிற்கு உண்மையிலேயே புரியாதா?!).

சந்தோஷக்குறும்படம் திரையிடப்படும் போது பிக்பாஸின் அறிவிப்பு வந்தது. பாவனையாக அதைக் கேட்கத் தயாரானார் கமல். ‘சீக்ரெட் ரூம்’ வாய்ப்பு சேரனின் முன் வைக்கப்பட்டது. மக்களும் உற்சாகமாகத் கைதட்டி சேரனுக்கு ஆதரவு தரவே அதை ஏற்றுக் கொண்டார் சேரன். நல்ல விஷயம்.

சேரனுக்காக மிகவும் உருகிய வனிதா, இனி என்ன செய்வார் என்பது அடுத்த வாரங்களில் தெரிந்து விடும்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE