Thursday 28th of March 2024 11:09:41 AM GMT

LANGUAGE - TAMIL
‘ரத்தம் – தக்காளி சட்னி’ பாலிஸியை விடாமல் பின்பற்றும் வனிதா’ - சுரேஷ் கண்ணன்

‘ரத்தம் – தக்காளி சட்னி’ பாலிஸியை விடாமல் பின்பற்றும் வனிதா’ - சுரேஷ் கண்ணன்


77-ம் நாள் சம்பவங்கள் தொடர்கின்றன. சேரனின் வெளியேற்றத்தை ஜீரணிக்க முடியாத வனிதா தொடர்ந்து அனத்திக் கொண்டிருந்தார். “என்னங்க நடக்குது.. இங்கு.. என்னங்க நடக்குது இந்த நாட்ல.. தமிழன் ஏங்க இப்படி இருக்கான்?” என்று ‘தங்கர் பச்சான்’ பேட்டியை ரிப்பீட் மோடில் பார்த்தது போல் இருந்தது.

“சேரன் அண்ணா இல்லாத வீட்ல எனக்கு இருக்கப் பிடிக்கலை” என்றெல்லாம் புலம்பிய வனிதாவை, சீக்ரெட் ரூமில் கவனித்துக் கொண்டிருந்த சேரனுக்கு ‘கெதக்’ என்று ஆகியிருக்க வேண்டும். ‘இதையெல்லாம் அனுபவிப்பதா.. வேண்டாமா.. கடவுளே?” என்று விவேக் ஒரு நகைச்சுவைக் காட்சியில் குழம்புவது போல குழம்பியிருப்பார். ‘நீலாம்பரி’ மாதிரியான ஒரு காரெக்ட்டர் திடீரென்று ‘கிழக்குச் சீமையிலே’ ராதிகாவாக மாறினால் அந்தக் காட்சியை ஜீரணிக்க மனோதிடமும் சிறிது நேரமும் தேவைப்படும்.

“கெட்டவியங்களுக்கு இந்த உலகம் மரியாதையை தட்டுல வெச்சு கொடுக்குதே” என்று கதறும் ‘மகாநதி’ கமல் மாதிரி “சேரன் அண்ணாவை வெளியே அனுப்பிச்சிட்டு கவினைக் காப்பாத்திட்டாங்களே.. அவன் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? இந்த மக்கள் ஏன் இப்படி முட்டாளா இருக்காங்க” என்பது போல் சேரனுக்காக வனிதா கலங்கிய போது “அவனோட காதல் கதையின் முடிவு தெரியாம மக்கள் வெளியே அனுப்ப மாட்டாங்க” என்றார் ஷெரீன். சேரனோடு பழகிப் பழகி, இவரும் ஒரு சினிமா டேரடக்கராக யோசிக்க ஆரம்பித்து விட்டார் போலிருக்கிறது.

சேரனுக்காக, வனிதா கண்கலங்கிக் கொண்டிருந்த இந்தச் சமயத்தில் யாராவது வந்து.. “ஏன் அழுதுட்டே இருக்கீங்க.. போதும் நிறுத்துங்க.. யாரோ உங்களை டார்ச்சர் பண்ற மாதிரி” என்று அழுவதை நிறுத்தியிருக்கச் சொல்லியிருந்தால் சொன்னவரின் கதி என்னவாகியிருக்கும் என்று யோசிக்கிறேன். அவர் காலம் பூராவும் அழுவதற்கான வசைகளை வனிதா நிச்சயம் வீசியிருப்பார்.

“யாரையும் நம்பக்கூடாது’ன்னு சேரன் அண்ணா கிட்ட வனிதா சொல்லிட்டே இருந்தாங்களாம். அப்ப.. இவங்களையும் நம்பக்கூடாது’ன்றதுதானே லாஜிக்?” என்று கவின் தன் டீமிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘நாளை நிகழவிருக்கிற தலைவர் போட்டியில் வனிதா பங்கேற்கப் போவதில்லை’ என்கிற தகவல் காற்றில் உலவியதோடு இந்த நாள் நிறைவுற்றது. அவர் தலைவராக இருக்கிற போது சிலர் வேலை செய்யாமலிருப்பதை தட்டிக் கேட்டதால்தான் பிரச்சினையாயிற்றாம்.

ஷெரீன் இதை தர்ஷனிடம் சொல்லிக் கொண்டிருந்த போது ‘நீங்களாச்சு.. உங்க பிரெண்டாச்சு..எப்படியாவது போங்க.. நான் கேம்ல ஃபோகஸ் செய்யப் போறேன்” என்று தர்ஷன் எழுந்து சென்றார்.

**

78-ம் நாள் ஏதோவொரு வேகமான இசையமைப்பைக் கொண்ட பாட்டு. வீடே சோம்பலாக இருந்தது. சாண்டி டீம் மெல்ல எழுந்து ஆட ஆரம்பித்தது. சிம்பு பாணியில் தரையில் சர்க்கஸ் வேலையெல்லாம் செய்து காண்பித்தார் தர்ஷன்.

தலைவர் போட்டியில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்கிற முடிவை பிக்பாஸிடம் தெரிவித்தார் வனிதா. தலைவராக இருக்கும் போது அவர் சில விஷயங்களை வலியுறுத்துவதால் ‘நட்பு’ கெடுகிறதாம்.

‘நட்பு வேறு.. போட்டி வேறு’ என்று பல நாட்களாக மற்றவர்களுக்கு பாடம் எடுத்தவர் இவர்தான். தனிமனித உணர்வுகளைக் கூட இவர் கணக்கில் எடுக்கவில்லை. இதனாலேயே பல சர்ச்சைகள் உருவாகின. இப்போது இவரே ‘நட்பு’ கெடுவதால் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்று சொல்வது முரண்.

தலைவராக இவர் ஆனால் நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவாராம். அது பிடிக்கவில்லையாம். அப்படியல்லாமல் மக்களின் ஓட்டு வழியாகத்தான் போட்டியில் நீடிக்க விரும்புகிறாராம். ‘வரணும்.. நீ மறுபடி பன்னீர்செல்வமா வரணும்” என்று நாயகனை ஒரு நிலையில் நிறுத்தி பிறகு போட்டி போட விரும்புகிற வில்லன் போல் வனிதா நடக்க முயற்சிப்பது நிச்சயம் சவால்தான்.

ஆனால் – உடல் வலிமை தேவைப்படும் போட்டியென்றால் தன்னால் அதில் ஜெயிக்க முடியாதென்று வனிதாவிற்கு நன்கு தெரியும். எனவே தோல்வி நிச்சயம். போலவே தன்னைப் பேச விடாமல் கேலிக்கூச்சல்கள் எழுப்புகிற மக்களின் அதிருப்தியும் நன்கு தெரியும்.

ஏதாவது ஒரு தியாக நாடகம் ஆடலாம் என்று ஆடிப்பார்க்கிறார் என்று தோன்றுகிறது. கல்லெறிந்து பார்ப்போம், வந்தால் பழம், போனால் கல்’ என்கிற உத்தி.

பாய்ஸ் டீமின் ஆதிக்கம் இருக்கிற தற்போதைய சூழலில், அவரால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். எனவேதான் ‘சேரன் அண்ணா.. இல்லையே.. மோகன் அண்ணா இல்லையே’ என்று பாவனையாக அனத்துகிறார்.

‘நீங்கள் போட்டியில் கலந்து கொண்டுதான் ஆக வேண்டும்’ என்று பிக்பாஸ் வற்புறுத்தவே, வேண்டாவெறுப்பாக வந்தார் வனிதா. தண்ணீர் நிரம்பிய கோப்பைகளை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு அரை மண்டியில் (half squad) நிற்க வேண்டும். யார் அதிக நேரம் தாக்குப் பிடிக்கிறாரோ, அவரே இந்த வார தலைவர்.

‘What is அரை மண்டி?” என்று ஷெரீன் மழலை மொழியில் கேட்டுக் கொண்டிருக்க, “நான் கக்கா போயிட்டு வர்றேன்” என்றார் தர்ஷன். “அந்தப் பொஷிஷன்ல நின்னா தானா வந்துடும்” என்று ‘உவ்வேக்’ கமெண்ட் அடித்தார் கவின்.

போட்டி துவங்கிய அடுத்த நொடியே கோப்பைகளை வைத்து விட்டார் வனிதா. ‘என்னால் விளையாட முடியாது’ என்று அவர் சொன்னது கூட சரி. ஆனால் ‘நான் விட்டுத் தர்றேன்” என்றதுதான் காமெடி. (இதுக்குத்தான் எங்கூர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க…)

IMAGE_ALT

வனிதாவின் செய்கை தர்ஷனை கடுப்பாக்கியிருக்க வேண்டும். எனவே தானும் கோப்பையை வைத்து போட்டியிலிருந்து விலகினார். ‘கால் வலிக்குது” என்று அவர் சொல்லும் காரணம் போலித்தனமானது என்று எல்லோருக்கும் தெரியும்.

‘விட்டுத் தரும் வெற்றி தேவையில்லை’ என்று சொல்லும் அவரே இப்படி நடந்து கொள்வது முறையற்றது. இதை பலரும் சுட்டிக் காட்டினார்கள்.

ஆக லொஸ்லியாதான் இந்த வார தலைவர். ஏறத்தாழ இலவசமாக கிடைத்த இந்த வெற்றியை லியாவால் ருசிக்கவே முடியவில்லை. “சரி.. கேம்ல போகஸ் செய்யலாம்னு முடிவு பண்ணி வந்தேன். அதுக்குள்ள இப்படி பண்றியே..” என்று தர்ஷனிடம் அவர் கோபித்துக் கொள்வது நியாயமானது.

“இதெல்லாம் ஒரு போட்டியா.. ஃபைனல்ல நான் நிச்சயம் விட்டுத்தர்ற மாட்டேன்” என்று தர்ஷன் கூறுவதும் ஒருவகையில் சரி. லியாவை இந்த வாரம் காப்பாற்றுவதற்காக அவர் செய்த காரியம் இது என்றாலும், போட்டியை சற்று நேரம் இழுத்து விட்டு பிறகு இந்தப் பாவனையை செய்திருக்கலாம். இது லியாவை அவமானப்படுத்தும் விஷயம் என்பது இந்த தியாகத்தின் இடையில் அவருக்குத் தோன்றவில்லை போல.

IMAGE_ALT

“எனக்கு ஃபேஸ்மென்ட் வீக்” என்று தர்ஷன் காமெடி செய்தாலும் அண்ணனின் பாசத்தைக் காட்டுவதற்கான முறை இதுவல்ல. “இந்த வாரம் உன்னை ஃப்ரூவ் பண்ணு.. நான் எப்படியும் தப்பிச்சுடுவேன். என்று பிறகு லியாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் தர்ஷன். தங்கையை ஒரு வாரமாவது கேப்டனாக்கி அழகு பார்க்க விரும்புகிறார். மேலும் முந்தைய வாரத்தில் லியாவை நாமினேட் செய்த குற்றவுணர்வும் அவருக்குள் இருந்திருக்க வேண்டும். ‘அவ வேலை செய்ய மாட்டா” என்ற வனிதாவின் முன் லியா நிரூபித்துக் காண்பிக்க வேண்டுமாம்.

இது தட்டில் வைத்து தரப்பட்ட வெற்றி என்றாலும் லியா தன்னை நிரூபித்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. லியா தலைவரானதை சீக்ரெட் ரூமில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சேரன் பெருமையுடன் சிரித்துக் கொண்டார்.

தலைவர் பொறுப்புகளை வனிதா லியாவிடம் வழங்க வேண்டிய நேரம். ஒரு காமெடி காட்சியில் காலில் மோதிரத்தை மாட்டி ‘எடுத்துக்கடா” என்பார் வடிவேலு. அது போல் சாவியை சோபாவின் மீது வைத்து விட்டு “எடுத்துக்க” என்றார் வனிதா. விருதை லியா தூக்கிப் போட்டதற்கு இப்போது பழி வாங்குகிறார் போலிருக்கிறது.

அணி பிரிக்கும் சமயம். “எல்லோரும் எல்லா வேலையும் செய்ய வேண்டும்’ என்ற தலைவர், ‘தினமும் எல்லோரும் பாத்ரூம் போகணும்” என்பது போல் சொன்னார். “அது டெய்லி போய்த்தானே ஆகணும்” என்று சாண்டி சொல்லியிருக்கக்கூடும். பிறகுதான் புரிந்தது ‘பாத்ரூம் க்ளீனிங்கிற்கு தினமும் ஒருவர் போகணுமாம்”

அவரவர்களுக்கான வேலை ஒதுக்கப்படும் போதே ஆயிரம் பிரச்சினைகள் வருகின்றன. இப்படி கல்யாண சாம்பாரில் உப்பு போடுவது போல பணிகளை ஒதுக்கினால் அது வெளங்கினாற் போலத்தான். பிள்ளைப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைத்தால் இப்படித்தான் ஆகும்.

**

நாமினேஷன் படலம் ஆரம்பித்தது. ‘என்னைத்தான் குத்துவாங்க” என்று வனிதா எதிர்பார்த்தது வீண் போகவில்லை. கல்யாணத்தில் அப்பளம் போடுவது போல வந்தவர்கள் எல்லோருமே வரிசையாக ‘வனிதா.. வனிதா’ என்றார்கள். கேட்க காதிற்கு குளிர்ச்சியாக இருந்தது.

தலைவரான லியா பெயரையும், ஏற்கெனவே எவிக்ஷன் பட்டியலில் நேரடியாக இடம் பெற்று விட்ட கவினையும் நாமினேட் செய்ய முடியாது. எனவே பட்டியல் இன்னமும் சுருங்கி விட்டது.

தர்ஷனின் பெயரை வனிதா சொல்லுவார் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் ஷெரீனின் பெயரையும் சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். ‘மாற்றி மாற்றி பேசுகிறாளாம்’.

IMAGE_ALT

தர்ஷனுடன் தொடர்புப்படுத்தி பேசி காரெக்ட்டர் அஸாஸினேஷன் செய்து டார்ச்சர் செய்த வனிதாவை நாமினேட் செய்தார் ஷெரீன்.

கவின் ஷெரீனை நாமினேட் செய்தார். “தர்ஷன்தான் என் கிட்ட வந்து பேசறான்” என்று ஷெரீன் புறம் பேசியதை இவர் தற்செயலாக ஒட்டுக் கேட்க நேர்ந்ததாம். இதெல்லாம் உட்டாலக்கடி. ‘பாய்ஸ் டீமை’ விட்டுத்தர விரும்பவில்லை என்பதே உண்மை.

வனிதாவை, தர்ஷன் நாமினேட் செய்வார் என்பதும் எதிர்பார்த்ததே. ‘கடுமையான போட்டியாளர்’ என்று அடுத்ததாக சாண்டியை நாமினேட் செய்கிறாராம். (நம்பிட்டோம்!). எனில் இவர் முகினைத்தான் செய்திருக்க வேண்டும். ‘நம்பிள்கி. நிம்பிள்கி’ என்பது போல ‘வனிதாக்கி’ நாமினேட் செய்தார் லியா.

அதிகபட்சமாக ஆறு வாக்குகளைப் பெற்று இதர போட்டியாளர்கள் அனைவராலும் நாமினேட் செய்யப்பட்ட சாதனையைப் படைத்தார் வனிதாக்கா.

ஆக …இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் இருப்பவர்கள் கவின், வனிதா, தர்ஷன், ஷெரீன் மற்றும் சாண்டி. தப்பித்தவர் முகின் மட்டுமே.

‘ஒரு சின்னத் தாமரை’ பாடலை கொத்துப் பரோட்டா போட்டு சாண்டி பாடிக் கொண்டிருக்க ‘சாண்டி.. நீங்க பாடறது கேட்கணும்னா.. உங்க மைக்கை சரியா மாட்டுங்க” என்று சிஷ்யப்பிள்ளையை கலாய்த்து காமெடி செய்தார் பிக்பாஸ். மற்றவர்கள் துள்ளிக்குதித்து இந்தக் கேலியைக் கொண்டாடினார்கள். ‘தல.. எழுபத்தெட்டாவது நாள்ல.. வந்து காமெடி பண்றியே” என்றார் கவின்.

**

அடுத்து நடந்தது ஒரு ஜாலியான டாஸ்க். மியூசிக்கல் சேர் மாதிரியான போட்டி. இசை நிற்கும் போது பந்து யாரிடம் இருக்கிறதோ, அவர் குடுவையில் இருந்து ஒரு சீட்டை எடுத்து வாசிக்க வேண்டும். அதில் இருக்கும் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.

பிக்பாஸ் அறிவிப்பு உள்ளிட்டு திடீரென ஏதாவது சத்தம் வந்தால் ஜெர்க் ஆவதை வழக்கமாக வைத்திருக்கும் லியா, பாட்டுச்சத்தம் வந்ததும் சின்னப்பிள்ளை மாதிரி அலறினார்.

இசை நின்று பந்து முதலில் தங்கியது சாண்டியிடம். குருநாதரின் கலாய்ப்பு வேலை இது என்று அனைவருக்கும் தெரிந்தது. சிரித்துத் தீர்த்தார்கள். சாண்டி எடுத்த சீட்டின் படி ஒரு கோப்பை ஐஸ்கீரிமை ஒருவர் தின்று தீர்க்க வேண்டுமாம். லியா இதற்கு முன் வந்து கால்வாசியிலேயே மூச்சு வாங்கி தோற்றுப் போனார். தர்ஷனாக இருந்திருந்தால் சில நிமிடங்களில் காலி செய்திருப்பார்.

அடுத்த முறை பந்து வனிதாவிடம் தங்கியது. உப்பு போட்ட காஃபியை குடிக்க வேண்டுமாம். தர்ஷன் இதற்கு முன்வந்தார். வனிதா சொன்னது போல இதர தண்டனைகள் இதை விடவும் மோசமாக இருக்குமோ என்று பலாப்பழ ஜோக் அவருக்கு நினைவிற்கு வந்திருக்கலாம். கண்ணை மூடிக் கொண்டு மருந்து மாதிரி குடித்து முடித்தார். (பெரும்பாலான கணவன்மார்களுக்கு இது தினசரி பழக்கமாக இருக்கும்). ‘உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்’ என்கிற பழமொழியையும் உண்மையாக்கினார் தர்ஷன்.

கவினின் முறை வந்த போது அது சாண்டிக்கு ‘ஐஸ் பக்கெட் சாலென்ஜ்’ ஆக முடிந்தது. அடுத்தது ஷெரீன். ‘பத்து முட்டைகளை ஒருவரின் தலையில் உடைக்க வேண்டுமாம்.’ இதற்கு முன் வந்தவர் கவின். முட்டைக்கும் வலிக்காமல் கவனின் மண்டைக்கும் வலிக்காமல் ‘உலக அமைதி’ ஆம்லேட் போட்டார் ஷெரீன். என்ன இருந்தாலும் தேவதை அல்லவா? கருணை கன்னாபின்னாவென்று பெருகி வந்தது. ‘நச்சுன்னு போட்டு உடைங்க” என்று மற்றவர்கள் கத்திக் கொண்டிருந்தார்கள்.

“ஸாரி கவின்” என்று ஷெரீன் சிணுங்க.. ‘ஸாரிக்கு வேல்யூ’ ன்னு சொன்னீங்களே.. என்று முன்னர் நிகழ்ந்த பட்டிமன்ற விவாதத்தையொட்டி மிகச்சரியாக டைமிங்கை கவின் பிடிக்க, துள்ளிக்குதித்து கைத்தட்டி சிரித்தார் லியா. (கள்ளப்பயல்.. இந்த மாதிரி கமெண்ட் அடிச்சே பொண்ணுங்களை கவுத்துடறான் போல!).

முட்டை அபிஷேகத்தால் நிரம்பிய கவினின் மண்டையைக் கழுவ உதவி செய்தார் லியா. (இப்பவே வீட்டுக்காரம்மா தோரணை வந்துடுச்சு!).

அடுத்த பந்து முகினுக்கு வந்தது. ஒரு கோப்பை வறுத்த கோழியை ஒருவராக தின்றுத் தீர்க்க வேண்டுமாம். ‘மச்சான்.. என்னை செலக்ட் பண்ணுடா” என்று இளித்தபடி கேட்டார் தர்ஷன். முகின் அதற்கு சம்மதிக்க ‘கல்யாண சமையல் சாதம்’ உற்சாகத்துடன் களத்தில் இறங்கினார் தர்ஷன். உப்பு காப்பிக்கு பிறகு எப்படி இதையும் உள்ளே தள்ள முடியும்?

சந்தடி சாக்கில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார் முகின். பாவம். சிக்கன் பிரியரான சாண்டி, ஒரக்கண்ணால் பார்த்து பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார். ஒருவழியாக சாப்பிட்டு முடித்த தர்ஷன் காமிராவைப் பார்த்து ‘தல.. தரமான சம்பவம். டெய்லி இப்படி அனுப்புங்க” என்று கொஞ்சிக் கொண்டிருக்க, “ஏண்டா.. சிக்கன் பத்தலையா.. ஆடு வேணுமா?” என்று ஜாலி கமெண்ட் அடித்தார் கவின்.

அடுத்த பந்து லியாவிற்கு வந்தது. அவர் எடுத்த சீட்டின் படி ஒருவரின் கைகள் முழுவதும் கிளிப்களை போட வேண்டுமாம். “நீ போ” என்று முகினைத் தள்ளி விட்டார் வனிதா. சிறுபிள்ளைத்தனமான தண்டனை.

கடைசியாக எஞ்சியவர் தர்ஷன். அவர் எடுத்த சீட்டின் படி ஒருவரின் முகத்தில் கறுப்பு நிற வர்ணத்தை பூச வேண்டும். இதற்கு வேறு யாரை அவர் தேர்ந்தெடுப்பார்? ஆம். ஷெரீன். மைதா மாவின் மீது தார் பூசியது போல் இருந்த ஷெரீனைப் பார்த்து ‘ஆமா. ஷெரீன் எங்க காணோம்?” என்று கிண்டலடித்தார் சாண்டி.

ஆக விளையாட்டு முடிந்தது. கிளிப் டாஸ்க்கில் முகினைத் தள்ளி விட்ட வனிதா, இப்போது ‘ஏய்.. எனக்கொன்னும் இல்லையா?” என்று பாவனையாக சிணுங்கியது நல்ல காமெடி. அவரிடம் விளையாட மற்றவர்கள் தயங்கியிருக்க வேண்டும் அல்லது ‘எதுக்கு இதோட மல்லுக் கட்டணும்” என்று ஒதுங்கியிருக்க வேண்டும்.

**

“யாரும் சாப்பாட்ல கை வெக்காதீங்க.. அதுல வெஷம் கலந்திருக்கு” என்று ஒருவர் கத்திக் கொண்டு வருவதைப் போல சில சினிமாக்காட்சிகள் வரும். அது போல ‘யாரும் சாப்பிடாதீங்க. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்” என்று பிக்பாஸின் குரல் வந்ததுமே அனைவருக்கும் புரிந்து போயிற்று.

சிஷ்யப்பிள்ளை சாண்டி, சிக்கனை ஒரக்கண்ணால் பார்த்து ஏங்கியது பிக்பாஸின் மனதை நோகடித்திருக்க வேண்டும். எனவே சிக்கன் அனுப்ப முடிவு செய்து விட்டார். “சரி அழாதடா. கிண்டர்ஜாய்தானே.. வாங்கித் தர்றேன்” என்று டாடியால் சொல்லப்பட்ட எல்கேஜி பையன் மாதிரி தரையில் தவழ்ந்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார் சாண்டி.

“இதுக்கு இல்லையா.. சார். ஒரு எண்டு” என்பது மாதிரி லியாவிடம் காதல் கடலையை தீயத் தீய வறுத்துக் கொண்டிருந்தார் கவின். ‘பர்த் கன்பர்ம்’ என்பது புரிந்து விட்டாலும் அதை காதலியின் வாயால் சொல்லச் சொல்லி மீண்டும் மீண்டும் கேட்பதில் ஆண்களுக்கு ஒரு இன்பம். எனவே ‘நான்கெழுத்து’ வார்த்தையை சொல்லச் சொல்லி லியாவை நச்சரித்தார். (நல்லவேளை. லியா கெட்ட வார்த்தை ஏதும் சொல்லி விடவில்லை). ‘இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். விளையாட்டில் கவனம் செலுத்துவோம். அதைத்தான் மத்தவங்க எதிர்பார்க்கறாங்க. பாக்கியெல்லாம் வெளில போய் பேசுவோம்” என்று திரும்பத் திரும்ப வெட்கப்பட்டு கூறினார் லியா. மிக க்யூட்டாக தெரிந்த காட்சி அது.

சீக்ரெட் ரூமில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த சேரனுக்குள் இருந்த ‘தந்தை’ உக்கிரமாக எழுந்து கொண்ட தருணம் அது. “இதைப் பத்தி கேம் முடியற வரைக்கும் பேச மாட்டோம்னு ரெண்டு பேரும் சத்தியம் பண்ணாங்க.. இந்தக் கவின் பய நாமினேஷன்ல இருந்து தப்பிக்க லியாவை யூஸ் பண்றான். மக்களே பார்த்துக்கங்க” என்று போட்டுக் கொடுத்தார்.

சிக்கனுக்காக காத்திருந்து எதிர்பார்த்து சோர்ந்து அமர்ந்திருந்த சமயத்தில் அலார்ம் பெல் கேட்டது. எல்லோரும் பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள். மற்றவர்கள் ஓடியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் ஒரு முழு கோப்பையை முழுங்கிய தர்ஷனும் ஓடியது அநியாயம். அதன் பிறகும் வரிசையில் நின்று தனக்கான பங்கை வாங்கினார்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE