Thursday 28th of March 2024 12:33:36 PM GMT

LANGUAGE - TAMIL
வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இலங்கை ஆமை வேகத்தில் நகர்வதாக ஐ.நா.குற்றச்சாட்டு!

வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இலங்கை ஆமை வேகத்தில் நகர்வதாக ஐ.நா.குற்றச்சாட்டு!


ஐ.நாவுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை மிகத் தாமதமாகவே நகர்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை விவகாரம் தொடர்பான விடயங்களை கையாளும் சிறப்புக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான விடயங்ளை ஆராயும் மனித உரிமைகள் பேரவை முக்கிய குழுவின் உறுப்பினர்களாக உள்ள கனடா, ஜெர்மனி வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் பிரிட்டன் பிரதிநிதிகள் சார்பில் இந்த அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் நல்ல நோக்கங்களை பிரதிபலிக்கும் வகையில் 2015 முதல் இலங்கையில் பல முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக உள்நாட்டு நடவடிக்கைக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என பிரிட்டன் சார்பில் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இலங்கை இராணுவத்தின் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து அந்தக் குழு கவலை தெரிவித்துள்ளது.

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது. அத்துடன் நல்லிணக்க முயற்சிகளை வலுவற்றதாக்குகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் அமைதி, நல்லிணக்க முயற்சிகளுக்கு உதவும் கொள்கையில் பிரிட்டன் தொடர்ந்தும் உறுதியுடன் உள்ளது என பிரிட்டனின் மனித உரிமைகளுக்கான சர்வதேச தூதர் ரீட்டா பிரஞ்சு, பேரவையில் அறிக்கையை சமர்ப்பித்துப் பேசும்போது குறிப்பிட்டார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்ட இலங்கை பற்றிய அறிக்கை விபரம் வருமாறு,

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் முக்கிய குழுவின் உறுப்பினர்களாக உள்ள கனடா, ஜெர்மனி வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் பிரிட்டன் பிரதிநிதிகள் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முக்கிய பொறுப்பை இலங்கை ஏற்றுக்கொண்டு நான்கு ஆண்டுகளாகின்றன.

ஆறு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 40/1 அமர்வில் தனது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என இலங்கை மீண்டும் உறுதியளித்தது.

இலங்கை தனது மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவது நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு இன்றியமையாதது என இலங்கை தொடர்பான ஐ.நா. குழு நம்புகிறது.

2015 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் முக்கியமான சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவை அரசாங்கத்தின் நல்ல நோக்கங்களை வெளிப்படுத்துகின்றன. சில முக்கிய உள்நாட்டு செயற்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், பல விடயங்களில் முன்னேற்றத்தின் வேகம் மெதுவாகவே உள்ளது, அதிகாரத்துவக் கட்டுப்பாடுகள் முன்னேற்றத்துக்குத் இடையூறாக உள்ளன.

அண்மைய தீர்மானத்தில் இலங்கையின் வாக்குறுதிகளின் படி உறுதியான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்குமாறு இலங்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஊக்குவித்தது.

இலங்கை இதற்கு முன்னுரிமை அளிக்கும் என்று நம்புகிறோம்.

இலங்கை இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது நீதி மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் இலங்கையின் உறுதிப்பாட்டை கடுமையாக சமரசம் செய்கிறது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஒகஸ்ட் 19 ஆம் திகதி வெளியட்ட அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நடவடிக்கை நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கும் என அவர் கவலை வெளியிட்டிருந்தார். அவரது அந்தக் கவலையை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டில் இலங்கை உறுதியுடன் இருப்பது அந்நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று எமது குழு நம்புகிறது.

மனித உரிமைகள் பேரவை பல ஆண்டுகளாக இலங்கையின் நிலைமைகளை அவதானித்து, கடந்த காலத்தின் கடுமையான மீறல்களைக் கட்டுப்படுத்துவதில் அத்தியாவசிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

ஆனால் இந்தப் பணி முழுமையடையாமல் உள்ளது. இது குறித்து தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்கான பாதையில் தொடர்ந்தும் இந்த சபையும் சர்வதேச சமூகமும் இலங்கைக்கு தேவையான கவனத்தையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவது மிக முக்கியம் என எமது குழு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரை கேட்டுக்கொள்கிறது.- என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE