Friday 29th of March 2024 09:53:45 AM GMT

LANGUAGE - TAMIL
‘அண்ணா.. அண்ணா.. – வனிதா: ‘தங்கச்சி..தங்கச்சி’ -  சேரன்’ - சுரேஷ் கண்ணன்

‘அண்ணா.. அண்ணா.. – வனிதா: ‘தங்கச்சி..தங்கச்சி’ - சேரன்’ - சுரேஷ் கண்ணன்


முன்பக்கமும் பின்பக்கமும் தேய்த்துக் கொள்ளும் நடன அமைப்பைக் கொண்ட பாடலைப் போட்டார்கள். காலைக்கடன்களை முடிக்க வேண்டிய நேரத்தில் இந்தப் பாடலைப் போடுவது பொருத்தமானதுதான். வீடே மெல்ல சோம்பல் முறிக்க, ‘பின்பக்க தேய்த்தல்’ காட்சியைப் பார்க்க முடியாதோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது லியா, ஷெரீன், முகின் ஆகியோர் இணைந்து இந்த மூவ்மெண்டைப் போட்டு அந்தக் குறையைப் போக்கினார்கள்.

காதல் நுழைந்து விட்டால் நட்பு வெளியேறி விடும் ஆபத்து எப்போதும் உள்ளதுதான். அதற்கான உதாரண காட்சி ஒன்று நடந்தது.

காஃபி குடித்து முடித்ததும், வேலைக்கு வரச் சொல்லி சாண்டியை அழைத்தார் புதிய தலைவரான லியா.

“இந்தப் பிள்ளைப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்-னு யார் நெனச்சா?” என்ற மைண்ட் வாய்ஸூடன், “இத்தனை வாரம் காஃபி குடிச்சிட்டு ரொம்ப நேரம் எங்க கூடத்தானே மொக்கை போட்டுட்டு இருப்பே.. திடீர்னு என்ன இன்னிக்கு ஞானோதயம்?” என்பது போல் கொஞ்சம் சீரியஸூம் நிறைய ஜாலியும் கலந்து சாண்டி கேட்க “சரி.. நீ வரவேணாம் போ” என்பது போல் கோபித்துக் கொண்டது போல் விலகிச் சென்றார் லியா.

IMAGE_ALT

“நீ இப்படித்தான் எதையாவது சொல்லி மத்தவங்களை ஹர்ட் பண்ணிடறே..:” என்று சங்கடப்பட்டார் கவின். இந்தக் குழு இத்தனை நாட்களாக மற்றவர்களை கலாய்த்த போது நேராத சங்கடம் இப்போதுதான் கவினுக்கு வந்திருக்கிறது. காரணம் காதல். “டேய்.. நாம் சும்மா நான் ஜாலியாத்தாண்டா சொன்னேன்” என்று சாண்டி சொன்னதையும் கவின் ஏற்றுக் கொள்ளவில்லை.

லியாவுடனான உறவை கவின் போலியாகத்தான் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்கிற மாதிரி எழும் விமர்சனங்களுக்கு எதிராக இருக்கிறது இந்தக் காட்சி. கவின் அப்படி நடிக்கிறவர் என்றால், லியா எழுந்து சென்ற பிறகு சாண்டியின் கிண்டலுக்கு உடன்பட்டிருக்கலாம். ஆனால் நெருக்கமான நண்பனிடமும் அவர் கோபித்துக் கொள்கிறார் என்றால் அவரது காதல் ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. என்றாலும் இந்த விளையாட்டு முடிந்த பிறகுதான் அவர்களின் காதல் விளையாட்டா இல்லையா என்பது தெரியும்.

பிறகு எழுந்து சென்ற சாண்டி, சமையல் பகுதியில் இருந்த லியாவிடம் மன்னிப்பு கேட்க “இதுக்கெல்லாம் ஸாரி சொல்லத் தேவையில்லை” என்பது போல் எளிதாகவே எடுத்துக் கொண்டார் லியா.

“அந்தப் பொண்ணு.. இப்பத்தான் கேப்டன்சி ஜெயிச்சு வந்திருக்கு. அதுவும் தர்ஷன் விட்டுக் கொடுத்தான்-ற மாதிரி கில்ட்டில வேற இருக்கு. அது வேலை செய்யறதில்லைன்னு மத்தவங்க வேற தொடர்ந்து சொல்லிட்டு இருந்தாங்க. நீயும் அந்த மாதிரி சொல்றது சரியா.. நாம எங்கயாவது ஜாலியா சொல்லிட்டுப் போறது என்ன ஆகுதுன்னா. வேற எங்கயாவது பயங்கரமா பத்திக்குது” என்று கேயாஸ் தியரியின் உதாரணத்தோடு சாண்டியிடம் வருத்தப்பட்டார் கவின்.

**

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் பற்றிய அறிவிப்பு வந்தது. சுவாரசியமான திருப்புமுனைகள் இருக்கும் என்று சொல்லப்பட்ட போதே மக்கள் புரிந்து கொண்டு ஆரவரித்தார்கள். சாண்டி டீம் ஒருவரையொருவர் துரத்தி, கடித்து விளையாடியது. ‘இருங்கடா.. டேய்.. முழுசா சொல்லி முடிக்கட்டும்.. பார்ப்போம்” என்று அவர்களின் ஆவலில் மண்ணைப் போட முயன்றார் வனிதா. Freeze task என்று பிறகு அறிவிக்கப்பட்டவுடன் அவர்களின் உற்சாகம் உறுதியாயிற்று.

எல்லோரும் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்த போது எல்லோரையும் ஃப்ரீஸ் செய்தார் பிக்பாஸ். பிறகு சாண்டியை மட்டும் ரிலீஸ் செய்தார். ஒவ்வொருவரையாக நெருங்கிச் சென்று கலாய்த்த சாண்டி, சுவரில் இருந்த சிலைக்குப் போட்டியாக இன்னொரு சிலையாக (ofcourse கொஞ்சம் பெரிய சிலை) நின்று கொண்டிருந்த வனிதாவை, ‘வனிதாமணி.. வனமோகினி’ பாட்டு பாடி கிண்டல் செய்தார்.

இதை சீக்ரெட் ரூமில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சேரன் “அருமை. வனிதா.. ரொம்ப அழகா இருக்கே” என்று பெருமையுடன் பாராட்டினார். (அப்ப அடுத்த படத்தோட ஹீரோயின் வனிதாவா?.. பாவம்யா.. விஜய் சேதுபதி?!).

ஷெரீனின் தலைமுடியை தாறுமாறாக கலைத்து விட்டு பயங்கரமாக லொள்ளு பண்ணிய சாண்டியை ஃ.ப்ரீஸ் செய்தார் பிக்பாஸ். மற்றவர்கள் ரிலீஸ். பழிவாங்கும் படலம். சாண்டியின் முடியைக் கலைத்து சட்டையை உருவி ஜாலியாக மானபங்கப்படுத்தினார்கள் இதர போட்டியாளர்கள்.

சிறிது நேரம் கழித்து எல்லோரும் ஃப்ரீஸ் என்ற அறிவிப்பு வந்த போது தெரிந்து போயிற்று. எவருடைய உறவினரோ வரப் போகிறார்கள் என்பது.

விஜய் டிவியில் பல நூற்றாண்டுகளாக ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் டெம்ப்ளேட் பாடல் ஒன்றை ஒலிக்க விட்டார்கள். “ஆராரிராரோ.. நானிங்கு பாட.. தாயே.. நீ கண்ணுறங்கு” என்ற பாடல் ஒலித்தது. முகினுக்கு அப்போதே தெரிந்து போயிற்று. தன் அம்மா வரலாம் என்று. அவர் எதிர்பார்த்தது போலவே, அவரின் அம்மா உள்ளே வர, “டாஸ்க்காவது மண்ணாங்கட்டியாவது” என்று உதறி விட்டு உடனே ஓடி தாயைக் கட்டியணைத்துக் கொண்டார் முகின்.

IMAGE_ALT

சீக்ரெட் ரூமில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த சேரன் நெகிழ்ந்து கண்கலங்கினார். (அடுத்த படத்துல இப்படியொரு காட்சி வெச்சிடணும்! தாய்ப் பாசத்துல நம்மளை மிஞ்சிடுவான் போலிருக்கே!).

முகினின் குடும்பத்தில் ஒருவரை நீண்ட நாள் கழித்து சந்தித்தால் அவரை தலைக்கு மேல் தூக்குவதுதான் பொதுவான வரவேற்பு முறை போலிருக்கிறது. அம்மாவையும் பிறகு வந்த தங்கையையும் தூக்கி விளையாடினார் முகின்.

கண்ணீருடன் மகனைக் கட்டிக் கொண்ட முகினின் அம்மா, பிறகு எல்லோரையும் கட்டியணைத்தார். ‘நீ ரொம்ப அழகா இருக்கேம்மா” என்று வனிதாவிடம் அவர் சொன்னவுடன் காலில் விழுந்து ஆசி வாங்கினார் வனிதா. ஆனால் முதலிலேயே சட்டென்று காலில் விழுந்தார் சமர்த்துப் பிள்ளையான தர்ஷன்.

கைவினைக்கலைஞரான முகின், ஹார்ட் வடிவில் செய்திருந்த துணியை அம்மாவிற்கு பரிசளித்தார். (நைனா ஷார்ட்ஸ்-ல இருந்து கட் பண்ணினதா?!). “எல்லோரும் உன்னை விசாரிச்சாங்க” என்று முகினின் அம்மா சூசகமாக ஏதோ சொன்னது முகினின் கேர்ள் பிரெண்ட் பற்றியதாக இருக்கலாம். “ஆத்தா.. ஜூஸூ குடிச்சு மெளன விரதத்தை துவங்கு ஆத்தா” என்று காமெடி செய்தார் முகின்.

“75 நாளா யாரையும் பார்க்காம இருக்கோம். உங்களைப் பார்த்தா எங்க ஃபேமிலியைப் பார்த்த மாதிரியே இருக்கு” என்று கலங்கினார் ஷெரீன். உண்மைதான். இதை நம்மால் உணர முடிகிறது. இந்த vibe அங்கிருந்த அனைவரிடமும் பரவியிருப்பதை பார்க்க முடிகிறது.

தான் கட்டில் உடைத்த விஷயத்தை ஏதோ உலக சாதனையாக முகின் நினைத்துக் கொண்டிருக்கிறார் போல. ஏதோ சுற்றுலா தளம் போல வருகிறவர்கள் அனைவரிடமும் அதை பெருமையாக காட்டிக் கொண்டிருக்கிறார். (“இதைச் சரி செய்ய கார்ப்பெண்ட்டர் அஞ்சாயிரம் ரூவாய்க்கு எஸ்டிமேஷன் கொடுத்திருக்காண்டா.. பாவி!” என்று பிக்பாஸ் உள்ளே கதறிக் கொண்டிருக்கலாம்).

முகின் மற்றும் அவரின் தாய்க்குப் பின்னால் பூனைக்குட்டி மாதிரி சுற்றிக் கொண்டிருந்த சாண்டியை வனிதா அழைத்தார். “அவங்க தனியா பேசட்டும். நீ இங்க வா” என்கிற அழைப்பு.

கார்டன் ஏரியாவிற்கு அம்மாவை அழைத்துச் சென்ற முகின், அவரின் கழுத்தை இறுக்கக் கட்டிக் கொண்டு ‘பிக்பாஸ்.. போட்டோ எடுங்க” என்று கேட்க, முகினின் இறுக்கத்தைத் தாங்க முடியாமல், “டேய் கழுத்துடா..” என்று ஜாலியாக அலறினார் அம்மா. (போட்டோ எடுக்கலாம்-னு சொல்லி போட்டோக்குள்ளேயே அனுப்பிடுவான்’ போலிருக்கு என்று அவர் நினைத்திருக்கலாம்). ‘அய்யோ. ஆத்தாவை கொல்லப் பார்த்தேனே” என்றார் முகின்.

முகினின் குடும்பத்தைப் பார்த்தால் பாலாவின் படத்தில் வரும் முரட்டுத்தனமான குடும்பம் போல் காட்டுத்தனமாக பாசத்தைப் பொழிந்து கொள்கிறார்கள். பார்க்கவே ஜாலியாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது.

இதற்கிடையில் ஸ்டோர் ரூம் வழியாக ‘சர்ப்ரைஸ் எண்ட்ரி’ கொடுத்தார் முகினின் தங்கை ஜனனி. “டேய் முகினு…” என்று எல்லோரும் ஆரவரிக்க என்னமோ ஏதோவொன்று பதறியடித்துக் கொண்டு உள்ளே வந்தார் முகின்.

IMAGE_ALT

தங்கையைப் பார்த்ததும் அவரையும் உற்சாகமாக தூக்கிக் கொண்டார். ‘இந்த பீஸை நீங்க வெச்சுக்கங்க. நான் இந்த பீஸை தூக்கிட்டுப் போறேன்” என்று அவர் சொன்னது மலேசிய வழக்கில் இயல்பானதொன்றாக இருக்கலாம். ஆனால் இங்கு அதை சற்று நெருடலாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் பாசத்தை எந்த மொழியில் காட்டினால் என்ன?

கன்னடத்திலும் மலாய் மொழியும் கலந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அண்ணனுடன் தனியாகச் சென்ற தங்கை “நீங்க உள்ளே எதெல்லாம் உண்மைன்னு நெனக்கறியோ. அதெல்லாம் உண்மையில்ல. வெளில பொய்-னு நெனக்கறதுதான் உண்மை” என்று கமல்ஹாசனைப் போலவே டிவிட்டர் மொழியில் பேச சற்று திகைத்து நின்றார் முகின்.

பிறகு அவர்களைத் தனியாக பேச விட்டு விட்டு மற்றவர்கள் வெளியே செல்ல “கவனமா விளையாடு.. வெற்றின்றது ஈஸியா கிடைக்காது” என்றெல்லாம் ஒரு தாய்க்கே உரிய கரிசனத்துடன் உபதேசித்தார் முகினின் அம்மா. “சரி.. ஆத்தா” என்றார் முகின். “நீ மத்தவங்களால ஈஸியா இன்ப்ளுயன்ஸ் ஆயிடற” என்று டிப்ஸ் கொடுத்தார் தங்கை.

“லாஸ்லியாவைப் பார்க்கறப்பலலாம் இவ நினைவு வரும்” என்று முகின் சொல்ல.. ‘யாரு.. நானு.. லாஸ்லியா?” என்று சர்காஸ்டிக்கான எக்ஸ்பிரஷனைத் தந்தார் தங்கை.

பிறகு இவர்கள் வெளியே அமர்ந்திருந்த போட்டியாளர்களுடன் இணைந்தார்கள். வீட்டில் வளர்க்கும் பூனைக்குட்டிகளுக்கு சாண்டி டீமின் பெயர் வைத்திருக்கும் விஷயம் தெரிய வந்தது. (வெளங்கிடும்). அண்ணன்கள் மற்றும் அம்மாவிடம் தனித்தனியாக செய்தி அனுப்பி தங்கை பணம் பறித்த ஜாலியான சம்பவங்கள் எல்லாம் பேசப்பட்டன.

“பேபி சாண்டியை’ப் பார்க்க ஆசைப்பட்ட முகினின் அம்மாவிற்காக, ‘மீண்டும் பள்ளிக்கு போகலாம்’ மோடிற்கு மாறினார்கள் சாண்டியும் கவினும். க்யூட்டான காட்சிகளாக அவை இருந்தன. அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த போது விருந்தினர்களைத் தவிர அனைவரையும் ஃப்ரீஸ் செய்த பிக்பாஸ், அவர்களை கிளம்பச் சொன்னார். டாஸ்க்கை மதிக்காமல் அனைவரும் கலைந்து முகினின் அம்மாவை வழியனுப்பச் சென்றார்கள்.

“இங்க எந்த முடிவையும் எடுக்காதே. அவசரப்படாதே. வாழ்க்கையின் முடிவுகளை எடுக்கும் இடம் இது இல்லை’ என்று முகினின் அம்மா சொன்ன உபதேசம் முகினை விடவும் கவின் –லியாவிற்குத்தான் அதிகம் பொருந்தும். “நேர்மையான பையனைப் பெத்திருக்கீங்க” என்று சான்றிதழ் தந்தார் வனிதா.

அவர்கள் கதவைத் திறந்து வெளியேறும் போது தானும் கூடவே வந்து விடுவதாக காமெடி செய்தார் வனிதா. பிறகு, முகினின் குடும்பத்தினர் எப்படி நடந்து கொண்டார்கள் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மூலம் தங்களின் குடும்பத்தையே பார்த்தது போன்ற உணர்வை அடைந்ததாக சொன்னார்கள்.

“தங்கச்சி எப்படி?” என்று முகின் கேட்ட போது வனிதா சொன்ன பதிலால் பிக்பாஸ் வீடு இடிந்து விழாமல் இருந்ததுதான் ஆச்சரியம். “அரட்டல் கிடையாது. சில பேர் ஓவரா பேசுவாங்க. அந்தப் பொண்ணு அமைதியா இருந்தது. குட்” என்றார். இதைத் தானும் பின்பற்ற முயற்சிக்கலாம்.

**

அடுத்ததாக ஒரு விளையாட்டு டாஸ்க். வீட்டின் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து விளையாட வேண்டும். ஏறத்தாழ கூடைப்பந்து விளையாட்டு. பந்து போட வேண்டியது தரையில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில். லியா இதன் நடுவர்.

“டாஸ்க் வந்தா விட்டுத்தர்ற மாட்டேன்” என்று சொன்ன தர்ஷன் சொன்னதுபடியே ஆவேசமாக விளையாடினார். வனிதாவும் ஷெரீனும் பந்துக்காக குழாயடிச் சண்டை போல ஜாலியாக சண்டை போட்டுக் கொண்டார்கள். இறுதியில் வனிதா டீம் வெற்றி பெற்றது.

இதுவரை சீக்ரெட் ரூமில் இருந்தவர்களுக்கு இப்படியொரு வாய்ப்பு தரப்படவில்லை. தமிழில் இது முதன்முறை. சேரனுக்கு அப்படியொரு வாய்ப்பு தரப்பட்டது. அவர் மூன்று கேள்விகளை மூன்று போட்டியாளர்களிடம் கேட்கலாம்.

முதல் கேள்வி லியாவிற்கு. “நான் வெளியே போனப்புறம் எப்பவாவது என்னை நினைச்சுப் பார்த்தியா?” என்று தன் மனத்தாங்கலைக் கொட்டியிருந்தார் சேரன். “அப்பா.. உன்னை நினைக்காத நாளில்லையே” என்று பாடல் பாடி உருகினார் லியா.

IMAGE_ALT

அடுத்த கேள்வி கவினுக்கு. “லவ் விஷயமா எதுவும் பேச வேண்டாம்னு சொல்லிட்டு வந்தேன். ஆனா நீங்க ஒத்துக்கச் சொல்லி நெருக்கடி தர்றீங்க. இதை நிறுத்துவீங்களா?” என்பது மாதிரியான கேள்வி.

(‘ஆலோசனை சொல்லலாம். அதற்குப் பிறகு அது அவர்களின் சுதந்திரம்” என்று எப்போதும் சொல்கிற பெருந்தன்மையாளரான சேரன், இப்படி இவர்கள் விஷயத்தில் தொடர்ந்து மூக்கை நுழைக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. அவரே சொன்னது போல் மக்கள் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முடிவு எடுப்பார்கள். மட்டுமல்லாமல் கவினும் லியாவும் மேஜர்கள். உண்மையான வாழ்க்கையிலேயே பிள்ளைகளின் வாழ்வில் ஓரளவிற்குத்தான் பெற்றோர்கள் தலையிட முடியும் என்றிருக்கும் போது சீக்ரெட் ரூமில் உட்கார்ந்து கொண்டு சேரன் இவர்களைக் கட்டுப்படுத்த முயல்வது அவர்களின் மீதான அக்கறையினால்தான் என்பது புரிந்தாலும் அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கிறது.)

“ஸ்டாப் பண்ணுவேன். அதைப்பத்திதான் பேசிட்டு இருந்தேன்” என்றார் கவின். (அடப்பாவி! கேமே முடியப் போகுதடா.!). “நான் அப்படியெல்லாம் நெருக்கடி தரலை. ரெண்டு பேரும் இதை தெளிவா பேசியிருக்கோம். டாஸ்க் சமயத்துல எல்லாம் கவனம் செலுத்திட்டுதான் இருக்கோம்” என்றார் கவின்.

மூன்றாவது கேள்வி வனிதாவிற்கு: “அன்புத்தங்கையே! (கடவுளே..! முடியல!) நான் வெளியே வந்து விட்ட பிறகு உன்னிடம் நிறைய நல்ல மாற்றங்கள் தெரிந்தன. தானும் குழம்பி பிறரையும் குழப்பாமல் சுருக்கமாகப் பேசுகிறாய். நல்ல மாற்றம். இதைத் தொடர்வாயா?’ என்றிருந்தது.

(‘நட்பு வேறு.. போட்டி வேறு’ என்று தொடர்ந்து அனத்திக் கொண்டிருந்த வனிதா, தலைவர் போட்டியை இடது கையால் அலட்சியமாக செய்தது நல்ல மாற்றமா, சேரன் அவர்களே?!)

“அண்ணே.. புரியதுண்ணே.. வெளிய அமைதியா இருக்கறவங்க.. நாமினேஷன்ல போய் குத்து குத்துன்னு குத்திடறாங்க.. எனக்கு இந்த கேம் புரியலை.. இப்பத்தான் புரிய ஆரம்பிச்சிருக்குது” என்று பாசமழை பொழிந்தார் வனிதா. (எனில் வனிதாவை விட மற்றவர்கள்தான் இந்த கேமை புரிந்து கொண்டு சரியாக ஆடுகிறார்கள் என்றால் வனிதாவின் இதுநாள் வரையான புகார் அனத்தல்கள் அபத்தம் என்றாகி விடுகிறது).

வனிதாவின் பேச்சை கைத்தட்டி வரவேற்றார் சேரன். “நாமினேஷன் விஷயம்லாம் நேத்துதான் நடந்தது. இன்னிக்கு இன்னமும் டெலிகாஸ்ட் ஆகியிருக்காது. பின்னே எப்படி இந்த விஷயம் சேரனுக்கு தெரிந்தது?” என்று மக்கள் மெல்ல விழிக்கத் துவங்கினார்கள். வனிதாதான் இந்தச் சந்தேகத்தை பலமாக எழுப்பினார்.

காமிராவை மறைச்ச பிக்பாஸிற்கு கொண்டையை மறைக்கத் தெரியலையே?! ஒருவேளை இதை அவர்கள் உணரட்டும் என்றுதான் வேண்டுமென்றே செய்தார்களோ என்னமோ!

‘கிழக்குச் சீமையிலே’ ராதிகா மாதிரி ‘எங்க அண்ணன் இங்கதான் எங்கேயோ இருக்காரு.. அண்ணா.. அண்ணா… ‘என்று சினிமா பாணியில் வனிதா கத்த, கதவை உடைத்துக் கொண்டு ‘தங்கச்சி…” என்று சேரன் பாய்ந்து வருவாரோ என்று கலவரமாக இருந்தது.

சேரன் குறிப்பிட்ட விஷயங்கள் தொடர்பான விளக்கங்களை சாண்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் கவின். “வெளில பண்ணப் போற விஷயங்களைத்தான் உள்ளேயும் பண்றேன். நான் உண்மையாத்தான் இருக்கேன்” என்கிற மாதிரி பேசிக் கொண்டிருந்தார். அசோகவனத்து சீதை மாதிரி ஈசான மூலையில் அமர்ந்திருந்த லியாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

வழக்கம் போல் சேரனின் ஆட்சேபம் கவினுக்குள் கடுப்பைக் கிளப்பியிருக்கிறது. பிறகு லியாவுடன் இது குறித்து பேசிக் கொண்டிருந்தார். ‘இது நாம பேசி முடிவு பண்ண வேண்டிய விஷயம். நாம தெளிவா இருக்கோம். வெளில இருந்து ஒருத்தர் நோண்டிட்டே இருந்தா என்ன அர்த்தம். இன்னிக்குத்தான் கொஞ்சம் ஜாலியா இருக்க ஆரம்பிச்சேன். அதுல மண்ணையள்ளிப் போட்டாரே..” என்பது போல் கவின் “மூஞ்சைத் தூக்கி வைத்துக் கொள்ள”, ‘சரி. நாம் கேமுக்குள்ள இறங்கிட்டோம்ல. அதைப் பார்ப்போம்” என்றார் லியா.

ஒரு திரைப்பட இயக்குநராக மனித உணர்வுகளை நன்கு அறிந்திருக்கக்கூடிய சேரன், அசல் வாழ்வில் ஒரு சராசரி நபரைப் போலவே நடந்து கொள்வது சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE