;

Saturday 15th of August 2020 05:18:00 PM GMT

LANGUAGE - TAMIL
சரித்திரம் - ஈழத்துக்குக் கசப்பும் தரும் தமிழகத் தலைமைகள்! -  தி.இளஞ்செழியன்

சரித்திரம் - ஈழத்துக்குக் கசப்பும் தரும் தமிழகத் தலைமைகள்! - தி.இளஞ்செழியன்


சில வேளைகளில் சிலவற்றைப் பேசியாகவேண்டிய கட்டாயத்தை வரலாறு உண்டாக்கிவிடுகின்றது. தமிழினம் மட்டும் அதற்குத் தப்பிவிடமுடியுமா என்ன?

முள்ளிவாய்க்காலிலும் நந்திக்கடலிலும் உறைந்துபோன தமிழீழத் தேசிய இயக்கத்துக்கு, சர்வதேசத்தினது இரண்டகமே படுகுழியை வெட்டியது என்றாலும், உள்ளுக்குள் இருந்துகொண்டே தமிழீழத் தேசியத்துக்கு பாதகமாகச் செயற்படுவதும் கூடிக்கொண்டுபோகிறது.

இரண்டு கிழமைகளுக்கு முன்னர் இலண்டனில் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களில் ஒருவரான தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியதை முன்னிட்டு, புலத்திலும் நாட்டிலும் தமிழ்நாட்டிலும் கருத்துமுட்டல்மோதல் நீடித்துவருகிறது. புலத்தைப் பொறுத்தவரை அங்குள்ள அரசியல் ஜனநாயகக் கருத்துவெளிப்பாட்டுச் சூழலே வேறு தன்மை கொண்டது; அத்தோடு, பல பத்தாண்டு கால ’புலி எதிர்ப்பாளர்’களும் தேசிய சக்திகளுமாக கருத்துயுத்தம் நடாத்திக் கொண்டு வருகின்றமையைக் காணமுடியும். அதில், இலண்டனில் விம்பம் கலை இலக்கிய அமைப்பு நடத்திய புத்தக விழாவில், வி.சி.கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்து, புலத்துத் தமிழர் சிலரால் எதிர்ப்பு காட்டப்பட்டது. அந்த நிகழ்வே, தற்போதைய ஈழ - தமிழக தேசிய இன அரசியல் தளங்களில் பழைய விவகாரங்களையும் கிளறிவிட்டுள்ளது.

'பணம் வாங்கிக்கொண்டு ஈழ ஆதரவு அரசியல் நடத்துவதாகவும் காங்கிரசுஸ் கட்சியுடன் கூட்டுவைத்துக்கொண்டதன் மூலம் ஈழத்துக்குத் துரோகம் செய்துவிட்டதாகவும்’ விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகப் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சம்பவத்தில், திருமா அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்ட ஜீவன் என்பவரின் விளக்கத்தைப் பெற்று, வி.சி.கட்சி வெளியிடும் அளவுக்கு, திருமாவளவனுக்கு நெருக்கடி ஏற்பட்டது. கட்சி நிகழ்ச்சியில் செய்தியாளர் சந்திப்பில் அவர் விளக்கம் அளித்த பின்னரம்கூட, பேரூடகங்களுக்கு இணையாக இன்றைக்கு வளர்ந்திருக்கக்கூடிய வலைக்காட்சி சிற்றூடகங்கள், திருமா அவர்களை இந்த விவகாரத்தில் சந்திக்கோ சண்டைக்கோ இழுக்க முயன்றன. அனைத்தையும் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு அவர் ஆளாக்கப்பட்டார். பெரும்பாலான நேர்காணல்களில் அவர் தன்னுடைய வாதத் திறனின் மூலமாக சமாளித்தபோதும், அவரின் கட்சியினது அதிகாரப்பூர்வ வெளியீட்டில் உள்ளுறை வெப்பம் கனன்றது. அவர்களின் இரண்டு எதிர்வினைகள் இங்கு முதன்மையானவை எனலாம்.

இலண்டனில் முழக்கமிட்டவரை, வி.சி.கட்சியின் அதிகாரப்பூர்வ வெளியீடுகள் மற்றும் சமூக ஊடகங்களில் ‘கூச்சலிட்டவர்’ என்றே மீண்டும் மீண்டும் குறிப்பிட்டது, அவ்வளவு சாதாரணமானது அல்ல. ’கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்; எளிய மக்களுக்கும் அதிகாரம்’ என்பதை மிகவும் பெருமிதமாகவே, வி.சி.கட்சியானது தன் முழக்கங்களில் ஒன்றாக வைத்திருக்கிறது. கருத்துகளில் மாறுபாடு இருப்பதற்காகவே ஒரு மனிதரின் கருத்துரிமையை, அரசியல் முழக்கத்தை, ‘கூச்சல்’ எனக் குறிப்பிடுவது என்னவகையிலான அரசியல் சிந்தனை? ஆதிக்கச் சிந்தனையா விடுதலைச் சிந்தனையா? அதுவும் திருமா அவர்களால் ஆதரிக்கப்பெறும் ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்த- புலம்பெயர்ந்து வாழும் மனிதர்களை இப்படி விளிப்பது, அவர்களின் அரசியல் ஜனநாயகச் செயற்பாட்டை இழிவுபடுத்துவது அல்லவா? இதுதான் முகம் இறுக, விழி தெறிக்க உரக்கப் பேசும் திருமா அவர்களின் உள்மனக் கருத்தா? அல்லது தவறிப் பேசியதா? என்றால் விம்பம் நிகழ்வைப் பற்றிய வியாக்கியானங்களில் முழக்கமிட்டதைப் பற்றிய அலட்சியத்தன்மையை அவரிடம் தெளிவாகக் காணமுடிகிறது. ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொலிகள் அனைத்தும் சான்றுகளாக இருக்கின்றன.

ஆம், சான்று என்பது இங்கு முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. சான்று இல்லாமல் திருமா அவர்களின் மீது இந்திய தமிழ்நாட்டு மதவாத, சாதியவாத அரசியல் சக்திகள் அவதூறுசெய்வதாக அவரினது தரப்பில் பதிலடி தருகிறார்கள்.

ஆனால் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்த புலிகள் இயக்கப் பொறுப்பாளர்களின் தகவலை உறுதிப்படுத்துவதற்கு ஒரு சான்றும் இல்லை. அவரால் சான்றுகாட்டப்படவேண்டிய இருவரில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கடைசி அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், இனப்படுகொலை இலங்கை இராணுவத்தினரால் வெள்ளைக்கொடியுடன் செல்கையில் கொல்லப்பட்டுவிட்டாரே! இன்னொருவரான சேரலாதனும் காணாமல் ஆக்கப்பட்டுவிட்டார்!!

மற்றவர்களைவிட திருமா அவர்களால் போராளி இயக்கத்தின் கட்டமைப்பு குறித்து நன்றாக அறிந்திருக்கமுடியும். இலண்டனில் சர்ச்சையைக் கிளப்பிய நிகழ்வே, அவரினது ‘அமைப்பாய்த் திரள்வோம்’ எனும் நூல் திறனாய்வுதான் அல்லவா? தமிழ்நாட்டின் ஆகப்பெரிய அரசியல் கட்சிகளில்கூட இல்லாத அளவுக்கு ஏராளமான அணிகளைக் கொண்டதாக வி.சி.கட்சி விளங்குகின்றது. பத்தாயிரக்கணக்கான நிர்வாகிகளைக் கட்டுக்கோப்பாக இயக்கிவரும் திருமா அவர்களுக்கு, கட்சி அரசியல் களம் அல்ல, போராட்டக் களத்தில் உள்ள இயக்கத்தின் அமைப்பு முறையைப் பற்றி தெரியாமல் இருக்குமா? முற்றிலும் அரசியல் விவகாரம் ஒன்றில், ஊடகப் பிரிவு ஒன்றின் பொறுப்பாளரான சேரலாதன் ஊடாக, சாதாரண விடயம் அல்ல, இந்தியாவின் ஆட்சிமாற்றத்துக்கு வித்திடக்கூடிய ஒரு தேர்தலில், கூட்டணி தொடர்பான ஆலோசனையைத் தெரிவித்திருப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்குமா? முதன்மையான ஒரு விடயம், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பதை தி.மு.க.வே உறுதிசெய்திடாத நேரம், அது. திமுக தலைமையகமான அறிவாலயத்தில் கீழ்த்தளத்தில் கூட்டணி உரையாடலும் அதன் இன்னொரு தளத்தில் ஊதிப்பெருக்கப்பட்ட அலைக்கற்றை ஊழல் வழக்கின் விசாரணையும் நடத்தப்பட்ட காலகட்டம், அப்போது! அதாவது திருமா அவர்கள் தெரிவிக்கும் தகவல், அக்காலச்சூழலுக்கு முற்றிலும் பொருத்தமாக இருக்கிறதா எனும் கேள்விதான் பெரிதாக நிற்கிறது.

அடுத்து, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாட்களில் கொளத்தூர் மணி அவர்களுடன் வைகோவுடன், தானே தொடர்பெடுத்துப் பேசியதாகக் (மணியால்) கூறப்படும் நடேசன் அவர்கள், ‘மானுடத்தின் தமிழ்க் கூடல் நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட ஒரே தமிழ்நாட்டுத் தலைவர்’ தொல்.திருமாவளவனுடன் நேராகத் தொடர்பெடுக்க இயலாமல் போனதா என்பது பெருவியப்பாக இருக்கிறது. ’இறுதி’நாள்வரை இயங்கிய புலிகள் இயக்கத்தின் சில கட்டமைப்புகளை பிறர் அறியாமல் இருந்திருக்கலாம்; அவர் அறியாமல் இருப்பாரா? அவரே சொல்கிறார், 2002-ல் தமிழ்க் கூடலுக்கு அழைக்கப்பட்ட ஒரே தலைவர், தானே என்று..! ”யாரிடம் என்ன பேசவேண்டும் என்று பிரபாகரனுக்குத் தெரிந்திருக்கிறது. சாதியப் பிரச்னை குறித்து என்னிடம் விவாதித்தார்; தொடர்ந்து போராட ஊக்கமளித்தார்’ என்கிறார், திருமா அவர்கள். (குறிப்பாக, நெடுமாறன், கொளத்தூர் மணி, வைகோ போன்றவர்களிடம் பேசாத விடயத்தை, தன்னுடன் பிரபாகரன் கலந்துரையாடியதாகச் சொல்கிறார்; நெடுமாறனை இதில் விலக்கிவைப்போம்; அவருக்கு சாதியொழிப்பு அரசியல், முதன்மை அல்ல. பெரியார் அவர்களின் கொள்கைக்காரரான கொளத்தூர் மணிக்கு சாதியொழிப்பு அரசியலில் ஆர்வமில்லை எனக் கருதமுடியுமா என்பது தனி!) ஆயினும் திருமா அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட முறை மட்டும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கக் கட்டமைப்பின் முறைக்கு ஏற்றதாக இல்லாமலும் வழமைக்கு முற்றிலும் மாறானதாகவும் இருக்கிறது; யதார்த்தத்துடன் பொருந்திப்போகவில்லை என்பது சிலருக்குக் கசப்பாகவும் இருக்கலாம்.

தொல்.திருமாவளவன் எனும் ஒரு தலைவரினது தொடர்பானது மட்டுமல்ல, இந்த விடயம்.. அதாவது 1980-களில் ஆரம்பித்து 2009 முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம்வரை, தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கு (கவனிக்க - புலிப் போராளிகளுக்கு மட்டுமல்ல) பின்தளமாக விளங்கிய தமிழ்நாட்டின் பங்களிப்பு மகத்தானது. அதை தமிழ் மக்களின் நினைவுகளிலிருந்து எவர் ஒருவரும் நீக்கிவிடமுடியாது. ஏனெனில் அது வரலாறு! இதேவேளை, தமிழ்நாட்டு மக்களை தமிழீழத்துக்குத் துணைநிற்கும் எண்ணத்தை, உணர்வை விதைத்து வளர்த்த திராவிடர் கழகம், அதன் தொடர்ச்சியான புதிய கழகங்கள், திமுக, இவை தோற்றுவித்த தமிழீழ ஆதரவுக் கூட்டியக்கங்கள், மதிமுக, நாம் தமிழர் கட்சி போன்ற அமைப்புகளின் தலைவர்களிடமும் இதே யதார்த்த முரண்களை காலம் எதிர்கொண்டுள்ளது. இதை தேசிய அரசியலுக்காக நிற்கும் எவரும் மனதார விரும்பவில்லை!

தொடரும்

அருவி இணையத்துக்காக தமிழகத்திலிருந்து தி.இளஞ்செழியன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE