Friday 29th of March 2024 08:53:06 AM GMT

LANGUAGE - TAMIL
எழுக தமிழ் தொடர்பில் மஹிந்த, கோத்தா, ராஜித கருத்து!

எழுக தமிழ் தொடர்பில் மஹிந்த, கோத்தா, ராஜித கருத்து!


"தமிழ் மக்கள் மத்தியில் இழந்து போன தனது செல்வாக்கை மீளவும் நிலைநிறுத்துவதற்காகவே முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் 'எழுக தமிழ்' நிகழ்வை நடத்துகின்றார். யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுக்குள் எழுந்துள்ள அதிகாரப் போட்டியின் விளைவாகவே இதனைச் செய்கின்றனர். கடந்த எழுக தமிழால் எதுவும் நடக்கவில்லை. அதேபோன்று இந்தமுறை இடம்பெறும் எழுக தமிழாலும் எதுவும் நடக்காது."

- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு, 'எழுக தமிழ்' தொடர்பில் வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

ராஜித

அரசியலில் முகவரியற்றுப் போன விக்னேஸ்வரன், தனக்கு முகவரி தேடுவதற்காக இப்படியான நிகழ்வுகளை நடத்துவார். அது எந்தவிதமான நன்மைகளையும் அவருக்கு அளிக்கப்போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவால் விடுக்கும் வகையிலேயே 'எழுக தமிழ்' நிகழ்வை விக்னேஸ்வரன் நடத்துகின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. எனவே, இது தொடர்பில் அரசு பெரிதும் அலட்டிக்கொள்ளமாட்டாது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் உப்புச் சப்பில்லாத இந்த விடயங்கள் பற்றி நாம் கருத்துக் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

மஹிந்த

அரசியல்வாதிகள் தமது அரசியல் உறுதிபாட்டில் தளம்பல் ஏற்படும்போது இப்படியான பேரணிகளை நடத்துவது வழமை. கடந்த காலங்களிலும் தமிழ்த் தலைவர்கள் இதேபோன்று பேரணிகள், போராட்டங்கள் நடத்தியிருந்தனர். கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சராகத் தெரிவான விக்னேஸ்வரனுக்கும் அக்கட்சியின் பேச்சாளர் சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதலை அடுத்துத்தான் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார். சுமந்திரன் உள்ளிட்ட அவரின் கூட்டமைப்பு எதிரிகளுக்கு எதிராகவும் தமிழ் மக்கள் மத்தியில், நல்ல பெயரை எடுப்பதற்காகவும் விக்னேஸ்வரன் இத்தகைய நிகழ்வுகளை நடத்துகின்றார் என்று நினைக்கின்றேன்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அலட்டிக்கொள்ளாமல் இருக்கின்ற நிலையில், நான் அதனை விமர்சனத்துக்கு உட்படுத்துவது அழகல்ல. எனினும், தமது விலாசத்துக்காக கல்விச் சமூகத்தினரையும் உள்ளிழுத்து இப்படியான பேரணிகளை நடத்துவது சட்டவிரோதமானது. எத்தகைய எழுச்சி நிகழ்வுகளையும் நடத்துவதால் உயிரிழந்த புலிகள் மீளவும் உயிர்த்தெழுவார்கள் என்று எவரும் எண்ணக்கூடாது.

கோத்தாபய

'எழுக தமிழ்' யாழ்ப்பாணத்தில் இரண்டாவது தடவையாக நடக்கின்றது. முதல் எழுக தமிழாலும் எந்தப் பிரயோசனமும் ஏற்படவில்லை. இப்போதைய எழுக தமிழாலும் எந்தப் பிரயோசனமும் ஏற்படாது. குடாநாட்டுக்குள் உள்ள தமிழ்க் கட்சிகளுக்குள் நிலவுகின்ற, அதிகாரப் போட்டியில் தங்களை நிலைநிறுத்துவதற்காக எழுக தமிழை நடத்தக் கூடும். இதன் உண்மையான குறிக்கோள் எமக்கு விளங்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கின்ற சூழலில் இதனை நடத்துகின்றார்கள். இது தொடர்பில் உத்தியோகபூர்வமான கருத்தை எதையும் சொல்லவில்லை. பொறுத்திருந்து பின்னர் பதில் சொல்கின்றேன்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE