Friday 29th of March 2024 07:28:03 AM GMT

LANGUAGE - TAMIL
‘தங்க முட்டையும் பிக்பாஸ் வீட்டு சிவராத்திரியும்’  - சுரேஷ் கண்ணன்

‘தங்க முட்டையும் பிக்பாஸ் வீட்டு சிவராத்திரியும்’ - சுரேஷ் கண்ணன்


ஒரு திரைப்படம் அதன் கிளைமாக்ஸை நெருங்க நெருங்க பரபரப்பும் விறுவிறுப்புமாக இருப்பது அவசியம். ஆனால் பிக்பாஸ் இறுதிக் கட்டத்தை நெருங்கும் சமயத்திலும் மிகச் சுமாராகவும் மொக்கையாகவும் சென்று கொண்டிருக்கிறது. சாண்டியின் அபத்தமான ‘பேண்ட்டஸி’ கதைகள், அனிருத் குரலில் இழுத்து இழுத்து முகின் பாடும் காதல் சோகப்பாடல்கள் போன்றவை தொடர்பான காட்சிகளை இட்டு நிரப்பி ‘ஃபுட்டேஜ்’ தேற்ற வேண்டிய கட்டாய சோகத்தில் பிக்பாஸ் இருக்கிறார்.

வனிதாவை ஒருபுறம் திட்டித் தீர்த்தாலும் அவர் இல்லாத போது கன்டென்ட் குறைபாடு இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் அதற்கு அடிப்படையான காரணம் எதிர்மறைத்தன்மைகளின் மீது நமக்கிருக்கும் ஆழ்மன வசீகரம். ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்கிற குடும்பப்பாடல் போரடிக்கிறது. ஆனால் ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய படத்தை விரும்பிப் பார்க்கிறோம். அன்றாட தினங்களின் சலிப்பைப் போக்க யாராவது எங்காவது சண்டையிட்டால்தான் நமக்கு சுவாரசியம்.

**

87-ம் நாள். வழக்கம் போல் ‘எழுந்திடு, விரைந்திடு’ என்கிற மாதிரியான வேகமான தாளயிசைப்பாடல் ஒலித்தது. பாட்டியின் சாகசங்கள் அடங்கிய ஃபேண்ட்டஸி கதையை சாண்டி விவரித்துக் கொண்டிருக்க, வேறுவழியின்றி அதை சேரன் சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தார். பாவம், எவ்வித பொழுது போக்குகளும் இல்லாத சூழலில் அவர்களும் என்னதான் செய்வார்கள்?

திரைத்துறை அனுபவங்கள், அதில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசினாலாவது நன்றாக இருக்கும். பார்வையாளர்களுக்கும் நல்ல அனுபவமாக இருக்கும். அதையெல்லாம் பிக்பாஸ் டீம் எடிட் செய்து விடுகிறார்களோ, என்னமோ.

சாண்டி கதை சொல்லி முடித்ததும் “சீ.. பே..” என்ற சலிப்புடன் கோப்பைகளில் இருந்த தண்ணீரை சலிப்புடன் கீழே ஊற்றினார் தர்ஷன். கழுவி ஊற்றுதல் என்பது இதுதான் போல.

நேற்று பாடிய பாடலையே இன்னமும் ராகம் இழுத்து முகின் பாடிக் கொண்டிருக்க, ‘வாவ்.. வாவ்..’ என்று பாராட்டினார் ஷெரீன். ‘இன்னமும் ரிலீஸ் பண்ணாத பாட்டா?, நல்லா இருக்கு” என்று சேரனும் இதை ஆமோதித்தார். அடப்பாவிகளா! இந்தக் காட்சிகள் எல்லாம் இதே மாதிரி நேற்றே வந்தனவே? என்னதான் போரடித்தாலும் நீங்கள் பேசியவற்றை நீங்களே ரீப்ளே செய்தெல்லாம் ரொம்ப ஓவர் மக்களே!

முகின் அப்போதுதான் எதையாவது குத்தி தன் பலத்தைக் காட்டிக் கொண்டிருந்தாரோ, என்னமோ. இதனால் ஜெர்க் ஆன.. பிக்பாஸ் “ஐயா.. முகின். கன்பெஷன் ரூமுக்கு வாங்கய்யா” என்று மரியாதையாக கூப்பிட ‘யேய்..” என்று ஜாலியானார் முகின்.

இறுதிப்போட்டி டிக்கெட்டின் ஐந்தாவது டாஸ்க். ஒரு மாதிரி இத்துப் போன கேம் இது. தெர்மகோல் துகள்கள் அடங்கிய கோணிப்பைகளை முதுகில் கட்டிக் கொண்டு போட்டியாளர்கள் ஓட பின்னால் வருபவர் இவரின் பையை துளையிட்டு அதில் இருக்கும் தெர்மகோல்களை கொட்ட வைக்க வேண்டும். எவரின் பை காலியாகிறதோ அவர் போட்டியிலிருந்து விலக்கப்படுவார். மூன்று சுற்றுகளில் நிகழும் விளையாட்டு இது.

யார் கடைசியாக ஓடுகிறாரோ அவருக்கு அதிர்ஷ்டமுண்டு. எனவே ஓடும் வரிசை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த வரிசையில் சேரனுக்கு முதல் எண் கிடைத்தது. பெருமையுடன் காமிராவில் காட்டிக் கொண்டார். ஆனால் விளையாட்டின் படி அதுதான் சோதனையான எண். தொடர்ந்து ஓட முடியாமல் மூச்சு வாங்க விரைவிலேயே போட்டியிலிருந்து விலகினார் சேரன்.

IMAGE_ALT

வலிமையான போட்டியாளர் என்று அறியப்படும் தர்ஷனும் அடுத்து விலக நேர்ந்தது. அவரின் பை விரைவில் காலியானது. இது தொடர்பாக கவினுக்கும் இவருக்கும் இடையில் சற்று முட்டிக் கொண்டது. (இறுதிப் போட்டி நெருங்க நெருங்க பாய்ஸ் டீம் உடைந்து சிதறும் போல). கோபமாக இருந்த தர்ஷனை சாண்டி ஜாலியாக பேசி சமாதானப்படுத்தினார்.

ஒவ்வொருவராக விலக, பாதுகாப்பாக கடைசியில் ஓடிய முகின் இதில் வெற்றி பெற்றார்.

**

வனிதா இல்லாததால் உள்ளடக்கத்திற்குத்தான் பஞ்சம் என்று பார்த்தால் உணவிற்கும் பஞ்சம் போல. ‘ஆப்பிள் பிரியாணி’ என்றொரு புதுமையான ஐட்டத்தை தயாரித்து தருவதாக சாண்டி சொல்ல, பிக்பாஸ் தரும் டாஸ்குகளை விட இது கடுமையானதாக இருக்கிறது என்று சொல்லி இதர போட்டியாளர்கள் இந்த ஐடியாவை நிராகரித்தார்கள். அங்கு ஒட்டப்பட்டிருக்கும் உணவுப்பொருட்களின் புகைப்படத்தை பார்த்து பெருமூச்சு விட்ட சாண்டி “பிக்பாஸ் ரொம்ப நல்லவரு.. வல்லவரு.. இதே மாதிரி பூரி, பொங்கல்-லாம் நமக்கு அனுப்புவாரு” என்று சொல்ல ‘குருநாதா – சிஷ்யா உறவெல்லாம் ஒரு லெவல் வரைக்கும் தாண்டியோய்” என்று பிக்பாஸ் உள்ளே நினைத்திருக்கலாம்.

போட்டியாளர்களுக்கு பவர் கொடுக்கும் கதையை சாண்டி மீண்டும் தொடர, “சாண்டி. பவர் கொடுப்பது இருக்கட்டும். உங்க மைக்கை ஒழுங்கா மாட்டுங்க” என்று கலாய்க்க முயன்றார் பிக்பாஸ். ஏதோ ஓரிரண்டு முறை இதைச் சொன்னால் சரி. இதையே ‘ஜோக்’ என்று நினைத்து அடிக்கடி சொன்னால் மொக்கையாகி விடுகிறது.

ஆனால் பிக்பாஸ் வீட்டின் உள்நிலைமை அப்படியல்ல. ‘அவார்டு படத்தில்’ மெலிதாக ஒரு நகைச்சுவை வசனம் வந்தாலே பார்வையாளர்கள் மிகையாக சிரிப்பது போல (புரிந்து விட்டதாம்!) பிக்பாஸ் அடிக்கும் ரணக்கொடூர ஜோக்கிற்கு மிகையாக சிரிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். எப்படியாவது பொழுது போக வேண்டுமே? பாவம்.

ஆறாவது டாஸ்க் துவங்கியது. இது சற்று ஜாலியாக இருந்தது. போட்டியாளர்களின் புகைப்படம் துண்டு துண்டான பலகைகளில் இருக்கும். சம்பந்தப்பட்ட போட்டியாளர் அவற்றை இணைத்து புகைப்படத்தை முழுமையாக்க வேண்டும். அதே சமயத்தில் இதர போட்டியாளர்களின் புகைப்படத்தின் மீது பந்துகளை வீசி அதைக் கலைக்க வேண்டும்.

IMAGE_ALT

சிலர் துண்டுகளை அடுக்குவதில் கவனம் செலுத்த, வேறு சிலர் பாதி அடுக்கும் போதே மற்றவர்களின் ஆட்டையைக் கலைப்பதில் கவனம் செலுத்தினார்கள். இந்த வகையில் சாண்டி, தர்ஷன் ஆகியோரின் குறும்புகள் மிகையாக இருந்தன. பாவம் சேரன், தனது புகைப்படத்தை சிரமப்பட்டு அடுக்கி விட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற பதட்டத்துடன், அதை கட்டியணைத்துக் கொண்டிருந்தார். முதுகில் பந்துகள் வந்து விழுந்தாலும் தாங்கிக் கொண்டார்.

ஷெரீனையும் லியாவையும் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவர்கள் சிரமப்பட்டு அடுக்கியதை சாண்டியும் தர்ஷனும் சைடு கேப்பில் பந்துகளை வீசி கலைத்தார்கள். ஒரு கட்டத்தில் தர்ஷனின் அலப்பறைகள் மிகையாக போனதால் முகினுக்கும் ஆவேசம் வர, இருவரும் பரஸ்பரம் வேகமாக பந்துகளை பரிமாறிக் கொண்டார்கள். ஆனால் போட்டி முடிந்ததும் இருவரும் ‘ஹைபை’ சொல்லிக் கொண்டது சுவாரசியம்.

சேரன் அத்தனை பதட்டத்துடன் இருந்தது வீண் போகவில்லை. அவர்தான் இந்தப் போட்டியில் முதல் இடத்திற்கு வந்தார். “டேய் முதுகு வலிக்குதுடா” என்று அவர் கத்தியதால் ஒரு கட்டத்தில் இவரை விட்டு விட்டார்கள் போல. பஸ்ஸர் அடித்த போது சேரனுக்கு உதவி செய்ய வந்த முகினை பிக்பாஸ் தடுத்தது சரியானது.

IMAGE_ALT

இந்தப் போட்டியில் சேரன் முதல் இடத்திற்கு வந்தது ஒரு பக்கம் ஆச்சரியம் என்றால் தர்ஷன் இறுதியில் வந்தது இன்னொரு ஆச்சரியம்.

**

நள்ளிரவு 01:20 மணி. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது வீட்டின் விளக்குகள் எரியத் துவங்கின. சிலர் அதிர்ச்சியடைந்தும் வேறு சிலர் சலிப்புடனும் எழுந்து பார்க்க சிலரின் தூக்கம் கலையவேயில்லை. (கடைசிக் கட்டத்தில் அப்படி நிகழ வாய்ப்பில்லை என்றாலும், புதிய போட்டியாளர் எவராவது வருவாரோ என்று நான் எதிர்பார்த்தேன்).

இறுதிப்போட்டி டிக்கெட்டின் ஏழாவது டாஸ்க்கிற்காகத்தான் நள்ளிரவில் இந்த ஏழரையை பிக்பாஸ் கூட்டியிருக்கிறார். அனைவரும் சலிப்புடன் லிவ்விங் ஏரியாவிற்கு வந்து அமர்ந்தனர்.

போட்டி பற்றிய விதிகளை தர்ஷன் உற்சாகமாக படித்தார். ஆளுக்கு ஒரு தங்க முட்டை தரப்படுமாம். அதை போட்டியாளர்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டுமாம். அதே சமயத்தில் இதர போட்டியாளர்களின் முட்டைகளை உடைக்கலாம். இதில் முக்கியமான விதி, அந்த போட்டியாளர் கவனிக்காத சமயத்தில் முட்டையை உடைத்தால்தான் பாயிண்ட். அவர் பார்த்து விட்டால் கிடையாது. முட்டையை இழந்த நபர் போட்டியிலிருந்து விலகுவார்.

இதில் கூடுதலாக உள்ள சிரமம் என்னவெனில் தங்க முட்டை கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருக்கும். அதன் அருகே நின்றுதான் பாதுகாக்க வேண்டும். எங்கும் எடுத்துச் செல்ல முடியாது.

இந்த விதியைக் கேட்டதும் ஆண் போட்டியாளர்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு பாத்ரூமிற்கு ஓடினார்கள். ஏனெனில் பிறகு போக முடியாது. “ரெண்டு ரெண்டு பேரா போய் ஜோலியை முடிங்கடா” என்று வடிவேலு பாத்ரூமிற்குள் சிலரை தள்ளுவதைப் போல சாண்டி தள்ளிக் கொண்டிருந்தார்.

IMAGE_ALT

போட்டி ஆரம்பித்ததும் அனைவரும் தங்க முட்டையின் அருகே அமர்ந்து ‘தேவுடு’ காத்தனர். நாற்காலி, போர்வை, தலையணை என்று சகல ஏற்பாடுகளோடு வந்தனர். இந்தச் சூழலில் கவின் அடித்த சில கமெண்ட்டுகள்தான் ஆறுதலாக இருந்தன. “இப்பவே பசிக்குதே” என்று ஆரம்பித்தார். (தூக்கம் வராமலோ, பணியின் காரணமாகவோ நள்ளிரவிற்கும் மேல் விழித்து இருப்பவர்களுக்குத்தான் இப்படிப்பட்ட கொலைப்பசி வரும் இதை அனுபவித்தால்தான் தெரியும்.)

‘எழவு காத்த கிளி’ மாதிரி உக்காந்திருக்க வேண்டியிருக்குதே” என்ற கவின், ‘பயபுள்ள இப்படி பண்ணிடுச்சே” என்று பிக்பாஸின் மீது கடுப்பைக் காட்டினார். ‘தல’, ‘குருநாதா’ என்றெல்லாம் நேற்று பாசமழை பொழிந்தவர்கள், இன்று பிக்பாஸை அசிங்கம் அசிங்கமாக திட்டும் மனநிலைக்கு வந்திருக்கிறார்கள்.

“பாத்ரூம் போகணுமே. எல்லோரும் ஒண்ணா போயிட்டு ஒண்ணா வந்துடலாமா?” என்றொரு டெரரான ஐடியாவை கவின் தந்தார். போர்வைகளைக் கொண்டு வந்தவர்கள், கையோடு ப்ரூட்டி பாட்டில்களை கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அதைக் குடித்தால் ‘சுச்சா’ அதிகம் வரும் ஆபத்தும் இருக்கிறது. ஒருபக்கம் தூக்கம், இன்னொரு பக்கம் பசி, அதற்கும் இன்னொரு பக்கம் இயற்கையின் உந்துதல் என்று அனைத்தையும் அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

பாத்ரூம் போவது போல் பாவனையாக எழுந்து சென்ற கவின், அங்கிருந்து “என்னடா பண்றீங்க?” என்பது போல் ஜாலியாக எட்டிப் பார்த்தார்.

அதிகாலை 05:10. இயற்கையின் அழைப்பை அடக்க முடியாத சாண்டி செய்த காரியம் அநியாயமானது. மெல்ல நகர்ந்து பாத்ரூம் பக்கம் சென்றவர், அங்கிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டே, பாத்ரூம் வாசலிலியே நின்று ‘ஒண்ணுக்கு’ அடித்தார். ‘ஐய்யோ. கருமம்.. கருமம்’ என்று தலையில் அடித்துக் கொண்டார் ஷெரீன்.

சாண்டி செய்தது ஒருபக்கம் அநியாயம் என்றாலும், இயற்கையின் உந்துதலைக் கூட பல மணி நேரம் அடக்கிக் கொள்ளும் வகையில் போட்டியாளர்களை உட்கார வைத்திருப்பது அநீதியானது. கின்னஸ் போன்ற போட்டிகளில் கூட பல மணி நேரத்திற்கு இயங்கும் போட்டி என்றால் ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் இடைவேளை எடுத்துக் கொள்ளலாம் என்கிற விதிகள் இருக்கின்றன. ஆனால் பிக்பாஸின் விதிகள் குரூரமானவை.

காலை 07:10. தான் கண்டுபிடித்த வழியின் படி சாண்டி மறுபடியும் பாத்ரூமின் அருகே செல்ல, இதைக் கண்டித்தார் சேரன். “மத்தவங்கள்லாம் அடக்கிக்கிட்டு உக்காரலை?! உங்களுக்கு மட்டும் என்ன, நீங்க பண்றது நல்லாயில்லை. பாத்ரூம் வாசல்லேயே போறது” என்று கடுமையாக ஆட்சேபித்தார். “சார்.. இது கேம் சார். என்ன பண்றது? என் டிரிக் இது… ஸ்விம்மிங் ஃபூல்லயா போக முடியும். இந்தி ப்ரோக்ரம்லலாம் பாண்ட்லயே போயிடறாங்க” என்று சலித்துக் கொண்டே வந்தார்.

ஆண் போட்டியாளர்களுக்கே இந்த நிலைமை என்றால் பெண் போட்டியாளாகளின் நிலைமை இன்னமும் பரிதாபமானது. ஆண் செய்யும் அபத்தங்களைக் கூட அவர்களால் செய்ய முடியாது.

நன்கு விடிந்து காக்கை, குருவிகளின் சத்தம் வந்து கூட போட்டி நிறுத்தப்படுவது போல் தெரியவில்லை. ஆளாளுக்கு மற்றவர்களின் முட்டைகளை உடைப்பதற்கு ஜாலியாக முயற்சித்தார்கள். ஆனால் அனைவருமே கண்கொத்தி பாம்பாக உட்கார்ந்திருந்ததால் அது நிகழவில்லை.

ஆனால் ஒரு கட்டத்தில் ஷெரீன் சற்று நடந்து விட்டு திரும்புவதற்குள் சாண்டி அவரின் முட்டையை எடுத்து தரையில் போட்டு உடைக்க முயன்றார். ஆனால்..அந்தோ பரிதாபம்! முட்டை உடையவில்லை. ‘என்னடா.. இது!.. இப்படி ஸ்ட்ராங்கா இருக்கு. எப்படி உடைக்கறது?” என்று திகைத்தார் சாண்டி. “நான் பார்த்துட்டுதான் இருந்தேன். இது சீட்டிங்’ என்று பாய்ந்தோடி வந்தார் ஷெரீன். சாண்டியை நன்றாகத் திட்டி விட்டு முட்டையை எடுத்து தன் இடத்தில் வைத்துக் கொண்டார்.

போட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது.. பிக்பாஸ் எப்போது இடைவேளை விடுவாரோ என்று தெரியவில்லை. முட்டையை அடைகாத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கார்கள், பாவம்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE