Tuesday 16th of April 2024 01:37:24 PM GMT

LANGUAGE - TAMIL
யாழின் பிரபல கல்லூரி அதிபர் சிக்கிய கதை!

யாழின் பிரபல கல்லூரி அதிபர் சிக்கிய கதை!


யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரி ஒன்றின் அதிபர் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் இலஞ்சம் பெறும்போது ஆதாரங்களுடன் சிக்கியிருக்கின்றமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தின் முதல்நிலைக் கல்லூரியாக விளங்கிவருகின்ற குறித்த கல்லூரியில் தரம் ஆறில் மாணவர்களை இணைக்கின்றபோது வெட்டுப்புள்ளிகளை விடவும் குறைவான மாணவர்களை இணைக்கின்றபோது இலஞ்சம் கோரப்படுவதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டுவந்திருந்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் குறித்த கல்லூரி அதிபர் கைது செய்யப்பட்டதாக சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அந்தத் தகவல் பொய்யானது என்று அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இதனிடையே இன்று கிடைத்த நம்பகரமான தகவல்களின் அடிப்படையில் கொழும்பில் இருந்து வந்திருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கையும் மெய்யுமாக பிடிபட்டிருப்பதாகவும் அவர் விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. இந்தச் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பில் அருவி இணையத்தளம் தகவல்களைப் பெற்றுக்கொண்டது.

அதன் அடிப்படையில்,

யாழ். நகருக்கு அண்மையாக வசிக்கும் தந்தை ஒருவர் தன்னுடைய மகனை குறித்த கல்லூரியில் இணைப்பதற்கு முயற்சி செய்திருக்கின்றார்.

அதற்காக அவர் பாடசாலை அதிபரை அணுகி தனது மகனுக்கு அனுமதிவழங்குமாறு கோரியிருக்கின்றார்.

அதற்குப் பதிலளித்த குறித்த அதிபர் ஒரு இலட்சம் ரூபாய் கட்டினால் மட்டுமே அனுமதி வழங்க முடியும் என்று தெரிவித்திருக்கின்றார். அதில் குறைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக அதிபர் சொல்லியனுப்பியதாக தெரியவருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அந்தத் தந்தையை தொலைபேசியில் தொடர்புகொண்ட குறித்த கல்லூரி அதிபர் ஐம்பதாயிரம் ரூபாவுடன் வந்தால் மாத்திரம் அனுமதி வழங்க முடியும் என்று கூறியிருக்கின்றார்.

வறுமைக்கோட்டுக்குள் வாழ்கின்ற குறித்த தந்தை எட்டுவீதம் (8%) வட்டிக்கு தனிநபர் ஒருவரிடம் இருந்து கடன் பெற்று அதிபரிடம் கையளிப்பதற்காக கொண்டுவந்திருக்கின்றார். அதேவேளை குறித்த பணம் வழங்கும்போது அதனை ஆவணப்படுத்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பணத்தினைக் கையளித்த தந்தை “பற்றுச்சீட்டு எதுவும் உண்டா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த குறித்த பாடசாலை அதிபர் “தாறது லஞ்சம், அதுக்குப் பற்றுச்சீட்டா?” என்று கடும் தொனியில் கதைத்து அனுப்பியிருக்கின்றார்.

இந்தச் சம்பவங்களால் மன உழைச்சலுக்கு ஆளான குறித்த தந்தை சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனிடையே நேற்று (19-09-2019) குறித்த தந்தையைத் தொடர்புகொண்ட அதிபர் மிகுதி ஐம்பதாயிரம் ரூபாவையும் இன்று (20-09-2019) கொண்டுவந்து தருமாறு வலியுறுத்தியிருக்கின்றார்.

அவ்வேளை உடனடியாக பணம் திரட்டுவது சாத்தியமில்லை என்றும் திங்கட் கிழமை தருவதாகவும் அந்தத் தந்தை தெரிவித்திருக்கின்றார். ஆனாலும் அதற்கு உடன்பட மறுத்த அதிபர், நாளை (20) பணம் கட்டத் தவறினால் அனுமதி கிடையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில் ஏற்கனவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்த தந்தை இந்த விடயத்தினை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றார்.

துரிதமாக செயற்பட்ட இலஞ்ச ஆணைக்குழுவினர் இரவிரவாக யாழ்ப்பாணம் விரைந்திருக்கின்றனர்.

இன்று பகல் குறித்த தந்தையை சந்தித்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் அவர் திரட்டி வைத்திருந்த பணத்தின் இலக்கங்களைப் பதிவு செய்ததுடன் அவருக்குத் துணையாக தமது பெண் பணியாளர் ஒருவரையும் அனுப்பியிருக்கின்றனர்.

பணத்துடன் சென்ற தந்தை குறித்த பெண் பணியாளர் தனது உறவுக்காறப் பெண் என்றும் அவரிடம் இருந்த நகை ஒன்றை அடகு வைத்தே பணத்தினைத் திரட்டி வந்ததாகவும் அதிபருக்குத் தெரிவித்திருக்கின்றார்.

அதிபர் பணத்தினைப் பெற்றுக்கொண்டதும் குறித்த பெண் தமது ஏனைய உறுப்பினர்களுக்கு தகவலை அனுப்பியிருக்கிறார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் வாகனம் கல்லூரி வளாகத்தை அடைந்ததும் விரைந்து சென்ற ஆணைக்குழுவினர் அதிபரின் சட்டைப் பையில் இருந்த பணத்தினைக் கைப்பற்றி இலக்கங்களை உறுதி செய்திருக்கின்றனர்.

அதன் பின்னர் அவர் அங்கிருந்து விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றிருந்ததாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

சில நாட்களுக்கு முன்னரும் குறித்த கல்லூரி அதிபர் கைதாகியதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அது தவறான தகவல் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அந்தவேளையும் இவ்வாறான விசாரணை ஒன்று இடம்பெற்றதாகவும் அரசியல் தலையீடுகளால் அந்த முயற்சி தடைப்பட்டதாகவும் பரவலாகப் பேசப்பட்டிருந்தது.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பான கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்தியவர்களில் ஊடகத்துறை சார்ந்த பிரபலம் ஒருவரும் முக்கிய அங்கம் பெற்றிருந்ததாகவும் பேசப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE