Saturday 19th of June 2021 10:33:58 PM GMT

LANGUAGE - TAMIL
சீரமைக்கப்படவேண்டிய தமிழ்த் தலைமைகளின் அரசியல் பயணம்!
சீரமைக்கப்படவேண்டிய தமிழ்த் தலைமைகளின் அரசியல் பயணம்!

சீரமைக்கப்படவேண்டிய தமிழ்த் தலைமைகளின் அரசியல் பயணம்!


ஏழு தசாப்தங்களாகத் தொடர்கின்ற தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்ட முறைகள் குறித்தும் போராட்ட வடிவங்கள் குறித்தும் சிந்திக்க வேண்டிய ஒரு நிலைமை உருவாகியிருக்கின்றது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் யுத்தம் முடிவடைந்த பி;ன்னர் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. மாறாக தமிழ்ப் பிரதேசங்களை இராணுவ மயப்படுத்தி மக்களை இராணுவ மேலாதிக்கத்திற்குள் அடக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனால் 2009 ஆம் ஆண்டு மே 18க்குப் பின்னரான காலப்பகுதியில் போராட்டங்களை முன்னெடுப்பது சவால் மிகுந்த காரியமாக இருந்தது. சில வேளைகளில் அது உயிராபத்தை ஏற்படுத்த வல்ல ஆபத்தான நிலைமையாகவும் இருந்ததை மறந்துவிட முடியாது.

ஆனால் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து போராட வேண்டிய தேவை ஏற்படமாட்டாது என்பது போன்றதொரு மாயத் தோற்றம் நிலவியது. நல்லாட்சி அரசாங்கம் மென்போக்கைக் கொண்டிருந்தது. சிறுபான்மை இன மக்களின் பேராதரவுடன் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகனை உணர்ந்திருந்தார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண புதிய அரசாங்கம் உதவும். அரசியல் தீர்வையும் கொண்டு வரும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டியிருந்தார்கள்.

அவர்கள் புதிய அரசாங்கத்தின் பிதாமகர்களாகக் கருதப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருந்த மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரசிங்க ஆகியோருடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இணைந்து அவர்களுடைய ஆட்சி மாற்ற முயற்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவையும் வழங்கியிருந்தார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறும் என்ற நப்பாசையை மேலோங்கச் செய்திருந்த புதிய அரசு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியைப் போலவே, ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்திலும், மைத்திரிபால சிறிசேன அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகவும், வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து மூன்று தசாப்தங்களாகத் தமது சொந்தக் காணிகளுக்குச் செல்ல முடியாதவாறு இராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை விடுவித்து, அவர்களை மீள்குடியேற்றுவதாகவும் திகதி குறித்து அவர் வாக்களித்திருந்தார்.

ஆனாலும் அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதேபோன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் உரிய கவனமும் அக்கறையும் செலுத்திச் செயற்படவில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்கி அரசியல் தீர்வு காண்பதாக உறுதியளித்து, அந்த முயற்சிக்குத் தiமையேற்றிருந்த போதிலும், அவர் அதனைத் துரிதமாக நடைமுறைப்படுத்தவில்லை.

அந்த முயற்சி தன் வழியில் தாமதமான முறையில் தவழ்ந்து செல்வதையே அவர் அனுமதித்திருந்தார் என்றே கூற வேண்டும். இவ்வாறு ஜனாதிபதியும் பிரதமரும் தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது மட்டுமல்லாமல், தங்களுக்குள் அதிகாரத்துக்காக மோதி நாட்டின் அரசியல் உறுதிப்பாட்டைக் குலைப்பதற்கு வழிவகுத்திருந்தார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபடி முன்னேறிச் சென்று ரணில் விக்கிரமசி;ங்கவைப் பதவி நீக்கம் செய்து மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததுடன், அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் நடத்துவதற்கான பிரகடனத்தையும் வெளியிட்டிருந்தார். இதனால் நாடு பெரும் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியது.

அதன்போது அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி உதவி வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பே உச்ச நீதிமன்றத்தை நாடி, பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும், அரசியலமைப்புக்கு விரோதமான ஜனாதிபதியின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதனால் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவி ஏற்றதுடன், இருகட்சிகள் இணைந்து அமைத்திருந்த கூட்டு அரசாங்கத்திற்கு முடிவுகட்டி, ஐக்கிய தேசியகட்சியின் தலைமையிலான அரசாங்கம் நிறுவப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாத போதிலும், அரசியல் தீர்வு காணத் தவறிய நிலையில், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகவும், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும் உரிமைப் போராட்டத்தில் மக்கள் ஈடுபடுவதற்கான ஜனநாயக இடைவெளியை அரசு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

இந்த நிலையில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் இராணுவ முகாம்களுக்கு எதிரில் போராட்டங்களை ஆரம்பித்தார்கள். அந்தப் போராட்டம் வருடக்கணக்கில் தொடர்கின்றது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் காணாமல் ஆக்கப்பட்டோருக்குப் பொறுப்பு கூற வேண்டும் வேலைதேடும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் தொல்பொருள் திணைக்களம், வனபரிபாலன திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமிப்பு செய்வதையும், பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற மத ரீதியான அடக்குமுறைகளையும் நிறுத்த வேண்டும் எனக்கோரியும் பரவலாகப் போராட்டங்களை நடத்தவும், கண்டனப் பேரணிகளை நடத்தவும் புதிய அரசாங்கத்தில் இயலுமாக இருந்தது.

ஆயினும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்து ஆட்சி பீடமேறியவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை இதயசுத்தியுடன் மேற்கொள்ளவில்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற போராட்டங்கள், கண்டனப் பேரணிகள் என்பவற்றையும் ஆட்சியாளர்கள் கவனத்திற் கொள்ளவில்லை. அவை குறித்து அலட்டிக் கொள்வதுமில்லை.

போராடுபவர்கள் போராட்டும். அது அவர்களுடைய ஜனநாயக உரிமை. ஆந்த உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். அதனை நாங்கள் மறுக்கவில்லை. தடுத்து நிறுத்தவுமில்லை என கூறிவிட்டு. அவர்கள் தமது காரியங்களிலேயே கவனமாக இருந்து வருகின்றார்கள்.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் போராட்டங்களுக்குச் செவிசாய்க்கவும் தவறியுள்ள ஆட்சியாளர்கள், மறுபுறத்தில் குறிப்பாக வடமாகாணத்தின் வரலாற்று ரீதியிலான - இயல்பான இனப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பின்கதவு நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் வீதியோரத்தில் ஆயிரம் தினங்கள் என்ன வருடக்கணக்கில் போராட்டங்களை நடத்தினாலும், அதனால் பயனேதும் ஏற்படப் போவதில்லை. வீதியோரப் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் ஒரு புறமிருக்க, எழுக தமிழ் போன்ற பெரிய அளவிலான கண்டனப் பேரணிகளுடன் கூடிய போராட்டங்களையும் அரசாள்பவர்கள் கணக்கில் எடுப்பதே இல்லை. அதனை ஒரு வழமையான நடவடிக்கையாக சாதாரண செயற்பாடாகக் கருதி, தமிழ் மக்களின் இருப்புக்கே ஆப்பு வைக்கும் நடவடிக்கைகளில் மறைமுக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அவர்கள் தீவிரமாக மூழ்கி இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் எழுக தமிழ் 2019 கண்டனப் பேரணியுடன் ஒருநாள் ஆர்ப்பாட்டப் போராட்டம் நடத்தப்பட்டு, பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, அவற்றுக்கு இந்தியாவும் சர்வதேசமும் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை உலகின் நன்காவது வல்லரசாக வர்ணிக்கப்படுகின்ற இந்தியாவிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, தண்ணீர்கூட அருந்தாமல் கடுமையான நிலையில் தனது அறவழிப் போராட்டத்தை நடத்திய தியாகி திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

நல்லாட்சி அரசாங்கத்தின் போக்குகளும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களும் பிரதான கட்சிகளும் தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் வெளியிட்டு வருகின்ற கொள்கை நிலைப்பாடுகளும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. தேர்தல் கால வாக்குறுதிகளே நம்பிக்கைக்குரியவையாக இல்லையென்றால், பதவிக்கு வந்த பின்னர் அவர்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதுபற்றி விபரித்துக் கூற வேண்டிய அவசியமில்லை.

கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றாத பேரின அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் வாக்குறுதியளிக்காத – தமிழ் மக்களின் நலன்கள் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா?

பேரின அரசியல்வாதிகளும், பேரின அரசியல் கட்சிகளும் தங்களுக்குள் தீவிரமான அரசியல் முரண்பாடுகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் நலன்களில் அவர்கள் ஒருமித்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றார்கள். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அவர்கள் அரசியல் ரீதியாக கடுமையாக மோதிக்கொள்வார்கள். ஆனால் சிறுபான்மை இன மக்களைப் பொருத்தமட்டில், அவர்கள் சிங்கள பௌத்த தேசிய கொள்கையில் இறுக்கமாக ஒன்றிணைந்து கொள்வார்கள். இதுதான் இலங்கையின் அரசியல் யதார்த்தம்.

இந்த நிலையில் பாரம்பரிய முறையிலான ஆர்ப்பாட்டங்களும், கண்டனப் பேரணிகளும் எதிர்ப்பரசியலும் அவர்களை தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நிலைப்பாட்டிற்கு ஒருபோதும் வழிக்குக் கொண்டு வர முடியாது. இது கடந்த ஏழு தசாப்தங்களாக இடம்பெற்று வருகின்ற போராட்ட வரலாற்றின் கசப்பான பட்டறிவு அனுபவமாகும்.

யுத்த காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூறுவதாக ஒப்புக்கொண்டு அது தொடர்பிலான ஒன்றுக்கும் மேற்பட்ட ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கியுள்ள போதிலும் அவற்றை நிறைவேற்றுவதில் சிங்கள பௌத்த தேசியத்தில் ஊறிப் போயுள்ள ஆட்சியாளர்கள் தயாரில்லை என்பதை வெளிப்படையாகவே கூறிவிட்டார்கள்.

அதுமட்டுமல்லாமல் பொறுப்பு கூறும் விடயத்தில் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான பொறிமுறைகளை உருவாக்கிச் செயற்படுவதாக உறுதியளித்துள்ள போதிலும், அந்தப் பொறிமுறைகளை ஐநாவும் சர்வதேசமும் குறித்துக் கூறிய வகையில் உருவாக்கிச் செயற்பட முடியாது என்பதைப் பட்டவர்த்தனமாக ஆட்சியாளர்கள் வெளிப்படுத்திவிட்டார்கள்.

பெயரளவில் அந்தப் பொறிமுறைகளை உருவாக்கி, தங்களுக்கு சாதகமான முறையிலேயே அவற்றைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் இதுவரையில் முன்னெடுத்து வந்துள்ளது.

பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கம் ஒப்புதலளித்து, இணை அனுசரணை வழங்கிய வகையில் காரியங்களை முன்னெடுக்காமல், அதற்கு முற்றிலும் முரணான வகையிலேயே காரியங்களை மேற்கொண்டு வருகின்றது. போர்க்குற்றச் சாட்டு சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவை நாட்டின் இராணுவத் தளபதியாக நியமித்ததன் மூலம் தனது மாறுபட்ட நிலைப்பாட்டை இலங்கை அரசு தெட்டத் தெளிவாக உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது.

சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட விவகாரம் ஐநா மனித உரிமைப் பேரவையில் அதிருப்தியை ஏற்படுத்தி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள போதிலும், அந்த நடவடிக்கையானது முற்று முழுதாக உள்நாட்டு விவகாரம் என்றும் அதில் தலையிடுவதற்கு ஐநாவுக்கோ உலக நாடுகளுக்கோ உரிமை கிடையாது என்று முகத்தில் அடித்தாற்போல அரசர்ஙகத் தரப்பினர் தெரிவித்துவிட்டனர்.

அரசாங்கத்தின் இந்த இறுமாப்பான நிலைப்பாடு குறித்து எதுவும் செய்ய முடியாத நிலைமையிலேயே ஐநாவும் சர்வதேச நாடுகளும் காணப்படுகின்றன.

அயல்நாடாகிய இந்தியாவும் தமிழர் பிரச்சினையில் தானே தலையிட்டு 1987 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்து மாகாணசபை முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு வழிசெய்துள்ள போதிலும், அந்த அதிகாரப் பகிர்வை கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலத்தில் அரசாங்கம் முறையாக மேற்கொள்ளவில்லை.

மாறாக பேரின அரசியல்வாதிகளும், அரசியல் சக்திகளும் அந்த அதிகாரப்பகிர்வை சின்னாபின்னமாக்கி சீரழித்து மாகாணசபை முறைமைக்கான 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தையே கேலிக்குரியதாக மாற்றியுள்ளார்கள்.

எனவே, இத்தகைய பின்னணியில் தமிழர் தரப்பில் இருந்து ஆட்சியாளர்களுக்கும் பேரினவாதக் கொள்கையுடைய சிங்கள அரசியல்வாதிகளுக்கும் மீற முடியாத வகையிலான நெருக்குவாரத்தைக் கொடுக்கவல்ல சாத்வீக வழிமுறைகளிலான போராட்டத்தின் மூலமாக மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான தளத்தை நோக்கி அவர்களை நகர்த்திச் செல்ல முடியும்.

பாரம்பரிய போராட்ட வழிமுறைகளில் அவர்களை வழிக்குக் கொண்டுவர முடியாது என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளது. அதேபோன்று இந்தியாவோ அல்லது சர்வதேச நாடுகளோ இலங்கை அரசுக்கும் பேரின அரசியல்வாதிகளுக்கும் அழுத்தங்களைக் கொடுப்பதன் ஊடாக அவர்களை தீர்வு காண்பதற்கான புள்ளியை நோக்கி நகர்த்திச்செல்ல முடிhயது என்பதும், உள்ளங்கை நெல்லிக்கனி போன்று நிரூபணமாகி உள்ளது.

நவீன விஞ்ஞான தொழில் நுட்பங்களும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வளர்ச்சிப் போக்கிலான வழிமுறைகளும் சாதனங்களும் வளர்ச்சி பெற்றுள்ள இந்த நவீன காலத்தில் நவீன முறையிலான போராட்ட வடிவங்களைக் கையாள்வது குறித்து தமிழர் தரப்பில் சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

சமூக, அரசியல், பொருளாதார முறைகளிலம் உலக ஒழுங்கு முறைகளிலும் நவினத்துவமும்; தொழில்நுட்ப வசதிகளும் தேர்ச்சி மிகுந்த தொலைதொடர்பு சாதனப் பயன்பாடும் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. இந்த வழிமுறைகளிலான போராட்ட உத்திகள் குறித்து இளம் சந்ததியினரும் நவின வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து அவற்றில் விற்பன்னர்களாகத் திகழ்வோரும் கவனம் செலுத்தி புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து அந்த வழியில் சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இந்தியாவும் சர்வதேசமும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் ஆர்வம் கொண்டிருக்கின்றன. சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. அவற்றின் உதவியுடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்ற அணுகுமுறையும் அரசியல் நகர்வுகளும் பத்தாம்பசலித் தனமானவை – பலனளிக்காதவை என்பது ஏற்கனவே புலரனாகியுள்ளதனால், தன்கையே தனக்குதவி என்ற ரீதியில் தமிழ் மக்கள் முழுமையாகத் தமது சொந்த முயற்சிகளில் நம்பிக்கை வைத்துச் செயற்படுவதற்குத் தயாராக வேண்டும்.

இதனையே இன்றைய இலங்கையின் அரசியல் நிலையும், ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயுத்த நிலையில் உள்ள அரசியல் நிலைமைகளும், ஐநா தொடக்கம், சர்வதேச நாடுகளின் இலங்கை தொடர்பிலான அணுகுமுறை மற்றும் அதுசார்ந்த மந்த கதியிலான செயற்பாடுகளும் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன.

இது குறித்து தமிழர் தரப்பில் சிந்திக்க வேண்டியதும், சமூக, அரசியல் பேதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, பலதரப்பினரும் இது விடயத்தைக் கவனத்திற் கொண்டு பொதுவெளியில் கலந்துரையாடவும், விவாதிக்கவும், புதிய வழிகளைக் கண்டு பிடிப்பதற்காக ஒன்றிணைந்த முயற்சிகளில் ஈடுபட வேண்டியதும் அவசியமாகும்.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE