Friday 19th of April 2024 04:49:21 PM GMT

LANGUAGE - TAMIL
‘நட்பிற்குள் விரிசலை ஏற்படுத்தும் காதல்’  - சுரேஷ் கண்ணன்

‘நட்பிற்குள் விரிசலை ஏற்படுத்தும் காதல்’ - சுரேஷ் கண்ணன்


சென்னை-28 திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஒரு பாடல் வருகிறது. ‘நட்பிற்குள்ளே ஒரு பிரிவொன்று வந்தது.. ஏனென்று அது தெரியவில்லை”. இந்தப் பாடலை இன்றைய எபிஸோடின் பின்னணியில் தொடர்ந்து ஒலிக்க விடலாம் போல. அத்தனை பொருத்தம்.

ஒருவனுக்குள் காதல் வந்து விட்டால் அவனுக்குள் இருக்கும் நட்பு சற்று வெளியேறி விடுகிறது என்பதற்கான உதாரணம் கவின். இதன் பரிதாபமான பலிகடா சாண்டி.

என்ன நடந்ததென்று பார்ப்போம்.

**

சுவாரசியமாக கடலை போட்டுக் கொண்டிருக்கும் கவின் – லியா ஜோடி, அப்படியே அயர்ந்து தூங்கி விட்டால் அவர்களின் முட்டையை உடைத்து விடலாம் என்று தர்ஷனும் முகினும் திட்டம் போட்டுக் கொண்டிருந்ததோடு நேற்றைய எபிஸோட் முடிந்தது. இந்த ஐடியாவிற்கு சாண்டியும் உறுதுணையாக இருந்தார். இது நட்பிற்கு செய்யும் துரோகம் அல்ல. விளையாட்டு மனப்பான்மைக்கு செய்யும் நியாயம்.

மட்டுமல்லாமல், தூக்கம், பசி, இயற்கை உந்துதல் போன்றவற்றை பொறுத்துக் கொண்டு பல மணி நேரங்கள் நீளும் இந்த டாஸ்க் எப்படியாவது முடிந்தாக வேண்டும். இல்லையென்றால் எஞ்சியுள்ள போட்டியாளர்களுக்கு அவஸ்தைதான்.

தர்ஷனும் முகினும் விழிப்பாக உலாத்திக் கொண்டிருக்க, கவினும் லியாவும் மூலையில் அமர்ந்து கொண்டு ஜாலியாக கடலை போடும் காட்சியைப் பார்த்து நமக்கே கடுப்பாகும் போது சக போட்டியாளர்களுக்கு கடுப்பு வருவதில் தவறேயில்லை. லியா அசந்திருக்கும் நேரத்தை சரியாக கணித்து துரித கணத்தில் லியாவின் முட்டையை சுவற்றில் அடித்து உடைத்தார் தர்ஷன்.

எந்தச் சத்தம் வந்தாலும் குழந்தை போல அலறியடித்துக் கொண்டு விழிக்கும் லியா இதற்கும் அப்படியே பயந்தார். “போச்சா.. சோனா முத்தா” என்று கவின் கிண்டலடிக்க, டாஸ்க்கில் தான் தோற்று விட்டோமே என்கிற கவலை துளி கூட இல்லாமல் இளித்துக் கொண்டிருந்தார் லியா.

IMAGE_ALT

“போட்டில சாண்டி எப்படியும் இல்ல. பின்ன ஏன் அவன் தூங்கப் போகாம இருந்தான்னு அப்பதே இருந்து யோசிச்சிட்டிருந்தேன். இப்பத்தான் வெளங்குது. நான் அப்பவே சொன்னேன். சாண்டியை நம்பாதேன்னு’ என்றெல்லாம் ஜாலியும் குத்தலுமாக லியா, கவினிடம் பேசிக் கொண்டிருக்க இதைக் கேட்டுக் கொண்டிருந்த சாண்டியின் முகம் சுருங்கியது.

“நீ அப்படில்லாம் கேவலமா என்னை நெனக்காத..” என்று அடிபட்ட முகபாவத்துடன் சாண்டி சொன்னார். ‘ஒண்ணும் பிரச்சினையில்லண்ணே.. அதுவும் ஒரு உத்திதானே.. அதுக்குத்தானே அப்பத்துல இருந்து பிளான் போட்டுட்டு இருந்தீங்க?” என்று இதை இயல்பாக கடப்பது போல கவின் சொன்னாலும் அவருக்குள்ளும் இது போன்ற வருத்தம் இருப்பதை யூகிக்க முடிந்தது. ‘அவங்க அதுக்கா பிளான் போட்டாங்க?” என்று வெள்ளந்தியாக கேட்டார் லியா.

இது சார்ந்த மனவோட்டங்கள் கவினின் மனதில் விரக்தியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து நிதானமாக எழுந்து சென்று தன் முட்டையை தானே போட்டு உடைத்தார் கவின் என்கிற நந்தவனத்து ஆண்டி.

இதைக் கண்டு சாண்டி, தர்ஷன், முகின் ஆகியோர் திகைத்துப் போனாலும் அந்தச் சமயத்தில் அவர்களால் எதையும் கேட்க முடியவில்லை. பிறகு தூங்கச் சென்ற கவினை அழைத்த சாண்டி.. “டேய்.. இங்க வாடா. என்னை தப்பா நெனச்சிட்டியா?” என்று உரையாடலை ஆரம்பித்தார். அதற்கு கவின் சில விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.

போட்டியாளர்களை வரிசைப்படுத்தும் டாஸ்க்கில், நெருங்கிய நண்பனான சாண்டியே கவினுக்கு ஏழாம் இடம் தந்தது குறித்து லியாவிற்கு வருத்தமாம். மேலும் பலூன் உடைக்கும் டாஸ்க்கிலும் லியாவை குறி வைத்தது குறித்து அவருக்கும் வருத்தம் இருக்கிறதாம். “இதை என் கிட்ட சொல்லாத. சாண்டி கிட்டயே கேளுன்னு சொல்லிட்டு இருந்தேன்” என்றார் கவின். பிறகு லியாவும் வந்து இந்த உரையாடலில் இணைந்து கொள்ள உரையாடல் கசமுசாவாகியது.

IMAGE_ALT

டாஸ்க் சமயத்தைத் தவிர இதர நேரங்களில் போட்டியாளர்கள் தங்களின் இயல்பான உணர்வுகளோடு இயங்கலாம். வனிதா குறிப்பிட்டது போல எந்நேரமும் இது கேம் என்கிற உணர்வோடு கறாராக இருக்க முடியாது. ஆனால் ‘டாஸ்க்’ என்று வரும் போது அனைத்தையும் உதறி விட்டு போட்டி மனப்பான்மையோடு விளையாட வேண்டும் என்பது அடிப்படை. இது போட்டியாளர்களே ஒப்புக் கொள்ளும் விஷயம். திரும்பத் திரும்ப நினைவுப்படுத்தப்படும் விஷயமும் கூட.

ஆனால் போட்டியிலும் தனிப்பட்ட காதலும் நட்பும் ஒன்றாக வந்து கலப்பது முறையானதல்ல. இதை ‘தனி உலகத்தில் வாழும்’ கவினும் லியாவும் புரிந்து கொள்ளவில்லை.

‘பாயிண்ட் லிஸ்ட்ல மேல இருக்கான்னு நாம ஷெரீனைத்தானே டார்க்கெட் பண்ணினோம். இவன் ஏன் வந்து நடுவுல குழப்பறான்’ என்று வேதனையான உணர்வுடன் பிறகு தர்ஷனுடன் பேசிக் கொண்டிருந்தார் சாண்டி.

**

89-ம் நாள் விடிந்தது. ‘டங்கா மாரி ஊதாரி’ என்கிற அட்டகாசமான குத்துப்பாடலை ஒலிக்க விட்டார் பிக்பாஸ். ‘அழுக்கு மூட்டை மீனாட்சி’ என்ற வரி வரும் போது காமிரா ஷெரீனை காண்பித்தது. (நான் நேற்றைய கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன். ‘நீங்க ரொம்ப அழுக்கா இருக்கீங்க” என்றுதான் பிக்பாஸ் ஷெரீன் குறித்து சொல்லியிருப்பார் என்று. அது இன்று நிரூபணமானது).

கவினின் மீதுள்ள ஆதங்கத்தையும் நட்பின் விரிசலையும் பற்றி பிறகு சேரனிடம் தனியாக பகிர்ந்து கொண்டிருந்தார் சாண்டி. போலவே இந்தப் பிரிவிற்கு லியாவின் கமெண்ட்டுகள் காரணமாக இருப்பதையும்.

இதைக் கேட்டு முகத்தைச் சுளித்துக் கொண்டார் சேரன். அவர் வலியினால் முகம் சுளிக்கிறாரா, லியாவிற்காக முகம் சுளிக்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

“அந்தப் பொண்ணு சமயத்துல மெச்சூர்டா பேசும். ஆனா சமயத்துல சின்னப்புள்ளத்தனமாவும் பேசும்” என்று லியாவைப் பற்றிய சரியான கணிப்பை முன் வைத்த சேரன் “நீங்க மூணு பேரும் உக்காந்து தனியா பேசுங்க. அவங்க ரெண்டு பேரும் குழந்தைங்க மைண்ட் செட்ல இருக்காங்க” என்று சாண்டிக்கு ஆலோசனை சொன்னார்.

வாக்குமூல அறை. கலங்கிய முகத்துடன் சாண்டி உட்கார்ந்திருந்தார். போட்டியாளர்கள் பெரும்பாலான சமயங்களில் மனஅழுத்தம் தாங்காமல் இந்த அறைக்கு வந்து பிக்பாஸிடம் பேசியிருக்கக்கூடும். ஆனால் அவை அதிகம் காட்டப்படவில்லை. இன்று சாண்டி பேசியது அதற்கான உதாரணம்.

“அழுகையா வருது குருநாதா… நான் ஏதோ தப்பு பண்றோமோன்னு .. நான் கவினை காலி பண்ணனும்னு பிளான்லாம் பண்ணலை. நான் ஜாலியான ஆளு. எனக்கே இந்த ஃபீலிங்க்ஸ்லாம் புதுசா இருக்கு. அவன் கிட்ட போய் பேசவே பயமா இருக்கு. ஏதாவச்சும் சொல்லிடுவானோன்னு. நான் வீட்டுக்குப் போறேன்” என்று நட்பில் ஏற்பட்டிருக்கும் விரிசலைப் பற்றி உருக்கத்துடன் கண்ணீர் வழிய சொல்லிக் கொண்டிருந்தார் சாண்டி.

பிக்பாஸ் என்பது முழுக்க முழுக்க ஸ்கிரிப்டட் ஷோ என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இந்தக் காட்சியைப் பார்க்க வேண்டும். இத்தனை இயற்கையாக ஒருவரால் நடிக்கவே முடியாது. எத்தனை திறமையான நடிகராக இருந்தாலும் அம்பலப்பட்டு விடுவார்.

“சிஷ்யா. இதுவரைக்கும் நீங்க நல்லாத்தான் செஞ்சிட்டு இருக்கீங்க. அதையே தொடருங்க. கொஞ்சம் இடைவெளி விட்டு கவின் கிட்ட பேசுங்க. அவர் உங்க பிரெண்ட்தானே.. சந்தோஷமா இருங்க. பவர் பாட்டியோட ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு” என்று சாண்டியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார் குருநாதர். அழுகையையும் மீறி வந்த புன்னகையுடன் கிளம்பிச் சென்றார் சாண்டி.

பிறகு சாண்டியும் கவினும் தனியாக உரையாடிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. “நீ என்னை தனியா விட்டுட்டியோன்னு நெனச்சேன்” என்று கவின் சொல்ல, “நீ தனியா வேற உலகத்துக்கு போயிட்டியோன்னு எனக்குத் தோணுது” என்று சாண்டி சொல்ல.. மந்தையிலிருந்து பிரிந்த இரண்டு ஆடுகள் உருக்கமாக பேசிக் கொண்டன.

IMAGE_ALT

“நம்ம க்ரூப்க்குள்ள ஏதோ ஆவுது. அது என்னன்னு எனக்குச் சொல்லத் தெரியல’ என்றார் கவின். இதர விஷயங்களுக்கு இரண்டு மணி நேரம் லாஜிக் பேசும் கவினால் இதற்கு விடை காண முடியவில்லை என்பது அபத்தமானது.

**

“மெய் மறந்திடு’ என்கிற சாக்லேட் டாஸ்க் பிறகு துவங்கியது. போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிய வேண்டும். இதன் நடுவராக முதுகுவலி சேரன் இருப்பார். இரு அணிகளும் தரப்பட்டிருக்கும் வாசகங்களை வைத்து வெவ்வேறு கற்பனை உலகங்களை உருவாக்க வேண்டும். அதை எதிர் தரப்பு அணியிலிருக்கும் ஒருவர் படமாக வரைந்து காட்ட, இதர நபர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

சாண்டி சொல்லும் கதைகளை வைத்தே இந்த டாஸ்க்கை பிக்பாஸ் உருவாக்கி விட்டார் போலிருக்கிறது. இது அவர்களுக்குத்தான் புரியும். நமக்கு ஒன்றும் புரியவில்லை.

மறுபடியும் சாண்டியும் சேரனும் பேசிக் கொண்டிருந்தார்கள். வேறு யாரைப் பற்றி, கவின் மற்றும் லியாதான்.

‘அவங்க தனி உலகத்துக்குள்ள போயிட்டாங்க. ஒருத்தரையொருத்தர் பரஸ்பரம் மோட்டிவேட், சப்போர்ட் பண்ணா போதும்னு நெனக்கறாங்க. நானும் விட்டுட்டேன். கேம் முடிஞ்சதும் வேற விஷயங்கள் இருக்கு. நான் அதுக்கு சப்போர்ட் பண்ணுவேன். ஆனா அதுக்கு ஒருத்தரையொருத்தர் நல்லா தெரிஞ்சக்கணும்.” என்றெல்லாம் சேரன் சொல்லியது சரியான நடைமுறை உண்மைகள். இதற்கு அவரின் தனிப்பட்ட அனுபவங்களும் காரணமாக இருக்கக்கூடும்.

கோல்டன் டிக்கெட்டின் 9வது மற்றும் இறுதி டாஸ்க் ஆரம்பித்தது. இதுவொரு சுவாரசியமான போட்டி. ஆளுக்கொரு சைக்கிள் தருவார்கள். அதை போட்டியாளர்கள் தொடர்ந்து மிதிக்க வேண்டும். ஒவ்வொரு சைக்கிளின் முன்னாலும் ஒவ்வொரு போட்டியாளரின் புகைப்படம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். தான் யாருக்காக சைக்கிள் ஓட்டுகிறோம் என்பது போட்டியாளர்களுக்கு தெரியாது. இறுதி வரை ஓட்டப்படும் சைக்கிளின் முன்பு யாருடைய புகைப்படம் இருக்கிறதோ, அவரே வெற்றியாளர்.

பெரும்பாலும் அதிர்ஷ்டம் சார்ந்த டாஸ்க் இது. தான் யாருக்காக சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது போட்டியாளருக்கு தெரியாது. மற்றவருக்காக நாம் ஏன் சிரமப்பட வேண்டும் என்று விட்டு விடவும் முடியாது. அது அவருடைய புகைப்படமாகவும் இருக்கலாம். (எனக்கென்னமோ, அவரவர்களின் புகைப்படங்கள்தான் அவரவர்களின் இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. இந்த டிவிஸ்ட்டை பிக்பாஸ் இறுதியில் தெரிவிக்கலாம்).

இன்னொருவருக்காக ஏன் சிரமப்பட வேண்டும் என்று ஒரு போட்டியாளர் நினைத்து விலகி விட்டு, பிறகு தன் சொந்த புகைப்படத்தை அங்கு கண்டு மனம் வருந்தக்கூடும்.

ஒருவகையில் இந்த டாஸ்க்கை உலகத் தொழிலாளர்களுக்காகவும் சமர்ப்பணம் செய்யலாம். யாருக்காக உழைக்கிறோம். இதனால் அதிக லாபமடையப் போகிறவர் யார் என்பதெல்லாம் தெரியாமல் வெள்ளந்தியாக ஓயாமல் உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கான குறியீட்டு விளையாட்டு இது.

“இந்தப் பெடலை எடுத்துட்டா.. சைக்கிளை ஓட்டிக்கிட்டு வீட்டுக்குப் போயிடுவேன்’ என்று சாண்டி கிண்டலடிக்க, ‘அந்த நாள் முதல் இந்த நாள் வரை’ என்று சிவாஜி பாடலைப் பாடி களைப்பைப் போக்க முயன்றார் சாண்டி.

ஒருமணி நேரத்திற்குப் பிறகு கால்வலி காரணமாக கவின் முதலில் விலகினார். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சேரன் விலகினார். ஏற்கெனவே அவருக்கு முதுகு வலி. இதன் பிறகு ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு ஷெரீன் விலகினார்.

“என் போட்டோ இருக்கும்-ன்னுதானே போறே?” என்று சாண்டி ஜாலியாக கேட்க “உன் போட்டோ இருக்கும்-னு தெரிஞ்சா முதல்லயே போய்ட்டு இருப்பேன். நான் ஏன் இத்தனை கஷ்டப்பட்டிருக்கணும்?,” என்று கால் வலியிலும் ரணகளமாக கவுண்ட்டர் தந்தார் ஷெரீன்.

ஆக.. லியா, சாண்டி, தர்ஷன், முகின் ஆகியோர் மட்டும் களத்தில், அதாவது சைக்கிளில் இருக்கிறார்கள்.

இந்த வாரப் பஞ்சாயத்தில் கவின் மற்றும் லியாவிற்கு தாராளமான அர்ச்சனைகள் நடக்கும் என்று தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE