Wednesday 24th of April 2024 04:02:26 AM GMT

LANGUAGE - TAMIL
‘கமலிடம் அர்ச்சனை வாங்கிய கவினும் லியாவும்’  - சுரேஷ் கண்ணன்

‘கமலிடம் அர்ச்சனை வாங்கிய கவினும் லியாவும்’ - சுரேஷ் கண்ணன்


‘கமல் அட்டகாசமான தோற்றத்தில் வந்தார்’ என்கிற வாக்கியத்தை வாரா வாரம் எழுதுவதற்கு சலிப்பாக இருக்கிறது. இன்று கூடுதல் வசீகரத்துடன் வந்தார் கதவட. சமீபத்தில் வெளியான கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளையொட்டி தமிழ் மற்றும தமிழர்களின் அருமை, பெருமைகளை அவர் சொன்னது சிறப்பு. நம் காவல் தெய்வங்கள் வடக்கு நோக்கி இருப்பதைப் போல் மொழி ஆர்வலர்களும் இருக்கிறார்கள் என்றது நல்ல குத்தல்.

‘தமிழ் இனி மெல்லச் சாகும்’ என்று பாரதி சொன்னார்’ என்கிற தவறான தகவல் பல ஆண்டுகளாக இருக்கிறது. கமலும் இந்த தவறான விஷயத்தைப் பரப்பலாமா? சம்பந்தப்பட்ட பாடல் முழுவதையும் வாசித்தால்தான் அதன் தொடர்ச்சியோடு பாரதி சொன்னது என்னவென்று விளங்கும். இப்படி துண்டு துண்டாக புரிந்து கொள்வதிலும் தமிழர்கள் சமர்த்தர்கள்தான்.

கவின்-லியாவிற்கு அர்ச்சனைகள் கிடைக்கக்கூடும் என்று சென்ற கட்டுரையில் எழுதியிருந்தேன். இதை வழக்கம் போல வலிக்காமல் செய்தார் கமல். கண்ணியமான எல்லைக்குள் நின்று கொண்டு அதே சமயத்தில் எதிர் தரப்பிற்கு அழுத்தமாகப் புரிய வைக்கும் பாணியை பின்பற்றினார். சாண்டி தொடர்ந்து மழுப்பிக் கொண்டிருந்த போது சட்டென்று எரிச்சலாகி ‘லோக்கல்’ பாஷைக்கு கமல் மாறியது சிறப்பு.

**

வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் காட்டப்பட்டன. சைக்கிள் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஸ்லீவ்லெஸ்ஸில் லியா வசீகரமாக இருந்தார். ஒரு நிலையில் அவர் வைத்திருந்த ஆடை நழுவி சைக்கிள் சக்கரத்தில் மாட்டிக் கொள்ள பயணம் நின்று போனதால் திகைத்துப் போனார். (இருசக்கர வாகனங்களின் பின்இருக்கையில் பயணிக்கும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயம் இது). ‘டிரஸ் மாட்டறதை பார்க்கக்கூடாதா?” என்று கண்டித்த சாண்டி கவினை அவசரமாக கூப்பிட்டார்.

இங்கு ஒரு இடைச்செருகல். அபியும் நானும் என்றொரு திரைப்படத்தில் தன் மகள் திரிஷாவின் மீது மிகையான பாசத்துடன் இருப்பார் பிரகாஷ்ராஜ். ‘சமையல் அறையில் சூடு பட்ட’ கூக்குரலைக் கேட்டவுடன் பதட்டத்துடன் வந்து மனைவியை கோபத்துடன் கன்னத்தில் அறைவார். ‘குழந்தை கைல சூடு படற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தே?” என்று. பிறகுதான் தெரியும், சூடு பட்டது மனைவிக்கு என்று. திகைப்பிலும் சங்கடத்திலும் உறைந்து விடுவார் பிரகாஷ்ராஜ். மகளின் மீது அத்தனை கண்மூடித்தனமான பாசம்.

இதைப் போல சாண்டியின் கூக்குரலைக் கேட்டவுடன் கவின் பாய்ந்து வந்து சாண்டியை கன்னத்தில் ஒன்று போட்டு ‘டிரஸ் மாட்டற வரைக்கும் நீ வேடிக்கை பார்த்துட்டு இருந்தியா?” என சண்டை போடுவாரோ என்று தோன்றியது. ஏனெனில் கவின் அப்படிப்பட்ட கொலைவெறி பாச மோடில் இப்போது இருக்கிறார்.

பதட்டத்துடன் ஓடி வந்த கவின் “என்னப்பா.. இப்படிப் பண்ணிட்டே?” என்று கேட்டுக் கொண்டே சைக்கிளில் மாட்டியிருந்த துணியை திகைப்புடன் பார்த்தார். ‘எடுக்க முடியாது போலயே.. நல்லா மாட்டிக்கிச்சு” என்று அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த ஷெரீன் அதை லாவகமாக சட்டென்று எடுத்து விட்டார். (வீடுகளிலும் கணவன்மார்கள் இப்படி பல்ப் வாங்கும் காட்சிகள் நிறைய நடக்கும்).

“கேமை கைவிடக்கூடாதுன்னு இருந்தேன்’ என்று சோர்ந்து சாய்ந்து விழுந்த லியாவிடம் ‘இவ்ள நேரம் சைக்கிள் ஓட்டினது பெரிய விஷயம். அதுவும் ரெண்டு பொண்ணுங்க’ என்றெல்லாம் சரியான ஆறுதலைத் தந்தார் கவின்.

ராவெல்லாம் சைக்கிள் ஓட்டிய முகின் ராவிற்கு (ரைமிங்கை கவனியுங்கள்) தொடையில் பயங்கர வலி ஏற்பட்டது. “முடியலைன்னா விட்ரு. நம்மளால முடிஞ்ச வரைக்கும்தான் பண்ண முடியும்” என்றார் கவின். இது முகினின் மீதுள்ள அக்கறையால் சொல்லப்பட்டது என்றாலும் இப்படி discourage செய்வது இன்னொரு வகையில் முறையற்றது. மனித உடலின் ஆற்றலைப் பற்றி மனிதனுக்கே முழுவதும் தெரியாது.

வலி தாங்காமல் இறங்கி விட்ட முகினுக்கு முதல் உதவி செய்தார் கவின். கடைசியில் இருந்தது சாண்டியும் தர்ஷனும். எதையோ யோசித்துக் கொண்டே பெடல் செய்த சாண்டி அதை தவற விட்டு திகைத்து போட்டியிலிருந்து விலகினார். ஆனால் தர்ஷன் அசரவேயில்லை. ‘நான் நாளைக்கு வர்றேன். நீங்க கிளம்புங்க’ என்று ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார்.

IMAGE_ALT

“போதும்.. வாடா.. நீதான் வின்னு’ என்று சாண்டி சொன்னதும் உற்சாகமாக இறங்கினார் தர்ஷன். விட்டால் இன்று முழுவதும் கூட சைக்கிள் ஓட்டுவார் போல. சில பின்னடைவுகளுக்குப் பிறகு தர்ஷனின் உடல் வலிமை மீண்டும் உறுதிப்பட்ட தருணம் அது. ஆக இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றது தர்ஷன். சைக்கிள் டாஸ்க் என்பதால் ‘பின்னி பெடல் எடுத்து விட்டார்’ என்று சொன்னாலும் பொருத்தமாக இருக்கும்.

‘போராடினால் நாம் வெல்லலாம்’ என்று ஆடுகளம் திரைப்படத்திலிருந்து ஆக்ரோஷமான பாடல் ஒலித்தது. அத்தனை கால் வலியிலும் சாண்டியும் தர்ஷனும் அதற்கு நடனமாடினார்கள். காலை உதறி உதறி ஆடி அப்படியே வலியையும் போக்கும் விதத்தில் நடனஅமைப்பை செய்த சாண்டி புத்திசாலிதான்.

தூங்குவதற்கு ஆயுத்தமாகிக் கொண்டிருந்த தர்ஷனிடம் ‘வாழ்த்துகள். 8 மணி நேரம் 16 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டி வெற்றி பெற்றிருக்கிறீர்கள்’ என்று தெரிவித்தார் பிக்பாஸ். தர்ஷனின் உழைப்பின் பலன் யாருக்கு சென்று சேரப் போகிறது என்பது சிறிது நேரத்தில் தெரிந்து விடும்.

**

90 வது நாள் மாலை 03.30 மணிக்கு விடிந்தது. சைக்கிள் டாஸ்க் ரகசியம் வெளிப்பட்டது. இதில் சேரன் மட்டும்தான் அவருக்காக ஓட்டியிருக்கிறார். மற்ற அனைவரும் மற்றவர்களுக்காக ஓட்டியிருக்கிறார்கள். இதில் கவின் மற்றும் லியாவை மாற்றி கோர்த்தது பிக்பாஸின் குறும்பு.

இதில் அதிர்ஷ்டம் அடித்தது முகினுக்கு. ஆம், தர்ஷனின் அசாதாரணமான உழைப்பின் பலன் முகினுக்குச் சென்று சேர்ந்தது. ஆனால் இதுவொரு நியாயமான அதிர்ஷ்டம். ஏனெனில் முகினும் தர்ஷனுக்கு ஈடான உழைப்பைத் தந்தவர். முகினின் வெற்றியை தர்ஷன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது சிறப்பு.

ஆக இந்த சீஸனின் முதல் இறுதிப் போட்டியாளராக முகின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

**

அடுத்ததாக ஒரு பெயிண்ட் கம்பெனிக்காக ஒரு நிமிட விளம்பரக் காட்சியை இரு அணிகள் உருவாக்க வேண்டும். இதற்கான கதாபாத்திரங்கள் தரப்பட்டன. மாமியார் என்று தனக்கு தரப்பட்டிருந்த பாத்திரத்தைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார் ஷெரீன்.

தர்ஷன் வீட்டு உரிமையாளர், முகின் சிவில் காண்ட்டிராக்ட்டர், கவின் பெயிண்ட்டர் (இங்கும் கடைசி இடம்தானா?) என்கிற பாத்திரங்களில் நடித்தனர். இந்த டிராமா குறும்புத்தனமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. “யாருப்பா நீ?” என்றவுடன் தன் நரைதாடியைக் கழற்றி விட்டு ‘இப்ப அடையாளம் தெரியுதா?” என்று கவின் கேட்டது நல்ல நகைச்சுவை. போலவே ‘கல்யாணம் பண்ணிப்பாருன்னு சும்மாவா சொன்னாங்க” என்கிற பழமொழியை டைமிங்காக கவின் சொன்னதும் நல்ல குறும்பு. (மரியநேசன் காதுல இது விழுந்திருக்கணும்).

“உனக்கு மட்டும் எப்படி வயசாகாம இருக்கு?” என்றதற்கு ‘எனக்கும் பெயிண்ட் அடிச்சிக்கிட்டேன்’ என்று முகின் சொன்னது நல்ல குறும்பு.

IMAGE_ALT

அடுத்த டிராமா துவங்கியது. சாண்டி பேபியாம். லியா அவரது அம்மாவாம். ஷெரீன் மாமியாராம். டீச்சர் லுக்கில் வந்து இறங்கிய லியா, கைகளை படபடவென்று அடித்துக் கொண்டு விளம்பர வாசகங்களை சொன்னது படு செயற்கையாக இருந்தது. மொத்தத்தில் இந்த டிராமா அத்தனை சுவாரசியம் இல்லை. ‘இளைஞர்களின் சிந்தனை சிறப்பாக இருந்தது’ என்று தர்ஷன் டீம் வெற்றி பெற்றதாக தெரிவித்த நடுவர் சேரன் ‘நானும் இளைஞன்தான்’ என்று இடையில் ஒரு பிட்டை ஜாலியாக இணைத்துக் கொண்டார்.

**

அகம் டிவி. முகினுக்கு டிக்கெட்டை நான் சென்று அளிக்கிறேன் என்றார் கமல். முகினை வாக்குமூல அறைக்கு அழைத்துச் சென்று தீவிரவாதி போல கண்களைக் கட்டி அழைத்துச் சென்றார்கள். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ‘நாடோடிகள்’ பட பாணியில் அதற்குள் முகினுக்காக பேனர் எல்லாம் அடித்து வைத்திருந்தார்கள். “அடேய்!.. எனக்காகவா இத்தனையும் செஞ்சு ஒட்டியிருக்கீங்க?” என்கிற ஆச்சரியத்துடன் திருவிழா சிறுவன் மாதிரி உள்ளே வந்தார் முகின்.

பின்னாலேயே கமலும் வந்தார். தெய்வத்தைப் பார்த்த பக்தன் போல குழைந்தார் முகின். “சில வாரங்களுக்கு முன்பாக பின்தங்கியிருந்தீங்க. இப்ப அதைக் கடந்து முன்னாடி வந்துட்டீங்க. இறுதி வரைக்கும் இந்த உற்சாகமும் தன்னம்பிக்கையும் இருக்கணும். இந்த வெற்றியை நேர்மையா அடைஞ்சீங்க. அதான் முக்கியமான விஷயம். எனக்குப் பிடிச்சிருந்தது.” என்று வாழ்த்திய கமல் கோல்டன் டிக்கெட்டைத் தந்தார். இந்த டாஸ்க்கில் முகின் விளையாடிய நிகழ்வுகளும் வீடியோவாக காட்டப்பட்டது.

IMAGE_ALT

“ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்பார்கள். அந்த வகையில் முகினின் வெற்றிக்கு அபிராமியும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஆம், அவர் வெளியேறியதால்தான் முகின் முனைப்புடன் செயல்பட்டு டாஸ்க்குகளில் சிறப்பாக பங்கேற்றிருக்கிறார். இல்லையென்றால் கவினைப் போலவே டொங்கலாகி முடங்கியிருக்கலாம்.

வீட்டுக்குத் திரும்பிய முகினை அத்தனை போட்டியாளர்களும் உளமார்ந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்தியது நல்ல விஷயம். எவருக்கும் முகினின் இந்த வெற்றியில் காழ்ப்போ, கசப்போ இருப்பது போல் தெரியவில்லை. இந்த சீஸனின் பிரத்யேகமான சிறப்பம்சம் இது.

அகம் டிவி வழியே உள்ளே வந்த கமல், சைக்கிள் டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்களின் அசாதாரணமான உழைப்பைத் தந்ததற்காக பாராட்டினார். பெண்களுக்கு பிரத்யேகமான பாராட்டு கிடைத்தது. சாண்டியைப் பாராட்டும் சாக்கில் கமலின் நடன கிளாஸ் சுயபுராணமும் கலந்திருந்தது. ‘யாருக்காக ஓட்டுகிறோம்’ என்பது தெரியாமலேயே ஸ்போர்ட்மேன்ஷிப்புடன் சைக்கிள் ஓட்டிய தர்ஷனுக்கும் சிறப்பு பாராட்டு கிடைத்தது.

“பிக்பாஸ் விளையாட்டில் ஏஸி ரூம், சாப்பாடுல்லாம் தர்றாங்கன்னு சிலர் நெனக்கலாம். முட்டியைப் பேத்துடறாங்க” என்றார் கமல். (இது இந்த மூணு நாள்தானே.. மத்தநாள் ஜாலிதானே.. எங்களையும் விடுங்க. நாங்களும் வர்றோம்” என்று சிலர் கிளம்பலாம்).

முல்லைக்கு தேர் தந்த பாரியைப் போல, கையில் ரத்தக் காயம் பட்ட தர்ஷனுக்கு தன் டீஷர்ட்டை கிழித்து முதலுதவி செய்த முகினையும் பிரத்யேகமாகப் பாராட்டினார் கமல்.

அடுத்ததாக ஐவர் டீமில் எழுந்த பிளவு. இதிலும் குறிப்பாக மூவருக்கு இடையில் எழுந்திருக்கும் விரிசலைப் பற்றி விசாரித்தார் கமல். ஆனால் சாண்டி இதற்கு தொடர்ந்து மழுப்பிக் கொண்டேயிருந்தார். வெளியிலும் கமல் உட்பட பலரும் இதைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்களே என்பதை போட்டியாளர்கள் மறந்து விடுகிறார்கள் போல.

IMAGE_ALT

சாண்டியும் கவினும் தொடர்ந்து மழுப்பிக் கொண்டிருக்கும் போது சட்டென்று மெட்ராஸ் பாஷையின் வாசனை வர மாடுலேஷனை கமல் மாற்றியது சிறப்பு. லியாவிற்கு அடிபட்ட போது வந்த ‘ஏதோவொரு எமோஷன்” தர்ஷன் அடிபட்ட போது வரவில்லையே?” என்று கவினை கமல் மடக்கியது ரகளையான தருணம்.

போட்டி என்று வரும் போது அந்த மனப்பான்மையில்தான் அனைவரும் விளையாட வேண்டும். நட்பு, காதல், குழு மனப்பான்மை போன்றவை அதில் கலக்கக்கூடாது என்பது இங்கு திரும்பத் திரும்ப நினைவுப்படுத்தப்படும் ஒரு விதி. ஆனால் பிக்பாஸ் விளையாட்டு என்பது இதர போட்டியாளர்களுடன் தொடர்ந்து புழங்கும் விஷயம். எனவே அது சார்ந்த உணர்வுகளையும் எளிதில் கடந்து விட முடியாது. புதிதாக சந்திக்கும் ஒரு போட்டியாளருடன் மோதுவதற்கும் பல வருடங்கள் பழகிய ஒரு நண்பனுடன் மோதுவதற்கும் நிச்சயம் வித்தியாசம் உள்ளது. என்றாலும் அதைத் தாண்டித்தான் ஆக வேண்டும்.

இந்த நோக்கில் கவின் மற்றும் லியா முன்வைக்கும் புகார்கள் அபத்தமானவை. இதை கமலும் சுட்டிக் காட்டினார். சாண்டியை திட்டினது ‘அந்த நேரத்து சூழலில் ஏற்பட்ட கோபம்’ என்று சமாளித்தார் கவின். ‘குறும்படம்’ என்று ஆசை காட்டி நாம் பார்த்த காட்சிகளையே மீண்டும் ஒளிபரப்பி ஏமாற்றினார்கள்.

தர்ஷனும் முகினும் சிறந்த நண்பர்கள்தான். ஆனால் போட்டி என்று வந்து விட்டால் ஆக்ரோஷமாக செயல்படுகிறார்கள். அதே சமயத்தில் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புடன் பெருந்தன்மையாகவும் இருக்கிறார்கள்’ என்று கமல் சுட்டிக் காட்டியது சிறந்த ஒப்பீடு.

இந்த உரையாடலின் மூலம் சாண்டி டீம் போட்டு வைத்த திட்டம் அம்பலத்திற்கு வந்தது. ‘ஐவர் டீமை’ தக்க வைப்பதற்காக போட்ட திட்டங்கள். இப்போது ஷெரீனையும் பலி கொடுக்க சாண்டி தயாராக இருக்கிறார். அதை வெளிப்படையாக சொல்லும் சூழலும் உருவாகி விட்டது. ஆனால் சாண்டி டீமியிலேயே இப்போது விரிசல் ஏற்பட்டிருப்பதுதான் இதிலுள்ள அவல நகைச்சுவை.

சாண்டி செய்வது ஓர் உத்தி என்றாலும் தனித்தனியாக விளையாட வேண்டிய போட்டியில் குழு மனப்பான்மையுடன் சிலரை டார்க்கெட் செய்து பலி தருவது அறமல்ல. “அப்போ ஷெரீனும் சேரனும் வெளியில போயிடணுமா?” என்று கமல் கேட்பது சரியான கேள்வி.

உடல்வலிமை சார்ந்து அமைந்திருக்கும் போட்டிகளில் தன் உடல்நிலைமை காரணமாக சரியாக பங்கேற்க முடியவில்லை என்று கவின் சொல்வது ஒருபக்கம் பரிதாபமாக இருந்தாலும், முட்டையைப் பாதுகாக்கும் டாஸ்க்கில் தர்ஷனும் முகினும் விழிப்பாக இருந்த போது இவர் லியாவுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தது முறையானதல்ல. அதற்கு உடல்தகுதி தேவையில்லை. அதே சமயத்தில் மரக்கட்டைகளை சமநிலையாக தாங்கும் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டார் கவின்.

இதுவரை நிகழ்ந்த தமிழ் பிக்பாஸ் சீஸன்களில் மூன்றாவது சீஸன்தான் தான் பலருக்குப் பிடித்திருப்பதாக கமல் கூறினார். (ஆனால் முதல் சீஸன்தான் சிறப்பு என்பது என் பார்வை. ஓவியா உள்ளிட்டு அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.)

“இன்னமும் ரெண்டு வாரம்தான் இருக்கு. உங்க நட்பு, காதல், பாசம் போன்றவைகளையலெ்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு கேமை கேமா விளையாடுங்க’ என்றபடி கமல் கிளம்பினார்.

இதர அனைவரும் அசைவ உணவு வகைகளை வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்க, கமலால் குற்றம் சாட்டப்பட்ட கவினும் லியாவும் தனியாக அமர்ந்து கொண்டிருந்தார்கள். “கேம்ல என்னால முடிஞ்சத நான் பண்ணேன்” என்று விரக்தியுடன் கூறிக் கொண்டிருந்தார் லியா.

இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்கிற தகவல் ஒருமாதிரியாக கசிய ஆரம்பித்திருக்கிறது. ‘தேவதையாக’ இருக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். எனில் சாண்டியின் பிளான் சிறப்பாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்று பொருள். பொறுத்திருந்து பார்ப்போம்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE