Friday 29th of March 2024 03:18:52 AM GMT

LANGUAGE - TAMIL
‘நொறுங்கவிருக்கும் பாய்ஸ் டீம்.. ஊ.. ஊ..ஊ..’ -  சுரேஷ் கண்ணன்

‘நொறுங்கவிருக்கும் பாய்ஸ் டீம்.. ஊ.. ஊ..ஊ..’ - சுரேஷ் கண்ணன்


சேரனின் வெளியேற்றம் மீண்டும் நிகழ்ந்தது. இது ஒருவகையில் யதார்த்தமான விஷயம். ஏனெனில் இறுதிக்கட்டத்தில் உடல்தகுதி சார்ந்த போட்டிகளில் அவரால் சிறப்பாக பங்கேற்க முடியாது என்பது வெளிப்படை. முட்டையைப் பாதுகாக்கும் டாஸ்கில் அவருக்கு கூடுதலாக முதுகு வலியும் இணைந்து கொண்டது. எனவே பல போட்டிகளில் அவரை நடுவராகப் போட வேண்டிய நிலைமை.

என்றாலும் அவரே மேடையில் சொன்னது போல் அவரால் இயன்ற வரை இளைஞர்களுடன் போட்டி போட்டார். ஆனால் இனியும் நீடிப்பது அவரால் இயலாது. அது அவருக்கும் தெரிந்திருக்கிறது. ‘இனி வரும் காலம், இளைஞர்களின் காலம்' என்கிற குரலோடு விலகும் மனப்பான்மைக்கு வந்து விட்டார் என்பது அவரது இறுதிப்பேச்சில் தெரிந்தது.

இன்னொரு வகையில் அவரது வெளியேற்றம் முறையற்றது. மக்கள் வாக்களித்திருந்தபடி ஷெரீன்தான் கடைசி வரிசையில் இருந்ததாக தெரிகிறது. மட்டுமல்லாமல் கவின் எப்படி ஒவ்வொரு முறையும் தப்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் பலருக்கு திகைப்பான கேள்வியாக இருக்கிறது.

‘பிக்பாஸ் போட்டிகளில் இளைஞர்கள்தான் ஜெயிக்க முடியும் என்கிற மரபை உடைக்க நான் விரும்புகிறேன்’ என்பதை சேரன் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கான தன்னம்பிக்கையும் அவரிடம் பிறகு அதிகரித்தது. ஏனெனில் பிக்பாஸ் போட்டி என்பது பிரதானமாக ஒருவரின் சகிப்புத்தன்மையை சோதிக்கும் விளையாட்டுதான். உடல்தகுதி வாய்ந்தவர்கள்தான் வெற்றி பெற முடியும் என்றால் ‘மைக் டைசன்’ போன்ற பலசாலிகளே போதும்.

இந்த சீஸனில் அதிகபட்ச பெருந்தன்மையோடும் வீட்டின் மூத்த உறுப்பினர் என்கிற முறையில் பல ஆலோசனைகளைச் சொல்பவராகவும் இருந்தவர் சேரன். அவரது நல்லியல்புகளை பல முறை பார்க்க முடிந்தது.

கவின் – லியா காதல் விவகாரத்தில் அநாவசியமாக சேரன் மூக்கை நுழைக்கிறார் என்பது போன்ற விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டன. ஒருவர் மேஜர் ஆன பிறகு அவரது வாழ்வு குறித்தான முடிவுகளை அவரே எடுக்கலாம் என்பது ஒருவகையில் சரிதான். ஆனால் மேலைய நாடுகளில் நடைமுறையில் பெருமளவு சாத்தியமாகியுள்ள இவ்வகை கலாசாரமும் முதிர்ச்சியும் இங்கு இளைய தலைமுறையிடம் இன்னமும் சரியாக வரவில்லை.

‘தன் மகளுக்கு வரும் துணை சரியாக இருக்க வேண்டும்’ என்பதும் ‘அவ்வாறு இல்லையோ’ என்று நினைக்கும் பட்சத்தில் அது குறித்தான ஆட்சேபங்களையும் கவலையையும் தெரிவிக்கும் பொறுப்பு பெற்றோருக்கு அல்லது பாதுகாவலர்களுக்கு இன்னமும் இங்கு இருக்கத்தான் செய்கிறது.

இனக்கவர்ச்சியால் நிகழும் அவசர காதல் கல்யாணங்கள் விரைவில் உடைந்து போகும் சூழலில் இது போன்ற ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் அவசியமானது. எனவே அது சார்ந்த பொறுப்பை சேரன் தன்னிச்சையாக எடுத்துக் கொண்டதை பெரிய குறையாக கூற முடியாது. என்னதான் காதல் சார்ந்த திரைப்படங்களை உருவாக்கிய இயக்குநர் என்றாலும் ஒருநிலையில் அவரும் ஒரு தந்தைதான்.

கவின் – லியா ஆகிய இருவரும் பரஸ்பர காதலில் விழுந்ததில் எவ்வித பிழையுமில்லை. அது இயற்கையானது. இது குறித்து அவர்களை தொடர்ந்து குற்றஞ்சாட்டுவதும் குற்றவுணர்வில் ஆழ்த்துவதும் – வனிதா செய்ததைப் போல - முறையற்றது. ‘இயல்பாக இருப்பதுதான்’ அந்தப் போட்டியின் முக்கியமான விஷயமும் கூட. ஆனால் என்ன பிரச்சினையென்றால், காதல் சார்ந்த உணர்வுகள் போட்டிகளில் எவ்வித இடையூறையும் பின்னடைவையும் செய்யாத முதிர்ச்சியை அவர்கள் கொண்டிருந்திருக்க வேண்டும்.

அவ்வாறு இருந்தார்களா என்பது முக்கியமான கேள்வி. குறிப்பாக இறுதிக்கட்டத்தில் மிக சீரியஸாக இருக்க வேண்டிய நேரத்தில் அவர்கள் அலட்சியமாக இருந்தது போல்தான் தெரிந்தது. குறிப்பாக லியாவின் பெற்றோர், கவினின் ‘அறை’ நண்பர் ஆகியோரின் வருகைக்குப் பிறகும் அவர்களிடம் கணிசமான மாற்றம் தெரியவில்லை. ‘இனிமே மாறிடலாம்’ என்று பாவனையாக சொல்லிக் கொள்கிறார்களே தவிர அவற்றை பெரிதும் நடைமுறைப்படுத்தவில்லை.

உதாரணத்திற்கு முட்டையை உடைக்கும் டாஸ்க்கில் தர்ஷனும் முகினும் விழிப்பாக உலாவிக் கொண்டிருந்த போது இவர்கள் மூலையில் முடங்கி பேசிக் கொண்டிருந்த காட்சி ரசிக்கும்படியாக இல்லை. (ஒருவேளை இது போன்ற காட்சிகளே தொடர்ந்து காட்டப்படுவதால் அப்படியொரு தோற்றம் தெரிகிறதோ, என்னவோ!).

**

‘உங்களின் தனிப்பட்ட உணர்வுகளை ஒதுக்கி வைத்து விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டோம்’ என்று கமல் அளித்த உபதேசத்தினால் கவினும் லியாவும் இறுக்கமாக இருந்தனர். வாக்குமூல அறையில் லியா கதறி அழுத காட்சியோடு இன்றைய எபிஸோட் தொடங்கியது.

“நான் எந்தவொரு உத்தியையும் பின்பற்றலே. எனக்குத் தெரிஞ்ச, என்னால முடிஞ்ச கேமைத்தான் விளையாடறேன். இங்கு இனியும் என்னால் இருக்க முடியாது. என்னை வீட்டுக்கு அனுப்பிடுங்க” என்றெல்லாம் கதறிய லியாவிற்கு ஆறுதல் சொன்ன பிக்பாஸ், ‘கண்ணைத் துடை.. சிரி.. ம்.. இப்ப எப்படி இருக்குது மூஞ்சி?! இந்த மூஞ்சைத்தான் நாங்க பார்க்கணும்” என்று அனுப்பி வைத்தார்.

வெளியே வந்த லியா முழுவதுமாக முகம் மாறி ‘சண்டையா.. எங்க நடந்தது.. நான் பார்க்கலையே?” என்கிற மோடில் கவினிடம் பேசிக் கொண்டிருந்தார். ‘சரி மாறிடலாமா?” என்பது போல் கவின் கேட்டுக் கொண்டிருந்தார். அடப்பாவி! ஏறத்தாழ கேமே முடியப் போகுது! இன்னமும் ‘மாறிடலாமா’ யோசனையிலேயே இருந்தால் எப்படி?

அட்டகாசமான உடையில் வந்தார் கமல். ‘நீர் மேலாண்மையில் முன்னோடியாக இருந்த தமிழ் சமூகம், தற்போது பிளாஸ்டிக் குடங்களில் சுருங்கிப் போய் விட்டதைப் பற்றிய கவலையோடு பேசினார். ஏரி, குளம், கண்மாய், ஊருணி போன்றவற்றின் காரணப் பெயர்களை விவரித்தது சுவாரசியம். பழைய நாகரித்தோடு புதிய நுட்பத்தையும் இணைக்க வேண்டும் என்று சொன்னதும் சிறப்பு.

IMAGE_ALT

‘பிக்பாஸ் போட்டியில் உடல் காயங்களை விடவும் மனக்காயங்களை தாண்டி வருவதே பெரிய சவால்’ என்று தன் முன்னுரையை முடித்தார்.

சேரனுக்கு ஓர் தொலைபேசி அழைப்பு. ‘உங்கள் மகள் லியா குறித்து பொஸஸிவ்னஸூடன் பேசிய போது நீங்கள் அதை மறுக்கவில்லையே?’ என்பது போல் ஒரு கேள்வி. ‘நான் பேசி புரிய வைத்தேன். அது காட்டப்படவில்லை போல’ என்று சேரன் பதில் அளித்தார். ‘சரிடா.. சரிடா.. என்பது போல் அந்தச் சமயத்தில் தன் மகளை கட்டியணைத்த சேரனின் உடல்மொழியே பிறகு அதற்கு விளக்கம் அளித்திருப்பார் என்கிற முன்னோட்டத்துடன் அமைந்திருந்தது.

எவிக்ஷன் பட்டியலில் இருந்தவர்கள் கவின், லியா, சேரன் மற்றும் ஷெரீன். ‘இதில் ஒருவரைக் காப்பாற்றலாம். யாரை?” என்று பார்வையாளர்களை நோக்கி கமல் கேட்ட போது ‘ஷெரீன்’ என்கிற பதில்கள் அதிகம் கேட்டன. (வோட்டிங் வரிசை வேற மாதிரி காட்டுது.. என்னய்யா குழப்பறீங்க?). எனவே ‘ஷெரீன் காப்பாற்றப்பட்டதை’ தன் வழக்கமான பாவனையுடன் தெரிவித்தார் கமல்.

‘என்னங்க மூணு கார்டு இருக்கு?” என்று எவிக்ஷன் பற்றிய பேச்சை எடுத்தவர், வழக்கம் போல் திசை மாற்றி ‘டெஸ்ட் ட்யூப்’ டாஸ்க்கில் பதில் அளிக்காதவர்கள் இப்போது சொல்ல வேண்டும் என்று நேரத்தை இழுக்கத் துவங்கினார். “யாரைக் குத்தறதுன்னு தெரியலை.. அதனால தோராயமா சிலரைத் தேர்ந்தெடுத்தேன்” என்பது போல் பதிலளித்த தர்ஷனைக் கிண்டலடித்தார் கமல். ஆனால் சிலருக்கு சரியான காரணங்களை தர்ஷனால் முன் வைக்க முடிந்தது. குறிப்பாக கவின் –லியா தொடர்பானவை.

கவின் மற்றும் லியாவின் முறை வரும் போது அவர்களின் பதில்களில் விரக்தியும் வேதனையும் தெரிந்தது. “போன வாரம் டாஸ்க்லாம் நல்லா பண்ணோம்.. ஆனால் நாங்க சும்மா உக்காந்து பேசினாலே அது பிரச்சினையாயிடுது. குத்தம் சொல்றாங்க. ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் வெளியே போனால்தான் இது சரியாகும் போல” என்பது போல் லியா சொன்ன போது பரிதாபமாகத்தான் இருந்தது.

“மருந்து ஊத்தற டாஸ்க்லதான் நான் முதன்முறையா ஹர்ட் ஆக ஆரம்பிச்சேன். இனி கேமை சீரியஸா பார்க்கணும்னு தோணுச்சு. முட்டை டாஸ்க்ல கூட நாங்க தனித்தனியாத்தான் இருந்தோம். எவ்ள நேரம் அப்படி இருக்க முடியும்? (மழை. க்ளைமேட் என்ற போது தர்ஷன் தன்னிச்சையாக சிரித்தார்). டைம் பாஸூக்காக பழைய கதையை பேசிட்டு இருந்தோம். லியாவை வார்ன் பண்ணிட்டே இருந்தேன். இருந்தாலும் நடந்திடுச்சு. நான் நல்லது நினைச்சாலும் அது கெட்டதாவே முடியுது” என்று விளக்கம் அளித்த கவினையும் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது.

சாண்டி சொன்ன தவறான பதிலுக்காக, ‘அடி வாங்கினது நானு.. எனக்குத்தான் நல்லா தெரியும்” என்பது போல் கவின் சொன்னது நகைச்சுவை. ‘மற்றவர்களின் உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள்’ என்கிற தேர்வில் சேரனையும் தேர்ந்தெடுத்திருந்த லியா, அதற்கான காரணமாக, ‘எல்லோரும் இங்க அப்படித்தான் இருக்காங்க.. நானும்தான்’ என்றது விரக்தி மற்றும் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடு.

‘நட்பிற்கு முக்கியத்துவம் தருகிறவராகத் தெரிந்தாலும் கவினிடம் ஒரு திட்டம் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆனால் ஸ்மார்ட்டாக இருந்தாலும் சாண்டியிடம் ஒரு வெள்ளந்தித்தனம் இருக்கிறது’ என்றார் ஷெரீன்.

‘தந்திரம் மிக்கவர்’ என்று தன்னை கவின் தேர்ந்தெடுத்தற்கு மகிழ்ச்சியை தெரிவித்தார் ஷெரீன். ‘நீ ஒரு தத்தி. புத்திசாலியா இரு’ன்னு எங்க அம்மா சொல்லிட்டே இருக்கும். கவின் என்னை தந்திரசாலின்னு சொன்னது எனக்கு மகிழ்ச்சி’ என்று சர்காஸ்டிக்கான புன்னகையுடன் சொன்னார். கூடையை எட்டி உதைத்து போட்டியிலிருந்து விலகியதைப் பற்றி கமல் சுட்டிக் காட்டியவுடன் ஷெரீன் அந்தத் தவறை ஒப்புக் கொண்டார். ‘Primal Moment’ என்கிற வார்த்தையை ஷெரீன் முன்னர் பயன்படுத்தியதை மிகவும் சிலாகித்தார் கமல்.

“தர்ஷன்.. நீங்க உணர்ச்சிகரமான தருணங்களிலும் நிதானம் இழக்காம இருக்கணும்.. இதை நான் ஏன் சொல்றேன்னா..” என்று நிறுத்திய கமல் “அப்படிச் சொல்றது ஈஸி” என்று முடித்தது நல்ல டைமிங். தெர்மகோல் டாஸ்க்கில் கவினுடன் நிகழ்ந்த மோதலைப் பற்றியது கமலின் கமெண்ட்.

இதற்கு சேரன் அளித்த விளக்கம் சுவாரசியமானது. ‘இந்த டாஸ்க்கிற்கு வரிசை நிலையை நாங்கதான் எண் மூலமா தேர்ந்தெடுத்தோம். ஆனா அது என்ன மாயமோ.. மந்திரமோ தெரியல. பெரும்பாலும் அவங்களுக்குப் பிடிச்சவங்கதான் முன்னாடி இருந்தாங்க. கவின் லியாவைத் தொட மாட்டான். போலவே தர்ஷனும் ஷெரீனை.. என் பின்னாடி இருந்த சாண்டி என்னை நல்லா வெச்சு செஞ்சார்’ என்று சேரன் அடித்த கமெண்ட்டிற்கு பதறி பதில் அளித்தார் கவின்.

**

ஷெரீன் காப்பாற்றப்பட்ட பிறகு பாக்கியிருந்தவர் மூவர். கவின், லியா, சேரன். “போட்டியாளர்களான உங்களைப் போலவே பார்வையாளர்களும் பாசம் + உத்தி ஆகிய கலவையுடன் இந்த விளையாட்டில் பங்கேற்கிறார்கள்’ என்று கமல் சொன்ன பாயிண்ட் முக்கியமானது.

‘இந்த மூவரில் யார் காப்பாற்றப்படுவார்” என்று இதர போட்டியாளர்களிடம் கேட்ட போது பெரும்பாலும் சேரனைச் சொன்னார்கள். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக கவினை தள்ளி உட்காரச் சொன்னார் கமல். இதன் மூலம் அவர் காப்பாற்றப்பட்டதை உணர முடிந்தது. (மச்சக்காரன்யா!).

IMAGE_ALT

முதலில் மறந்து போன கவின், பிறகு “என் கிட்ட ஏதோயொரு உண்மை இருக்குன்னு மக்கள் நம்பறாங்க. அதற்கு நன்றி’ என்றார். உண்மைதான். பிழைகள் செய்பவராக இருந்தாலும் அதை ஒப்புக் கொள்ளும் நேர்மை கவினிடம் இருக்கிறது. ஒருவேளை அவர் காப்பாற்றப்படுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

“லியா.. நீங்க கவின், சேரன் ஆகிய ரெண்டு பேரும் காப்பாற்றப்படணும்னு விரும்பினீங்க. யாருக்குத் தெரியும். இது ஆப்போசிட் டைரக்ஷன்ல போய் ரெண்டு எவிக்ஷனா கூட மாறலாம்” என்று பதட்ட வெடிகுண்டைப் போட்ட கமல், சேரனையும் லியாவையும் விடைபெற்றுக் கொண்டு வெளியே வரச்சொன்னார். அவர் சொன்ன வாக்கியத்தில் இருந்த கருத்து மயக்கம் பிறகு அவருக்கே தெரிந்திருக்க வேண்டும். ‘ரெண்டு பேரும் வெளிய வாங்க” என்றார்.

இதர போட்டியாளர்கள் என்னவென்று புரியாமல் திகைத்துப் போக, ‘யாராவது ஒருத்தராத்தான் இருக்கும்’ என்று சாண்டி தன் நம்பிக்கையைச் சொன்னார். “நீ போக மாட்ட’ என்று அனத்திக் கொண்டிருந்த கவினிடம் “நான் இப்போதான் சந்தோஷமா இருக்கேன். நீ போய் பாத்ரூம்ல இருந்து என் பொருட்களை எடுத்துட்டு வா” என்றார் லியா. (கவினுக்கும் கக்கூஸிற்கும் அப்படி என்னதான் ஜாதக தோஷமோ!).

IMAGE_ALT

யார் வெளியேறப் போகிறார்கள் என்கிற குழப்பத்துடனேயே இதர போட்டியாளர்கள் விடை கொடுத்தனர். சேரன் வெளியேறுவதை அவர்களால் நம்ப முடியவில்லை. குறிப்பாக ஷெரீன் இதற்கு அதிகம் கலங்கினார்.

சேரனும் லியாவும் இன்னொரு தனிஅறையில் அமர வைக்கப்பட்டனர். அங்கிருந்த திரையில் தோன்றினார் கமல். ‘எவிக்ஷன் கார்டு அங்கயும் இருக்கு. எடுத்துப் பாருங்க” என்று. எடுத்துப் பார்த்தால் சேரனின் பெயர் அங்கிருந்தது. (‘பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்’ என்கிற காமெடி மாதிரி இதை வழக்கம் போலவே தெரிவித்திருக்கலாம்.)

“என்னோட வெளியேற்றத்திற்கு ஒரு சரியான காரணம் இருக்கு. இன்னமும் கொஞ்ச நாள்தான் இருக்கு. நீ உன்னை ஃப்ரூவ் பண்றதுக்கு கிடைச்ச சரியான வாய்ப்பு. நல்லாப் பயன்படுத்திக்கோ. இந்த கொஞ்ச நாள்ல கஷ்டப்பட்டா அது வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படாம இருக்கறதுக்கு ஒரு காரணமா அமையலாம். இப்பயாவது உங்க அப்பா அம்மாவிற்காக விளையாடு. இந்த வெற்றி கிடைச்சா.. உன்னோட பல பிரச்சினைகள் போறதுக்கு அது காரணமாக இருக்கலாம்.” என்பது போல் சேரன் அளித்த ஆலோசனைகள் மிகச் சிறப்பானது. “ஸாரி. வெளில போய் பேசுங்க” என்று சூசகமாக சில விஷயங்களைச் சொன்னார் லியா.

“எதுக்கு ஸாரி. நீ எது செஞ்சாலும் எனக்குப் பிடிக்கும். நான் உன்னை மறக்க மாட்டேன்’ என்று ஆத்மார்த்தமாக சொன்னார் சேரன். இது போன்ற சூழல்களில் ‘இவர்கள் நடிக்கிறார்கள்’ என்பது மாதிரியான பொத்தாம் பொதுவான சில விமர்சனங்களைப் பார்க்கிறேன். அந்தந்த சூழல்களில் நம்மைப் பொருத்திப் பார்க்க முயன்றால்தான் அவர்களின் உணர்வுகளை ஓரளவிற்காவது நம்மால் உணர முடியும். சினிமாவில் வரும் நாடகத்தனமான காட்சிகளைப் போலவே நிஜத்திலும் நிகழ வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.

இதற்கிடையில் வெளியே இருவரும் சென்றதால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் போட்டியாளர்கள் குழப்பத்துடன் இருந்தனர். லியா வீட்டுக்குள் மீண்டும் வந்தார். அந்த மகிழ்ச்சியை போட்டியாளர்களால் கொண்டாட முடியவில்லை. சேரன் வெளியேறியதை அவர்கள் உணர்ந்தது அதற்கு காரணம். சங்கடமான சூழல்.

**

வெளியே வந்த சேரன், கமலின் காலில் வழக்கம் போல் விழுந்தது தவிர்த்திருக்கப்பட வேண்டியது. “அனுபவங்களைத் தேடித்தான் இங்கு வந்தேன். அது நிறைய கிடைச்சது. இந்த வெளியேற்றத்திற்கு தயாராகத்தான் இருந்தேன். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. என்னால் இயன்றவரை இளைஞர்களுடன் போராடினேன். இப்ப தள்ளி நின்று அவர்களின் வெற்றியை ரசிக்க வேண்டிய நேரம். வந்துட்டேன்” என்றெல்லாம் மிக முதிர்ச்சியாகப் பேசினார் சேரன்.

“ரெண்டு.. மூணு. திரைக்கதை இந்நேரம் உங்க மைண்ட்ல ரெடியாயிருக்கும்” என்றார் கமல்.

அகம் டிவி வழியே.. உள்ளே வந்தார் சேரன். ‘நட்பு போன்ற உணர்வுகளை ஒதுக்கி விட்டு விளையாடுங்க. மத்ததை வெளில பார்த்துக்கலாம்’ என்று சொன்ன சேரன் “மக்களிடம் ஏற்கெனவே பிரபலமான நபர்களைக் கூட வெளியேற்றி விட்டு அத்தனை பிரபலமில்லாத உங்களை மக்கள் தக்க வெச்சிருக்காங்கன்னா.. உங்க கிட்ட ஏதோவொரு ஸ்பெஷலான விஷயம் இருக்கு. அதற்கு மதிப்பு கொடுத்து விளையாடுங்க” என்பது போல் –குறிப்பாக கவினுக்கு – பெருந்தன்மையுடன் அளித்த உபதேசங்கள் சிறப்பானவை.

“இந்தாளு என்னை விட அதிகம் பேசறாரே’ என்று கமலின் மைண்ட் வாய்ஸ் ஓடிக் கொண்டிருந்திருக்கலாம்.

“சீக்ரெட் ரூம்ல இருந்து வெளிய வந்ததுல இருந்து சாண்டி கூட ரொம்ப க்ளோஸ் ஆயிட்டேன். முதல்ல அவரை எனக்குப் பிடிக்காது. இப்ப நல்லாப் பழகிட்டோம். ஆள் ரொம்ப அப்பாவி.. பிளான் கூட எதுவும் போடத் தெரியாது. இதுக்கு மாஸ்டர் மைண்ட் கவின்தான்’ என்று ஜாலியாக சில விஷயங்களைப் பொதுவில் போட்டு உடைத்தார் சேரன்.

“ஸாரி.. சார்.. லியாவையே பார்த்துட்டு இருந்ததால உங்களுக்கு சரியா விடை தரலே” என்று கவின் சொன்னதற்கு “அடேய்.. நீ தொன்னூறு நாளா அதைத்தாண்டா பண்ணிட்டு இருக்கே” என்று சேரன் சொன்னது அல்ட்டிமேட் காமெடி. (இது இந்த நிகழ்ச்சியில் சேரன் சொன்ன ஆறாவது மற்றும் இறுதி ஜோக்).

வீட்டின் போட்டியாளர்கள் ஆறாக குறைந்து விட்டார்கள். இதில் முகின் இறுதிப் போட்டியாளராக தேர்வாகி இருப்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. எனில்.. சாண்டி டீம்.. ஸாரி… கவின் டீம் உடைந்து நொறுங்குவதற்கான சந்தர்ப்பங்கள் கூடிக் கொண்டே வருகின்றன. நெருங்கிய நண்பர்களையே நாமினேட் செய்ய வேண்டிய சங்கடம் வரும். சண்டைகள் வரும்.

அதற்கான அறிகுறிகளும் தெரிய ஆரம்பித்து விட்டன. ‘தர்ஷன் இன்னிக்கு காலைல என்னை ஏசிட்டான் தெரியுமா? தர்மர்.. தர்மர்…னு அவனைக் கூப்பிட்டதுக்கு ‘இனிமே என்னை அப்படிக் கூப்பிட்டா அசிங்கமா ஏதாவது கேட்டுடுவேன்’ன்னு சொன்னான்” என்று அடிபட்ட முகபாவத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார் லியா. “ஒருத்தர் ஒரு விஷயத்துல ஹர்ட் ஆகறாங்கன்னு தெரிஞ்சா. அதை அவாய்ட் பண்ணிடறது நல்லது” என்று ஆலோசனை சொன்ன கவினும் இடையில் ஏதோவொரு ஆட்சேபகரமான வார்த்தையைச் சொன்னது போல்தான் இருந்தது. (உரோமம்?!).

“நான் விடைபெறும் போது தர்ஷன் என் கிட்ட ஸாரி சொன்னான்’ என்கிற தகவலும் லியாவின் மூலமாக கிடைத்தது.

உண்மையான அப்பா –மகள், அண்ணன்-தங்கை, காதலன் –காதலி ஆகியோரின் உறவுகளிலேயே இவ்வாறான மனக்கசப்புகள் நிகழ்ந்தே தீரும். ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று இருபத்து நான்கு மணி நேரமும் பாடிக் கொண்டிருக்க முடியாது. அது செயற்கையானது.

மனித உறவுகள் என்பது சில செளகரியங்களுக்காகக் கட்டப்பட்ட கற்பிதங்கள். ஒவ்வொரு மனிதனும் தனித்தனி தீவைப் போன்றவன் என்பதுதான் அடிப்படையான உண்மை.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE