Thursday 28th of March 2024 11:48:47 AM GMT

LANGUAGE - TAMIL
கீழடி அரசியல்
கீழடி அரசியல்

கீழடி அரசியல்


மாறுபாடான கொள்கைகள், கருத்துநிலைகள், விருப்பங்கள் இல்லாமல் இவ்வுலகம் இல்லை; தமிழ்ச் சமூகம் மட்டும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நூற்றாண்டுகளாகத் தொடரும் துருவநிலைக் கருத்துமோதல், இணைய சமூக ஊடகக் காலகட்டத்திலும் இங்கு தொடர்கிறது.

குறிப்பாக, வரலாற்றுத் துறையில் கடுமையான மோதல் அதிகரித்துவருகிறது, இந்தியத் துணைக்கண்டப் பகுதியில்! தொன்மையான பின்புலத்தைக் கொண்டதாக தமிழர்த் தேசிய இனத்தின் தற்பெருமையாக மட்டுமே இருந்துவந்தது மாறி, அறிவியல்வகையில் மானுட வளர்ச்சியின் தொடர்ச்சி என்பது தொல்லியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியே, தமிழ்நாட்டின் ’கீழடி- வைகை நதிக்கரை சங்ககாலத் தமிழர் நாகரிக வாழ்வு’ எனும் அகழாய்வு முடிவு!

தமிழ்நாட்டு அரசின் தொல்லியல் துறையின் சார்பில் அதன் ஆணையராக இதில் முழுமையாக ஈடுபட்டு உழைத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி த. உதயச்சந்திரனுடன் துறை அமைச்சர் பாண்டியராசனும், கடந்த வியாழனன்று சென்னையில் இதன் ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.

சரியாகச் சொன்னால், இது கீழடி பகுதியில் நடத்தப்பட்ட நான்காவது கட்ட ஆய்வு தொடர்பானதே! 55 பக்கங்களில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ள ஆய்வறிக்கையானது, சில புதிய முடிபுகளை முன்வைத்திருப்பது, தமிழர்களால் பரவலான அளவில் மிகவும் நெகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கு முக்கியமான ஒரு காரணம், பெரும்பாலானவர்களும் புரிந்துகொள்ளக்கூடியபடி எளிமையாக கீழடி ஆய்வறிக்கையைத் தயாரித்திருப்பதுதான்! ஆராய்ச்சி முடிவுகள் என்றாலே தூர ஓடும்படி செய்யும் ஆய்வேடுகளை அப்படியே சம்பிரதாயமாக வெளியிட்டுவைக்காமல், பரவலாக தமிழ் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியையும் தமிழ்நாட்டு அரசின் தொல்லியல் துறை பயனுறு பணியைச் செய்திருக்கிறது. விளைவு, நவீன கைப்பேசிகளின் ஊடாக மின்வடிவப் புத்தகமாக இலட்சக்கணக்கானவர்கள் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். உலகளாவிய பிபிசி தமிழ் ஊடகம் முதல் உள்ளூர் அளவில் பகிரப்படும் சமூக ஊடகக் குழுக்கள் வரை தமிழ் மக்களிடம் சேதியைக் கொண்டுபோய்ச் சேர்த்து வருகின்றன.

IMAGE_ALT

தொன்மையும் வளமையும் கொண்ட மொழி, இனப் பெருமையைக் கொண்டாடுவது உலகின் எந்த மனிதக் குழுக்களுக்கும் மிக இயல்பான ஒன்றுதானே.. ஆனால், தமிழர் மட்டும் தம் பெருமையைக் கொண்டாடினால் தமிழ்நாட்டிலேயே உலாவிவரும் குறிப்பிட்ட சக்திகளுக்கு எரியத் தொடங்கிவிடும். வயிற்றுக்கு மேல் ஈரம் என்று சொல்வார்கள்; அப்படியானவர்களுக்கு ஏப்பம் வராமல் இருக்கத்தான் செய்யும். பசி இல்லாமல் தின்றுகொழுத்தால் அப்படித்தானே நடக்கும்!

அதேவகையினருக்கு தமிழுக்கோ தமிழர்க்கோ ஒரு பெருமிதம் என்றாலும் எரிவு திடீரென அதிகமாகிவிடும். உயிரியலாக மனிதர்க்கு உண்டாகும் வாயுத்தொல்லையை நாம் பரிகசிக்கமுடியாது; இவர்களினதோ வாய்த்தொல்லை இல்லையில்லை வாய்க்கொழுப்பு!

தமிழ்நாட்டு தமிழ் ஊடகங்களில் முன்னேறிய சமூகத்தினருக்கு நூறாண்டுகளுக்கும் மேல் வழங்கப்படும் அதிகமான இட ஒதுக்கீடானது, இந்த வாய்க்கொழுப்புக்கு முதன்மைக் காரணமாக இருக்கிறது. மானுடவியலில், தொல்லியலில் குறிப்பிடும்படியான ஆய்வுகளைச் செய்துவரும் எத்தனையோ கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் தமிழ்நாட்டில் அமைதியாகச் செயல்பட்டுவருகிறார்கள். இந்தத் துறை தொடர்பான விடயங்களில் அவர்களில் எவரினதும் கருத்துகளை, கண்ணோட்டங்களைப் பெற்று வெளியிடுவதுதானே, ஊடகங்களின் கடமை? ஆனால், அதைச் செய்யாமல் குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்தவராக, தமிழுக்கும் தமிழர்க்கும் எதிராக பொறுப்பற்றுப் பேசும், எழுதும் எவராக இருந்தாலும், வாய்க்கு வந்ததை, மனதில் தோன்றியதை எல்லாம் சிறிதும் கூச்சமில்லாமல் வெளியிடுகிற- உரியவை பற்றி அறியாத- ஆட்களைக் கருத்தாளர்களாக ஆக்கும் அவலம் இன்றுவரை தொடர்கிறது.

IMAGE_ALT

மிக அண்மையான காட்டு, காலச்சுவடு இதழில் தொடர்ச்சியாக எழுதிவரும் பி.ஏ.கிருட்டிணன் என்பவரின் கீழடி தொடர்பான இரண்டு கட்டுரைகள்.

முன்னையது, இந்த மாதத் தொடக்கத்தில் வெளியானது. சிந்துவெளி- கீழடி தொடர்பிலான அக்கட்டுரையில், திராவிட - தமிழிய ஆய்வாளர்கள் ஆய்வுரீதியாக - அறிவியல் தர்க்கரீதியாக முன்வைக்கும் சில கருதுகோள்களுக்கு முகாந்திரமே இல்லை என மையமாகச் சொல்லும் அவர், தூக்கலாக எள்ளி நகையாடுகிறார்; இது தொடர்பில் அவரின் சவால்பேச்சுகளுக்கும் குறைவு இல்லை. ஆனால் அறிவியல் அவரின் விருப்பத்தை, தமிழ்க் காழ்ப்பை ஒரு நொடிப்பொழுதில் காலில்போட்டு துவம்சம் செய்துவிட்டது. பெரும் ஆய்வு அறிஞர்களேகூட அவர்களின் புதுக் கண்டறிவுகளை, கருதுகோள் எனும் அளவில் முன்வைக்கும் அவை நாகரிகத்தில், அவற்றை ஏறிமிதித்து எள்ளல்செய்யும் இந்தக் கோமான், தன்னை ஒரு தொல்லியல் ஆய்வாளருக்கும் மேல் நிறுத்தி, தகவல்களை அடுக்குகிறார். அதேபாணியில் அவரால் கொட்டிவைக்கப்பட்ட திணிப்புக் கற்பனைக் கருத்தை, அரப்பா காலத்துப் பெண் எலும்புக்கூட்டு ஆய்வுமுடிவு பொய் என்று நிரூபித்துவிட்டது. அதாவது, காலச்சுவட்டில் அவரின் அந்த அபத்தக் கட்டுரையில், ‘ அரப்பா காலத்துப் பெண்ணின் எலும்புக்கூடு கலப்பு இனத்தைச் சேர்ந்தது’ என அடித்துக்கூறுவதை, அந்த மரபணு மூலக்கூறு ஆய்வானது, ” இல்லை; அந்த வாதம் தவறானது; ஸ்டெபி புல்வெளிப் பகுதியிலிருந்து நாடோடிகளாக வந்து குடியேறிய(ஆரிய இனத்த)வர்களுடனோ பழங்குடி ஈரானிய மக்களுடனோ இனக்கலப்பு கொண்டவர்கள் அல்லர்” என்று நிறுவியது.

IMAGE_ALT

அதே கட்டுரையிலும் சென்னையிலிருந்து வெளியாகும் பெடரல் ஆங்கில இணைய ஊடகத்தில் இன்றும் பட்சி அ. கிருட்டிணன், கீழடி அகழாய்வு குறித்து தன் ’அறிவுமேதைமை’யைக் காட்டியுள்ளார். முன்னேறிய பிரிவினருக்கான கூடுதல் இடப்பறிப்பின் மூலம் முன்னணி செய்தியேடுகள், இலக்கிய இதழ்களில் எழுதித்தீர்க்கும் கிருட்டிணனுக்கு எழுதுவதற்கு விடயம் இல்லாமல் இவற்றை எழுதிவிடுகிறாரோ என்றுகூட எண்ணம் எழக்கூடும். ஆனால், இதேகருத்தை, தன்னுடைய சொந்த சமூக ஊடகப் பக்கங்களில், விடலைக்காலப் போக்கிலிகளுக்குப் போட்டியாக, மிகவும் தரமிறங்கி வெளியிடுவது, அவரின் இயல்பாகக் காணப்படுகிறது.

குறித்த கட்டுரையைப் படிக்கும் எந்த ஒரு செய்திக்காரம் அதன் அபத்தங்களைப் பட்டியலிட்டு பதில்கூற முடியும். ஆனாலும் அது எப்படி அனுமதிக்கப்பட்டது எனும் கேள்வி உடன் எழக்கூடும். இதுதான் தமிழ்நாட்டு ஊடகங்களில் தமிழ், தமிழர் தொடர்பான விடயங்களில் பல பத்தாண்டுகளாகக் காணப்படும் சகிக்க இயலாத தொழில்நெறியற்ற தன்மை. அது ஒரு பக்கம் இருக்கட்டும்; அது துறையின் பிரச்னை என விட்டுவிட்டே வந்துகொண்டிருந்ததால் வந்த வினை, இது.

கிருட்டிணனின் முதல் அலட்சியமே, அரப்பா எலும்புக்கூட்டில் உண்மை துவைத்துத் தொங்கப்போட்ட பின்னரும், அதைப் பற்றி சுயவிமர்சனமில்லாமல், கடந்துசெல்வது!

வரிசையாக எட்டு கேள்விகளை அடுக்கி அதற்கு வியாக்யானம் சொல்கிறேன் பேர்வழி என ஒரே எள்ளலும் துள்ளலும்தான், பட்சி அ. கி.க்கு! ஆனால் என்ன தர்க்கரீதியாக மட்டும் பேசத் தெரியவில்லை.

வெளியிடப்பட்டிருப்பது, ஒரு அகழாய்வின், ஒரு கட்டம் குறித்த ஆய்வு அறிக்கை; இந்தக் கட்டத்தின் எளிய ஆய்வுமுடிவே, முழுமையான ஆய்வறிக்கையோ, முழு ஆய்வின் அறிக்கையோ அல்ல என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், இந்த அதிகாரவர்க்கத்துப் புள்ளிக்கு (அப்படியும் அவருக்கு ஒரு பட்டம் தருகிறார்கள், குறித்த ஆங்கில ஊடகத்தில்.) இதுகூடத் தெரியவில்லையா, என்ன? தமிழ்நாட்டு மண்ணில் கண்டறியப்பட்டிருப்பது தமிழி- தமிழ் பிராமி எனும் எழுத்துவகை. இவருக்கு அதை அவ்வாறு சுட்டக்கூடக் கசக்கிறது. பிராமி என்றே குறிப்பிடுபவர்,

பழங்கால எழுத்துகள் தாங்கிய பானையோட்டை கரிமத்துணை காலக்கணிப்பு (கார்பன் டேட்டிங்) செய்ததில், அதன் காலத்தைக் கணக்கிடுகின்றனர். அதெப்படி..அந்த இடத்தில் உள்ள ஒரு பொருள் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என முடிவுசெய்தால், அந்தப் பொருளின் மீது இருக்கும் எழுத்தும் ஆறாம் நூற்றாண்டு ஆகிவிடமுடியுமா என்றெல்லாம் கேட்கிறார். தோண்டப்பட்ட குழிகள், பொருட்கள் எடுக்கப்பட்ட ஆழம் போன்ற விவரங்களை இச்சுருக்க அறிக்கையில் வெளியிட்டிருக்கும் தொல்லியல் துறை, இம்மாதிரியான கேள்விகளுக்கு பதில் அளிப்பது பொருத்தமாக இருக்கும்.

சிந்துவெளி நாகரிகத்துக்கும் கீழடிக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா என்றும் கீழடியில் வசித்த மக்கள் மத நம்பிக்கை அற்றவர்களாக இருந்தார்கள் என்று அறிவில்லாதவர்தான் சொல்லமுடியும் என்றும் அறிக்கையில் அறுதியிட்டுக் கூறப்படாதவற்றை, அப்படிக் கூறப்பட்டிருக்கிறது என்பதாகச் சித்திரம் தீட்ட முனைகிறது, பட்சி அ.கி.யின் மூளை!

IMAGE_ALT

ஆய்வறிக்கையிலோ, சிந்துவெளி எழுத்தின் தொடர்ச்சியாகவும் தமிழி- தமிழ் பிராமி எழுத்துவகையின் முன்னியாகவும் வாய்க்கக்கூடிய ‘கீறல்கள் அல்லது குறியீடுகள்’ கீழடியில் கிடைத்துள்ளன என்றே கூறப்படுகிறது. அத்துடன், முன்னர், தமிழ்நாட்டில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட, “ ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன்குளம், கொடுமணல், கரூர், தேருருவேலி, உறையூர், மாங்குளம், பேரூர் ஆகிய இடங்களிலும் இத்தகைய குறியீடுகள் கிடைத்துள்ளன. இலங்கையில் திசமகரம, கந்தரோடை, மாந்தை, ரிதியகம ஆகிய இடங்களிலும் இதேவகை குறியீடுகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. இந்திய அளவில் கிடைத்துள்ள இக்குறியீடுகளில் 75 விழுக்காடு தமிழகத்தில் கிடைத்துள்ளன” எனத் தெளிவாக விளக்குகிறது, தொல்லியல் துறை.

நான்காம் கட்ட அகழாய்வின் முடிவை அதுவும் தமிழ்நாட்டு அரசின் தொல்லியல் துறையின் ஆய்வின் முதல் பகுதியின் முடிவு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது; ஐந்தாம் கட்ட ஆய்வானது இந்த மாத இறுதியில்தான் நிறைவடையவுள்ளது; கீழடி மக்களின் சமயம் குறித்து எந்தவொரு முடிவான முடிபையும் தொல்லியலாளர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், அங்கு வசித்த மக்கள் மதநம்பிக்கையற்றவர்களாக இருந்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளதாக, வார்த்தை விளையாட்டில் ஈடுபடும் வினைகாரராக இருக்கிறார், பட்சி அ.கி.

இவ்விரண்டு கூறுகளையும் திரும்பத் திரும்ப அவர் கவனப்படுத்துவதன் பின்னணி என்னவோ அவருக்குதான் வெளிச்சம்!

ஒன்று மட்டும் தெரிகிறது, யார் ஒருவரோ ஒரு குழுவினரோ சொல்லாத ஒன்றை, அவரோ அவர்கள் சொன்னதாகச் சொல்லி, ஏகடியம்செய்வதும் எள்ளல்செய்வதும் அவர்களுக்கு அந்த விடயம் தொடர்பான காழ்ப்புணர்வோ அச்சமோ இருக்கலாம், அது அறிவியலுக்குப் புறம்பாக இருந்தாலும்; அதன்பொருட்டு அவர்களால் அதைச் சகிக்கமுடியாமல் போகலாம்; அதனால் மனம்போகும் போக்கில் அவர்கள் நடந்துகொள்ளக்கூடும். மற்றது, யதார்த்தம் என்னவென்று தெரிந்தாலும், அதை மறைத்து, தன்னுடைய அல்லது தன் சமூகப் பிரிவினரின் ஆதிக்க பிம்பங்கள் தவிடுபொடியாவதை சகிக்கமுடியாமல் வாய்க்கொழுப்பாக கருத்துகளைக் கொட்டுவது!

கீழடியின் தொல்லியல் அறிவியல்படியான வரலாறு இப்படி அவதூறுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், பெருமைகொள்ள வேண்டிய தமிழர் இனத்தவரோ- ஆம், தமிழ்நாட்டு, ஈழத் தமிழர் ஆகிய தனித்தனி தேசிய இனங்களைச் சேர்ந்தவர் என்றாலும், தென்னகத் தொன்மையில் சிங்களவர்க்கு முந்தைய தாயக வரலாற்று உரிமையை நிலைநாட்டவேண்டிய கடப்பாட்டை உணராதவராக, தமக்குள் வீண்பெருமைடிப்பாக, வாய்வீச்சில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது, இன்னுமொரு அவலம்!

நன்றி - தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை

தமிழ்நாட்டிலிருந்து இர.இரா.தமிழ்க்கனல்


Category: கட்டுரைகள், பகுப்பு
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE