Friday 19th of April 2024 02:55:36 AM GMT

LANGUAGE - TAMIL
மொட்டு சின்னத்தை ஏற்கவேமாட்டோம் என ராஜபக்சக்களிடம் நேரிலே கூறிவிட்டேன்!

மொட்டு சின்னத்தை ஏற்கவேமாட்டோம் என ராஜபக்சக்களிடம் நேரிலே கூறிவிட்டேன்!


"தேசிய வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டால் இணக்கப்பாட்டின் அடிப்படையில் கோட்டாவுக்கு வாக்களிக்கலாம். ஆனால், தாமரை மொட்டு சின்னத்துக்கு ஆதரவளிக்கவே முடியாது."

- இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

குருணாகலில் இன்று (29) நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"அரசமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மஹிந்த ராஜபக்ச அதிகரித்துக்கொண்டார். இதனை மக்கள் நிராகரித்தனர்.

எனக்கும் கட்சியைவிட்டு வெளியேறிய வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் அன்று எடுத்த முடிவு பிழையெனில் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் என்னை நிராகரித்திருப்பார்கள். அவ்வாறு நடைபெறவில்லை. மாற்றத்துக்காக மக்கள் வாக்களித்தனர்.

கடந்துள்ள ஐந்தாண்டுகளில் நான் என்ன செய்துள்ளேன் எனச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். முதலாவதாக ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நாட்டு மக்களுக்கு வழங்கினேன். ஆனால், அந்த சுதந்திரத்தை சிலர் இன்று தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

எனக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகித்த ஐவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்றேனும் எனக்கு எதிராக இல்லை. கொலைகள், அரசியல் பழிவாங்கல், அரசியல் தலையீடு, அதிகார துஷ்பிரயோகம் என எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை.

ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப் பறித்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கு அன்று முயற்சித்தனர். அதன்பின்னரும் பல தடவைகள் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. கட்சி பல கூறுகளாகப் பிளவுபட்டது.

பண்டாரநாயக்கவின் குடும்ப உறுப்பினர்கள்கூட புதிய கட்சியை ஆரம்பித்தனர். ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விழவில்லை. ஏழை மக்களின் மனம் அறிந்த கட்சி என்பதாலேயே இன்னும் எமது கட்சி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அதேவேளை, ரணிலுக்கும் எனக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியில் எவ்வித பிரச்சினை கிடையாது. அரசியல் கொள்கைகள் காரணமாகவே முரண்பாடுகள் ஏற்பட்டன.

ரணிலின் ஊழல்மிக்க லிபரல்வாத அரசியல் பயணம் பண்டாரநாயக்கவின் கொள்கைக்கு முரணானது. எனவே, ரணிலை விரட்டிவிட்டு மஹிந்தவை பிரதமராக்கினேன். நாடாளுமன்றத் தேர்தலுக்கும் அழைப்பு விடுத்தேன். ரணிலின் ஊழல் ஆட்சியால் ஒரே நாளில் ஐந்து வர்த்தமானி அறிவித்தல்களையும் வெளியிட வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. உலகில் வேறு எந்த தலைவர்களும் இவ்வாறு செய்திருக்கமாட்டார்கள்.

மஹிந்த தரப்புக்கு ஆட்சியமைக்க வழிசமைத்துக் கொடுத்தேன். ஆனால், பெரும்பான்மையை அவர்களால் நிரூபிக்க முடியாமல்போனது. இது எனது தவறு அல்ல. மஹிந்த தரப்பினர் இன்று எம்.பிக்களாக இருப்பதற்குக்கூட எமது கடிதம்தான் காரணம் என்பதை சிலர் இன்று மறந்துவிட்டு கதைக்கின்றனர்.

தாமரை மொட்டு கட்சிக்காரர்களுக்கும் எமக்கும் இடையில் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுகள் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வருகின்றன. நேற்றுக் காலைகூட மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகிய மூவருக்கும் எனக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது நாடாளுமன்றக்குழு, மத்திய செயற்குழு ஆகியவற்றின் நிலைப்பாட்டை நான் தெளிவுபடுத்தினேன். தேசிய வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டால் இணக்கப்பாட்டின் அடிப்படையில் கோட்டாபயவுக்கு வாக்களிக்கலாம். ஆனால், மொட்டு சின்னத்துக்கு வாக்களிக்கமுடியாது எனக் கூறினேன்.

எனவே, பொது சின்னத்தில் போட்டியிட முன்வருமாறு அழைப்பு விடுத்தேன். கூட்டணி அமைப்பதாயின் நம்பகத்தன்மை இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கே இறுதியில் பாதிப்பு ஏற்படும். கட்சியின் அடையாளம் மற்றும் ஆதரவாளர்களைப் பாதுகாத்துக்கொண்டு எம்மால் கூட்டணி அமைக்க முடியாது.

தமக்குத் தேவையான ஆட்சியை அமைத்துக்கொள்வதற்காக வெளிநாட்டு தூதரகங்கள் சில முயற்சிக்கின்றன. இதற்கு நாம் ஒருபோதும் உடன்படமாட்டோம்" - என்றார்.

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE