;

Thursday 28th of May 2020 05:38:12 PM GMT

LANGUAGE - TAMIL
கீழடி அரசியல் - பகுதி 2
கீழடி அரசியல்  -  பகுதி 2

கீழடி அரசியல் - பகுதி 2


கீழடி தொடர்பிலும் வாய்வீச்சு எனக் குறிப்பிடுவது, குறித்த விடயத்தின் மெய்யான பொருளில்தான்; இரு கிழமைகளாகத் தொடர்ந்துவரும் தமிழின அரசியல் கள வாதப் பிரதிவாதங்கள் இதை உறுதிப்படுத்தியபடி இருக்கின்றன.

தமிழர்களின் கொண்டாட்டத்துக்குக் காரணமான நான்காம் கட்டக் கீழடி அகழாய்வு முடிவு, சும்மா வந்துவிடவில்லை; இதற்கு ஒரு நூற்றாண்டு காலப் பெரும்பணியும் உழைப்பும் பின்னால் இருக்கிறது, அகழாய்வுத் துறையில்..!

தமிழ்நாட்டின் தொன்மையை எடுத்துக்கொண்டால், சென்னையை அடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அத்திரம்பாக்கம் பகுதியில் 5 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்கால மனிதர்களின் வாழ்க்கைச் சான்றுகள் கிடைத்துள்ளன. அவர்கள் பயன்படுத்திய கற்காலக் கற்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. முன்னதாக, சென்னை பல்லாவரம் பகுதியில் 1863-ல் ஆய்வுசெய்த இராபர்ட் புரூஸ் புட் என்பவர், தொன்மையான கற்கருவியைக் கண்டெடுத்தார். அவரே இந்த வட்டாரத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்டார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஒரு நீர்த்தேக்கம் அமைந்துள்ள பூண்டியில் உள்ள குடியம் குகைப் பகுதியில் அக்கற்கால மனிதர்கள் வசித்தது அகழாய்வின் மூலம் மெய்ப்பிக்கப்பட்டது. கெ.டி.பானர்ஜி தலைமையிலான குழுவினர் 1962-64 காலத்தில் மேலும் அகழாய்வுசெய்து புதிதாகக் கற்கருவிகளைக் கண்டெடுத்தனர்.

இன்றைய புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு பகுதியில், கி.மு. 1000 ஆண்டுக்கு முந்தைய புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதை அகழாய்வுகள் மெய்ப்பித்துள்ளன. கி.மு.200 காலகட்டத்தில் இப்பகுதி மக்களுக்கும் ரோம நாட்டுடன் வணிகத்தொடர்பு இருந்துள்ளதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து தெற்கில் 6 கி.மீ. தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றங்கரையில் இவ்வூர் அமைந்துள்ளது.

தமிழகத்தில் ஆற்றுப்படுகை நாகரிகம் எனக் கூறுமளவுக்கு, வடக்கே (திருவள்ளூர் மாவட்டம்) கொற்றலையாற்றுப் படுகை, பாலாற்றுப் படுகை(காஞ்சிபுரம்), காவிரியாற்றுப் படுகை(திருச்சி, கரூர்), நொய்யல் ஆற்றுப்படுகை(ஈரோடு மாவட்டம்), அமராவதி ஆற்றுப் படுகை(கரூர்), பழனி அருகில் பொருந்தலாற்றுப் படுகை(திண்டுக்கல் மாவட்டம்), வைகையாற்றுப் படுகை(மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவ.கள்), தாமிரவருணி ஆற்றுப் படுகை(தூத்துக்குடி, திருநெல்வேலி மாவ.கள்) ஆகியவற்றில் பழந்தமிழகத்தின் தொன்மையான சான்றுகள் அகழாய்வுகளில் கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டின் பழந்துறைமுகங்களாகக் கருதப்படும் இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தின் காவிரிப்பூம்பட்டினம்(பூம்புகார்), இராமநாதபுரம் மாவட்டத்தின் அழகன்குளம், தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கை ஆகிய இடங்களிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

கிழக்கு முதல் மேற்குவரை, தெற்கு முதல் வடக்குவரை தமிழகத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல் பானை ஓடுகள், பலவகைக் கல்மணிகள் போன்றவை, கிமு 300 காலத்திற்கு முன்னும்பின்னும் ரோம நாட்டுடன் இருந்த வணிகத்தொடர்புகளை உறுதிசெய்கின்றன.

கரிமக் காலக்கணிப்பின்(கார்பன் டேட்டிங்)படி, காவிரிப்பூம்பட்டினத்தில் கிடைத்த இரண்டு மரத்தூண்கள் கிமு 315ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என்றும், பழனி அருகிலுள்ள பொருந்தலில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட கரி மாதிரிகள் கி.மு.500 காலத்தியவை என்றும் கொற்கையில் எடுக்கப்பட்ட கரிமாதிரிகளின் காலம் கிமு 8ஆம் நூற்றாண்டு எனவும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மூன்றில் இரண்டு பகுதி மாவட்டங்களில் கிடைத்துள்ள தொல்சான்றுகளில் கணிசமானவை, இறந்தோரைப் புதைத்த இடங்களும் ஆகும். ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்தைப் பொறுத்தவரை, இதுவரை கண்டறியப்பட்டதிலேயே பெரும் ஈமக்காடு என்கின்றனர் தொல்லியலாளர்கள். இங்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டனைச் சேர்ந்த அலெக்சாண்டர் ரீ எனும் ஆய்வாளரால் 110 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுக்குப் பின்னர், 2004-05 காலத்தில்தான் மீண்டும் அகழாய்வு செய்யப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட கரிம மாதிரியின் காலம் கிமு 900 என்பது கடந்த எப்ரலில்தான் மைய அரசால் உறுதிசெய்யப்பட்டு, அதுவும் பொதுநலன் வழக்கு தொடுக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனாலும், ஆய்வு முடிந்து 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதன் ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை.

அந்த ஆய்வைச் செய்த இந்திய தொல்லியல் துறையின் அப்போதைய சென்னை மண்டலக் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, கடந்த வாரம், பிபிசி தமிழ் ஊடகத்தில் பேசுகையில், ”2013-லேயே ஆய்வறிக்கையின் இரண்டாம் பகுதியை முடித்துத் தந்துவிட்டேன். அதில்தான், எலும்புக்கூடுகளை வைத்து பெறப்பட்ட முக்கிய முடிவுகள் இருக்கின்றன. முதல் பகுதி இன்னும் தயாராகவில்லை. அதையும் நானே எழுதுகிறேன் எனக் கேட்டேன். துறையில் உள்ளவர்களே எழுதவேண்டும் என நீதிமன்றம் சொல்லிவிட்டது. 2-ஆம் பகுதியையாவது வெளியிடலாமே” என்கிறார்.

இந்திய தொல்லியல் அகழாய்வுத் துறையில், 2001-ல்தான் தென்னிந்தியாவுக்கென தனியாக ஒரு பிரிவே தொடங்கப்பட்டது. அதற்கு முன்னர் தொடங்கப்பட்ட ஐந்து பிரிவுகளும் வடநாட்டில்தான் அமைக்கப்பட்டன. நர்மதை, கோதாவரி ஆற்றுப்படுகைக்குத் தெற்கே அத்துறையின் பார்வையே படவில்லை போலும்!

தென்னிந்தியப் பிரிவானது அமைக்கப்பட்ட பின்னர்தான், கர்நாடகத்தில் அதன் சார்பில் முதல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து, கீழடியில் 2013-ல் அகழாய்வு தொடங்கப்பட்டது. முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளைச் செய்த அமர்நாத், தமிழ்நாட்டின் இலக்கிய வளத்தை அறிவியல்பூர்வமாக நிறுவவேண்டும் என்பதில் ஆர்வம்கொண்டு, முனைப்பாகப் பணியாற்றினார். கீழடியில் அவர்களின் குழுவினருக்குக் கிடைத்த தொல்பொருள்களும் எச்சங்களும் புதிய வரலாற்றுப் பாய்ச்சலுக்கு வித்திட்டநிலையில், அவரை திடீரென அசாம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், அவர் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை அவரே எழுதமுடியாத நிலை ஏற்பட்டது. நீதிமன்றத் தலையீட்டை அடுத்தே அவர் மீண்டும் பழைய இடத்துக்கு மறுஅமர்த்தம் செய்யப்பட்டார். கீழடியில் அவருடைய குழுவினர் மூன்றாவது கட்டமாக அகழாய்வில் ஈடுபட்டனர். அவர்களையடுத்து, தமிழ்நாட்டு அரசின் தொல்லியல் துறையினர் நான்காவது, ஐந்தாவது கட்ட ஆய்வுகளைச் செய்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் அகழாய்வுகள் குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன் முக்கியமாகத் தெரிவித்துள்ள கருத்துகள்:

”நம்முடைய வரலாற்றில் எவ்வளவோ இலக்கிய வளம் இருக்கிறது. அரப்பா தொல்லியல் களத்தில் நான் பணியாற்றியிருக்கிறேன். அரப்பா நாகரிகத்தை கிமு 3000வரை கொண்டுபோவதற்கான சான்றுகள் நிறுவப்பட்டுள்ளன. இங்கும் பெருங்கற்காலம், வரலாற்றுக்காலம் ஆகியவற்றுக்கு சான்றுகள் இருக்கின்றன. இடையில் என்ன நடந்தது என்று நிறுவியாகவேண்டும். அப்படிச் செய்தால்தான், யார் சங்க காலம், யார் முன்னவர் என்பது தெரியும். இதிகாச காப்பிய காலத்தை அறிவியல்பூர்வமாக நிறுவ முயன்றுகொண்டு இருக்கிறோம். மக்களின் இலக்கியமான சங்க இலக்கிய காலத்தை அறிவியல்பூர்வமான அணுகுமுறையை நாம் கொண்டிருக்கவில்லை என்பது வேதனையானது. இந்தப் பணியை 70 ஆண்டுகளாக யாரும் செய்யவில்லை. இதைச் செய்திருந்தால் பல தொல்லியல் ஆதாரங்களைத் திரட்டியிருக்கமுடியும்.

இந்தியத் தொல்லியல் துறையால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமானவை என மூன்றைச் சொல்லலாம். 1. அரிக்கமேட்டில் வீலர் செய்தது; 1991-ல் விமலா பெர்க்லி அம்மையார் அரிக்கமேட்டைத் தோண்டினார். அவருமே ஒப்பீட்டுக் காலக்கணிப்பைத்தான் செய்தார். அதை அறிவியல்முறைப்படியான ஆய்வாக யாரும் செய்யவில்லை. 2. காவிரிப்பூம்பட்டினத்தில் 1965-ல் கே.பி. சௌந்தரராஜன் செய்ததுதான் முக்கிய ஆய்வு. அதன்பிறகு யாரும் பெரிதாகச் செய்யவில்லை. 3. ஆதிச்சநல்லூரில் அலெக்சாண்டர் ரீ 1904-ல் செய்த ஆய்வுக்குப் பின்னர், 2005-ல் சத்தியமூர்த்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுதான்!

தமிழ்நாட்டில் மற்ற ஆய்வுகள் எல்லாம் சிறிய அளவிலானவைதான். 60 ஆய்வுகளை மாநில தொல்லியல் துறை செய்திருக்கும். சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பிலும் மற்ற நிறுவனங்களும் நிறைய ஆய்வுகளைச் செய்துள்ளன. அவற்றைப் பற்றி சிறுசிறு குறிப்புகள்தான் உள்ளன. விரிவாகச் செய்யப்படவில்லை. முக்கிய காரணம், ஆய்வுகளுக்குத் தேவையான அளவு நிதி கிடைக்காததுதான்!

காவிரிப்பூம்பட்டினத்தில் கடல்கொண்ட நகரம் எனக் கருதித்தான், அரிக்கமேட்டிலும் துறைமுக நகரம் என்ற கணக்கில்தான் அகழாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கொற்கை ஒரு துறைமுக நகரம் என்பதை நிறுவவேண்டுமானால், இப்போது கடற்கரைக்கும் ஊருக்கும் இடையில் குழிகளைத் தோண்டி அதன் உப்புத்தன்மையை ஆய்வுசெய்துகாட்டியாக வேண்டும். அழகன்குளம் உள்பட்ட இவ்விடங்களில் கடல்சார் இடம் என்பதைத் தாண்டி, பெரும் குடியிருப்புப் பகுதிக்கான பார்வையில் விரிவான ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.

தொழில் விரிவாக்கம், நகரமயமாக்கம் போன்ற செயல்பாடுகளால் பல தொல்லியல் மேடுகள், எச்சங்கள் விரைவாக அழிந்துகொண்டிருக்கின்றன. அது போன்ற ஒரு நிலைமை இங்கும் உருவாகிக்கொண்டிருக்கிறது. இங்குள்ள தொல்லியல் மேடுகள் முக்கியமானவை. கீழடியில் நாங்கள் ஆய்வுசெய்தபோது, நான்குவழிச் சாலை வந்திருக்கவில்லை. நாங்கள் மேற்பரப்பாய்வு செய்த எத்தனையோ மேடுகள் நான்குவழிச் சாலையால் போய்விட்டன.அவற்றைக் காப்பாற்றுவது முடியுமோ முடியாதோ இருக்கின்ற தொல்லியல்மேடுகளையாவது காப்பாற்றி, வருங்காலத் தலைமுறைக்கு அவற்றின் உண்மைத்தன்மையை எடுத்துச்சொல்லவேண்டும்.

கீழடியைப் பொறுத்தவரை, 110 ஏக்கர் பெரிய மேட்டைத் தோண்டுவது அவ்வளவு எளிதானது இல்லை. தொல்லியல் ஆய்வானது, மிகத் துல்லியமானது., நுணுக்கமானது. என்னைப் பொறுத்தவரை, பத்து ஆண்டுகளாவது ஆய்வுசெய்தால் பல ஆதாரங்கள் கிடைக்கும். அதைவைத்து வரலாற்றுக் காலத்தை மறுகட்டமைப்பு செய்யமுடியும்.

அரிக்கமேட்டில் ஆய்வுசெய்த மார்ட்டிமர் வீலரின் கருத்தை வைத்துதான், சங்ககாலத்தை கிமு 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு எனக் கூறிவருகிறோம். அது அறிவியல்முறைப்படியானது அல்ல. இதுவரை தமிழகத்தில் 150 மேற்பட்ட தொல்லியல் ஆய்வுகள் நடந்துள்ளன. அனைத்திலும் கிமு 300-ஐத் தாண்டமாட்டார்கள். ஒப்பீட்டு காலக்கணிப்பை வைத்துக்கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தார்கள். அது இன்று மாறுவதற்கான ஒரு காலம் அமைந்துள்ளது. கீழடி போன்றவை உலக அரங்கில் பேசப்படுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனென்றால் அறிவியல் முறைப்படி செய்யப்படும் ஆய்வுகள் என்றும் மறுக்கப்படாது. எதையும் உணர்ச்சியவமாகப் பேசினால் அனைவரும் மறுத்துவிடுவார்கள். அதையே அறிவியல்பூர்வமாக முன்வைக்கும்போது யாரும் மறுக்கமுடியாது. கீழடியில் இன்று செய்யப்படுவதைப் போல அறிவியல்பூர்வமான ஆய்வுகள் தொடரவேண்டும். டி.என்.ஏ. ஆய்வையும் செய்தால் உண்மைத்தன்மையை இன்னும் துல்லியமாகக் கூறமுடியும்.” என தன்னாய்வாகப் பேசுகிறார், தொல்லியலாளர் அமர்நாத்.

தமிழ்ச் சமூகத்துக்கு வெளியில் ஆய்வு இயலில் அரசு இயல் இப்படி ஊடறுத்துக்கொண்டிருக்க, கல்தோன்றி மண் தோன்றா காலத்து முதல் குடி எனும்படியான பெருமையடிப்பும் தமிழ் - திராவிட அடையாளங்காண் போருமாக இனத்துக்குள் அகவீச்சுகள் ஓங்காரமிட்டபடி இருக்கின்றன.

(தொடரும்)

தமிழ்நாட்டிலிருந்து இர.இரா.தமிழ்க்கனல்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, தமிழ்நாடுபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE