;

Sunday 31st of May 2020 08:01:23 PM GMT

LANGUAGE - TAMIL
பிக்பாஸ் சீஸன் - 3  இறுதி நாள் கொண்டாட்டம் - சுரேஷ் கண்ணன்

பிக்பாஸ் சீஸன் - 3 இறுதி நாள் கொண்டாட்டம் - சுரேஷ் கண்ணன்


எதிர்பார்த்தபடி முகின் வெற்றியாளர் என்பதை சிறிய சஸ்பென்ஸூடன் அறிவித்து விட்டார்கள். இப்போதைய சூழ்நிலையில் இதுதான் நியாயமான தேர்வு. ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்று அபத்தமான டிவிஸ்ட் எதையும் செய்யாதது ஆறுதலான விஷயம்.

ஆனால் என்னளவில் சேரன்தான் இந்த சீஸனின் வெற்றியாளர் என்பேன். மறுபடியும் அதேதான். சகிப்புத்தன்மைதான் இந்த விளையாட்டின் மிக மிக முக்கியமான தகுதி. இந்த நோக்கில் குறைந்த தவறுகள் செய்தவர் சேரன். ‘இளைஞர்கள்தான் இதில் ஜெயிக்க முடியும்' என்கிற மரபை மாற்ற விரும்புகிறேன்’ என்று அவர் சொன்னது நிஜமாகி இருக்கலாம்.

சமயங்களில் கோபப்பட்டது, துவக்கத்தில் பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி நின்றது, பல சமயங்களில் வனிதாவிடம் பம்மியது, பாசத்தின் மூலம் லியாவைக் கட்டுப்படுத்த முயன்றது போன்ற சில பிசிறுகள் மட்டுமே அவரிடம் இருந்தன. மற்றபடி தன் பெருந்தன்மையாலும், கருணையாலும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முதிர்ச்சியாலும், தக்க சமயங்களில் தக்க ஆலோசனைகளைச் சொல்லும் பண்பாலும், சண்டைகளை மேலும் பற்ற வைக்காமல் அணைக்கும் விவேகத்தாலும் பல சமயங்களில் கவர்ந்து விட்டவர் சேரன் மட்டுமே.

சரவணனும் மதுமிதாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தால் சற்று திருப்தியாக இருந்திருக்கும். அதில் சாத்தியங்கள் குறைவு என்பதும் தெரிகிறது.

ஏராளமான விளம்பரங்களைக் கொட்டி எரிச்சலூட்டுவார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் விளம்பர இடைவெளியை குறைவான நேரத்தில் வைத்துக் கொண்டது புத்திசாலித்தனம். எனவே அத்தனை எரிச்சல் வரவில்லை.

சரி, இறுதிநாளின் நிகழ்வுகளைப் பார்ப்போம்.

**

வெள்ளை நிற கோட்டில் அட்டகாசமாக வந்தார் கமல். ஆனால் ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் சர்வர் மாதிரியும் இருந்தது.

“இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களை அப்பாவாக, மாமாவாக, சித்தியாக கருதி ஆதரிக்கும் கூட்டமும் இருந்தது. (அதானே பிளான்!) இதில் வந்த மாற்றுக்கருத்துகள், முடிவுகள், வெளியேற்றங்கள் அந்தச் சிறிய கூட்டத்திற்கு எரிச்சலும் ஏமாற்றம் தந்திருக்கும். அந்த மாற்றுக் கருத்து கூட்டத்தில் நானும் ஒருவன். ஆனால் ஜனநாயகத்தை நம்ப வேண்டியிருக்கிறது. நான் நடுநிலையாக இருக்க வேண்டியிருக்கிறது” என்று கமல் பேசுவதின் மூலம் முடிவில் எதிர்பாரா டிவிஸ்ட் இருக்குமோ என்று கலவரமாக இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றி சில பார்வையாளர்கள் பகிர்ந்து கொண்டது சிறப்பு. ‘சாண்டி’யின் அனுபவங்களைப் பார்த்து குடும்பத்துடன் பழக அதிக நேரம் செலவு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக சிலர் பேசினர். சாண்டியின் நகைச்சுவை சமயங்களில் சிலரைக் காயப்படுத்தியதைப் பார்த்து தான் மனம் வருந்தி மாறியதாக ஒருவர் சொன்னார்.

நல்லது. இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் ஏராளமான நேர முதலீட்டை செய்யும் நாம், இதிலிருந்து சுயபரிசீலனையையும் மனமாற்றத்தையும் உருவாக்கிக் கொள்வதுதான் இதன் நிகர பயனாக இருக்கும். வெறும் வம்புகள் பேசி பொழுதைக் கழித்தால் நஷ்டம் நமக்குத்தான்.

பிறர் மனம் நோக கிண்டல் செய்வதில் உள்ள ஆபத்தைப் பற்றி கமலும் விளக்கினார். ஒரு பெண்ணைப் பார்த்து பொதுவில் ‘என்ன குண்டாயிட்டிங்க?” என்று கேட்பதின் மூலம் தனக்கு ஏற்பட்ட இழப்பைப் பற்றி பேசினார். (துவக்க நாளில் ஷெரீனை, சரவணன் கேட்டதை சுட்டிக் காட்டும் வகையில் இது இருந்தது).

பிறகு போட்டியாளர்கள் நால்வரையும் சந்திக்க வீட்டின் உள்ளே சென்றார் கமல். மற்ற மூவரும் இயல்பாக இருக்க, சாண்டியின் மிகையான பதற்றமும் உபசரிப்பும் படு செயற்கையாகத் தெரிந்தது. பொதுவாக இயல்பாக இருக்கக்கூடியவர் சாண்டி. கமலைப் பார்த்தவுடன் அவர் காட்டிய மிகையான மரியாதையும் உடல்மொழியும் நெருடல் மட்டுமல்ல சற்று எரிச்சலையும் தந்தது.

“சாண்டி சமையலைச் சாப்பிட்டும் ஹெல்த்தியா இருக்கீங்களே?” என்று முதல் ஜோக்கை அடித்தார் கமல். லியாவின் அப்பா பணிக்காக மறுபடியும் கனடா சென்றதைப் பற்றி விசாரித்தவர், “நீங்களும் இனி பல நாடுகள் பறக்க வேண்டியிருக்கும்” என்று பில்டப்பை ஆரம்பித்தார். (இப்படி உசுப்பேத்தியே…)

பிறகு நால்வருக்கும் தனித்தனியாக எழுதிய வாழ்த்துக் கவிதைகளை அவர்களுக்கு படித்துக் காண்பித்தார். சாண்டிக்காக எழுதிய ‘மெட்ராஸ் பாஷை’ கவிதை ‘ஜோராக’ அல்லாமல் “பேஜாராக’ இருந்தது. ஒருவரின் பெயரை வைத்து ‘கிம்மிக்ஸ்’ கவிதை எழுதுவது பழைய பாணி. ‘மாறலியா.. ஏற்கலியா..’ என்று லியா என்று முடிவது போல் கவிதை மாதிரி ஏதோவொன்றை எழுதியிருந்தார் கமல். முகினுக்கு ‘பாட்டுக்குப் பாட்டெடுத்து’ மெட்டில் பாடலும், ஷெரீன் உடம்பைக் குறைத்தற்கு ‘ஆங்கில’ பாராட்டும்.

IMAGE_ALT

பாலச்சந்தர், வாலி, வைரமுத்து, நாகேஷ் போன்றவர்கள் தன்னைப் பாராட்டி எழுதிய கடிதத்தை பத்திரமாக வைத்திருப்பதாக சொன்ன கமல், அந்த வரிசையில் சரவணன் என்றதும் ‘சித்தப்பூ’தான் கடிதம் எழுதியிருப்பதாக நினைத்தேன். இல்லை. அது ஏவிஎம் சரவணனாம். (சித்தப்பூ எழுதியிருந்தால் ரகளையாக இருந்திருக்கும்.)

“வெளில வாங்க உங்களுக்கெல்லாம் இருக்குது. என்னமோ நெனச்சுட்டு இருக்கீங்க. அன்புல ஆம்லேட் போடப் போறாங்க. திரிப்ளிகேன்ல கூட உங்களை விசாரிச்சாங்க சாண்டி” என்று கமல் சொன்னதும் கூனிக்குழைந்த சாண்டி ‘உங்க படத்துல ஒரு கோரியோ பண்ணனும் சார்’ என்று சந்தடி சாக்கில் ஒரு பிட்டைப் போட்டு வைத்தார்.

“உங்களின் உறவினர்கள் வந்து பார்த்தாலும் சில விஷயங்களை மிஸ் பண்ணியிருப்பீங்க” என்று பிறகு சில வீடியோக்களைக் காட்டினார் கமல்.

முகினின் ‘ரிக்கார்டிங் ஸ்டூடியோ’ தோழர்கள் ‘ஜெயிச்சுட்டு வா மச்சி’ என்று மலாய் வாசனையுடன் வாழ்த்தினார்கள். முகினின் ‘நெருங்கிய உறவு’ ஒன்றின் ஆடியோ மட்டும் நமக்கு கேட்டது. Privacy கருதி வீடியோவைத் தவிர்த்து விட்டார்கள் என்று யூகிக்கிறேன்.

கடைசியில் தன் ‘பப்பியை’ பார்த்து விட்டார் ஷெரீன். தூரத்தில் இருந்து பார்க்க அது நாய் மாதிரிதான் தெரிந்தது. (நாயும் இப்போது சீனாவில் இருந்துதான் இம்போர்ட் ஆகிறது போல). எனவே அதற்கு சீனப் பாடலின் பின்னணி இசையைப் போட்டார்கள்.

அடுத்ததாக சாண்டி மாஸ்டரின் பயிற்சிப் பள்ளி. ‘ஓ.. நீ இவ்ள பெரிய அப்பாடக்கரா?” என்று தோன்றியது. பொடிசுகளும் ஆடிக் கொண்டிருந்தன. ‘நிறைய ஷூட்டிங் இருக்குது மச்சி. சீக்கிரம் டைட்டிலை தூக்கிட்டு வா” என்றார்கள் நண்பர்கள். ‘மாஸ்டர்.. உங்களோட வேற முகத்தைப் பார்த்தோம்’ என்று பிள்ளைகள் சொன்னது உண்மை. “வீ ஆர் த பாய்ஸ்’ பாட்டு எப்படி உருவானது என்கிற பின்னணியை சாண்டியும் முகினும் விவரித்தார்கள்.

ஒருவர் சற்று பிரபலமாகி விட்டால், அவர் படித்த பள்ளி, வசிக்கும் தெரு, அவருக்கு எலந்தப்பழம் விற்ற கிழவி, வீட்டிற்கு பால் போடுபவர் ஆகியோரும் கூடவே பிரபலம் ஆகி விடுவார்கள். அந்த வகையில் லியாவின் வீடு, பள்ளி, ஆசிரியர் ஆகிய வரலாற்று இடங்களைக் காட்டினார்கள்.

“அப்பா.. அப்பா.. என்னையும் கூட்டிட்டுப் போங்கப்பா…” என்று ஐந்து வயது சிறுவன் மாதிரி கமலுடன் வெளியில் செல்ல சாண்டி அடம்பிடிக்க “நீ இங்கயே சமர்த்தா இருப்பியாம். அப்பா வரும் போது ஐஸ்கீரிம் வாங்கிட்டு வருவேனாம்’ என்கிற மாதிரி கமல் சொல்ல, மிக நன்றாக நடந்து முடிந்தது அந்த நாடகம்.

**

பிறகு மேடையில் அபிராமியின் நடன நிகழ்ச்சி நடந்தது. (முருகேஷா.. நான் கேட்டேனா?!) இந்த சீஸனின் போட்டியாளர்கள் வரிசையாக உள்ளே வந்தனர். “ஓரிருவர் தவிர அனைவரும் வந்திருக்கிறார்கள்” என்று மழுப்பலாக சொன்னார் கமல். (சரவணன், மதுமிதா என்று பெயரைச் சொல்லியிருக்கலாம்). தாமதமாக வந்து தனிக்கவனத்தைப் பெற்றார் புத்திசாலி கஸ்தூரி.

“யார் வெற்றியாளராக இருக்கக்கூடும்?” என்று இவர்களைக் கேட்டார் கமல். ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ புகழ் கவின், சாண்டியைச் சொல்வார் என்று பார்த்தால் ‘காதலுக்கு மரியாதை’ கொடுத்து லியாவின் பெயரைச் சொன்னது அநியாயம். (செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் தேடி..) இருவரின் பெயரையும் இணைத்தாவது சொல்லியிருக்கலாம். என்றாலும் கவனின் நேர்மையைப் பாராட்டியாக வேண்டும்.

பெரும்பாலோனோர் முகினின் பெயரைச் சொன்னார்கள். சாண்டியையும் சிலர் சொன்னார்கள். லியாவின் பெயரை வனிதா சொன்னது ஆச்சரியம். (அதனால்தான் உருப்படாமப் போச்சோ?!) ‘மத்த எல்லோரும் வேஸ்ட். சாண்டிதான் பெஸ்ட்’ என்றார் மீரா. முகின், ஷெரீன் ஆகிய இரண்டையும் சேர்த்து சிலர் சொன்னார்கள்.

அடுத்ததாக, இரண்டாவது சீஸன் வெற்றியாளர் ரித்விகா மேடைக்கு அழைக்கப்பட்டார். அவர் ‘கற்பூர ஆராதனை’ மாதிரி கோப்பையைக் கொண்டு போய் உள்ளே காட்டி விட்டு வருவாராம். அனைவரும் தொட்டு கும்பிட வேண்டுமாம். ரித்விகா திரும்ப வரும் போது ஒருவரை அழைத்து வந்து விடுவாராம்.

அதற்கு முன் ‘உங்கள் நண்பர் ஒருவரைப் பார்க்கலாம்’ என்றார் கமல். முகின் சட்டென்று ‘தர்ஷன்’ என்று கத்தினார். சாண்டி, வேறு யாரைச் சொல்வார்?... என் ரத்தத்தின் ரத்தம். தம்பி ‘கவின்’ என்று சொன்னார். (ஆனால் கவினோ.. ‘லியா’தான் ஜெயிக்க வேண்டும் என்கிறார்). ‘உனக்கும் சுரிதார் போட்டுட்டாய்ங்களா” என்று சாண்டி கலாய்த்தார். லியாவும் யாரைப் பார்க்க விரும்புவார் என்பது வெளிப்படை. ‘நல்லாயிருக்கியா?” என்று இளிப்புடன் விசாரித்தார். “அவனைப் பேசச் சொல்லாதீங்க. அரைமணி நேரத்திற்கு கட்டுரை எழுதுவான்” என்று சாண்டி அலறியது அல்ட்டிமேட் காமெடி.

ரித்விகா கோப்பையை எடுத்துக் கொண்டு ‘என்ன டென்ஷனே இல்லாம இருக்கீங்க?” என்று ஆரவாரமாக உள்ளே நுழைய ‘அந்த கப்பை ஓரமா வைய்யி. நான் கொடுக்கற டீ கப்பை பிடிச்சுக்கோ” என்று வெற்றிக்கோப்பையை இடது கையால் கையாண்டார் சாண்டி. “அய்.. அதுல என் பேர் எழுதி இருக்கு?” என்று விளையாட்டாக ஆசைப்பட்டார் ஷெரீன்.

“அம்பது லட்சம் கிடைச்சா என்ன பண்ணுவீங்க?” என்று ரித்விகா கேட்க, ‘அம்மா கிட்ட கொடுத்துடுவென், ஆயாகிட்ட கொடுத்துடுவேன்’ என்றே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சாண்டி மட்டும் ‘வொய்ப் கிட்ட கொடுத்துடுவேன். கால்வாசியை தர்ம காரியங்களுக்கு செலவு பண்ணுவேன்’ என்று சம்பிதாயமாக சொன்னவுடன்தான் பார்வையாளர்களுக்கும் சற்று சமாதானம் ஆகியிருக்கும். இல்லையென்றால் முழு வயிற்றெரிச்சல் இருந்திருக்கலாம்.

அகம் டிவி வழியாக உள்ளே வந்தார் கமல். “நான் என்ன சொல்லி அனுப்பிச்சேன். நீ என்ன பண்ணிட்டு இருக்கே?” என்று மரியநேசனின் பாணியில் ரித்விகாவை கேட்டு விட்டு ஒருவரை வெளியே அழைத்து வரச் சொன்னார். அது ‘ஷெரீன்’ என்று யூகிப்பதில் அதிக சிரமம் இருக்கவில்லை.

(ஷெரீன் மீது அவதூறு பேசி சண்டையிட்டு அவர் மீது அனுதாபம் ஏற்பட வைத்து அவரை இறுதியில் வெல்ல வைப்பதுதான் வனிதாவின் ராஜதந்திரம் என்று சொல்லிக் கொண்டிருந்த வனிதா ஆர்மியை இந்த தக்க சமயத்தில் நினைவுகூர வேண்டியிருக்கிறது). ஷெரீனின் பெயர் அறிவிக்கப்பட்டவுன், இயல்பாகவே கோணலாக இருக்கும் சாக்ஷியின் முகம், மேலும் அஷ்ட கோணலாகியது.

ஷெரீனின் வெளியேற்றம் இதர போட்டியாளர்களுக்கு அதிக துயரத்தைத் தரவில்லை. ஒருவகையில் அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். ஏன் ஷெரீனுக்கே அதில் வருத்தமில்லை. ஆனால் ஒரு வருத்தம் இருந்திருக்கும். ‘பிக்கி பேபி.. ஏதாச்சும் சொல்லுங்க” என்று அவர் உருக்கமாக வேண்டியும், கல்லுளி மங்கர் பிக்பாஸ் வாயைத் திறக்காதது அநியாயம். (ஒருவேளை துக்கத்தில் தொண்டை அடைத்துக் கொண்டதோ?!). இதுவே வனிதாவாக இருந்திருந்தால் ‘என்னடா.. சின்னப்பையா?” என்று அவர் கேட்க... ‘பாத்துப் போங்க மேடம்.. கதவுல முட்டிக்காதீங்க” என்று பம்மி வழியனுப்பியிருப்பார்.

IMAGE_ALT

“இந்தக் கோப்பை சுமையாக இருக்கு” என்று கமல் சொன்னதற்கு ‘கொடுங்க சார்.. நான் வெச்சுக்கறேன்” என்று ஷெரீன் சொன்னதும் “உங்களை வெளியே வரச் சொன்ன அளவிற்கு இதை வைத்துக் கொள்வது கடினமாக இல்லை” என்று கமல் சொன்ன போது அவருக்குள் இருந்த ‘சிறந்த வசனகர்த்தா’ வெளிப்பட்டார். ஆனால் பிரச்சினை என்னவெனில் கமல் காட்டும் அன்பு பல சமயங்களில் சம்பிரதாயமாகவும் செயற்கையாகவும் தெரிகிறது.

‘மனிதத்தைக் காப்பாற்றிய’ ஷெரீனை கமல் பாராட்டியது முற்றிலும் தகுதியுடையது. அதை ஷெரீனும் உணர்ந்திருந்தார். “வருங்கால போட்டியாளர்களுக்கும் இதைத்தான் சொல்வேன். நெகட்டிவிட்டி தேவையில்லை” என்று அவர் சொன்ன உபதேசம் முற்றிலும் சரியானது.

‘யார் வெற்றி பெறுவார்?” என்பதை டெஸ்ட் ட்யூப் மூலம் ஷெரீனை விளையாட வைத்தார்கள். பார்ப்பதற்கு குழப்பமாக இருந்தாலும், ஆச்சரியகரமாக ‘சாண்டி’யைத் தேர்ந்தெடுத்தார் ஷெரீன்.

‘அபிராமியே’ நடனமாடி முடித்த பிறகு கஸ்தூரி ஆடுவதில் என்ன கோளாறு? அதையும் பார்த்துத் தொலைப்போம் என்று ஆட வைத்தார்கள். பின்னணியில் ஒலித்த ‘அந்தியிலே வானம்’ பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது.

அடுத்து சில விருதுகள். ‘Game Changer’ என்கிற விருது கவினுக்கு கிடைத்தது. இவர் நீடித்திருந்தால் போட்டியில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டிருக்குமா என்று சொல்ல முடியவில்லை. பேசும் போது வழக்கம் போல் ‘பத்து மார்க்’ விடையை எழுதினார் கவின். ‘இதுல இருக்கற கெட்ட விஷயங்களை விட்டுடுங்க.. நல்ல விஷயங்களை எடுத்துக்கங்க. இது ஒரு கேம் ஷோ’ என்று கவின் சொன்னது சரியானது.

“நீங்க நீங்களாக இருங்க’ன்றது.. உங்க தனித்தன்மை. அதை எப்போதும் இழந்து விடாதீங்க” என்று பொதுச் செய்தியாக மாற்றிய கமல், கவினின் ‘போட்டு வைத்த திட்டம் ஓகே கண்மணி” என்று பாராட்டினார்.

அடுத்த விருது வனிதாவிற்கு. எவருக்கும் அஞ்சாமல் பல விஷயங்களைச் செய்தாராம். GUTS & GRITS விருது கிடைத்தது. (Grit என்றால் என்ன பொருள் என்று தேடிப் பார்த்தேன். மணல், சரளைக்கல், மனவுறுதி என்று அகராதி காட்டியது. ஒருவேளை சரளைக்கல்லாக இருக்குமோ?!)

“நீங்கதான் என் டார்க்கெட்’ என்று சொல்லி கமலை ஜெர்க் ஆக்கிய வனிதா, அன்றைக்கு தனக்கு 40வது பிறந்த நாள் என்று சொல்லி ‘உங்க படத்துல ஒரு ரோல் கொடுங்க’ என்று அந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டார். (வழக்கமா என் படத்துல எல்லா ரோலையும் நானேதான் பண்ணுவேன். தசாவதாரம் பார்க்கலை?” என்பது கமலின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கலாம்). தன் விருதை மகள்களின் கையால் வனிதா வாங்கச் செய்தது சிறப்பு.

‘மிகவும் ஒழுக்கமானவர்’ என்ற விருது சேரனுக்கு கிடைத்தது மிகப் பொருத்தம். ‘இடுப்பு கிள்ளிங்’ சர்ச்சையைத் தவிர இதர சமயங்களில் மிகச் சரியாக நடந்து கொண்டார் சேரன். “ஒரு சினிமாவை எத்தனை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என்பது உங்களின் படத்தில் பணிபுரிந்த போதுதான் தெரிந்தது’ என்று சேரன் சொன்னது உண்மை.

‘Best buddy award’ ஷெரீனுக்கு கிடைத்தது பெருமை. இதை அவர் அபிராமியுடன் பகிர்ந்து கொண்டது மேலும் அழகு. ‘All Rounder’ விருதிற்கு தர்ஷனைத் தவிர வேறு எவரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

இந்தச் சமயத்தில் தர்ஷனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் கூடுதல் ஆச்சரியம் தந்தார் கமல். தனது பட நிறுவனத்தில் நடிக்கும் வாய்பபை ‘தனது பரிசாக’ தந்தது சிறப்பு. (துக்கடா ரோலா இல்லாம ஹீரோவா போடுங்க). இதர நடிகர்களைப் பயன்படுத்தும் அரிதான சினிமா நிறுவனங்களில் தனது நிறுவனமும் ஒன்று’ என்று கமல் சொன்னது உண்மை. “என் கிட்ட இனிமே திட்டு வாங்க வேண்டியிருக்கும்’ என்று சொன்னதும் சிறப்பு. (இப்போதைய தலைமுறை வெறும் பாராட்டுக்களையே எதிர்பார்க்கிறது).

IMAGE_ALT

தர்ஷனுக்கு கிடைத்த வாய்ப்பு பார்வையாளர்களுக்கு நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கும் எனும் போது அவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை அளிக்காதா என்ன? தர்ஷனின் தாய்க்கு கண்ணீரே வந்ததில் ஆச்சரியம் இல்லை.
IMAGE_ALT

அடுத்ததாக ராஜேஷ் வைத்யாவின் அருமையான வீணைக் கச்சேரி இடம் பெற்றது. கமல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்பதால் அவரின் பாடல்களாகவே இடம்பெறுவது ஒரு சம்பிரதாயம் போலிருக்கிறது. புன்னகை மன்னன், குணா, ஹேராம், விருமாண்டி, சத்யா போன்ற திரைப்படங்களில் இருந்து அருமையான பாடல்களைத் தேர்ந்தெடுத்தார் ராஜேஷ். இவை அனைத்துமே ராஜா இசையில் வந்தது என்பது ஆச்சரியமாக இல்லை. பாடலை அப்படியே இசைக்காமல் ராஜேஷ் வீணையில் செய்த மாற்றங்கள் பிரமிப்பை உண்டாக்கியது. குறிப்பாக ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ என்னும் மென்மையான பாடலில் சற்று வேகத்தைக் கூட்டியது நல்ல காக்டெயிலாக இருந்தது.

“வீணையைக் கற்றுக் கொள்வது மிகச்சிரமம். அதில் இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது’ என்று ராஜேஷ் வைத்யாவைப் பாராட்டினார். ராஜேஷ் வேண்டுகோளின் பேரில் கமலும் (வரிகளை மறந்து விட்டு சமாளித்து) பாடியது அருமை. கீபோர்டு வாசித்தவரின் பெயரையும் இணைத்து (மார்ஷல்) ராஜேஷ் நன்றி கூறியது சிறப்பு. தனது சகோதரரை பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருந்தார் மோகன் வைத்யா.

அடுத்தது நான் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நகைச்சுவை நிகழ்ச்சி. விஜய்டிவியின் பெருமைகளுள் ஒன்று என்னவெனில், அவர்களையே அவர்கள் கலாய்த்துக் கொள்வார்கள். கடந்த முறை பிக்பாஸ் சீஸன் 2-ஐ கிண்டலடித்ததைப் பார்த்து அப்படி விழுந்து விழுந்து சிரித்தேன். ரகளையான நிகழ்ச்சியாக அது இருந்தது. இம்முறையும் அப்படி எதிர்பார்த்தேன்.

ஆனால் சுருக்கமாக முடித்ததோடு அடக்கியும் வாசித்து விட்டார்கள். எடுத்ததுமே மோகன் வைத்யாதான். ‘என் ஃபேமிலியை மிஸ் பண்றேன்” என்றவரை ‘யாரையும் கிஸ் பண்ணாம இருந்தா சரி’ என்று கிண்டலடித்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த மோகனின் முகம் சற்று மாறியது. ‘நான் ரெண்டு பைனல்யும் டான்ஸ் ஆடினதே உள்ளே வர்றதுக்குத்தான்” என்று அடுத்ததாக சாண்டியை இழுத்தவர்கள்.. ‘ஞாபகம் வருதே’ பாடலைப் போட்டு சேரனையும் கலாய்த்தார்கள்.

இருந்ததிலேயே சிறப்பு சாக்ஷியாக வந்தவர்தான். அச்சு அசலாக அப்படியே இருந்தார். இதைப் போலவே மீராவாக வந்த பாலாவும் அசத்தி விட்டார். ‘வாழ்த்து சொன்னவரை’ வாத்து சொன்னதாக வனிதா செய்த அலப்பறை சிறப்பு. இதன் இறுதியில் ‘முகின்’ வெற்றியடைந்ததை சூசகமாக சொல்லி விட்டார்கள்.

அபிராமி, கஸ்தூரியே வந்து நடனம் ஆடி விட்ட பிறகு எவ்வளவு அடித்தாலும் தாங்கும் மோடிற்கு நாம் வந்து விட்டதால் சாக்ஷியையும் இறக்கி விட்டார்கள். எட்டுக்கால் பூச்சியின் அஷ்டகோணல் நடனம் சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கலை நிகழ்ச்சிகளை உள்ளே இருப்பவர்களையும் பார்க்கச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன எழவு சீக்ரெட்டை மெயின்டெயின் செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.

அகம் டிவியாக உள்ளே வந்த கமல், போட்டியாளர்களின் பிரத்யேக ரசிகர்களிடம் பேச வைத்தார். பேரிளம் பெண்ணின் வயதை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்த ஓர் இளம்பெண் முகினை விழுந்து விழுந்து பாராட்டியதை அபிராமி காண்டுடன் கவனித்தார். (இவரின் பெயர் பிரியங்காவாம். அதான் புஷ்டியாக இருக்கிறார்). சாண்டி மாஸ்டரின் வெறித்தனமான ரசிகர், அவர் துணி வாங்கும் கடையில்தான் துணி வாங்குவாராம். (நல்லவேளை, அத்தோடு நிறுத்திக் கொண்டார்). லாஸ்லியாவிற்கு ஒரு அன்புத்தம்பி கிடைத்தார். (லியாவை ‘அக்கா’ என்று அழைக்கவும் ஒரு மனம் வேண்டும்).

“காமிரா ஓரத்துல என் கண்ணம்மாவை பார்த்துட்டேன்” என்று சிலிர்த்துப் போனார் சாண்டி. “ஏண்டா. வீடியோ காலிங்ல வரப்போ.. மூஞ்சை க்ளோசப்ல வெக்காதேன்னு சொல்லிட்டு.. இப்ப ஏன் இப்படி சீன் போடறே?” என்பது அவர் மனைவியின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கக்கூடும்.

‘எதையும் தாங்கும் இதயம் வரிசையில் யாஷிகாவின் நடனமும் இடம்பெற்றது.

**

ஷெரீனை ரித்விகா அழைத்து வந்ததைப் போல் இன்னொருவரை அழைத்து வர தன் மகள் ஸ்ருதியை களத்தில் இறக்கினார் கமல். ‘இன்னாப்பா இது?” என்று சிணுங்கிக் கொண்டே சென்ற ஸ்ருதி, அங்கு சென்று இசைத்திறமையையெல்லாம் காட்டிக் கொண்டிருக்க, ‘நான் என்ன சொன்னேன். நீ என்ன பண்ணிட்டு இருக்கே?” என்று மரியநேசனின் மோடிற்கு மாறி கமல் எச்சரித்தவுடன் அடுத்த ‘வெளியேற்றத்தை’ அறிவித்தார் ஸ்ருதி.

IMAGE_ALT

அது ‘லொஸ்லியா’. இதுவும் எதிர்பார்க்கப்பட்ட முடிவுதான். வெளியே வந்த லியா, கவினைப் பார்த்து ‘அடேய் விளங்காதவனே.. நல்லாப் போட்டடா. பிளானு’ என்று கலாய்த்தார்.

தனியாக இருந்த முகினும் சாண்டியும் ஒருவரையொருவர் அணைத்து பயத்தைப் போக்கிக் கொண்டார்கள். அவர்களிடம் இறுதியாகப் பேச வந்தார் பிக்பாஸ். ‘சிஷ்யா.. ஐயா முகின்” என்று அழைத்ததும் இருவரும் உருகினார்கள். நமக்குமே பிக்பாஸ் குரலைப் பிரிவதில் சிறிது துக்கம் ஏற்பட்டது. (பிறகு வீட்டில் இருக்கும் மனைவியின் குரல் நினைவிற்கு வந்ததும் துக்கம் காணாமல் போனது).

இது நடக்கக்கூடாது என்று அஞ்சியிருந்தேன். சேச்சே.. நடக்காது என்றும் ஆறுதலாக இருந்தேன்’. ஆனால் அந்தப் பயங்கரம் கடைசியில் நடந்தே விட்டது. ஆம் வனிதாவின் நடனம்.

மரம், மட்டை. நீச்சல் குளம், கக்கூஸ் என்று எல்லோரிடமும் விடைபெற்றார்கள் சாண்டியும் முகினும். வீட்டின் மெயின் ஸ்விட்ச்சை அணைக்கச் சொன்னார் கமல். ‘நீங்கதான் அணைக்கணும்” என்று அடம்பிடித்தார் சாண்டி. அதன் கைப்பிடியை உடைத்து விட்டார் சாண்டி. (இது முகின் செய்ய வேண்டியது இல்லையோ?!).

குதிரைகள் பூட்டப்பட்ட காரில் டிரைவர் ஓட்டிவர கமலும் சாண்டி முகினும் ஊர்வலம் வந்தார்கள்.

விஜய் டிவியின் தரப்பில் வந்த உயர்அதிகாரி ஒருவர், இந்த சீஸனுக்கு 200 கோடி வாக்குகள் வந்ததாக அள்ளி விட்டார், (நீ பார்த்தே?!) இது உலகத்திலேயே வேறு எந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கிடைக்காததாம். (தமிழனின் சாதனைகளுள் இதுவும் ஒன்று). இறுதிப் போட்டிக்கு மட்டும் இருபது கோடி வாக்குகள் விழுந்ததாம். (வெளங்கிடும்).

சில பல இழுவைகளுக்குப் பிறகு சாண்டி மற்றும் முகினின் கையைப் பிடித்திருந்த கமல், முகினின் பக்கம் கை உயர்த்த, முகின் வெற்றி பெற்ற செய்தி அனைவருக்கும் தெரிந்தது. முகினுக்கு ஏழு கோடியே சில்லறை வாக்குகளும் சாண்டிக்கு ஐந்து கோடி சில்லறை வாக்குகளும் கிடைத்ததாம்.

‘வெற்றி மேடையில் கவினின் மெடலை அணிய வைப்பேன்’ என்று சொன்ன சாண்டி அதை மறக்காமல் செய்து நட்பின் பெருமையைப் பதிவு செய்ததது சிறப்பு.

இறுதிப் போட்டியில் வெல்ல வேண்டுமென்கிற நோக்கம் சாண்டியிடமும் கவினிடமும் இல்லை. தர்ஷன் அல்லது முகினை வெல்ல வைக்க வேண்டுமென்று பேசிக் கொண்டதை மேடையில் பதிவு செய்தார் சாண்டி.

(அயலகத் தமிழர் ஒருவர்தான் இந்தப் போட்டியில் வெல்வார் என்று குருட்டாம் போக்கில் சொல்லி வைத்த ஜோசியர்கள் காலரை உயர்த்திக் கொள்ளலாம்)

“வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ என்று பொருத்தமாக சாண்டி சொன்னது சிறப்பு. முகினின் குடும்பத்தினரும் மிக நெகிழ்ச்சியுடன் இதற்காக நன்றி சொன்னார்கள். (ஆத்தா.. நான் பாஸாயிட்டேன்!) ‘பிரபஞ்சத்திற்கு நன்றி’ என்று வித்தியாசமாக சொன்னார் முகின். ‘சாண்டிக்கு அவர் குழந்தைதான் பரிசு’ என்று அல்வா கொடுத்தார் கமல்.

முதல் நிலையைத் தவிர அடுத்த மூன்று நிலைகளுக்கு வந்தவர்களுக்கும் பரிசு தந்திருக்கலாம். அவர்களும் இத்தனை நாட்களை இங்கு தாக்குப் பிடித்தவர்கள்தான்.

கடந்த சீஸன்களைப் போல் அல்லாமல் இந்த சீஸனில் நட்புணர்வும், விட்டுக்கொடுக்கும் தன்மையும், தன் தகுதியைப் பற்றி உணர்ந்திருந்ததும் மிகச் சிறப்பான விஷயம்.

IMAGE_ALT

**

இந்தத் தளத்தில் தினமும் வெளியான ‘பிக்பாஸ்’ கட்டுரைகளை விரும்பி வாசித்த அனைவருக்கும் மிக்க நன்றி. எழுத்து சுதந்திரத்தை முழுமையாக அனுமதித்து, பொருத்தமான படங்களை மிக அழகாக இணைத்து தினமும் கட்டுரைகளை வெளியிட்ட அருவி இணையத்தளத்திற்கும் மிக்க நன்றி.

இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம் தோழர்களே! நன்றி.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE