Thursday 28th of March 2024 01:04:58 PM GMT

LANGUAGE - TAMIL
ஜனாதிபதியானால் நவம்பர் 17ஆம் திகதி காலை சிறையிலுள்ள சகல இராணுவத்தினருக்கும் விடுதலை! - கோட்டா உறுதி

ஜனாதிபதியானால் நவம்பர் 17ஆம் திகதி காலை சிறையிலுள்ள சகல இராணுவத்தினருக்கும் விடுதலை! - கோட்டா உறுதி


"எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றிபெற்றால் சிறைச்சாலைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவத்தினரையும் மறுநாள் 17ஆம் திகதி காலை விடுதலை செய்வேன்."

- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது பிரதான பரப்புரைக் கூட்டம் இன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதித் தேர்தலில் எமக்கான வெற்றி தற்போது உறுதியாகியுள்ளது. நான் ஆட்சிக்கு வந்தால், இராணுவ ஆட்சி வந்துவிடும் என்று சிலர் கூறுகின்றார்கள். ஆனால், 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர்தான், இராணுவத்தினருக்கான மரியாதையான யுகமொன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. இந்த யுகம் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துடன் இல்லாது போனது.

இராணுவத்தினர், புலனாய்வுப் பிரிவினரைத் தண்டிக்கும் ஒரு கலாசாரத்தையே ஐக்கிய தேசியக் கட்சி அரசு முன்னெடுத்து வருகின்றது. போரை நிறைவுக்குக் கொண்டுவந்து, எம்மால் ஏற்படுத்தப்பட்ட சுதந்திரதத்தை பத்து வருடங்களுக்குள்ளேயே இந்த அரசு இல்லாது செய்துள்ளது. இதனை மக்கள் மறந்துவிடக்கூடாது.

இந்த நாட்டில் மீண்டும் சுதந்திரத்தையும், அச்சமில்லாத சூழ்நிலையையும் ஏற்படுத்த வேண்டியது எனது கடப்பாடாகும். இதனை நான் நவம்பர் 16 ஆம் திகதிக்குப் பின்னர் மேற்கொள்வேன் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கின்றேன்.

இன்று இந்த நாட்டு மக்கள், 5 வருடங்களுக்கு முன்னர் இருந்த இலங்கையைத் தான் எதிர்ப்பார்க்கின்றார்கள். பொய்யான குற்றச்சாட்டில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் ஐ.தே.க. அரசால் சிறைக்கு அனுப்பப்பட்ட அனைத்து இராணுவத்தினரையும் நான் வெற்றிபெற்றவுடன், நவம்பர் 17ஆம் திகதி காலை விடுதலை செய்வேன் என்பதையும் இவ்வேளையில் கூறிக்கொள்கின்றேன்.

இதற்காக எனக்கு மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று பூரணமாக நம்புகின்றேன். அச்சம், சந்தேகம் இல்லாத நாட்டை நாம் உறுதிப்படுத்துவோம்.

இந்த ஒத்துழைப்புடன் சிறப்பான சமூகமொன்றை உருவாக்குவோம். எதிர்க்கால சந்ததியினருக்கான அழகியதொரு நாட்டை நாம் நிச்சயமாகக் கட்டியெழுப்புவோம்" - என்றார்.

இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் இரு கட்சிகளினதும் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE