Saturday 19th of June 2021 10:01:35 PM GMT

LANGUAGE - TAMIL
கீழடி அரசியல் - 3
கீழடி அரசியல் - 3

கீழடி அரசியல் - 3


சரியாக இப்படியொரு பொழுதுக்காகவே சற்று அதிகமான நாள்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஆகிவிட்டது. கீழடியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஆரம்பகட்ட முடிவுகள், யாரை சலனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறதோ, அவர்கள் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். ஐயமே இல்லை, சமக்கிருதமே மேல் எனும்படி தமிழைக் கீழாகக் கருதும் வகையினர்தாம், அவர்கள்!

தற்காலிகமாக தமிழ்நாட்டரசின் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ள கீழடி அகழாய்வு அறிக்கையில், புறம்பான அரசியல் பொழிப்புரைகள் கிளம்பும் எனும் எச்சரிக்கை உணர்விலோ என்னவோ, மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, ' கீழடி: வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம்’ என்றென!

இதுகாறும்வரை கிமு மூன்றாம் நூற்றாண்டுவரையாகக் கூறப்பட்ட சங்ககாலம் இவ்வாய்வின் மூலம் அதனினும் முன்னதாக கிமு ஆறாம் நூற்றாண்டு என அறுதியிடப்பட்டுள்ளது. 110 ஏக்கர் பரப்பிலுள்ள கீழடி அகழாய்வுப் பகுதியில் 10 விழுக்காடு அளவே தோண்டபட்டுள்ள நிலையில், மொத்தப் பகுதியும் அகழப்படுகையில் இப்போதைய கண்டறிவுகள் வலுப்படுவதுடன் புதிய சான்றுகளுக்குமான வாய்ப்பும் அதிகம் என்பது தொல்லியலாளர்களின் உறுதியான கருத்து. ஆனால், கடந்த காலத்தைப் போல தடங்கல் ஏதும் வந்துவிடாமல், இதைத் தொடர்ந்து எடுத்துச்செல்லவேண்டிய தமிழ்நாட்டுத் தமிழர்கள்- தமிழினப் பற்றாளர்கள் ஒற்றைக்குரலில் அல்லவா முழங்கவேண்டும்?... நடப்பதென்ன? ஒரு மொழியினத்துக்குள்ளே, முரண்நிலை, பிரிப்பரசியல் கருத்தாடல்கள்தாம் வீச்சாக இருக்கின்றன.

IMAGE_ALT

கீழடி காட்டும் நாகரிகம் தமிழா, திராவிடமா எனும் வாதம்(!?) முன்னிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் எனும் ஆய்வுலகம் முதன்மையாக, கீழடியும் ஒரு திராவிட நாகரிகம் என்கிறது. அதேவேளை, செந்தமிழ்நாட்டில், வைகையாற்றின் படுகையில், கீழடியில் ஒரு வேர் கண்டறியப்பட்டுள்ள நகர நாகரிகம், தமிழரின் நாகரிகமே என்றே குறிப்பிடுகிறார்கள். இதுதான் விவகாரமும்கூட!

”சரிதான், தமிழர் நாகரிகம்தானே; பிறகு ஏன், ’திராவிட’ எனக்கூறி தமிழர் அடையாளத்தை அழிக்கவேண்டும்” என்பது தமிழ் அடையாளவாதிகளின் கேள்வி. சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம்தானே... அதன் தொடர்ச்சியான கீழடி நாகரிகத்தையும் அப்படிக் குறிப்பதில் என்ன தவறு?” என்பது திராவிட அடையாளவாதிகளின் கூற்று.

இரண்டு வாதங்களிலும் ஒத்துக்கொள்ளக்கூடியதும் ஒதுக்கித்தள்ளக்கூடிய வீம்புப் பிடிவாதமும் சேர்ந்தே இருக்கிறது. இரு தரப்பினருமே, ’மெய்ப்பொருள்’ காணும் வள்ளுவரின் வழியில் பாதியை மட்டும் பிடித்துக்கொண்டு, மீதத்தை விட்டுவிடுகிறார்கள்.

ஒன்று, மனிதகுல வரலாற்றில் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்துவந்த மனித இனங்கள், மரபினம் - மொழியினம் - தேசிய இனம் எனும் படிநிலை வளர்ச்சியில் வந்தவை; அதன்படி, தமிழ்நாட்டுத் தமிழர் எனும் தேசிய இனத்தின் தொன்மையான பண்பாட்டு வரலாற்று அடையாளத்துக்காக நிற்கவேண்டும் என்பது; சரியே!

மற்றது, இன்னும் கண்டறியப்படாத இந்த பிரபஞ்சத்தின் புதிர்களை அறிவியல்மூலமே தீர்க்கமுடியும்; மனிதகுலத் தோற்றம், பரவல் குறித்து மறுக்கப்படமுடியாத சான்றுகளைத் தோண்டியெடுத்தும் கொண்டுவந்து நிறுத்தும் தொல்லியல் முதலிய பல்வேறு துறைகளின் அறிவையும் இணைத்துப் பார்ப்பது. அதன்படி தொன்மையான நாகரிகங்களின் சுவடுகளை அகழ்ந்தெடுத்ததைப் போல, இந்தியத் துணைக்கண்டத்தில், இப்போதைய பாக்கிசுத்தானில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரப்பா, சிந்து மாநிலத்தின் மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட சிந்துவெளி ’திராவிட’ நாகரிகம் என்பது இன்னுமொரு கருத்து!

IMAGE_ALT

திராவிடம் ஏன், எப்படி சரி ஆகும்? எப்போது தவறு ஆகும்?

’திராவிடம்’ வந்தவழியை அறியப் போனால், அது கீழைத்தேயவியலில் போய் நிற்கிறது. அதுவே, திராவிடவியலின் ஊற்றுக்கண் என்றும் கூறமுடியும். 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கலை துறைகளில் தொடங்கிய ஓர் இயலே, பிறகு மொழி, சமூக, அரசியல் துறைகளிலும் அதன் தொடர்ச்சியாக, (மேற்குலகின் பார்வையில்) கிழக்குத் திசை நாடுகளைப் பற்றிய கல்வி இயலாக, மாறி நிற்கிறது.

பிரிட்டன் ஆதிக்கத்தில் இந்தியா இருந்தபோது, கொல்கத்தாவில் நீதிபதியாகப் பணியாற்றிய வில்லியம் ஜோன்ஸ் என்பவரே, முதல் கட்டப் பங்கை ஆற்றினார். கீழைத்தேயவியலில் இந்தியா என்பதை சமக்கிருத மொழியையும் வேதங்களின் பண்பாட்டையும் கொண்டதாகக் கருதி, அவ்வாறே கட்டமைக்கவும் செய்தார். இந்திய- ஆரிய மொழிக் குடும்பத்தையும் முன்மொழிந்தார். கொல்கத்தாவில் ஆசியவியல் கழகம் எனும் அமைப்பையும் நிறுவினார். அவரைத் தொடர்ந்து, செர்மானியரான மாக்சு முல்லர், சமக்கிருத வடநாட்டவரும் செர்மானிய நாட்டவரும் தொல் ’ஆரியர்’ எனும் இனத்தின் வெவ்வேறு பிரிவினர் என கண்டம்தாண்டிய ‘ஆரியர்’ கருத்துக்கு வித்திட்டார். தன் வாழ்நாளிலேயே, ஆரிய மரபின வெறியின் கொடுமையைக் காணநேர்ந்தவர், தான் சொன்னது மரபினத்தின்படி அல்ல என மறுக்கவும்செய்தார் என்பதும் வரலாறு.

IMAGE_ALT

ஆனாலும் அவரின் முன்னைய கருத்தைப் பின்பற்றி கீழைத்தேயவியலில் பலரும் ஆரியக் கருத்தாக்கத்தை வலுவாக்கப் பணியாற்றினார்கள். அந்த சூழலில், அந்தக் கருதுகோளுக்கு மாறான நிலைமைகளை அதே பிரித்தானிய இந்தியவியலாளர்கள் கண்டனர். குறிப்பாக, தென்னிந்தியாவில் பேசப்பட்ட மொழிகளில், ஆரிய மொழிகளில் அல்லாத பல தனித்தன்மைகள் இருப்பதை அறிந்து, தனி கவனம் செலுத்தினர். ராபர்ட் கால்டுவெல் எனும் பாதிரியார், தென்னிந்திய மொழிகளின் இலக்கணத்தை ஒப்பாய்வுசெய்து, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலைப் படைத்தார். அதுவே, கீழைத்தேயவியலில்- இந்தியவியலில் திராவிடத்துக்கான புதிய வலுவான அடித்தளத்தை அமைத்தது. அவருக்கு முன்னரே, பிரித்தானிய அதிகாரியாக வந்த எல்லிசு என்பவரே, இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டார். வடமொழியல்லாத தென்னிந்திய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமை குறித்து எழுதிய முதல் ஐரோப்பியர் அவரே ஆவார். இந்த மொழிக்குடும்பத்தினது பெயரே, கீழைத்தேயவியலில், மானுடவியலிலும் ‘திராவிட’ இனக்குழுவின் பெயராகவும் அமைவதற்கு வழிகோலியது. ஆரியர் எதிர் திராவிடர் எனும் கருத்தாக்கமும் அதனடிப்படையிலான ஆய்வுமுறையும் வலுப்பெற்று, நிலைபெற்றன. குமரிக் கண்டம் குறித்து விவரித்துரைத்த பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையாரும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரும் ஆய்வுலகின் திராவிட வகைப்பாட்டை அங்கீகரித்தபடியேதான், தமிழின் தொன்மை, தனித்தன்மை குறித்த தம் முடிபுகளை எடுத்துவைத்தார்கள். அவர்களுக்குத் தெரியாதா, திராவிடம் என்பதன் பின்னணி? தெரிந்தும் ஏன் அதை முதன்மை முரணாக முட்டிக்கொண்டிருக்கவில்லை? தத்தம் வழிகளில் செம்மொழித் தமிழை உலகின்முன் உயர்த்தச்செய்வதையே பாடாகக் கொண்டிருந்தனர் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

கீழைத்தேயவியலில் சமக்கிருத மைய ஆரியக் கருத்தாக்கத்துக்கு ஐரோப்பியர் தூபமிட்டு வளர்த்தனரோ, நேர்மாறாக, அதை முறியடிக்கவும் அவர்கள் தரப்பிலேயே மொழியியல், மானுடவியல் தளங்களில் பணிகள் நடந்தன என்பதை நாம் ஒப்புக்கொள்வதுதானே நேர்மையாக இருக்கும்? எனில் அப்பணியைச் செய்த கால்டுவெல் போன்ற குறிப்பிட்ட சிலரை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்?

திராவிடம் எனும் அந்த ஒற்றைச் சொல்தானா? எனில் அதைச் சரிசெய்து நகரவேண்டிய நிலையிலேயே நாம் இருக்கிறோம். அதாவது, உலகளாவிய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட எந்த ஒரு தவறான கருத்தாக்கம் குறித்தும், அப்பொருளின் இயங்குதளத்தில் அதை முறியடித்தால்தான், சரியான பார்வை உலகுக்கு கிடைக்கும் என்பதுதானே? அந்த வழியில் செக் நாட்டைச் சேர்ந்த கமில் சுவலெபில், தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டு, நம் செம்மொழியின் சீரிய தன்மைகளை நிறுவினார். அவர் எழுதிய தமிழும் திராவிட மொழிகளும் (Tamulica et Dravidica: A Selection of Papers on Tamil and Dravidian Linguistics, Prague: KAROLINUM/CHARLES UNIVERSITY PRESS, 1998) எனும் நூல் இதில் முதன்மையானது. திராவிட எனும் சொல் தமிழிலிருந்து திரிந்து உருவானதே என்பதை அழுத்தம்திருத்தமாக நிறுவின, அவரின் ஆய்வுமுடிவுகள்.

போலவே, தமிழர் தரப்பிலும் ஈழம் தந்த தனிநாயகம் அடிகளார் போன்றவர்களும், சமக்கிருத மையமான இந்தியவியலைத் தாண்டி, செம்மொழித் தமிழை மையப்படுத்திய தமிழியல் எனும் தனி இயலை வளர்த்தெடுத்தனர். ஈழத்தின் ஞானப்பிரகாச அடிகளார் தொடங்கி, மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் வழியான தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் இதில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. இந்த இடத்தை வலுவாக்குவதே, தமிழ்நாட்டு- ஈழத் தமிழர் தேசிய இனங்களின், உரிமை அமைப்புகளின் கடப்பாடாக இருக்கமுடியும்.

IMAGE_ALT

சிந்துவெளி அகழாய்வு குறித்த முதல் செய்திப்பதிவு

இலெமுர் குரங்கினத்தை அடிப்படையாகக் கொண்டு, தொன்மைக்காலத்தில் இலெமூரியா எனும் ஒரே கண்டம் இருந்தது எனும் கருத்தாக்கம், தொன்மைப்பெருமையை மட்டும் கருத விழையும் தமிழரைத் தொற்றிக்கொண்டு, அதுவே குமரிக்கண்டம் என தமிழர்க்கான பெருமையாக நிறுவமுயன்றனர். நாம் கொண்டாடும் தமிழறிஞரும் அதை இறுகப்பற்றிக்கொண்டு வழிமொழிந்ததும் நடந்தது. ஆனால், கண்டத்திட்டு நகர்வு எனும் புதிய புவியியல்முடிவு வந்ததும் தன் அடிப்படையையே இழந்து, காலாவதியாகிப் போனது, இலெமூரியா கருத்தாக்கம்.

போலவே, ஆரியம் எனும் உருவாக்கப்பட்ட கருத்தாக்கத்தின் ஆதிக்கத்தன்மையை முறியடித்து, மனிதகுல வரலாற்றின் வழியில், தேசிய இனம் - இன்றைய நவீன தேசம் என்பதன் பரிணாமத்தை, பரிமாணங்களை அறிவியலின்படி புரிந்துகொள்வதும் புரியச்செய்வதும் இயலும். ’உலகோடு ஒட்ட ஒழுகல்’ எனும் ஐயனின் இன்னுமொரு வாக்கு, இங்கு பொருத்தமாக வழிகாட்டுகிறது.

சங்க கால நகர நாகரிகத்தை மீட்டுக்கொணர்வது மட்டுமன்றி, கடல்கொண்ட தென்னாட்டையும் அடுத்தடுத்த தலைமுறையினர்க்கு அறிவியல்கொண்டு ஆய்ந்துவர ஆவணசெய்வோம்!

தமிழ்நாட்டிலிருந்து இர.இரா.தமிழ்க்கனல்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE