“யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்”- வரமா? சாபமா?

வீகேஎம்By:

Submitted: 2019-10-16 13:26:39

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வடபகுதிக்கான அபிவிருத்திக்காரணிகளில் ஒன்றாக நோக்கப்படவேண்டியது. உட்கட்டமைப்பு வசதிகளின் ஆகக் கூடுதலான வளர்ச்சியின் அங்கமாக விமான நிலையத்தை அதுவும் சர்வதேச மயப்படுத்தப்பட்ட விமான நிலையத்தை நோக்கலாம்.

ஆனாலும் அது அதுவாக பயன்படுத்தப்படவேண்டும். அப்போதுதான் மேற்சொன்ன வார்த்தைகள் பொருத்தப்பாடானதாக இருக்கும். இவ்வாறான சந்தேகம் எழுவதற்கு இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களே காரணம். இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்கள்யாவும் அரசியலோடு ஒன்றித்திருப்பதால்தான் அவற்றின் இலக்கை அடையாமல் தோல்வியிலும், உன்னத பயன்பாடற்றனவாகவும் மாறிவிடுகின்றன.

உதாரணமாக மத்தல சர்வதேச விமான நிலையம், அம்பாந்தோட்டை செயற்கைத் துறைமுகம் என்பன அரசியல் வயப்பட்டு பெருந்தொகை நிதியை விழுங்கி எதிர்பார்க்கப்பட்ட அடைவுமட்டத்தை அடையாது போனமை அபிவிருத்திக்கும் அரசியலுக்குமிடையிலான தொடர்பின்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன.

காலத்துக்கு காலம் மாற்றமடையும் அரசுக் கட்டமைப்புக்கள் தமக்கிடையே குறைபட்டுக்கொண்டு தொடர்ச்சித்தன்மையற்ற அபிவிருத்தித் திட்டங்களையே தத்தமது காலங்களில் நிறைவேற்றிக் கொண்டு செயற்படுகின்றன.

இதன்காரணமாகவே இலங்கையின் நிலைபேண் அபிவிருத்தி கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமாறு காலத்தில்தான் அவசர அவசரமாக உருவெடுக்கிறது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம். இறப்பு நிகழ்ந்த வீட்டில் மரணச்சடங்குக்கு ஆயத்தம் செய்வதுபோல அவசர அவசரமாக இந்த அபிவிருத்தி நடைபெற்றாலும், தமிழர் பகுதியில் சர்வதேச மயப்படுத்தப்பட்ட சேவைநிலையம் ஒன்று உருவாகுவது அவசியமானது. அதனோடு தொடர்புபட்ட அபிவிருத்திகளுக்கு ஏதுவானது என்பதால் அதை வரவேற்கவேண்டும்.

யாழ்.நகர வளர்ச்சி

யாழ்ப்பாண நகரமயமாக்கல் திட்டம் நீண்டகால வளர்ச்சிக் கோட்பாடுகளை விஞ்சி- திட்டமிடப்படாத, தேவைக்கு ஏற்ப விரிவாக்ககம் செய்யமுடியாத, இடைஞ்சலான உருவாக்கமாகவே பாரக்கப்படுகின்றது. அதுவும் பிரதான பஸ் நிலையம் மருத்துவமனை என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு சிறிய நிலப்பகுதிக்குள் அனைத்தையும் உள்ளடக்குவதாக யாழ். நகரம் அமையப்பெற்றுள்ளது. இது மேலதிக வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் இடையூறாக காணப்படுகின்றது.

இவ்வாறான காரணங்களால் யாழ்ப்பாண நகரமயமாக்கமானது கட்டாயமாகப் பரவலாக்கம் செய்யப்படவேண்டியது அவசியமாகின்றது. இதற்கு பொருத்தமாக சாவகச்சேரி, நெல்லியடி, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, பலாலி போன்ற முக்கிய இடங்களின் அபிவிருத்தி எதிர்காலத்தை திட்டமிட்டு மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது.

போரும் அபிவிருத்தியும்

வடக்கு கிழக்கில் ஏற்பட்ட போர் காரணமாக இந்த பிரதேசங்கள் அபிவிருத்தி ஏதுக்களை இழந்திருந்தன. அல்லது திட்மிட்டுப் புறக்கணிக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக இருந்தவையும் அழிக்கப்பட்டன.

அழிவிலிருந்து மீளுதல் என்ற அடிப்படையில்தான் யாழ்ப்பாண மாவட்டமும் சரி, வடக்கு கிழக்கின் ஏனைய மாவட்டங்களும் சரி தற்போது பார்க்கப்படவேண்டும். ஆனாலும் அழிவுகளிலிருந்து மீட்டெடுத்தல் என்பதற்கு பதிலாக மக்ளின் சுய முயற்சிகளுக்கு தடையாக பொது அபிவிருத்தி திட்டங்கள் அரசால் நடைமுறைப்படுத்தப்படுவதால் நிலைபேண் அபிவிருத்தி வடக்கு கிழக்கு பகுதிகளில் கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறான தொடர் விமர்சனங்களுக்கு மத்தியில், போருக்கு பின்னர் புகையிரத சேவை வடபகுதிக்கு விரிவாக்கப்பட்டது. அதுவும் பெரும் அரசியல் அர்ப்பணிப்பாகவே புகழ்ந்து பேசப்பட்டது. புகையிரத சேவை விரிவாக்கத்தால் மக்களுக்கு பிரயாணம் என்பதை விட வேறு நேரடி நன்மைகளைப் பட்டியலிடமுடியாவிட்டாலும் அதனூடான மறைமுக நன்மைகளை உணர்ந்துகொள்ளமுடியும்.

இதில் நகரங்களுக்கிடையிலான வளர்ச்சி, சேவை நிலையங்கள் என்பன விரிவாக்கப்படுவதற்கு புகையிரத நிலையங்களின் உருவாக்கம் ஒரு காரணியாக அமைந்தது.

இப்படியான சிறு வளர்ச்சி தற்போது மாற்றம் பெற்றுள்ளது என்று குறிப்பிடுமளவிற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் விமர்சனங்களுக்கு அப்பால் ஒரு குறியீடாகப் பார்க்கப்படவேண்டியுள்ளது.

பலாலி விமான நிலையம்

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பலாலி பகுதியில் பிரித்தானிய படைகள் வான் வெளித்தளம் ஒன்றை அமைத்தனர். பின்னர் பிரித்தானியார் வெளியேறும்போது இலங்கை வான்போக்குவரத்துத் திணைக்களம் இதனைக் கையேற்றது. இதன்போது சிறு உள்நாட்டு விமான சேவைகள் இடம்பெற்ற பின்னர் 1976 இல் இலங்கை வான்படைப் பிரிவு ஒன்று பலாலியில் நிறுவப்பட்டது. போர்ச் சூழல் வளர வளர பலாலி விமான நிலையமும் இராணுவத் தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டுவந்தது.

இடையிடையே இந்தியாவுக்கும் கொழும்பு, இரத்மலானவுக்கும் விமான சேவைகள் இடம்பெற்றாலும், விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி அவை நிறுத்தப்பட்டு போர்த்தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாக பலாலி விமான நிலையம் இயங்கிவந்தது.

இந்த நிலையில் நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டு பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், வணிகநோக்கத்திற்காகவும் பலாலி விமான நிலையம் உள்ளிட்ட 3 விமான நிலையங்கள் சர்வதேசத் தரத்திற்கு மாற்றுவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இதன்படி பலாலி விமான நிலையம் இரண்டு கட்டங்களாகப் புனரமைக்க முன்மொழியப்பட்டது. ஏ 320, போயிங் 737, ஏ 318 மற்றும் ஏ 319 விமானங்கள் தரையிறங்கக் கூடியதாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளது.

20 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்திற்கு இந்திய அரசு 300 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

ஆரம்ப கட்டமாக சென்னை, மதுரை, புதுடில்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் வாரணாசி ஆகிய விமான நிலையங்களுக்கிடையிலான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய தேசங்களுக்கும் விமான சேவை விரிவுபடுத்துவதற்கு ஏதுவான ஒப்பந்தங்கள் கோரப்படவுள்ளன.

புலம்பெயர்ந்தோர் விருப்பு

சர்வதேசமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் வேற்று நாட்டவர் என்ற பெயருக்குச் சொந்தமான- புலம்பெயர்ந்த நாடுகளில் குடியுரிமை பெற்று அந்நாட்டுக்கு கணிசமான வரி செலுத்தி அவர்களும் தங்களது பங்காளர்கள் என்று கருதப்படக்கூடிய மக்கள் தொகையில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் பரவலாக உள்ளனர். அவர்களிலும் வடக்கு கிழக்கு போர்ச் சூழல் காரணமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பெரும்பான்மையானவர்கள். இவர்களிலும் வடபகுதியைச் சேர்ந்த - யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட மக்கள் அதிகமானவர்கள்.

இவ்வாறு புலம்பெயர்ந்து சர்வதேச நாடுகளில் வாழும் மக்கள் காலத்துக்கு காலம் தமது வசதிகளுக்கேற்ப, நாடு திரும்பவும் - நாட்டுக்கு வந்து செல்லவும் விரும்புகின்றனர்.

ஆனாலும் இலங்கைச் சூழல் அவர்களது விருப்பத்திற்கு ஒத்திசைவாக இருப்பதில்லை என்ற கருத்து அந்த மக்கள் மத்தியில் ஆவலாய் உள்ளது.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் உருவாக்கம் இந்த மனநிலையுடைய மக்களுக்கு ஆறுதல் தரும் தருணமாகவே இருக்கும்.

யாழ்ப்பாணத்துக்கு வரவேண்டும் என்றால் கட்டுநாயக்க விமானநிலையம் சென்று அங்கிருந்து தரைவழியாக யாழ்ப்பாணத்தை அடையவேண்டும்.

இவ்வாறு அடைவது என்றால் வழிப்பயணங்களிலேயே அலுத்துப்போகும். அதுமட்டுமல்லாமல் ஆசைகளோடு வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இடைநடுவே நிகழும் வாகன விபத்துக்களில் தவறிப்போவது துயரச் செய்திகளாகிவிடுகின்றன.

இந்த நெருக்கடிகளுக்கு ஆறுதலாக யாழ்ப்பாணம் விமான நிலையம் அமைவது அவர்களுக்கு மகிழ்ச்சியே!

சுற்றயல் வளர்ச்சியும் பாதிப்பும்

அத்தோடு விமான நிலையத்தை சூழவுள்ள பிரதேசங்களில் வர்த்தக மையங்கள், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலா சம்பந்தமான சேவைகள் என இதர உட்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சியடையும். இதன்மூலம் நகர மயமாக்கம், மக்கள் செறிவு உள்ளிட்ட கட்டமைப்பு மாற்றங்கள் நிகழும். இது யாழ்ப்பாண மாவட்டத்தின் பொதுவான வளர்ச்சியாக உருப்பெறும். ஆனாலும் அதற்கு இடையூறாக படைத்தரப்பும், அவர்களது பிடியிலிருக்கும் நிலப்பரப்பும் காணப்படுகின்றது.

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவத்தினரையும் அவர்கள் வசமுள்ள தனியார் காணிகளையும் அரசு ஒருபோதும் விடுவிக்கப்போவதில்லை. இதனால் பலாலியை சுற்றிய வளர்ச்சி பாதிக்கப்படும். இதில் அப்பகுதிக்கு உரிமையுடைய மக்களே நேரடியாகப் பாதிக்கப்படுவர்.

வேலைவாய்ப்பும் இனத்துவமும்

தடல்புடலாக அபிவிருத்தி காணும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு பெரும் ஆளணி வெற்றிடம் தேவைப்படும். ஆனால் அத்தகைய ஆளணி வெற்றிடத்திற்கு தற்போது கொழும்பிலிருந்தே பணியாளர்கள் கொண்டுவரப்பட்டு பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஆளணி வெற்றிடத்தின் சில பிரிவுகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டாலும், அவசரம் என்ற காரணத்தைக்காட்டி சிங்களவர்களே தற்போது பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை பின்னர் நிரந்தரமாக்கப்பட்டால் பாதிக்கப்படுவது வடபகுதியைச் சேர்ந்தவர்களே.

வயிறெரியும் மக்கள்

யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் பிரதான போக்குவரத்து வீதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை பொதுப்பயன்பாட்டுக்கு வழங்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மக்களின் 25 ஏக்கர் காணியை அபகரித்து வீதி அமைக்கப்பட்டுவருகிறது.

வலிகாமம் வடக்கு கட்டுவன் பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி ஊடான 400 மீற்றர் தூரமான பாதையை போக்குவரத்துக்குப் பயன்படுத்துவதற்கு படையினர் அனுமதி மறுத்திருக்கின்றனர்.

இதற்கு மாற்றாக ஏற்கனவே விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளில் 25 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் ஊடாக போக்குவரத்துப் பாதையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் பலாலியைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் இராணுத்தினரின் பிடியில் உள்ளன. பலாலி விமான நிலையம் இருக்கும்போது தங்கள் வாழ்க்கை ஓகோ என்று இருந்தது. 30 வருடங்கள் கழித்து எங்கள் ஊரில் புதிய பரிணாமமாக விமான நிலையம் அமைவது வரவேற்கப்பட்டாலும் எங்கள் காணிகள் இப்போதும் படைவசம் உள்ளன. இதனால் எங்களுக்கு என்ன லாபம் என்று வயிறெரிகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

இவ்வாறான வரங்களுடனும் சாபங்களுடனும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வான் வெளியில் பல எண்ணங்களுடன் நாளை விரிகிறது.

அருவி இணையத்துக்காக வீகேஎம்


Updated: 2019-10-16 13:28:08

Related Articles

Banner
Banner

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

1

more >>

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

1

more >>

Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet.
Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet.
Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis dolore te feugait nulla facilisi. Lorem ipsum dolor sit amet,

Products

Contact