Tuesday 23rd of April 2024 09:02:03 AM GMT

LANGUAGE - TAMIL
கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அவலநிலை!

கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அவலநிலை!


நாட்டில் பல்வேறு கல்வி அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் பல பாடசாலைகள் வளங்களற்ற நிலையில் இயங்குகின்றமைக்கு இந்த பாடசாலை சான்று பகிர்கின்றது.

கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இன்றைய நிலை மிகவும் மோசமாக காணப்படுகின்றது.

ஓர் பாடசாலைக்கு இருக்க வேண்டிய பல்வேறு பௌதீக வளங்களை குறித்த பாடசாலை இழந்துள்ளது. கிராமப்புற பாடசாலை என்பதால் புறக்கணிக்கப்பட்டுள்ளதா எனும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாடசாலையின் வகுப்பறைகள் தரம் பிரிக்கப்படாது காணப்படுகின்றன. தரப்பாள் கொண்டு குறித்த வகுப்பறைகள் தனித்தனியே பிரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்றக்கூடியவகையில் அவர்களின் இருக்கைகள், தளபாடங்கள் கற்றலிற்கு உகந்ததாகவோ, சுதந்திரமான கல்விக்கான வசதியாகவோ காணப்படவில்லை.

இதேபோன்றுதான் குறித்த பாடசாலையில் காணப்படும் நூலகமும் காணப்படுகின்றது. மழையினால் நீர் கசிவு ஏற்பட்டுள்ள அதேவேளை நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள், தளபாடங்கள் எவையும் இல்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். வாசிப்பு திறனை மேம்படுத்தவதற்கான எவ்வித வசதிகளும் இங்கு காணப்படவில்லை. நூலகத்தின் கதையை அங்கு காணப்படும் நூலகத்தின் மேசை கூறுகின்றது. உடைந்துபோன மேசையை பொருத்தி பயன்படுத்தவேண்டிய நிலை இங்கு காணப்படுகின்றது. தமது பாடசாலை கற்றலிற்கான வசதிகள் நூலகம், அழகியற்கூடம், கணணிஅறை உள்ளிட்ட எவையும் இல்லை என பாடசாலை மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த பாடசாலையில் விளையாட்டு துறையில் சாதிக்கக்கூடிய மாணவர்கள் காணப்படுகின்ற போதிலும் அவர்களால் சாதனை நிலைநாட்ட முடியவில்லை. உடற்கல்வி ஆசிரியர் பாடசாலையில் இல்லாத அதேவேளை விளையாட்டு மைதானமும் சீரின்றி காணப்படுககின்றது. வலயம் மற்றும் மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவி ஒருவர் மேற்கொண்டு முன்னேறுவதற்கு பாடசாலை பௌதீக வளமே கை கொடுக்கவில்லை என தெரிவிக்கின்றார். இவ்விடயத்தினை அதிபரும் பாடசாலை பௌதீக வள பற்றாக்குறை தொடர்பில் உறுதிபட தெரிவிக்கின்றார். இவ்வாறு பல்வேறு துறைகளில் சாதிக்கக்கூடிய மாணவர்கள் இவ்வாறான வள பற்றாக்குறை காரணமாக மளுங்கடிக்கப்படுகின்றனர் என்பதே அப்பகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.

இவற்றுக்கு அப்பால், குறித்த கிராமப்புற பாடசாலையில் கல்வி கற்பிக்கும் அதிபர், ஆசிரியர்களும் சாவால்களிற்கு முகம் கொடுக்க தவறவில்லை. குறித்த பாடசாலையின் அதிபர் விடுதியே இது. இற்றைக்கு 55 வருடங்கள் பழமைவாய்ந்த கட்டடம் அதிபர் விடுதி எவ்வித அடிப்படை வசதிகளும் காணப்படவில்லை. குறித்த கட்டடம் அதிபர் தங்குவதற்காக அமைக்கப்பட்டது. இன்று இவ்வாறு சேதமடைந்து காணப்படும் கட்டடத்தில்தான் ஆசிரியர்கள் தங்கி பாடசாலை கல்வியை மாணவர்களிற்கு புகட்டுகின்றனர். குறித்த பாடசாலைக்கான ஆசிரியர் விடுதிகள் கூட அமைத்துக் கொடுக்கப்படவில்லை. பெண் ஆசிரியர்கள் வாடகை இடங்களில் தங்கியும், நாளாந்தம் வீடுகளிற்கு சென்று வரவேண்டிய நிலையிலும் இன்றைய நிலை காணப்படுகின்றது.

குறித்த கட்டடத்திலிருந்து ஆசிரியர் ஒருவர் பாம்புக்கடிக்கு இலக்காகிய சம்பவமும் பதிவாகியுள்ளதாக ஆசிரியர் ஒருவர் தெரிவிக்கின்றார். மழை காரணமாக குறித்த கட்டடத்தில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்றது. இடிந்து விழும் அபாயம் மற்றும் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் பல்வேறு அசெளகரியங்களை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்கின்றனர்.

இதேவேளை, குறித்த பாடசாலையின் பௌதீக வளங்கள் தொடர்பில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் விவசாய பெண்கள் குழுக்களால் விடயங்கள் ஆராயப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுவரை பௌதீக வள பற்றாக்குறைகளை தீர்க்க எவரும் முன்வரவில்லை என்பது பாடசாலை சமூகத்தினரின் கருத்தாகின்றது. பாடசாலையில் காணப்படும் பௌதீக வளங்களை சீர் செய்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது பாடசாலை சமூகத்தினரின் எதிர்பார்ப்பாக அமைகின்றது. இது தொடர்பில் பாடசாலை அதிபரும், பழைய மாணவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலைக்கான அதிபர் ஆசிரியர் தங்குமிட வசதிகள் மற்றும் வகுப்பறை வசதி, ஆசிரியர் பற்றாக்குறை, விஞ்ஞானகூடம், நூலகம், அழகியற்கூடம், கணணிகூடம், விளையாட்டு மைதானம் ஒன்றுகூடல் மண்டபம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை முழுமையாக முன்னெடுக்க முடியும் என பாடசாலை சமூகம் கோரிக்கை முன்வைக்கின்றது.

குறித்த பாடசாலை தொடர்பில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு பௌதீக வள பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு முன்வர வேண்டும் என அப்பிரதேச மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர். நாட்டில் ஏனைய பாடசாலைகள் போன்று பாடசாலைக்கான அனைத்து பௌதீக வளங்களையும் பெற்றுக்கொள்ள நினைக்கும் அப்பிரதேச மக்களின் எதிர்பார்ப்பிற்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செவி சாய்ப்பாளர்களா?

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: உள்ளூர, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE