Thursday 28th of March 2024 05:30:27 PM GMT

LANGUAGE - TAMIL
இலக்குவைக்கப்படும் தமிழர்கள் - தடுமாறும் தலைமைகள்!!
இலக்குவைக்கப்படும் தமிழர்கள் - தடுமாறும் தலைமைகள்!!

இலக்குவைக்கப்படும் தமிழர்கள் - தடுமாறும் தலைமைகள்!!


தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளாகிவிட வேண்டும் என்பது சிங்கள பேரின தலைவர்களின், 'அரசியல் ரீதியிலான விருப்பம்'. அது சாதாரண விருப்பம் அல்ல. நீண்ட நாளைய தளராத வேட்கை. அரசியல் வெறி என்றுகூடச் சொல்லலாம்.

இந்த வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்கு அந்தத் தலைவர்கள் தமது அரசியல் கட்சிகளின் ஊடாக நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான அரசியல் கொள்கைகளைக் கடைப்பிடிக்கவில்லை. சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்தி அதன் ஊடாக சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்களின் ஆதரவைப் பெற அவர்கள் முயற்சித்து வருகின்றார்கள்.

பேரினவாதம் என்பதும், தமிழ் மக்களின் அரசியல் நலன்கள், உரிமைகள் என்பவையும் ஒன்றுக்கொன்று முரணானவை. பேரினவாதம் அடக்குமுறை சார்ந்த மேலாண்மை கொள்கையைக் கொண்டது. தமிழ் மக்களின் அரசியல் உரிமை என்பது சமநிலை அரசியல் இருப்பை அடிப்படையாகக் கொண்டது.

பேரினவாத அரசியல் போக்கில் சமநிலை அரசியல் இருப்பை அங்கீகரிக்க முடியாது. இதனால் இந்த இரண்டு நிலைப்பாடுகளும் ஒருபோதும் இணைய முடியாதவை. இந்த நிலைப்பாடுகளின் மூலம் ஒரு தேசிய ஒன்றிணைவை அடைவது என்பது மணலைக் கயிறாகத் திரிக்கின்ற கைங்கரியத்துக்கு ஒப்பானது.

ஓன்று மேலாதிக்கம் கொண்டது. மற்றையது அதற்கு அடிமைப்பட்டதாக இரண்டாந்தர நிலையில் தங்கி இருப்பது. இத்தகைய பிளவுபட்ட ஓர் அரசியல் கொள்கைப் போக்கில் பயணம் செய்யும் பேரின அரசியல் தலைவர்களே தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளில் நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளின் ஊடாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பொருளாதார எழுச்சியும் குடியுரிமைச் சட்டமும்

ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமே பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்களின் பிரதான அரசியல் கட்சிகளாகும். இந்த நாட்டின் தேசிய அரசியல் கட்சிகளாகவும் அவைகளே கருதப்படுகின்றன. ஆனால் உண்மையில் அந்தக் கட்சிகள் இரண்டுமே தேசிய கட்சிகளா என்பது சிந்தனைக்குரியது. கேள்விக்குரியது.

ஏனெனில் அந்த இரண்டு கட்சிகளுமே பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்களின் மொழி, பௌத்தமதம் மற்றும் அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் நலன்களிலேயே அதிக நாட்டம் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை இனத்தவருக்கே முதலிடம் என்ற நடைமுறைச் செயற்பாட்டைக் கடைப்பிடிப்பனவாக உள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியை உருவாக்கிய இலங்கையின் முதலாவது பிரதமராகிய டி.எஸ்.சேனநாயக்க தேசபிதாவாகக் கருதப்பட்டார். இருப்பினும்;, விவசாயத் துறை சார்ந்த அவருடைய வேலைத்திட்டங்கள் அவருக்குப் பெருமை சேர்த்திருந்தன. அவருடைய காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் எழுச்சி பெற்றிருந்தது. இதனால் சிங்கள மக்களினதும், முஸ்லிம்களில் ஒருசாராரினதும் பெரும் மதிப்பை அவர் பெற்றிருந்தார்.

ஆயினும், அந்த விவசாயத்துறை சார்ந்த செயற்பாட்டின் மரபுவழி முறைகளுக்கு மாறான போக்கும், அந்த வேலைத்திட்டங்களின் உள்நோக்கமும், தமிழ் மக்களின் மதிப்பைப் பெறுவதற்கு உதவவில்லை.

அத்துடன், 1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கைக் குடியுரிமைச் சட்டம் மற்றும் 1949 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய – பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டம் மற்றும் தேர்தல்கள் திருத்தச் சட்டம் என்பவற்றினால் தமிழர்களுக்கு குறிப்பாக ஏழு லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினராகிய மலையக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும் தமிழ்த்தரப்பினர் அவரை தேச பிதாவாகக் கருதுவதில் பின்னடிக்கச் செய்திருந்தது.

சிங்கள மகா சபை என்ற அமைப்பின் ஊடாக அவருடன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்திருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் சில எதிர்பார்ப்புகள் நிறைவேறாத காரணத்தினால் ஐக்கிய தேசிய கட்சியைக் கைவிட்டு, அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் சிங்கள மக்களின் பிரதான அரசியல் கட்சிகளாகத் திகழ்ந்தன.

இடதுசாரி கட்சிகளும் சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த போதிலும், பிரதான அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியல் வலிமையை இந்த இரண்டு கட்சிகளே பெற்றிருந்தன.

சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சியும் பொதுஜன பெரமுனவின் எழுச்சியும்

ஆயினும் முப்பது வருடங்களாக நீடித்திருந்த ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து வெற்றி வீரனாக முகிழ்த்திருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியி;ன் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். கட்சியின் தலைமைப் பதவியையும் அவர் இழந்து சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக ஒதுக்கப்பட்டார்.

அந்தத் தோல்வியைத் தொடர்ந்து, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கமைய கட்சியின் தலைமைப் பதவியும் அவர் வசமாகியது. ஆந்த ஆண்டின் பொதுத் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து அமைத்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதிர்ச்சியற்ற அரசியல் போக்கினால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சிதறுண்டு போனது.

அரசியல் ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்திருந்த மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகார பலமுள்ள தலைவராக அரசியலில் மீள்பிரவேசம் செய்வதற்காக இனவாத பிரசாரத்தை முன்னெடுத்து, பௌத்த பிக்குகளின் உதவியோடு பொதுஜன பெரமுன என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கி தனது உடன்பிறப்பகிய கோத்தாபாய ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக்கி தேர்தல் களத்தைச் சூடுபிடிக்கச் செய்துள்ளார்.

மறுபுறம் வலிமையான இராஜதந்திரப் போக்கின்மை காரணமாக ஐக்கிய தேசிய கட்சியும் அதன் தலைவரும் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு, அதன் உபதலைவராகிய சஜித் பிரேமதாசாவை வேட்பாளராகக் களத்தில் இறக்கியுள்ளது. அத்துடன் நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாகக் கருதப்படுகின்ற ஜேவிபி அதன் தலைவர் அனுர குமார திசாநாயக்காவை வேட்பாளராக்கியுள்ளது.

தேர்தலின் பிரதான வேட்பாளர்களில் ஒருவராகிய கோத்தாபாய ராஜபக்ச தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவின் திட்டங்களையும், அரசியல் விருப்பங்களையும் நிறைவேற்றுகின்ற அரசியல் முகவராகத் திகழ்கின்றார். அவருடைய கடந்த கால அரசியல் செயற்பாடுகளும் பேரின தேசியத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா அரச தலைவராகிய ஜனாதிபதி பதவியைத் திறம்பட கொண்டு நடத்தக் கூடிய அரசியல் ஆளுமையைக் கடந்த கால அரசியலில் வெளிப்படுத்தாத ஒருவராகவே தோற்றம் கொண்டுள்ளார்.

அரசியல் கொள்கைகளும், அதன் அரசியல் போக்கும் சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழ் மக்கள் மத்தியிலும் இது வரையிலும் அதிக அளவில் செல்வாக்கு பெறாத ஒரு நிலையிலேயே ஜேவிபியும் இந்தத் தேர்தலில் களம் இறங்கியுள்ளது.

பிரசாரப் பணியில் பங்கேற்றுள்ள முன்னாள் பிரபலங்கள் இந்த மூன்று வேட்பாளர்களுமே மக்கள் நேரடியாக நம்பிக்கை வைத்து வாக்களிக்கத் தக்கவர்களாகத் தங்களை நிரூபிக்கத் தவறியவர்களாகவே தமிழர் தரப்பினால் நோக்கப்படுகின்றனர். அது மட்டுமல்லாமல் பெரும்பான்மையான தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகத் திகழ்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றிருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியும் அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாமல் அவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கிவிட்டது.

இத்தகைய அரசியல் பின்புலத்தில், தமிழ்த்தரப்பில் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து தங்களுக்கு சாதகமான முறையில் இந்தத் தேர்தலைக் கையாள்வதற்காக 13 கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றன. இவற்றை நிறைவேற்றுவதாக நம்பிக்கைக்கு உரிய வகையில் உறுதியளிக்கின்ற வேட்பாளருக்கே தேர்தலில் ஆதரவளிப்பது பற்றி சிந்திக்க முடியும் என்ற தீர்;மானத்தை மேற்கொண்டிருக்கின்றன.

இந்தத் தேர்தலில் தமிழ் மக்களை வழிநடத்துவதற்காக் ஐந்து தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ள இந்த நகர்வு சிங்கள அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. வழமையாகத் தேர்தல் காலத்தில் அளிக்கின்ற நிறைவேற்றாத வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்டு இந்தத் தேர்தலிலும் தமிழ் மக்கள் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு தமிழர்தரப்பின் உறுதியான தேர்தல்கால அரசியல் நிலைப்பாடு அதிர்ச்சியளித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

இருப்பினும் அத்தகைய இறுக்கமான ஓர் அரசியல் நிலைப்பாட்டைத் தகர்த்து எப்படியாவது சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை அள்ளிக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமான தந்திரோபாயச் செயற்பாடுகளை சிங்கள அரசியல் தலைவர்கள் முன்னெடுத்துள்ளார்கள். தமிழர் தரப்பில் தங்கள் பக்கம் இழுக்கக் கூடியவர்களை இழுத்தும், அவர்களை அணுகியும் தமக்கான ஆதரவு தளத்தை அவர்கள் உருவாக்கி வருகின்றார்கள்.

இந்த வகையில் பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவாக வடக்கில் தேர்தல் பணிகளுக்கான கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டு, பிரசார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழ் அரசியல் கட்சிகளின் வழிநடத்தலில் இருந்து பிரித்தெடுத்து, தமிழ் மக்களைத் தங்களின் பிரசார வலைக்குள் வீழ்த்துவதற்காகப் பல்வேறு கருத்துக்களைப் பரப்புரை செய்வதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மிகப் பலமான செயல் வல்லமை கொண்டவராகத் திகழ்ந்த கோத்தாபாய ராஜபக்சவுக்கு ஆதரவாக முன்னாள் வடமாகாண ஆளுனர்களாகிய சந்திரசிறி, ரெஜினோல்ட் குரே மற்றும் முன்னாள் வடமாகாண இராணுவத் தளபதியாக இருந்த ஹத்துருசிங்க உட்பட்டவர்கள், வடக்கில் பிரசாரப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

முதலுக்கே மோசமாகும்

சிங்கள மக்கள் மத்தியில் இனவாத பிரசாரத்தின் மூலம் வாக்கு வேட்டை நடத்துவதே பேரின அரசியல் கட்சிகளின் மரபு வழி தேர்தல் பரப்புரைச் செயற்பாடு. இந்தப் பிரசாரத்தில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் முழுமையாக மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். இந்த கைங்கரியத்தில் பௌத்த மதபீடங்களும், அவற்றின் உயர் மதத் தலைவர்களும் முழுமையாக ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் இனவாத பிரசாரமே அவர்களின் தேர்தல் கால தெய்வ வாக்குறுதி. இந்த அரசியல் சேற்றில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கு எந்தவொரு மீட்பரும் இன்னும் முயற்சிக்கவில்லை. இதுவே தென்னிலங்கையின் அரசியல் யதார்த்தம்.

தமிழ் மக்களின் வாக்குகளை வென்றெடுக்கும் நோக்கில், இந்த யதார்த்தத்துக்கு மாறாக – தமிழர்கள் அரசியல் ரீதியாக பேரின மக்களின் எதிரிகள் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி, சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மென்போக்கை அல்லது இணக்கப்போக்கைப் பிரதிபலித்தால், அது உள்ளதுக்கே மோசம் என்ற நிலைமையே உருவாக்கிவிடும்.

அந்த மென்போக்கையும் தமிழர்களுடனான இணக்கப்பாட்டையும் சிங்கள வாக்காளர்களால் சீரணிக்க முடியாது. அவர்களின் அவநம்பிக்கைக்கே ஆளாக நேரிடும். அவர்களின் வாக்குகளை தேர்தலில் வெல்வது இயலாத காரியமாகிவிடும்.

ஜனநாயக நாடு என்ற வகையில் அனைத்து மக்களினதும் நலன்களைப் பேணுவதற்காக பன்முகத்தன்மை கொண்ட நிலைப்பாட்டை முன்னெடுக்க முடியாத நிலைமைக்கே சிங்கள அரசியல் தலைவர்கள் தங்களை ஆளாக்கிக் கொண்டுள்ளார்கள்.

இந்தப் பின்புலத்திலேயே ஐந்து தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகளை ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்குப் பிரதான வேட்பாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று கருதுவதற்கு இடமுண்டு.

அதேவேளை, கடும்போக்கையும் ஒற்றையாட்சி முறையையும் இறுக்கமாகக் கைக்கொண்டுள்ள ராஜபக்சக்களின் முகவராகக் களமிறங்கியுள்ள கோத்தபாய ராஜபக்ச தமிழ்த்தரப்புடன் பேச முடியாது என்ற நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள நிலையில் ஏனைய வேட்பாளர்கள் அதனை மிஞ்சிச் செயற்பட முடியாத இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டிருகின்றார்கள்.

கோத்தபாயாவின் நிலைப்பாட்டிற்கு முரணாக தமிழ்த் தரப்பின் நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினால் தேர்தல் பரப்புரை களத்தில் அவர்களுக்கு பாதகமான ஒரு நிலைமை உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ் மக்கள் சார்பில் ஓரு மென்போக்கைக் கடைப்பிடிப்பது சிங்கள மக்களையும் சிங்கள பௌத்த தேசியத்தையும் காட்டிக்கொடுத்தவர்களாக அவர்கள் சிங்கள வாக்காளர்கள் மத்தியில் உருவகப்படுத்தப்படுவார்கள்.

மாற்றங்கள் நிகழுமா.........?

இத்தகைய ஒரு நிலைமையிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, தமிழ் மக்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கடுமையான அரசியல் நிலைப்பாட்டுச் சூழலை தமிழ்த்தரப்பு எவ்வாறு கையாளப் போகின்றது என்பது தெரியவில்லை.

பிரதான வேட்பாளர்களுடனும் அவர்கள் சார்ந்த தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தியதன் பின்பே தேர்தல் தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்பது தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு. ஆனால் தமிழ்த்தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்தப்படமாட்டாது. விடுதலைப்புலிகளின் கொள்கைகளையே அவர்கள் நிபந்தனைகளாக முன்வைத்துள்ளார்கள். அவற்றை ஒருபோதும் நாங்கள் ஏற்கமாட்டோம் என்பது வேட்பாளர்களினதும் பேரினவாதிகளினதும் பிரகடனமாக வெளிப்பட்டுள்ளது.

அதேநேரம், தமிழ் அரசியல் தலைவர்கள் தமது சொந்த அரசியல் நலன்களுக்காகவே நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்கள். அவர்களுடன் பேசப்போவதில்லை. தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினைகள் எங்களுக்குத் தெரியும். நாங்கள் தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசி அவற்றுக்குத் தீர்வு காண்போம் என்ற நிலைப்பாட்டையும் அவர்கள் தேர்தல் பரப்புரைகளில் வெளியிட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகளைப் புறந்தள்ளி, தமிழ் மக்களை நேரடியாகச் சென்றடைகின்ற அரசியல் உத்தியையே பேரின அரசியல்வாதிகள் கைக்கொண்டிருக்கின்றார்கள். ஆயுதப் போராட்டம் உருவாகுவதற்கு முன்னைய காலத்தில் இருந்தே இந்த அரசியல் தந்திரம் கையாளப்பட்டு வருகின்றது.

யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் இந்த அரசியல் தந்திரோபாயத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மிகத் தீவிரமாகக் கடைப்பிடித்திருந்தார். இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அவருடைய தந்திரோபாயத்தைத் தமிழ் மக்கள் தோற்கடித்து அவரை அரியாசனத்தில் இருந்து அகற்றியிருந்தனர்.

ஆனால் இப்போது நிலைமை வேறு. சிக்கல்கள் நிறைந்ததோர் அரசியல் சூழலாக ஜனாதிபதி தேர்தல் களம் உருவெடுத்துள்ளது.

தமிழ் மக்களின் நலன்களக்கும் அபிலாசைகளுக்கும் இடமளிக்காமல் அவர்களுடைய வாக்குகளை வென்றெடுக்க வேண்டியது வேட்பாளர்களின் தேவை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கடும்போக்கைக் கொண்டுள்ள தென்னிலங்கை அரசியல் சக்திகளை வழிக்குக் கொண்டு வருவது எப்படி என்பது தெரியாத ஒரு நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் தடுமாறி நிற்கின்றன.

தமிழ் அரசியல் தலைமைகள் இக்கட்டான அரசியல் நிலைமைகளைக் கையாள்கின்ற ஆளுமையைக் கொண்டிருக்கவில்லை என்பது ஒருபக்கம் இருக்க மறுபக்கத்தில் ஏமாற்று அரசியல் நடத்துகின்ற பேரின அரசியல் தலைமைகளைக் கொண்டுள்ள கட்சிகளின் வேட்பாளர்களில் யாருக்கு வாக்களிப்பது என்பது தெரியாமல் தமிழ் மக்கள் திகைத்து நிற்கின்றார்கள்.

இத்தகைய சிக்கல் நிறைந்த சூழலில் தேர்தல் களத்தில் புதிய மாற்றங்கள் நிகழுமா அல்லது சிக்கல்களுக்கு மத்தியில்தான் வாக்களிப்பு இடம்பெறுமா என்பது தெரியவில்லை.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE