Thursday 18th of April 2024 11:48:08 AM GMT

LANGUAGE - TAMIL
யாருக்கு வாக்கு? - தமிழர்களைத் துரத்தும் குழப்பம்!
யாருக்கு வாக்கு? - தமிழர்களைத் துரத்தும் குழப்பம்!

யாருக்கு வாக்கு? - தமிழர்களைத் துரத்தும் குழப்பம்!


தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஏறெடுத்தும் பார்க்காத வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்கப் போகின்றார்கள் என்பது தேர்தல் அரங்கில் முக்கிய கேள்வியாக எழுந்திருக்கின்றது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களது பூர்வீகப் பிரதேசங்களில் யுத்தத்தினால் சீரழிந்துபோன தமது வாழ்க்கையை மீளவும் கட்டமைத்துக் கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.

வடக்கில் மாத்திரம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளுரிலேயே இடம்பெயர்ந்திருந்தார்கள். இவர்களுக்கு அபயமளித்திருந்த செட்டிகுளம் மனிக்பாம் நலன்புரி நிலையம் என்று அரசாங்கத்தினால் அழைக்கப்பட்ட அகதி முகாமில் இருந்து வெளியில் சென்ற குடும்பங்கள் அனைத்துமே இன்னும் அவற்றின் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றப்படவில்லை.

அவர்களுடைய காணிகளை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றார்கள். பிச்சுப் பிடுங்கல்களுக்கு மத்தியில் கிள்ளித் தந்தது போன்று ஆங்காங்கே அவ்வப்போது காணிகளை விடுவிக்கின்ற நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் அரசுகளினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்த நடவடிக்கைகள் முற்றுப் பெறாத காரணத்தினாலேயே இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் இன்னும் முற்றுப் பெறாமல் உள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் தமது காணிகளும் கிராமங்களும் தங்களிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்தப் போராட்டங்கள் அரசாங்கத்தின் கவனத்தை உரிய முறையில் ஈர்க்கவில்லை. உரிய அழுத்தத்தை ஆட்சியாளர்களுக்குக் கொடுக்கவுமில்லை. காணி விடுவிப்பு பிரச்சினையை அரசாங்கம் தீவிரமாகக் கணக்கில் எடுக்காத போக்கிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்று தாயகம் திரும்பியுள்ள குடும்பங்கள் பல வருடங்களின் பின்னர் தமது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற முடியாதவாறு வனபரிபாலன திணைக்களம் அவர்களுடைய காணிகளுக்கு உரிமை கோரி அவர்களைத் தடுத்து வருகின்றது. இதனால் தாயகம் திரும்பியுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களும் இக்கட்டான நிலைமைக்கு ஆளாகி இருக்கின்றன.

இடம்பெயர்ந்த குடும்பங்களின்; நிலைமை இவ்வாறிருக்க, ஏற்கனவே மீள்குடியேறியுள்ள மக்கள் குடியிருக்கும் பிரதேசங்களில் தொல் பொருள் திணைக்களத்தினர் இந்து ஆலயங்களில் பௌத்த தொல்பொருள் சின்னங்கள் இருப்பதாகக் கூறி அவற்றை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயம், திகோணமலை கன்னியா பிள்ளையார் ஆலயம் போன்றவற்றில் இராணுவத்தினரால், அவர்களுடைய ஆன்மீகத் தேவைக்கென அழைத்துவரப்பட்ட பௌத்த பிக்குகள் அந்த இடங்களை ஆக்கிரமித்து புத்தர் சிலையை வைப்பதும் தொடர்ந்து பௌத்த விகாரைகளை அமைப்பதுமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் பௌத்த மதத்தைச் சேர்ந்த எவரும் இல்லாத இந்துக்களே முழுமையாக வசிக்கின்ற இடங்களில் பௌத்த மதம் ஆக்கிரமிக்கின்றது. இந்து ஆலயங்களின் இடங்கள் பகிரங்கமாகக் கபளீகரம் செய்யப்படுகின்றது.

இதையும்விட வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து, யுத்த மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்ததனால் காடாகிக் கிடக்கின்ற இடங்களில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றும் நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளுக்கு கமநல சேவைத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், வனபரிபாலன திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் அனுசரணையாகச் செயற்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள் மற்றும் தென்னிலங்கையில் இருந்து குடியேற்றத்திற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள சிங்கள மக்களுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பளிக்கின்றனர்.

குறிப்பிட்ட அரச திணைக்களங்களின் உதவியில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களினால் வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் நூறு வீதமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இனப்பரம்பல் நிலை தலைகீழாக மாற்றமடைய நேரிட்டுள்ளது.

பௌத்த மத ஆக்கிரமிப்பு காரணமாகவே நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்குளத்தருகில் இந்து மத பாரம்பரிய கலாசார முறைகளுக்கு முரணான வகையில் அங்கு பௌத்த விகாரையொன்றைக் கட்டியெழுப்பிய பௌத்த பிக்கு மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருடைய உடல் அந்த ஆலயத்தின் தீர்த்தக்கரையோரத்தில் எரியூட்டப்பட்ட சம்பவம் நடந்தேறியது.

இந்தச் சம்பவம் மிகத் தீவிரமான மத ஆக்கிரமிப்பு விவகாரமாக மாறி அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. இதேபோன்று கன்னியா பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அங்கு பௌத்த விகாரையைக் கட்டியெழுப்புவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு அந்தப் பிரதேசத்து இந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்து மத குரு ஒருவரின் முகத்தில் எச்சில் தேநீர் விசிறியடித்து அட்டகாசம் செய்த சம்பவம் இடம்பெற்றது. இதனால் அந்த இடத்திலும் பெரும் பதட்டமான ஒரு சூழ்நிலை உருவாகி இருந்தது.

பௌத்த மத ஆக்கிரமிப்பும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றமும் தமிழ்;ப் பிரதேசங்களில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து, அவர்களை நிர்க்கதியாக்கி எதிர்காலத்தில் அவர்களின் பாரம்பரிய அடையாளங்களை இல்லாமல் செய்கின்ற ஓர்;; இன அழிப்பு நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இத்தகைய நிலைமைகளின் பின்னணியிலேயே ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான ஆயுத்தங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களின் நலன்களும் நாட்டின் பொதுவான அபிவிருத்தி தொடர்பிலான விடயங்களுமே வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் பற்றியோ அல்லது நாட்டில் ஏழு தசாப்தங்களுக்கு மேலாகப் புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்கு ஒர் அரசியல் தீர்வு காண்பது பற்றியோ வேட்பாளர்களினால் எந்தவிதமான கவனமும் செலுத்தப்படவில்லை.

இந்தத் தேர்தலில் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு வழிசெய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இந்தத் தேர்தலில் முன்னிலை வகிக்கின்ற வேட்பாளர்கள் அத்தகைய பிரச்சினைகள் இருப்பதை அறியாதவர்களைப் போலவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும், அந்தக் கோரிக்கைகள் தமிழ் மக்களுடையவை அல்ல. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க்கட்சிகளின் அரசியல் நலன்களுக்காக இனவாதத்தைத் தூண்டி இலாபம் அடைவதற்காக முன்வைக்கப்பட்ட விடயங்கள் என்றே நாட்டின் தென்பகுதியில் பேரினவாதிகள் பிரசாரங்களை முன்னெடுத்திருக்கின்றார்கள்.

இந்தக்; கோரிக்கைகள் தனிநாடு கோரி யுத்தம் நடத்திய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் கோரிக்கையைவிட ஆபத்தானவை என சுட்டிக்காட்டி, சிங்கள மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்தத் தேர்தலில் முன்னணியில் உள்ள பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியகட்சி மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகளின் மூன்று வேட்பாளர்களும்கூட இந்தக் கோரிக்கைகள் உண்மையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளே என்றும், அவற்றுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் நியாயமான ஓர் எண்ணப்பாட்டை - அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.

மாறாக அவைகள் அரசியல் இலாப நோக்கில் தமிழ் அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் என்ற பொதுவான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி இருக்கின்றன. ஆனால் ஜேவிபி மாத்திரமே வடக்கு கிழக்கு இணைப்பு என்ற கோட்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற கருத்தை முன்வைத்து ஏனைய கோரிக்கைகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுடன் தொடர்புடையவை என்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்றது.

ஏனைய இரண்டு வேட்பாளர்களும் அந்தக் கோரிக்கைகளை நிராகரித்த போக்கையே வெளிப்படுத்தி உள்ளனர். ஆனாலும் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் முக்கிய பிரதேசங்களில் தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெறுவதற்கான தேர்தல் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பரப்புரைகளில் அந்த வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் திவிரமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

தங்களுடைய பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கவோ அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்றோ கொள்கையளவில்கூட ஏற்றுக்கொள்ளாத வேட்பாளர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வி தமிழ் மக்களுடைய மனங்களில் விசுவரூபம் எடுத்திருக்கின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், இந்தத் தேர்தலில் எவருக்கு வாக்களித்தாலும் பழிச்சொல்லைக் கேட்க வேண்டிய நிலைமைக்கே ஆளாவார்கள். இதற்கிசைவான ஒரு தேர்தல் சூழ்நிலையே நிலவுகின்றது.

இந்தத் தேரதலில் அளிக்கப்படுகின்ற மொத்த வாக்குகளில் 50 வீதத்துக்கும் அதிகமானவற்றைப் பெறுபவரே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். நாட்டின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 75 – 80 வீதமானவர்களாகத் திகழ்கின்ற சிங்கள மக்களின் வாக்குகளே தேர்தலில் வெற்றி பெறப் போகின்றவருக்கு ஆதாரமானவையாக அமையப் போகின்றன.

ஆனாலும் மூன்று வேட்பாளர்களுக்கும் சிங்கள மக்களே சிறுபான்மை இன மக்களிலும் பார்க்க, பெருமளவில் வாக்களிக்க வேண்டியவர்களாக உள்ளனர். இந்த நிலையில் 50 வீதத்துக்கும் அதிகமான பெரும்பான்மை என்ற நிலையை எட்டுவதற்கு சிறுபான்மை இன மக்களின் வாக்குகளே உதிரி நிலையில் உதவியாக அமைய உள்ளன.

சில வேளைகளில் சிங்கள மக்களின் வாக்களிப்பு வீதம் அதிக அளவில் இருக்குமேயானால், 50 வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்று வெற்றிவாகை சூடிவிட முடியும். ஆனால், அவர்களின் வாக்களிப்பு சாதாரணமாகவோ அல்லது குறைவாகவோ அமையுமானால் வெற்றி பெறுகின்றவருக்கு சிறுபான்மை இன மக்களின் வாக்குகளே கைகொடுப்பதாக அமைந்துவிடும்.

இத்தகைய ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் அளிக்கின்ற வாக்குகள் வெற்றி பெறுபவருக்கு சாதகமாக அமைந்துவிட்டால், தோல்வியுற்றவரை அவர்கள் புறந்தள்ளிவிட்டார்கள் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் மீது பழி சுமத்தப்படும்.

அதேபோன்று தமிழ் மக்கள் வாக்களித்த வேட்பாளர் தோல்வியடைந்தால், தோல்வியடைந்த வேட்பாளருக்கு வாக்களித்து தமது வாக்குகளை வீணடித்துவிட்டதாகவும், வெற்றியடைந்த வேட்பாளரைப் புறக்கணித்து விட்டார்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகவும் நேரிடும்.

ஆனால் இரண்டு நிலைகளிலுமே தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக நன்மைகள் எதுவும் கிடைக்கப் போவதில்லை. ஏனெனில் வெற்றிவாய்ப்புக்கு உரிய முக்கிய வேட்பாளர்கள் இருவருமே தங்களுடைய தேர்தல் பிரசாரங்களில் இதுவரையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளவுமில்லை. அவற்றுக்குத் தீர்வு காண்பதாக உறுதியளிக்கவும் இல்லை.

பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும் ஜேவிபியின் தேர்தல் அறிக்கையிலும் இந்த விடயங்கள் உள்ளடக்கப்படவே இல்லை. இந்த இரண்டு கட்சிகளும் தமிழ் மக்களின் பிரச்சினையைக் கவனத்தில் எடுக்காத காரணத்தினால், ஐக்கிய தேசிய கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் இந்த விடயத்தைக் குறிப்பிடமாட்டாது என்றே நம்பலாம்.

எனவே, வெற்றி பெறுகின்றவர் யாராக இருந்தாலும் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தல் பரப்புரைகளின்போதும் நாங்கள் உறுதியளிக்காத விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதேவேளை தேர்தல் தொடர்பிலான எங்களுடைய ஏற்றுத்தான் தமிழ் மக்கள் உட்பட நாட்டு மக்கள் வெற்றிபெற்றவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்திருக்கின்றார் என்று நியாயம் கற்பிக்க முடியும்.

இத்தகைய ஒரு நிலையில் உள்ள ஜனாதிபதி தேர்தலில்தான் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக ஐந்து தமிழ்க் கட்சிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஒன்றுகூடி நிலைமைகள் குறித்து விவாதித்து 13 கோர்pக்கைகளை முன்வைத்திருக்கின்றன.

இந்தக் கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்கள் நிராகரித்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து ஐந்து கடசிகளும் தீர்க்கமான முடிவு எதனையும் எடுக்கவில்லை அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் மக்களை வழிநடத்துவது தாமதமாகிக் கொண்டிருக்கின்றது.

ஐந்து தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்கின்ற தீர்மானத்தை ஏற்று தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் வாக்களிப்பார்கள் என்பதற்கான உறுதியான அரசியல் நிலைமையும் காணப்படவில்லை.

தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள அரசியல் கட்சிகளும், அவர்களுடைய வேட்பாளர்களும், தமிழ் மக்களையும் அவர்களுடைய அரசியல் தலைவர்களையும் இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய தரப்பாகக் கொண்டு செயற்படவில்லை. தமிழர் தரப்பை ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை என்றுகூட கூறலாம்.

இதனால் அரசியல் அனாதைகளைப் போன்றதொரு நிலையிலேயே தமிழ் மக்கள் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் அரசியல் ரீதியான காரணங்களுக்காக விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன தங்களுடைய வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்காக வாக்களிக்க வேண்டியவர்களாகவே இருக்கின்றார்கள்.

வாக்களிப்பின் மூலம் அவர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும். வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்தோ அல்லது வாக்களித்து தமது வாக்குகளைச் செல்லுபடியற்றதாக்குவதன் ஊடாகவோ தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும். ஆனால் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் பயனற்ற முறையில் வாக்குகளைப் பயன்படுத்தினாலும் தேர்தலின் பின்னர் அவர்களுக்கு நன்மைகள் விளையும் என்று சொல்வதற்கில்லை.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE