Thursday 28th of March 2024 09:06:24 AM GMT

LANGUAGE - TAMIL
பேதங்கள் இன்றி அதிகாரம் வழங்குவேன் - சஜித் தெரிவிப்பு!

பேதங்கள் இன்றி அதிகாரம் வழங்குவேன் - சஜித் தெரிவிப்பு!


ஒரு மித்த இலங்கை நாட்டிலே அதிக பட்ச அதிகாரப் பகிர்வினை அனைவருக்கும் இன,மத மொழி கட்சி பேதங்கள் இன்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் என்னுடைய அரசாங்கத்தில் முன்னெடுப்பேன் என்பதை உறுதியாக இந்த மன்னார் மண்ணிலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை(8) காலை 10.30 மணியளவில் கூட்டம் இடம் பெற்றது.

இதன் போது அமைச்சர்களான றிஸாட் பதியுதீன், ரவூப்ஹக்கீம், மனோ கணேசன், விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் ரி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டதோடு உள்ளுராட்சி மன்ற பிரதி நிதிகள் என பல ஆயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டனர்.

இதன் போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,

எதிர் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக தற்போது அத்திட்டங்களை முன் வைக்க காத்திருக்கின்றோம். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் என்னுடைய தலைமைத்துவத்தின் கீழ் இன,மத கட்சி பேதமின்றி மீண்டும் அவர்களை மீள் குடியேற்றுவதற்கான திட்டங்களை நான் முன்னெடுக்கவுள்ளேன்.

நெடுங்குளம், அவலங்குளம் போன்ற நீர்த்தேக்கங்களை அபிவிருத்தி செய்து குளங்களை அபிவிருத்தி செய்து உங்களுடைய விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்பதை கூறிக்கொள்ளுகின்றேன்.

தலைமன்னார், பேசாலை, சிலாவத்துரை போன்ற பகுதிகளில் உள்ள துறைமுகங்களை எனது தலைமையின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்பதை கூறிக்கொள்ளுகின்றேன்.

தலைமன்னாரில் இருந்து திருகோணமலை வரையிலான நான்கு வழிப்பாதையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். அதே போன்று புத்தளத்தில் இருந்து மன்னார் வரையிலான வீதியை இணைப்பதற்கான நடவடிக்கைகளை வில்பத்து காட்டிற்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லாமல் அதனை இணைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்பதை கூறிக்கொள்ளுகின்றேன்.

மீன்பிடியை அபிவிருத்தி செய்வேன். மீன் பிடி கைத்தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

மீன்பிடி கைத்தொழில் துறையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை நான் எடுப்பேன். கடல் பிரதேசத்தில் இருந்து 200 மைல்களுக்கு அப்பால் உள்ள கப்பல் துறைமுகங்களை எங்களுக்கு ஏற்றது போல் அதனை நடைமுறைப்படுத்தி அரசாங்கத்திற்கு தேவையான அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் உங்களுக்காக எடுத்துச் செல்லுவதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

விவசாயத்துறையை கட்டி எழுப்புவதற்கான சகல நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம். காய்கறி பயிர்ச் செய்கை, பழச் செய்கை, சிறு பயிர்ச் செய்கை, சேனைப் பயிர்ச் செய்கை, தேயிலை, இறப்பர், தென்னை போன்ற செய்கைகளில் ஈடுபடுவோருக்கு இலவசமாக பசளையினை வழங்கி விவசாய துறையை மேம்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.

44 இலட்சம் மாணவர்கள் பாடசாலை செல்கின்றனர். என்னுடைய தந்தை ரனசிங்க பிரேமதாச அவர்கள் அன்றைய காலம் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடைகளையும் பகல் உணவையும் வழங்கி இருந்தார்.

ஆனால் இப்போது எங்களுடைய பிரதி வாதிகள் அதனை நிறுத்தி இருக்கின்றார்கள். எங்களுடைய அரசாங்கத்திலே நான் தலைமை வகிக்கின்ற அரசாங்கத்திலே எதிர்காலத்திலே இந்த 44 இலட்சம் மாணவர்களுக்கும் இலவசமாக இரண்டு சீருடைகளும், ஒரு பாதணியும், பகல் உணவையும் இலவசமாக என்னுடைய அரசாங்கத்திலே வழங்குவேன் என்பதை இந்த இடத்திலே உங்களிடம் உறுதியாக கூறிக்கொள்ளுகின்றேன்.

-குறிப்பாக இந்த மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலகங்கள் இருக்கின்றது. குறித்த பிரதேச செயலகங்களுக்கு கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மன்னார் மாவட்டத்தில் மாத்திரமல்ல நாடளாவிய ரீதியில் இருக்கின்ற அனைத்து பிரதேச செயலகங்களிலும் இந்த கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும்.

அதன் மூலம் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதே எங்களுடைய நோக்கம். ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் தொழில் நுட்பக்கல்லூரி ஒன்று உருவாக்கப்படும். இதன் மூலம் தகவல் தொழில் நுட்பம், கணினி தொழில் நுட்பம், ஆங்கில அறிவு என்பவற்றை இலவசமாக வழங்கி இதன் மூலம் வெளியேறுகின்ற அனைத்து இளைஞர் யுவதிகளும் பிரதேச செயலகங்களில் உருவாக்கப்படும் தொழிற் பூங்கா என்கின்ற மையத்தினூடாக சேவையாற்றி சிறந்ததொரு கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை என்னுடைய அரசாங்கத்தில் நான் எடுப்பேன்.

மேலும் புதிய டிஜிட்ரல் யுகத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் என்னுடைய அரசாங்கத்தில் எடுப்பேன் என்பதை இளைஞர் யுவதிகளுக்கு இந்த இடத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஏழை மக்களுக்கு தற்போது சமுர்த்தி என்கின்ற வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையிலே இலங்கையில் இருந்து நாங்கள் ஏழ்மையை நீக்க வேண்டும்.

ஏழ்மை இந்த நாட்டிலே இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த சமுர்த்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது அன்று என்னுடைய தந்தை நெறிப்படுத்திய ஜனசவி என்கின்ற வேலைத்திட்டத்தையும் இந்த சமுர்த்தி திட்டத்தோடு இந்த மக்களுக்கு வழங்கி இந்த நாட்டில் ஏழ்மையை இல்லாது ஒழிப்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்போம்.

இத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் வந்து சேரும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

தற்போது கடமையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசாங்க சம்பளத்தை பெற்றுத்தர என்னுடைய அரசாங்கத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் பாலர் பாடசாலைகளுக்கு தனித்தனியான கட்டிடங்கள், பிள்ளைகள் விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா, பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவு ஆகியவற்றையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுப்பேன். உப ஆசிரியர்களுக்கும் அரசாங்க சம்பளம் வழங்கப்படும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பாலர் பாடசாலை கல்வியையும் இலவச கல்விக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை என்னுடைய அரசாங்கத்திலே முன்னெடுப்பேன். மிக மிக முக்கியமான ஒரு விடயத்தை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஒருமித்த இந்த இலங்கை நாட்டிலே அதிக பட்ச அதிகாரப் பகிர்வினை அனைவருக்கும் இன, மத, மொழி, கட்சி பேதங்கள் இன்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் என்னுடைய அரசாங்கத்தில் முன்னெடுப்பேன் என்பதை உறுதியாக இந்த மன்னார் மண்ணிலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதே போன்று சிறுவர் துஸ்பிரயோகம், இனவாதத்தை தூண்டுவோருக்கு உயர்ந்த பட்ச தண்டனையை வழங்குவதற்கு நான் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை.

நான் ஒரு சிறந்த ஒரு பௌத்தன் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.பௌத்த கொள்கைகளை கோட்பாடுகளை சிறந்த முறையில் பின்பற்றி நடக்கக்கூடிய ஒரு பௌத்தனாக இருக்கின்றேன்.

இனத்தை வைத்தோ,மதத்தை வைத்தோ மதங்களை, இனங்களை ஒரு போதும் அழிக்க முடியாது. புத்த பெருமானும் ஒருபோதும் இனங்களை மையமாக வைத்து மதங்களை மையமாக வைத்து மத அழிப்பு நடவடிக்கைகளை, இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என கூறியுள்ளார்.

எனவே அதனை அடிப்படையாக வைத்து ஜாதி மத பேதங்களை கடந்து மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தியின் உச்ச கட்டத்திற்கு என்னுடைய அரசாங்கத்திலே நான் கொண்டு செல்வேன் என்பதை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர் மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்து கலந்துரையாடியதோடு, ஆசி பெற்றார்.

அதனைத்தொடர்ந்து குறித்த குழுவினர் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: உள்ளூர, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE