Saturday 19th of June 2021 09:38:35 PM GMT

LANGUAGE - TAMIL
மீண்டும் ஒரு முறை தோற்றுப் போனதா கூட்டமைப்பின் சாணக்கியம்?
மீண்டும் ஒரு முறை தோற்றுப் போனதா கூட்டமைப்பின் சாணக்கியம்?

மீண்டும் ஒரு முறை தோற்றுப் போனதா கூட்டமைப்பின் சாணக்கியம்?


மகிந்த ராஜபக்ச குழுவினருக்கு எதிரான அரசியல் அணியினருக்கு மீண்டும் ஒரு தடவை நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்வந்துள்ளது.

மகிந்த ராஜபக்ச 18 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை ஆதாரமாகக் கொண்டு மூன்றாவது தடவையாக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவர் நிறைவேற்று அதிகாரத்தின் உச்சத்தில் தன்னை வெல்வார் எவருமில்லை என்ற அரசியல் அகங்காரம் கொண்டவராக, அதிகார பலம் உள்ளவராகத்; திகழ்ந்தார்.

அந்தத் தேர்தலில் அவர் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதற்காக சந்திரிகா – ரணில் தலைமையிலான அரசியல் குழுவினருக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த கூட்டு அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் இந்த நிபந்தனையற்ற ஆதரவு துணை புரிந்திருந்தது.

மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகாரப் போக்கையும், இராணுவமயம் சார்ந்த நடவடிக்கைகளையும், தனது குடும்பத்தினரை முதன்மைப்படுத்தி அரசியலை ஆக்கிரமித்ததையும் ஜனநாயகவாதிகளும் மனித உரிமைகள் மீது பற்றுள்ளவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய செயற்பாடுகளை அவர்களால் சீரiணிக்க முடியவில்லை.

இதனால் உயிராபத்துகள் மிகுந்த, புலனாய்வு கழுகுக் கண்காணிப்புகளுக்கு மத்தியிலும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவரை எதிர்த்துப் போராட அவர்கள் முயன்றனர். அவர்களுக்கான பொது வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் வலது கை நிலையில் இருந்த மைத்திரிபால சிறிசேனாவை தந்திரோபாய வலைக்குள் வீழ்த்தி பொது வேடபாளராக்கினார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.

அவரோடு இணைந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் உள்ளிட்ட குழுவினருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி அவர்களோடு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அணி சேர்ந்து கொண்டார்.

ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்து பொறுப்பு கூறுகின்ற தன்மையுடன் கூடிய ஆட்சி வல்லமையை நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் வழங்க வேண்டும். எவ்வளவுதான் மக்களுடைய ஆதரவு இருந்தாலும், பிரதான கட்சிகள் தேர்தல் காலங்களில் சிறிய சிறிய கட்சிகளிடம் மடிப்பிச்சை கேட்டு மண்டியிடச் செய்திருக்கின்ற விகிதாசார தேர்தல் முறையை மாற்றி அமைக்க வேண்டும். ஊழல்களை ஒழித்துக்கட்டி நேர்மையான ஓர் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கங்களை அந்தக்குழு கொண்டிருந்தது.

இந்த நோக்கங்களை நிறைவேற்ற வேண்டுமானால் புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டு வந்து அதன் மூலமாக மட்டுமே இந்த மாற்றங்களைச் செய்ய முடியும் என்று அவர்கள் திடமாக நம்பினார்கள். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாகவே புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வை எட்ட முடியும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயமாக இருந்ததனால், இந்தச் சந்தர்ப்பத்தைப்; பயன்படுத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆட்சி மாற்றக் குழுவினருடன் இரா.சம்பந்தனும் அணி சேர்ந்து கொண்டார்.

சர்வாதிகார ஆட்சியில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் ராஜபக்சவின் அதிகாரப் பிடியில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்ற வேட்கையை ஓர் அரசியல் வெறியாகவே கொண்டிருந்தனர். அதனால் ஆட்சி மாற்றத்துக்கான தேரதல் அணுகுமுறையை அவர்கள் எதிர்க் கேள்விகளின்றி ஏற்றுக் கொண்டனர்.

அதிகார பலத்தைக் கொண்டு கட்டுக்கடங்காத நிலையில் செயற்பட்ட மகிந்த குழுவினரைத் தோற்கடிப்பதற்குத் தங்கள் அணியில் தமிழ் மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற தேவை ஆட்சி மாற்றத்துக்காகப் போராடத் துணிந்த சந்திரிகா - ரணில் தலைமையிலான குழுவினருக்கு ஏற்பட்டிருந்தது. இது தவிர்க்க முடியாத ஒன்று. அதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் விரும்பி ஏற்றுக்கொண்ட சந்தரிகா அந்த ஒத்தாசைக்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக இருந்தார்.

ஆனால் கடந்த கால ஒப்பந்தங்களும் இணக்கப்பாடுகளும் எடுத்தெறியப்பட்ட வரலாற்றை சந்திரிகாவுக்கு நினைவூட்டிய சம்பந்தன் ஒப்பந்தங்களினால் ஆகப் போவதில் ஒன்றுமில்லை. நம்பிக்கையே முக்கியம். நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம் என பெருந்தன்மையோடு கூறி ஆட்சி மாற்ற அரசியல் நோக்கத்தை வெற்றியடையச் செய்து, மைத்திரிபால சிறிசேனாவை புதிய ஜனாதிபதியாக அரியாசனத்தில் அமரச் செய்வதற்கு அவர் உறுதுணை புரிந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கும் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் சம்பந்தன் நிபந்தனையின்றி ஒத்துழைத்தார். இலங்கையின் அரசியல் வரலாற்றிலேயே முதற் தடவையாக இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைத்த அரசியல் ரீதியான அற்புதம் அ;பபோது நிகழ்ந்தது.

ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக கீரியும் பாம்பையும்போல கொண்டிருந்த பாரம்பரிய அரசியல் பகைமையைப் புறந்தள்ளி இரண்டு கட்சிகளும் இணைந்து அமைத்த ஆட்சியே இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு உகந்தது என்ற அரசியல் யதார்த்தமும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவு நிலைப்பாட்டிற்கு வலு சேர்த்திருந்தது.

ஆட்சி மாற்றத்தை விரும்பியிருந்த தமிழ் முஸ்லிம் மக்களும்கூட இந்த ஆட்சி மாற்றத்தை நம்பிக்கையுடனும் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடனும் வரவேற்றிருந்தனர். இந்த வகையில் சிறுபான்மை இன மக்களின் அமோக ஆதரவுடன் நல்லாட்சி அரசாங்கம் என்ற இருகட்சி அரசாங்கம் ஆடசிப் பொறுப்பை ஏற்றது.

ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் நாட்டு மக்கள் எதிர்பார்த்த அளவில் ஊழல்கள் ஒழிக்கப்பட்டு நல்லாட்சி புரியப்படவில்லை. சிறுபான்மை இன மக்களின் எதிர்பார்ப்புக்கள் நம்பிக்கைகளும் உரிய முறையில் அவசியமான விடயங்களில் நிறைவேற்றப்படவில்லை. தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய பல பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாத போக்கிலேயே புதிய அரசாங்கம் நடந்து கொண்டது.

நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரைக் கொண்டிருந்த போதிலும், அடிப்படையில் தேசிய முக்கியத்துவம் மிக்க விடயங்களிலும் பிரச்சினைகளிலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போக்கையே புதிய அரசாங்கமும் கடைப்பிடித்திருந்தது,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருந்த மைத்திரிபால சிறிசேன அந்த அதிகாரத்தை மக்கள் நலன்களுக்கான வழிமுறைகளில் கொண்டு செலுத்தத் தவறியிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டின் இரு பெரும் அரசியல் நிர்வாகத் தலைவர்களாகவும், இரு பெரும் கட்சிகளின் அரசியல் போட்டியை அடிப்படையாகக் கொண்ட கட்சித் தலைவர்களாகவுமே செயற்பட்டிருந்தனர்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே இருவரும் ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தார்களேயொழிய நாட்டு மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தியதாக அவர்களின் ஆட்சி அதிகாரக் கூட்டு அமையவில்லை.

அதிகாரப் போட்டியில் இறங்கிய இருவரும் நாட்டின் அரசியலமைப்பையே கேலிக் கூத்தாக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு வழிவகுத்திருந்தனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் சில முக்கிய அதிகாரங்களை 19 ஆவது அரசிலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் வெட்டிக்குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிகார வலு சேர்த்த ஒரு காரியத்தை அவர்கள் இருவரும் இணைந்து செய்து முடித்தனர். இது வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனாலும் எந்த பதவியை புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்று இணைந்து செயற்பட்டார்களோ அதே ஜனாதிபதி பதிவியைக் கைப்பற்றுவதற்கான அரசியல் வேட்கையைக் கொண்டு இருவரும் பாரம்பரிய கட்சி அரசியல் போட்டி நிலையில் செயற்படத் தொடங்கிவிட்டார்கள்.

தனது ஜனாதிபதி பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையே தூக்கி எறிந்துவிட்டு யாரை எதிர்த்து ஜனாதிபதியாகினாரோ அவரையே – மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்தார். அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறிய வகையில் இந்த நடவடிக்கையை எடுக்கும் அளவுக்கு ஜனாதிபதி பதவி மீது அவர் கொண்டிருந்த பதவி மோகம் வேகம் பெற்றிருந்தது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மிக மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கமும் எதிர்பார்த்த வகையில் எதிர்பார்த்த வேகத்தில் இடம்பெறவி;ல்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வு காண முடியும் என்ற அவருடைய ஆழமான உறுதியான எதிர்பார்ப்பு கானல் நீராகத் தொடர்ந்து இறுதியாக ஆகாயக் கோட்டையாகச் சரிந்து போனது.

இந்தப் பின்புலத்திலேயே 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலுக்கு நாட்டு மக்கள் முகம் கொடுத்துள்ளார்கள். இந்தத் தேர்தல் அதன் வழமையான தேர்தல்; நிலைமைகளில் இருந்து வேறுபட்டிருக்கின்றது. இந்தத் தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் இருவருமே வழமையாக பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவே இருந்தனர். ஆனால் இம்முறை அவ்வாறில்லை. மூன்றாவது சக்தியாகத் தேர்தல் களத்தில் காணப்படுகின்ற ஜேவிபியின் வேட்பாளர் மாத்திரமே அரசியல் கட்சியின் தலைவராக இருக்கின்றார். ஏனைய இருவரும் - கோத்தாபாய ராஜபக்சவும், சஜித் பிரேமதாசாவும் அவர்களுடைய கட்சியில் இரண்டாம் நிலையிலான தலைவர்களே. அவரக்ள் அந்தக் கடச்pகளின் தலைவர்களாக இல்லை.

ஆட்சி மாற்றத்திற்கான 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முக்கிய வேட்பாளராகப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கதாநாயக அந்தஸ்து பெற்றிருந்த பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனவும் கட்சியில் இரண்டாம் நிலையில் இருந்தவரே. இருப்பினும் அவர் ஆட்சி மாற்றத்திற்காகத் துணிந்து செயற்பட்ட அரசியல் அணியின் பொது வேட்பளாராகக் களமிறக்கப்பட்டிருந்தாரே தவிர தனியொரு கட்சியின் வேட்பாளாராக அவர் போட்டியில் இறங்கவில்லை.

நிறைவேற்று அதிகாரங்கள் சில வெட்டிக்குறைக்கப்பட்ட அந்தஸ்தைப் பெற்றுள்ள ஜனாதிபதி பதவிக்கான 35 பேர் போட்டியில் இறங்கி அவர்களில் 30 பேர் மாத்திரமே களத்தில் எஞ்சியிருக்கின்ற ஒரு வித்தியாசமான அரசியல் கள நிலைமையையும் இந்தத் தேர்தல் கொண்டிருக்கின்றது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது உச்சகட்ட நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் கொண்டு வரப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அந்த அதிகாரத்தை முக்கியமான அம்சங்களில் வெட்டிக்குறைத்துள்ளது. இதனால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர் நிறைவேற்று அதிகாரம் என்ற சக்தியைக் கொண்டு விரும்பியவாறு செயற்பட முடியாத கட்டுப்பாட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்காக ஏன் இத்தனைபேர் போட்டியிடுகின்றார்கள் என்பது தெரியவில்லை.

மகிந்த ராஜபக்ச குழுவினரைப் பொறுத்தமட்டில், நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனங்கள் மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரம் படைத்த ஒருவராக அரசியலில் பிரவேசிப்பதற்கு வழி வகுத்துள்ளது. அரசாங்கத்தின் பலவீனங்களும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமாகிய மைத்திரிபால சிறிசேனாவின் சிறுபிள்ளைத் தனமான அரசியல் நிலைப்பாட்டுச் செயற்பாடுகளும் அரசியல் போக்குகளும் மகிந்த ராஜபக்சவின் மீள்வருகைக்கான தேவையை அதிகப்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்க்கதரிசனமற்ற போக்கினாலும் தலைமைப் பொறுப்புக்களில் கொண்டிருக்க வேண்டிய ஆளுமை உட்பட்ட பண்புகளைக் கடைப்பிடிக்கத் தவறியதனாலுமே பாரம்பரிய அரசியல் செல்வாக்கு பெற்றிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அவருடைய காலத்தில் சின்னாபின்னமாகி சிதைந்து போயுள்ளது.

அந்தக் கட்சியின் இடத்தை 2015 ஆம் ஆண்டு தேர்தல்களில் மக்களால் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியை உருவாக்கி தன்வசப்படுத்தி சிங்கள மக்களின் செல்வாக்கைப் பெற்றுத் திகழ்கின்றார்.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்கவும் தனது கட்சியைக் கட்டிக்காப்பதில் வலுவில்லாதவராகவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத அவல நிலைமைக்கு ஆளாகியவராகவும் மாறியுள்ளார்.

இத்தகைய அரசியல் நிலைமைக்குள்ளேதான் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றனர். இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான வேட்பாளர்கள் இருவருமே சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளையும் அவர்களுடைய அரசியல் அபிலாசைகளையும் வெளிப்படையாகவே புறந்தள்ளி, இனவாத பேரினவாத அடிப்படையில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ள ஜேவிபியும்கூட சிறுபான்மை இன மக்களின் அரசியல் நிலைப்பாட்டை அனுசரித்த நிலைமையில் காணப்படவில்லை.

முக்கிய வேட்பாளர்கள் மூவருமே சிறுபான்மை இன மக்களின் வாக்குகளைக் கவர்வதில் தீவிர கவனம் செலுத்தியிருக்கின்றனர். அந்த வாக்குகளில்லாமல் வெற்றிவாய்ப்பைப் பெறுவது கடினம் என்ற யதார்த்தத்தை நன்கு புரிந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் எவருமே சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுக்கள் நடத்தி அந்த மக்களின் அரசியல் தலைமைகளுடன் ஓர் உடன்பாட்டிற்கு வரத் தயாராக இல்லை.

சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளைக் கேட்க முடியாது. அவற்றில் கவனம் செலுத்த முடியாது. அவர்களுக்கு என்ன தேவை என்பதைத் தாங்களே தீர்மானிக்க வல்லவர்கள் என்ற போக்கில் அவர்கள் இந்தத் தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றனர். உங்களுடைய வாக்குகள் வேண்டும் நீங்கள் விரும்பியவற்றிற்கு வாக்களிக்க முடியாது. ஆனால் நீங்கள் எங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும். அந்தப் பொறுப்பில் இருந்து நீங்கள் தவற முடியாது என்ற நிர்ப்பந்த அணுகுமுறையையே அவர்கள் சிறுபான்மை இன மக்களிடம் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஐந்து அரசியல் கட்சிகள் பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுக்கள் நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. அந்தக் கோரிக்கைகளை விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளைவிட மோசமானவை. நாட்டைத் துண்டாடத் தக்கவை என்ற கோணத்திலேயே பிரதான வேட்பாளர்கள் இருவரும் நோக்குகின்றனர். அந்த நிலைப்பாட்டையே உறுதியாக வெளிப்படுத்தி தேர்தல் பிரசாரங்களையும் முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில்தான் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாசாவுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தீரமானம் எடுத்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை சூறவாளி தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளது.

கோத்தாபாய வெற்றிபெற்றால் பெரும் ஆபத்து ஏற்படும் எனக் கூறியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டி ஆட்சி முறைக்கான உறுதிமொழி ஒளிந்திருக்கின்றது என்று கதையளக்கத் தொடங்கியுள்ளது.

இப்போதுள்ள நிலைமையில் தமிழ் மக்களுக்கு களத்தில் இறங்கியுள்ள வேட்பாளர்களில் ஒருவரையே ஆதரிக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். இந்தத் தெரிவுக்கு வெளியில் அவர்களால் போக முடியாது. அதற்காக இல்லாதது பொல்லாததுகளையும் தேர்தல் பிரசாரங்களில் எடுத்துக்கூறி சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை நியாயப்படுத்துவது சரியான செயற்பாடாகத்; தெரியவில்லை. அவர்களின் கூற்றுக்கமைய 2015 ஆண்டின் நிபந்தனையற்ற ஆதரவு ஏற்படுத்திய விளைவையே 2019 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலும் ஏற்படுத்த மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் காணப்படவில்லையே.

மொத்தத்தில் தமிழ் மக்களின் அடுத்த கட்ட நிலைமை மேய்ப்பர் இல்லாத மந்தைகளை ஒத்ததாகவும், இக்கட்டுகள் நிறைந்த சூழலை நோக்கி நகர்வதையே தெளிவாகக் காண முடிகின்றது.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE