;

Monday 6th of July 2020 06:28:58 AM GMT

LANGUAGE - TAMIL
புதிய ஜனாதிபதி குறித்து தமிழ் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை- நாமல்!

புதிய ஜனாதிபதி குறித்து தமிழ் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை- நாமல்!


புதிய ஜனாதிபதி பற்றியும், எமது கட்சி பற்றியும் தமிழ் மக்கள் அச்சமோ, ஐயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களிலும் நீங்களும் உரித்துடைய பங்காளிகள் என்பதை எமது கட்சியும் - எமது புதிய ஜனாதிபதியும் உறுதிப்படுத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலிலி பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ரஜபக்ஷ வெற்றிபெற்று ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள நிலையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே நாமல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக வாக்களித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்களை வெற்றி பெற வைத்ததை இட்டு நன்றி கலந்த மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரை கிடைக்கப் பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையில் இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளமை உறுதியாகியுள்ளது. விரைவில் வெளியாகும் உத்தியோகபூர்வ முடிவுகள் இதனை உறுதிப்படுத்தும்.

அபிவிருத்தி இன்றி மக்களை ஏமாற்றிய அரசாங்கத்தின் நிலையை மாற்றி, கடந்த சித்திரை மாதத்தின் பின் மக்கள் மத்தியில் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள பய பீதியான நிலையினை களைந்து, எமது புதிய ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நீங்கள் விரும்பிய அமைதியான சூழலை தனது முதற்கடமையாக நிறைவேற்றுவார். அவருக்கு உற்றதுணையாக நாம் இருப்போம்.

அத்துடன் வடக்கு - கிழக்கு மக்களை வாக்களிக்க வேண்டாம் என சிலர் பிழையாக வழி நடத்த முற்பட்ட போதும் அவற்றினை நிராகரித்து தேசிய அரசியலில் நீங்கள் ஈடுபாடுடையவர்கள் என்பதை சர்வதேசத்திற்கு தெட்டத் தெளிவாக வாக்களிப்பதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளீர்கள்.

வட - கிழக்கில் எமது ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்த அனைவருக்கும் விசேட நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், நாட்டின் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களிலும் நீங்களும் உரித்துடைய பங்காளிகள் என்பதை எமது கட்சியும் - எமது புதிய ஜனாதிபதியும் உறுதிப்படுத்துவோம் எனும் உத்தரவாதித்தினை உங்களுடன் மிக நெருக்கமாக பழகும் ஒருவன் என்ற வகையில் உரிமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எமக்கும் உங்களிற்கும் இடையில் குரோதங்களையும், வெறுப்பையும், நம்பிக்கையீனத்தையும் வளர்க்கும் சந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகளின் கதைகளை இனி நீங்கள் நம்ப வேண்டாம்.

இந்த சந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகளினால் நீங்கள் அடைந்த நன்மைகள் எதுவும் இல்லை.

புதிய ஜனாதிபதி பற்றியும், எமது கட்சி பற்றியும் நீங்கள் அச்சமோ, ஐயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை என்பதையும் நான் வெளிப்படையாகவே தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களை இந்த சந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகள் காலங்காலமாக தவறாகவே வழிநடத்தி வருகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

உங்கள் அனைவரினதும் மனங்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் மிக்க ஆட்சியை நாம் முன்னெடுப்போம் என்று நாம் உறுதியளிக்கிறோம்.

இனி வரும் நாட்களில் இலங்கையின் அபிவிருத்தியில் புலம் பெயர் உறவுகளும் எந்த ஒரு தடையுமின்றி இணைந்து பலமான பயணத்தில் ஒன்றிணைய வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

எங்களுடன் கைகோர்த்து சுபீட்சகரமான எதிர்காலத்திற்கான பயணத்தை முன்னெடுக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். இது நல்லதோர், புதியதோர் ஆரம்பமாக அமையட்டும்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE