Friday 19th of April 2024 05:25:17 PM GMT

LANGUAGE - TAMIL
மாவீரர் நாள் விவகாரம் - புதிய அரசையும் நம்புகின்றோம் என்று மாவை எம்பி அறிக்கை!

மாவீரர் நாள் விவகாரம் - புதிய அரசையும் நம்புகின்றோம் என்று மாவை எம்பி அறிக்கை!


உறவுகளை இழந்தவர்கள் அச்சமின்றித் தமது உறவுகளுக்கான கடனை, அஞ்சலியைச் செலுத்தி ஆறுதல் பெறும் புனித ஆன்ம உரிமை தற்போது ஏற்பட்டுள்ள புதிய அரசின் சூழலிலும் பாதுகாக்கப்படும் என்று நம்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராஜா.

அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் உள்ளதாவது:-

"தமிழின விடுதலைப் போராட்டக் காலத்திலும், போர்க் காலத்தின் எல்லையிலும் உயிர்களை அர்ப்பணித்தவர்களதும், கொல்லப்பட்டவர்களதும் ஆத்ம சாந்திக்காக நெஞ்சுருகி நினைவு கூருவதும், பிரார்த்தனை செய்வதும், ஈமக்கடன் இயற்றுவதும் தமிழ் மானிடத்தின் மாண்புகளாகும். தமிழ் மக்கள் நாகரிகமாகும்.

2009ஆம் ஆண்டு காலத்தில் போர்க்களத்திலும், பாதுகாப்பான இடங்களுக்கு அரசு வாருங்கள் என அழைத்த இடங்களிலும், மருத்துவமனைகளிலும், பதுங்கு குழிகளிலும் போரில் பாவிப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட ஆயுதங்கள், குண்டுகள் பாவிக்கப்பட்டதால் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டன என்ற செய்திகள் உள்ளன.

போரில் சரணடைந்தவர்கள், உறவுகளால் அரசிடம் - இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகள் காணாமலாக்கப்பட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாள்தோறும், வாழ்நாள் முழுவதும் கண்ணீரும், கம்பலையுமாய் அவலத்திலும், துயரத்திலும் விழ்ந்து கிடக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட அந்த உறவுகள் ஆண்டுதோறும் குறிப்பாகக் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு நாள்களில், கிழமைகளில் அந்த உறவுகளுக்காக, ஆத்மாக்களுக்காக நெஞ்சுருகி நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டுக் கதறியழுது ஆறாத்துயரில் ஆறுதல்படும் நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர். அந்த இரு நாள்கள் கார்த்திகை 27 வரையிலும், முள்ளிவாய்க்காலில் மே திங்கள் 18 வரையிலும் இடம்பெறுகின்றன.

பண்டைத் தமிழர்கள் உயிரிழந்தோர் உடல்களைத் தாழியிலிட்டு நிலத்தில் புதைத்தனர். அத்தாழிகளில் ஆன்ம நம்பிக்கை உடையோர் வழிபட்ட தெய்வச்சிலைகளை வைத்தும், உயிர் பிரிந்த நாளில் நினைவுகூர்ந்து பிரார்த்தனை முதலான வழிபாடியற்றியும், கடல் நீர் நிலைகளில் ஈமக் கடனியற்றியும், கோவில்களிலும் இந்நாளில் துயிலும் இல்லங்களிலும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி ஆறுதல் அடைவதும் தமிழர் பண்பாடு நாகரிகம் மரபாக, பாரம்பரியமாகப் போற்றப்பட்டு வருகின்றது. இந்தப் பாரம்பரியம் பேணப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும்.

2015 ஆம் ஆண்டு வரையிலும் மக்களின் இந்தப் பாரம்பரியத்தைத் துயிலும் இல்லங்களில் கூடி உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை அரசு, இராணுவம் அனுமதிக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் அப்போதைய அரச தலைவரும், இராணுவத்தினரும் துயிலும் இல்லங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளை அனுமதித்து வந்திருந்தார்கள். மக்களும் உறவுகளும் தாம் விரும்பிய இடங்களில் வீடுகளில், கோயில்களில், புனித நீர் நிலைகளில் ஆன்ம சாந்திப் பிரார்த்தனைகளில் ஈமக் கடனியற்றுவதில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலைமைகள் தொடரும் என நம்புகின்றோம். இந்த நிகழ்வுகளில் அரசியல் நலன்களுக்கு இடமில்லை. அரசினதோ, பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடோ, தடைகளோ இடம்பெறாமலிருக்க வேண்டும்.

மக்களின் இந்த புனித ஆன்ம உரிமை, கடமை பாதுகாக்கப்படும் என்று நம்புகின்றோம்" - என்றுள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE