Friday 29th of March 2024 06:40:03 AM GMT

LANGUAGE - TAMIL
இலங்கையர்களை மீள  ஆட்கொள்ளும் அச்சம் - தி நியூயோர்க் ரைம்ஸ்

இலங்கையர்களை மீள ஆட்கொள்ளும் அச்சம் - தி நியூயோர்க் ரைம்ஸ்


இலங்கை ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் குறித்து தகவல் வழங்குமாறு மிரட்டப்பட்டுள்ளார்.

புலனாய்வாளர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் ராஜபக்ஷக்களை விசாரித்த அதிகாரிகளும் அவை குறித்து தகவல்களை வெளியிட்ட ஊடகவியலாளர்களும் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராஜபக்ஷ குடும்பத்தை விமர்சிப்பவர்கள் கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என்ற அச்சம் இலங்கையில் அதிகரித்து வருகிறது.

ராஜபக்ஷக்களின் மீள் வருகை குறித்த அச்சம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை அதிகாரி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு துதரகத்தின் முக்கியமான இரகசியத் தகவல்களை வழங்குமாறு கோரி மிரட்டப்பட்டுள்ளார் என சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் தூதரக பெண் அதிகாரியின் கைத்தொலைபேசி கடவுச் சொல்லைத் வழங்குமாறு கடத்தல்காரர்கள் அவரை அச்சுறுத்தினர். ராஜபக்ஷக்கள் அதிகாரித்தைக் கைப்பற்றிய பின்னர் சுவிஸில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளவர்களின் தகவல்களைப் பெறவும் அவர்கள் முயன்றுள்ளனர்.

மேலும் அண்மையில் நாட்டைவிட்டுத் தப்பியோடி சுவிஸில் தஞ்சம் கோரியவர்களுக்கு உதவியவர்களின் தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் அவர்கள் பிரயத்தனம் செய்துள்ளனர்.

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட அதே நாளில் இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் 700 க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் நாட்டை விட்டு வெளியேறுதவற்கு கோத்தாபய ராஜபக்ஷவால் தடை விதிக்கப்பட்டது.

இதனைவிட ராஜபக்ஷக்கள் குறித்து விமர்சனங்களை வெளியிட்ட ஊடக நிறுவனம் ஒன்று சோதனையிடப்பட்டது. அந்த ஊடகத்தில் பணியாற்றும் செய்தியாளர்களின் கணினிகளை சோதனைக்காக ஒப்படைக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து கடந்த புதன்கிழமை கேள்வி எழுப்பப்பட்டபோது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் செய்தித் தொடர்பாளர் முதலில் அதனை மறுத்தார்.

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து உண்மையை அறிந்துகொள்ளும் நோக்கில் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண் அதிகாரியின் பெயர் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை. எனினும் தூதரக அதிகாரியைக் கடத்திச் சென்றவர்கள் அவரைப் பல மணி நேரம் தடுத்து வைத்திருந்தனர்.

கடத்தப்பட்ட தகவலை வெளியே சொன்னால் கொலை செய்வோம் என அச்சுறுத்திய பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என சுவிஸ் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராஜபக்ஷக்கள் மீது சுமத்தப்பட்ட ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை விசாரித்துவந்தவரும் அது தொடர்பாக சாட்சியங்களை நெறிப்படுத்தியவருமான புலனாய்வு அதிகாரி தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதிலேயே கடத்தல்காரர்கள் அதிகம் கவனம் செலுத்தியுள்ளனர்.

அந்த புலனாய்வு அதிகாரி அச்சம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நாட்டை விட்டு குடும்பத்துடன் தப்பியோடி சுவிஸில் தஞ்சமடைந்துள்ளார்.

இந்தக் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்கள் ராஜபக்ஷக்களுடன் தொடர்புடையவர்களா? அல்லது பிரபல அரசியல் தலைவர்களின் ஆதரவளார்களாக உள்ள அவர்கள் தங்கள் எண்ணப்படி இவரைக் கடத்தித் தகவல்களைப் பெற முயன்றாhர்களா? என்பது குறித்து தெளிவின்மை உள்ளது.

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது விருப்பத்துக்கு மாறாக சிலரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தூதரக தகவல்களைக் கோரி அடையாளம் தெரியாத நபர்களால் அவர் நீண்ட நேரம் அச்சுறுத்தப்பட்டார் என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியும் என சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பியர்-அலைன் எல்ட்சிங்கர் தி நியூயோர்க் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடத்தல் சம்பவம் மிகவும் தீவிரமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என சுவிட்ஸர்லாந்து கருதுகிறது என அவர் கூறினார்.

இந்தக் கடத்தல் சம்பவம் மற்றும் அதன் பின்னணிகள் குறித்து உடனடி மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுவிட்சர்லாந்து அரசு வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டுவரை 10 வருடங்களாக ராஜபக்ஷ குடும்பம் இலங்கையில் ஆட்சி, அதிகாரத்தைக் கொண்டிருந்தது.

ராஜபக்ஷக்களின் ஆட்சியின்போது அவர்களுக்கு எதிரானவர்கள் எனக் கருதப்படவர்கள் அடிக்கடி கடத்தப்பட்டனர். பெரும்பாலும் சிவில் உடை தரித்த நபர்களால் வான்களில் இவ்வாறான கடத்தல்கள் இடம்பெற்றன. இவ்வாறு கடத்தப்பட்ட பலர் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில்தான் கடந்த ஏப்ரல் மாதம் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பேரழிவை ஏற்படுத்திய பயங்கரவாத தாக்குதல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் முன்நிறுத்தப்பட்டன. இது கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் தேர்தலில் வெற்றிபெற ஒரு வாய்ப்பை உருவாக்கியது.

இலங்கையின் நீண்ட மற்றும் கொடிய உள்நாட்டுப் போரின் முக்கியமான இறுதிக் கட்டத்தில் கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராகவும் அவரது சகோதரர் மகிந்தா ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் இருந்தனர்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ராஜபக்சக்கள் பெருமளவில் உலக நாடுகளிடம் கடன் பெற்றனர்.

ஆனால் போரின் இறுதியில் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான போர்க் குற்றங்கள் மற்றும் பிற முறைகேடுகள் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கும் வழிவகுத்தது.

இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக்ஷ, தனது சகோதரர் மகிந்தவை பிரதமராக நியமித்தார். நாட்டின் இரண்டு சக்திவாய்ந்த முக்கிய அரசியல் பதவிகளை தனது குடும்பத்திற்குள் அவர் கொண்டுவந்தார்.

ஆட்சி மாறிய பின்னர் ராஜபக்ஷ குடும்பத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்ததாக அறியப்பட்ட நியூஸ் ஹப் என்ற செய்தி அலுவலகம் திங்கட்கிழமை பொலிஸாரால் சோதனையிடப்பட்ட சம்பவம் இலங்கை ஊடகவியலாளர்களை கவலையடையச் செய்துள்ளது.

இந்த ஊடக அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், அங்கு பணியாற்றிய பல ஊடகவியலாளர்களின் கணினிகளில் இருந்த தகவல்களையும் வழங்குமாறு கட்டாயப்படுத்தினர்.

இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கையின் இருண்ட யுகத்தின் ஆரம்பம் என அஞ்சுவதாக நியூஸ் ஹப் வலைத்தளத்தின் கூட்டுப் பங்காளரான தனுஷ்க ராமநாயக்க ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இது அதிகரித்து வரும் அடக்குமுறையின் அடையாளம். மற்றும் அச்சத்தைத் தூண்டுவதற்கான ஒரு தெளிவான முயற்சி எனவும் ராமநாயக்க தெரிவித்தார். அவர் எதிர்க்கட்சி சார்பான ஆர்வலராகவும் கூட இருக்கிறார்.

குறித்த ஊடகம் வெறுப்புப் பேச்சுக்களைத் தூண்டுவதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அதன் அலுவலகம் சோதனையிடப்பட்டது என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

எனினும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்குரிய ஆதாரங்கள் எவையும் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தாபய ராஜபக்ஷ, தனது எதிரிகளுடன் சமரசம் செய்ய முயற்சிப்பார் என்று பல இராஜதந்திரிகள் நினைத்திருந்தனர்.

வெற்றிபெற்ற சிறிது நேரத்திலேயே ஒரு அறிக்கையை வெளியிட்ட கோத்தாபய ராஜபக்ஷ அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தினார்.

தீங்கிழைக்கும் நோக்கம் இல்லை என்பதை புதிய ஆட்சி நிரூபிக்கும் என்று நாங்கள் நினைத்தோம் என கொழும்பை தளமாகக் கொண்ட மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிர்வாக இயக்குனர் பாக்கியோசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

ஆனால் அவர்களின் கோட்பாடு மாறவில்லை போன்ற சூழ்நிலையே தென்படுகிறது. எவரேனும் அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ விமர்சித்தால் அவர்கள் எதிரிகளாகப் பார்க்கப்படும் நிலைமையைக் காண்கிறோம்.

அச்சுறுத்தல் கலாசாரத்தை நோக்கி மெதுவாக நகர்வது போன்ற தோற்றத்தையே இது ஏற்படுத்துகிறது.

தமது ஆட்சிக் காலத்திலிருந்தே தம்மீதான மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை முடக்குவதிலேயே ராஜபக்ஷ குடும்பம் கவனம் செலுத்திவருகிறது.

இந்நிலையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் சமீபத்திய ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகின்றன.

தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் தங்களுடைய சகாக்கள் தொடர்பாகவும் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை என கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆத்திரத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூறினார்.

என்னையும் போரில் ஈடுபட்ட படைத் தரப்பினர் மற்றும் புலனாய்வுத் துறையினரையும் முன்னாள் கடற்படைத் தளபதியையும் சிறையில் அடைப்பதே இந்த விசாரணைகளின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

பொளத்த பிக்குகள் மத்தியில் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விசாரணைகளின்போது குற்றச்சாட்டுக்களின் என்னைத் தொடர்புபடுத்துமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். என்னிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன எனவும் கோத்தாபய தெரிவித்தார்.

சட்டத்தின் பிரகாரம் நீதியாக இந்த விசாரணைகள் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது 6 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கு கடந்த புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் அந்த வழக்கு அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்தில் கேலிச் சித்திர ஊடகவிலயாளரும் பத்தி எழுத்தாளருமான பிரகீத் எக்னலிகொட கடத்திக் காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷா பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது 2010-ஆம் ஆண்டு ஒரு இராணுவ புலனாய்வு பிரிவு அவரைக் கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம் என்று அரசாங்க புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லெப்டினன்ட் கேணல் தர இராணுவ அதிகாரி மற்றும் 6 பேர் மீது இந்தக் கடத்தல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரகீத் எக்னலிகொட கடத்திக் காணாமலாக்கப்படடமை குறித்த வழக்கு விசாரணைகளில் இனி முன்னேற்றம் இருக்காது என நம்புவதாக எக்னலிகொட மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷக்களே தனது கணவரை கடத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், இப்போது தனது பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிட்டுள்ளார்.

ராஜபக்ஷக்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீதான விசாரணைகளை கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னெடுத்துவந்த கட்டமைப்புக்களை இல்லாது செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகள் பலர் தரமிறக்கப்பட்டு வேறு பகுதிகளுக்கு மாற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பல வழக்குகளில் முன்னணி புலனாய்வாளராக இருந்த நிஷாந்தா சில்வா ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்திற்கு தப்பிச் சென்றார்.

விசாரணையில் ஈடுபட்டவர்கள் மற்றும் சில புலனாய்வாளர்களின் புகைப்படங்களை அரச தொலைக்காட்சிகள் செவ்வாய்க்கிழமை காட்சிப்படுத்தின. அவர்கள் மீது ஊழல் மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

இதேவேளை, இடம்பெற்று வந்த விசாரணைகள் தொடருமா? என்பதை அடுத்த சில வாரங்களில் முடிவு செய்வோம் என இலங்கையின் தேசிய பொலிஸ் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது ​​இலங்கையின் இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பல விசாரணைகளை மேற்கொண்ட முக்கிய புலனாய்வாளர்களில் ஒருவராக நிஷாந்த டி சில்வா இருந்தார்.

இப்போது சாட்சியங்களை நெறிப்படுத்த அவர் நாட்டில் இல்லை என திருமதி சந்தியா எக்னலிகொடா கூறினார்.

சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் அவர்களின் செயற்பாடுகளை முடக்கியுள்ளன. இனிமேல் சாட்சியங்களை வழங்கவோ, வழக்கை முன்னெடுக்கவோ அவர்கள் அஞ்சுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

704 புலனாய்வாளர்களும் நாட்டை விட்;டு வெளியே தடை விதிக்குமாறு கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டார். புலனாய்வு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தப்பி ஓடுவதைத் தடுக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

புலானாய்வு அதிகாரியான நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்து செல்வதற்கு முன்னர் அரசாங்கத்திடம் அதற்கான ஒப்புதல் பெறவில்லை. இது விதி மீறல் என இலங்கையின் புதிய பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷக்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீதான வழக்குகளைத் திசை திருப்ப புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

“நாங்கள் யாருக்கும் எதிராக அல்லது எந்தவொரு புலனாய்வு அதிகாரிக்கும் எதிராகப் செயற்படப் போவதில்லை. நாங்கள் சட்ட விதிகளை மட்டுமே பின்பற்றுகிறோம்” என தி நியூயோர்க் டைம்ஸூக்கு வழங்கிய தொலைபேசி பேட்டியில் கமால் குணரத்ன கூறினார்.

“இது ஒரு ஜனநாயக நாடு. இங்கு இராணுவ ஆட்சிக்கு இடமில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது தற்போதைய பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன ஒரு இராணுவ படைப் பிரிவுக்கு தலைமை தாங்கினார்.

போரில் இராணுவத்தினரிடம் சிக்கியவர்களை படுகெலை செய்ததாக அவர் மீது ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியது. எனினும் இந்தக் குற்றசாட்டை கமால் குணரத்ன மறுத்துள்ளார்.

நன்றி - தி நியூயோர்க் ரைம்ஸ்

அருவி இணையத்துக்காக மதிமுகன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE