Saturday 20th of April 2024 08:00:27 AM GMT

LANGUAGE - TAMIL
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கும் ஈழநாடு வரைபடத்துக்கும் தொடர்பு!

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கும் ஈழநாடு வரைபடத்துக்கும் தொடர்பு!


நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததை விஸ்தரிக்கும் இலங்கை விளக்கப் படத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழநாடு வரைபடத்துக்கும் தொடர்பிருப்பதாக இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சிங்களத் தலைவருக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தாலும், அந்த சிங்களத் தலைவரினது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிங்கள பௌத்த மக்களின் மனங்களில் ஆழமாக இருந்த சந்தேகத்துக்கிடமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததே பிரதான பிரச்சினையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தனது சொந்தப் பிரதேசமான கண்டியில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முடிவுகளில் ஒரு நேர்கோடு காணப்பட்டது. அந்தக் கோட்டை மூடிமறைக்க முடியாது. ஈழநாடு வரைபடத்தை பார்த்தால் அது புரியும். அதனை மூடிமறைத்துப் பேசினால் நாங்கள் பொய் கூறுவதாகி விடும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாம் தமிழ் மக்களிடம் இருந்தும் வாக்குகளை எதிர்பார்த்த போதிலும் அது நிறைவேறவில்லை என்றாலும், தாம் நாட்டின் ஜனாதிபதி என்பதை தனது பதவியேற்பு நிகழ்வில் அநுராதபுரத்தில் வைத்துக் கூறியிருந்தார்.

இதனிடையே, சிங்களத் தவைவர் ஒருவருக்கே வாக்களிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்ததை நான் அவதானித்திருந்தேன்.

எனினும், அந்தப் பேச்சில் ஓர் அர்த்தம் உள்ளது. அந்தச் சிங்களத் தலைவரினது தேர்தல் விஞ்ஞாபனக் கட்டமைப்பினுள் பெரும்பான்மையின மக்களின் சந்தேகங்களுக்கு உரிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டதாகவே நான் அவதானிக்கின்றேன். அதற்குக் காரணமும் உள்ளது.

சில இனவாத அரசியல் தலைவர்கள் சில சந்தர்ப்பங்களில் சவால்களை விடுத்தனர். அதாவது, முடியுமானால் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் ஜனாதிபதித் தேர்தலை வென்று காட்டுமாறு சவால்கள் முன்வைக்கப்பட்டன.

அந்தச் சவால்களை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டதாகவே நான் அறிகின்றேன். அந்தப் பிழையான சிந்தனை கொண்டவர்களை ஒன்றிணைத்து இந்த நாட்டிலுள்ள சிங்களம், தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பறங்கியர் உள்ளிட்ட அனைவரையும் இணைக்கின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே அவசியமாகும்" - என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE